நுட்பமான மகிழ்ச்சி

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ

குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்

‘இனிது’ எனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!

நூல்: குறுந்தொகை (#167)

பாடியவர்: கூடலூர் கிழார்

சூழல்: முல்லைத் திணை, துறை விவரம் ’முன்கதை’யில்

முன்கதை

திருமணம் முடிந்துவிட்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.

சில நாள் சென்றபின்னர், பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர் (செவிலித் தாய்) புது மணத் தம்பதியர் வசிக்கும் அதே நகரத்துக்குச் செல்கிறார். அவர்களைப் பார்க்க வருகிறார்.

அவர் ஊர் திரும்பியதும், பெண் வீட்டார் அவரை மொய்த்துக்கொள்கிறார்கள். ‘என் பெண் சந்தோஷமாக இருக்கிறாளா? மாப்பிள்ளை அவளை நல்லபடியாகப் பார்த்துக்கொள்கிறாரா?’ என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். முக்கியமாக ‘செல்லமா வளர்ந்த பொண்ணாச்சே, பாவம், அவளுக்குச் சமையலே தெரியாதே, எப்படிச் சமாளிக்கிறா?’

செவிலித் தாய் சிரிக்கிறார். இந்தப் பாடலைச் சொல்கிறார்

உரை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நன்கு உறைந்த தயிர். காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களால் அதை நன்றாகப் பிசைகிறாள் அவள்.

அப்போது, அடுப்பில் ஏதோ சத்தம் கேட்கிறது. தயிர் பிசைந்த விரல்களைச் சட்டென்று தன் ஆடையிலேயே துடைத்துக்கொண்டு ஓடுகிறாள். சமையலைக் கவனிக்கிறாள்.

சிறிது நேரத்தில், குவளை மலரைப் போன்ற அவளுடைய கண்கள்முழுக்கப் புகை படர்ந்து நிறைகிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து சமைக்கிறாள்.

இப்படித் தன் கையால் துழாவிச் சமைத்த புளிக்குழம்பை அவள் தன்னுடைய கணவனுக்கு ஆசையோடு பரிமாறுகிறாள். அவனும் அதனை ‘அருமையா இருக்கு’ என்று சொல்லிச் சாப்பிடுகிறான்.

அப்போது அவளைப் பார்க்கவேண்டுமே, ஒளிமிகுந்த நெற்றியும் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்!

துக்கடா

  • இன்றைய பாடல் குறுந்தொகையின் மிகச் சிறந்த ‘டாப் 10’ல் ஒன்று. இதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களைவிட, நம்மை ஊகிக்கவிடும் விஷயங்கள்தான் அதிகம்
  • உதாரணமாக, ‘கழிவுறு கலிங்கம் கழாஅது உடீஇ’ என்றால் அழுக்காகிவிட்ட உடையைப் பற்றிப் பொருட்படுத்தாமல் சமைக்கிறாள் என்று அர்த்தம். இது எல்லார் வீட்டிலும் சகஜமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் அவள் புதுமணப்பெண் என்பதையும், இந்தக் காட்சியைப் பார்த்துச் சொல்பவர் அவளை வளர்த்த செவிலித் தாய் என்பதையும் பின்னணியாக வைத்து யோசிக்கும்போது நாமே பல புதுக் கற்பனைகளைச் சேர்த்துக்கொள்ளலாம், திருமணத்துக்கு முன்னால் அவள் எப்போதும் சுத்தமான ஆடைகளைமட்டுமே தேர்ந்தெடுத்து அணிகிறவளாக இருக்கலாம், ஆனால் இப்போது அதே பெண் அழுக்கான ஆடையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை
  • இதற்கு இன்னொரு கோணமும் உண்டு, திருமணத்துக்கு முன்னால் அவளுடைய கணவன் (அப்போது ‘காதலன்’) அழகான ஆடைகளில், பிரமாதமான மேக்கப்பில்மட்டுமே அவளைப் பார்த்திருப்பான், ஆனால் இப்போது அதே பெண்ணைத் தயிர்க் கறையும் புகையும் படிந்த உருவத்தில் பார்க்கிறான், ஆனாலும் அவர்களுக்குள் நேசம் குறையவில்லை என்று செவிலித் தாய் மகிழ்ச்சி அடைவதாகக் கற்பனை செய்யலாம்
  • ‘தான் துழந்து அட்ட’ என்ற வரியும் மிக அருமையானது, ’வீட்டில் பல வேலைக்காரர்கள் இருந்தாலும், தானே கணவனுக்குச் சமைத்து மகிழ்கிறாள் அவள்’ என்று புலியூர்க் கேசிகன் உரை சொல்கிறது
  • அது நிற்க. பெண்ணியவாதிகள் இந்தப் பாடலுக்கு இன்றைய ‘எசப்பாட்டு’ எழுதலாம் 😉

168/365

This entry was posted in அகம், காதல், குறுந்தொகை, திருமண வாழ்க்கை, நாடகம், முல்லை. Bookmark the permalink.

14 Responses to நுட்பமான மகிழ்ச்சி

  1. rAguC says:

    எங்கோ படித்த பாடல், மிக அருமையான பாடல், அனால் நான் படித்த இடத்தில், மகள் படும் துன்பங்களை விவரிக்கும் செவிலி தாய் போல விளக்கம் அளித்திருந்தார்கள். இது வேறு பார்வை, ஆனால் உங்கள் விளக்கம் மிக சிறயதோ என சந்தேகிக்கிறேன்!

  2. முளிதயிர்-முற்றிய,நன்றாகக் காய்ச்சப்பட்ட பாலில் செய்யப்பட்ட தயிர் என்று கூடச் சொல்லலாம்..

    கலிங்கம்- உடை

    குய்ப்புகை- தாளிப்பு செய்யும் போது உண்டாகும் புகை..

    துழந்து அல்லது உழந்து- உழப்பி,பிசறி, உழப்புறதுங்கறோதட வேர்ச்சொல்லா இருக்குமோ??

    இந்த வார்த்தைகளுக்கெல்லாம், உரை எழுதுமளவுக்கு @KRS-kku அர்த்தம் தெரியும்..இருந்தாலும்,நான் சொன்னது கரிட்டான்னு பாக்கணுமா இல்லியா??

    புளிக்குழம்பில் தயிர், அது என்ன புளிக்குழம்பா இல்லை மோர்க்குழம்பா??

    • alo…எப்பவோ ரெண்டொரு சொல்லுக்குச் சொல்லியிருப்பேன்! அதுக்காக உரை எழுதும் அளவுக்கு-ன்னு சொல்லுறதெல்லாம் too much:)

      நீங்களே அழகாச் சொல்லி இருக்கீங்களே, பொருள் அனைத்தும்! அப்பறம் என்ன? வாழ்த்துக்கள்:)
      இதே போல் 365பா-வில் அடிக்கடி பதியவும்!:)

  3. amas32 says:

    நன்கு காய்ச்சிய பாலில் உறைந்த தயிர் கெட்டியாக தான் இருக்கும். மகள் கணவனுக்குத் தன கையாலே செய்து பரிமாறி இன்புற்றாலும், தாய் வீட்டவருக்கு, செல்லமாக வளர்ந்த பெண் இவ்வளவு வேலை செய்து துன்பப்படுகிறாளே என்று தான் தோன்றும். இப்பொழுதெல்லாம் தனிக்குடித்தனம் போன புதுமணத் தம்பதிகளைப் பார்க்க பிள்ளை வீட்டிலிருந்து செல்பவர்கள், பையன் விழுந்து விழுந்து வீட்டு வேலை செய்கிறானே என்று விசனப்படும் நிகழ்வுகளும் ரொம்ப சாதாரண வழக்கமாக உள்ளன 🙂
    amas32

  4. GiRa says:

    அருமையான பாடல். இப்படியொரு பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி. 🙂 இந்தப் பாட்டுல எவ்வளவு விவரங்கள் இருக்கு தெரியுமா? அடேங்கப்பா. பாட்டு சொல்லும் நேரடியான பொருள் இருக்க, மேலும் பலப்பலச் சொல்லிக் கொடுக்கிறது.

    காலம் காட்டும் கண்ணாடி மாதிரி. அந்தக் காலகட்டத்துல எப்படி இருந்துச்சுன்னும் புரிஞ்சிக்கலாம். அதே மாதிரி எப்பவுமே மாறாமலும் இருக்குற சிலதுகளையும் இந்தப் பாட்டு சொல்லிக் கொடுக்குது.

    ஆயிரந்தான் சொல்லுங்க… பொண்ணுங்க செல்லமா வளர்ர எடம் பொறந்த வீடுதான். இப்பவும் பொண்ணுங்க பொறந்த வீட்டுக்குப் போனாத்தான் இயல்பா இருப்பாங்க. மாமனார் மாமியார் வேற ஊர்ல இருந்தா, அங்க போறப்ப ஒரு மாதிரி கவனமாத்தான் இருப்பாங்க. இதை யாரும் மறுக்கவே முடியாது. அப்படிப் பொண்ணுங்க யாராவது மறுத்தீங்கன்னா… ஒங்களுக்குள்ளயே ஒரு வாட்டி இதக் கேட்டுப் பாருங்க. அண்ணன் அண்ணி இருக்குற வீட்டுக்குப் போனா வேணா அந்த இயல்பு முழுமையா இல்லாம இருக்கும். அப்பா-அம்மா வீடுன்னா ஒரே ஜாலிதான். இல்லையா?

    அப்படிச் செல்லமா இருந்த வீட்ட விட்டுட்டு கல்யாணமாகித் தனிக் குடித்தனம். ஒரு மாசம் ஆகுது. மக தனியாப் போனாளே.. என்ன பண்றாளோ போவோம்னு அம்மா நெனப்பாங்க. அப்பத்தான் அதே ஊர்ல இருக்குற அண்ணியோ, தங்கையோ, அக்காவோ, அத்தையோ, சித்தியோ நினைவுக்கு வருவாங்க. போய்ப் பாருங்கன்னு அவங்ககிட்டச் சொன்னா அவங்களும் போயிட்டு வந்து மக குடும்பம் நடத்துற அழகைச் சொல்வாங்க.

    அப்படித்தான் இந்தப் பாட்டுல ஒரு செவிலித்தாய் போய்ப் பாத்துட்டு வந்துட்டு தாய் கிட்ட “ஒம்மக நல்லா சந்தோசமாத்தான் இருக்கா”ன்னு சொல்றாங்க. அதான் பாட்டு. கை அழுக்காகுறது கண்ணுல தண்ணி வர்ரதெல்லாம் துன்பமில்லை. அப்படியெல்லாம் இருந்தாலும் நல்லாத்தான் இருக்கான்னு பொருள். ஏன்னா அந்தப் பொண்ணப் பெத்தவளும் அதத்தான செஞ்சிருக்கிட்டிருக்கனும்!

    சரி. பாட்டுக்கு வருவோம்.

    முளிதயிர்

    இது பழைய தயிர். இளந்தயிர் கட்டியா இருந்தாலும் கொஞ்சம் லொடலொடன்னு இருக்கும். விரல விட்டேக் கலக்கீரலாம். புளிப்பே இருக்காது. ஒரு நாள் ஆச்சுன்னா புளிப்பு வந்துரும். நீர்ச்சத்து வத்திக் கெட்டியாகும். அப்படியான தயிர்தான் முளிதயிர். அதுதான் கொழம்புக்கும் ஆகும். வீட்டுல சமைக்கிறவங்க கிட்ட மோர்க்கொழம்புக்குப் புதுத் தயிர் ஊத்துவாங்களா பழைய தயிர் ஊத்துவாங்களான்னு கேளுங்க. விவரம் புரியும்.

    இன்னும் ஒத்துக்க முடியலையா? சரி. இலக்கணப்படியே வர்ரேன். முளின்னா என்ன? காய்தல். முளி இலைன்னு இந்தப் பாவுல ( https://365paa.wordpress.com/2011/12/14/161/ ) ஏற்கனவே பாத்திருக்கோமே. காய்ந்த இலை. எது காய்ந்த இலை? இளம் இலையா? பழம் இலையா? பழசுதானே? அது மாதிரிதான் இங்க.

    காய்ந்தன்னு வருதேன்னு சொல்லக் கூடாது. தயிரை யாரும் காய்ச்ச மாட்டாங்க. பாலைத்தான் காய்ச்சுவாங்க.

    முளிதயிர் பிசைந்த – தயிருக்குள்ள கைய விட்டுப் பிசைய வேண்டியிருக்கு. ஏன்? தயிர் ரொம்பக் கெட்டி. அந்தக் காலத்துல மண்பானையிலதான் தயிர் இருக்கும். அதுல பானைல நீர்ச்சத்து லேசா கசிஞ்சி இந்தப் பக்கம் விட்டுரும். தொட்டுப் பாத்தா சில்லுன்னு இருக்கும். லேசா ஈரமாவும் இருக்கும். அதுல தேங்காச் சில்லு போட்டு வெச்சா கூட ஒரு நாளைக்குப் புளிக்காம இருக்கும். இதுதான் ஒருநாள் தயிராச்சே. தேங்காச் சில்லும் போடல. நல்லா கட்டியா இருக்கு. கைய விட்டுப் பெசஞ்சாதான் பக்குவம் வரும்.

    சரி. புளிப்பான தயிரைப் பிசைஞ்சாச்சு. அடுத்து என்ன பண்ணனும்? தாளிச்சிட்டு அதுல தயிரைக் கொட்டனும். ரொம்பக் கொதிக்க விடக் கூடாது. மோர்க்கொழம்புக்கு ஒரு கொதி. புளிக்கொழம்புக்கு நல்லாக் கொதி.

    அடடா. தாளிக்கனும்னா… சட்டிய அடுப்புல வைக்கனும். எண்ண ஊத்தனும். அதுல கடுகு உழுந்தெல்லாம் போடனும். அடுத்து காஞ்ச மெளகா ஒன்னு முழுசாப் போடனும். அப்புறந்தான் பிசைஞ்ச தயிர ஊத்தனும்.

    ஆனா கையில தயிராயிருக்கே. அப்பல்லாம் அடுப்படி மேடையிலேயா குழாய் இருந்துச்சு? எல்லாம் கரித்துணிதான். அதுலதான் கையத் தொடைக்கிறது. அதுலதான் கரண்டியப் பிடிக்கிறது. அதுலதான் பாத்திரத்த எறக்குறது.

    ஆனா இந்தப் பொண்ணு கட்டீருக்குற சேலையிலேயே தொடச்சிர்ரா. படக்குன்னு வேலையாக வேண்டாமா. வெளிய போனவன் பசிக்குதுன்னு கத்திக்கிட்டிருக்கான்.

    காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

    மெல்லிய காந்தள் மலர் போன்ற விரல்களைக் கலிங்கத்தில் (துணியில்) துடைத்துக் கொண்டு… அந்த அழுக்கான உடையையே உடுத்திக் கொண்டு வேலையைத் தொடர்ந்து செய்தாள். சமையல் ஆக வேண்டாமா? ஒவ்வொரு வாட்டியுமா கைகழுவ முடியும்?

    கழாஅது உடீஇ – இதுல உடீங்கிறது உடுத்துறது.

    கையத் தொடச்சாச்சு. சட்டிய வெச்சாச்சு. எண்ணெய் காஞ்சாச்சு. கடுகு உழுந்து வெடிச்சாச்சு. அடுத்து மெளகா வத்தல். படபடன்னு வெடிக்குது. பொகை. கண்ணு எரிச்சல். அப்படியே கண்ணீர் வருது. அதையெல்லாம் பாத்தா எப்படிக் கொழம்பு வைக்கிறது? அதான் “குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்”.

    கொழம்பு வெச்சாச்சு. அதுதான் “தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்”. தீம்புளிப் பாகர்னு சொல்றத நல்லாக் கவனிக்கனும். மோர்க்கொழம்பு ரொம்ப ஒறைக்காது. பாலில் இருக்குற லேசான இனிப்பு தயிர் வழியா கொழம்புக்கும் வந்துருச்சு. ஆனா புளிப்பும் இருக்கு. அதான் தீம்புளிப்பாகர். அதுதான் மோர்க்கொழம்புக்குப் பழைய பேரு.

    சோறு ஏற்கனவே பொங்கியாச்சு. கணவனை உக்கார வெச்சி, எலையப் போட்டுச் சோறப் போட்டுப் பரிமாறுறா. இவ புதுசா சமைக்கிறவ. கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கு. இருந்தாலும் இந்தப் பய காஞ்சமாடு கம்பங்கொல்லைல மேஞ்ச மாதிரி ருசிச்சி ருசிச்சிச் சாப்புடுறான்.

    “இன்னைக்கு நானே மோர்க்கொழம்பு வெச்சேன். ஒன்னும் சொல்லாமச் சாப்புடுறீங்களே”

    “அட. இவ்வளவு நல்லாருக்கு. எடுத்துச் சாப்டப் பெறகு இன்னும் சாப்புடத் தோணுதே தவிர.. பேச்சே வர மாட்டேங்குதே. இதுக்குத்தான் நீ நல்லாச் சமைக்கக் கூடாதுன்னு சொல்றது.”

    அவளுக்கு அப்படியே பறக்குறாப்புல இருக்கு. மொகமெல்லாம் மலர்ச்சி.

    இப்பிடி ஒரு இன்பம். குடும்பந்தானே. எல்லாம் இருக்க வேண்டியதுதான்.

    அதுதான் “இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

    இனிது எனக் கணவன் உண்டலின்

    நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகன்

    இந்த இடத்துல மகிழ்ச்சியை விளக்க முடியாது. ஒரு இங்கிதமான மகிழ்ச்சி. அதான் நுண்ணிய மகிழ்ச்சின்னு சொல்றாரு புலவரு. கதைப்படி செவிலித் தாய்.

    ஒள்நுதல்னா என்ன? ஒளி பொருந்திய நுதல். நுதல்னா நெற்றின்னு சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன். நுதல்விழியான் கோட்டம்னு மதுரைல இருந்த சிவன் கோயிலுக்கு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல சொல்றாரு.

    முகன் – முகம்.

    இதுதாங்க பாட்டோட பொருள்.

    பாட்டுல இருக்குற இலைமறை காய்களையும் அடுத்து பாக்கலாம்.

    • amas32 says:

      படித்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நீங்கள் சொல்லியிருக்கும் சுவையான விளக்கத்தை!
      amas32

    • Excellent.

      //பொண்ணுங்க செல்லமா வளர்ர எடம் பொறந்த வீடுதான்//
      உங்களுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.
      இதைப் பத்தி ஒரு பாட்டு வரும்

      ‘When my little one grow up’ ங்கறதை

      ‘ஏவல் மறுத்திடும் சிறு விளையாட்டி
      அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தள்கொல்’

      அப்படின்னு (ஒருவேளை இங்க தான் படிச்சனோ)

      அவ்வளவு சுருக்கமா, அவ்வளவு பிரமாதமா, இன்னைக்கு வரைக்கும் இருக்கற ஒரு universal உணர்வை, கணத்தை படம் பிடிச்சிருப்பார்.
      அதுவும் அவர் பொறுப்புன்னு விதந்து சொல்ற இடம் ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கணம் இல்லை.

      அன்னிக்கு தங்கக்கிண்ணத்துல வச்சிக்கிட்டு ஊட்டிவிட நினைச்சப்போ சாப்பிட மாட்டேன்னு படித்தின என் மகள், இன்னைக்கு கணவன் வறுமைல இருந்தாலும் அப்பாகிட்டயிருந்து உதவி வாங்க மறுக்கிறா. இரண்டும் மறுப்பு. என்ன ஒரு juxtaposition!

      எவ்வளவு நுட்பமான, மென்மையான புரிதல் இருந்தா இதை இவ்வளவு அழகா எழுத முடிஞ்சிருக்கும். இது இந்த அளவுக்கு ரசிக்கப்படக்கூடிய ஒரு சூழல் அன்னைக்கு இருந்திருக்கு.

      நினைச்சாலே பிரமிப்பா இருக்கு!

      இந்த பாட்டு பிரமாதம். அழகு இரண்டாம்பட்சமா ஆகிப்போன ஒரு சந்தோஷக் கணத்தை, அடக்கமான தொனியில எவ்வளவு அழகா சொல்லிருக்காங்க.

      நன்றி @nchokkan

  5. இராகவன் பிசைஞ்சி வச்ச மோர்க்குழம்பை உண்டதால், முத்தாய்ப்பாக ஒன்னு சொல்லட்டுமா?:)

    அவனுக்கு, அவள் சமைச்சி வச்சதைச் சாப்பிடுவது ஒரு இன்பம்-ன்னா, அவ உடல் தனக்காகப் அக்கறையுடன் பட்டதை எல்லாம் சுவைப்பது இன்னோரு இன்பம்! பேரின்பம்:))
    பாட்டைப் பாருங்க! ஒவ்வொரு கட்டத்திலும், அவள் உடல் உறுப்பு ஒன்னு, தொடர்பு பட்டிருக்கு!

    * தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் = அவ நீட்டு நீட்டு விரல் பட்ட தீண்டல்
    * குவளை உண் கண் குய்ப் புகை = புகையால் சிவந்த அவ கண்ணு
    * தான் துழந்து அட்ட = துழாவிய அவள் கைகள்
    * ஒள் நுதல் முகனே = அவ நெற்றி

    இப்படி அவள் உடற் சுவை கலந்த உணவுச் சுவை! அவனுக்கு ரொம்ப பிடிச்ச்ச்ச்ச்ச்சி இருக்கு! முருகா!

  6. //ஒள் நுதல் முகனே//

    நெற்றி எப்படிய்யா ஒளிரும்?
    மேக்கப் போட்டுக்கிட்டாளா? அவ தான் “அசுத்தமா” இருக்காளே! கை துடைச்ச கறை, அழுக்கு ஆடை வேறு! இதுல எங்கிருந்து மேக்கப்பு?

    * அடுப்படியில் காத்தில்லாம அல்லாடினது = நெற்றியில் ஒரு முத்து வியர்வை!

    * இப்படி அவனுக்காகப் பார்த்து பார்த்துப் பண்ணது, அதும் முன் அனுபவம் இன்றி…எப்படி இருக்கோ?
    லேசான அச்சம் = நெற்றியில் இரு முத்து வியர்வை!

    * அவனோ, வாய் தொறவா விழுங்கனாக…வாய் நிறைய சோறு வச்சிக்கிட்டு, இனிது-ன்னு ஒத்தை வார்த்தை சொல்லுறானாம்..
    அதைக் கேட்ட மாத்திரத்தில் = நெற்றியில் மும் முத்து வியர்வை!

    இப்படி வியர்வை முத்துக்கள்!
    சாதி வெண்முத்து மாலைகள் எப்படி ஒளிருமோ…
    அதை விட அவ வியர்வை முத்து ஒளிருது….
    அந்த ஒளியால் அவ முகமெல்லாம் பளிச்…அகமெல்லாம் பளிச்…
    இப்படியொரு காட்சி…சங்கத் தமிழிலே!

    முருகா, இவிங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்!

    • குடந்தை மணி says:

      என்ன தவம் செய்ய வேண்டும், இப்படியொரு மனையாட்டி பெறுவதற்கு??

  7. Pingback: செந்தில்நாதன் – 2 – தமிழ்க்கொழம்பு « GRagavan’s Weblog

  8. Annamalai says:

    பதிவு மிக அருமை
    சுவாரசியமாக உள்ளது.
    இந்த பாடலுக்கு இதே மாதிரி விளக்கமும் ஒன்று
    படித்தேன்.கீழே சுட்டி கொடுத்துள்ளேன்.
    http://www.tamilauthors.com/01/56.html

  9. Annamalai Sir.. காலம்காலமாக தமிழர்களின் உணவில் புளிப்புச்சுவையே தூக்கலாக இருந்திருக்கிறது. எனவே அது பாகற்காய் அல்ல..! பானகம் என்றொரு பானம் விருதுநகர் மாரியம்மன் கோவில் தீச்சட்டி அன்று கொடுப்பார்கள்.. புளியையும் கருப்பட்டி மிளகு கலந்து கொடுப்பார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும். அந்த “பாகர்” இந்த புளி”கருப்பட்டி” தான்..!

Leave a comment