நீரே மருந்து

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது

அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?

எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?

‘வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,

ஆர் கலி வானம் தலைஇ, நடுநாள்

கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று

முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்

விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்,

தண் என உண்டு, கண்ணின் நோக்கி,

முனியாது ஆடப் பெறின், இவள்

பனியும் தீர்குவள், செல்க!’ என்றோளே!

நூல்: நற்றிணை (#53)

பாடியவர்: நல்வேட்டனார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்க்க வருகிறான் காதலன், அப்போது அவனுடைய காதில் விழும்படி தோழி காதலியிடம் சொல்வது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி,

இன்றைக்கு உன் அம்மா ஒரு விஷயம் சொன்னார். அதைக் கேட்டதிலிருந்து எனக்குப் பெரிய கவலையாக, பயமாக இருக்கிறது.

வானத்தைத் தொடுகிற அளவுக்கு உயர்ந்த பெரிய மலை. அதன்மேல் பெரிதாக முழக்கமிட்டபடி மேகம் மழை பெய்யத் தொடங்கியது.

நாளின் நடுப்பகுதியாகிய இரவுமுழுவதும் விடாத மழை. அதனால், கற்கள் நிறைந்த காட்டாற்றில் வெள்ளம் பொங்கி வருகிறது. பூங்கொத்துகளும் காய்ந்த சருகுகளும் அதில் மிதக்கின்றன.

அந்தப் புதிய, இனிய தண்ணீரைப் பற்றி விவரித்த நம் தாய், ‘அதில் உன் தோழியைக் குளிக்கச் சொல்’ என்று என்னிடம் சொன்னார். ‘அந்த ஜில்லென்ற தண்ணீரைப் பார்த்தாலே இவளுடைய நோயில் பாதி தீர்ந்துவிடும், அதில் இறங்கிக் குளித்தால் மீதியும் தீர்ந்து குணமாகிவிடும், போய் வாருங்கள்’ என்றார்.

தோழி, உண்மையில் அம்மா மனத்தில் இருப்பது என்ன? அவர் உன்மேல் வைத்திருக்கும் அன்பினால் இப்படிச் சொல்கிறாரா அல்லது, உன்னுடைய காதல் விஷயம் அவருக்குத் தெரிந்திருக்குமோ? அதனால்தான் நீ இப்படி நோய்கொண்டு நடுங்குகிறாய் என்பது புரிந்திருக்குமோ? வேண்டுமென்றே இப்படிச் சொல்லி நம்மை ஆழம் பார்க்கிறாரோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை!

துக்கடா

 • இந்தப் பாடல் தோழி காதலிக்குச் சொல்லப்படுவதுபோல் தோன்றினாலும், மறைமுகமாக அவள் அந்தக் காதலனிடம்தான் பேசுகிறாள், ‘டேய், உன் ஆளோட முகத்தைப் பார்த்தாலே எல்லாருக்கும் உங்க காதல் விவகாரம் புரிஞ்சுடும், அதனால இனிமேலும் மரத்தைச் சுத்தாம அவளைப் பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ற வழியைப் பாரு’ என்கிறாள்!
 • புது வெள்ளத்தில் சும்மாக் குளித்தால்மட்டும் போதாதாம், அதைப் பார்த்து அனுபவிக்கவேண்டுமாம் (‘கண்ணின் நோக்கி’), அந்தக் குளிர்ச்சியை அனுபவிக்கவேண்டுமாம் (’தண் என உண்டு’), ரசனைய்யா!
 • அதெல்லாம் சரி, குளித்தால் தீர்கிற வியாதியா அது? 😉 வெவரமான தோழி :>

161/365

Advertisements
This entry was posted in அகம், காதல், குறிஞ்சி, தோழி, நற்றிணை, நாடகம், பெண்மொழி. Bookmark the permalink.

7 Responses to நீரே மருந்து

 1. நீரே மருந்து = நீங்களே மருந்து
  நீரே மருந்து = தண்ணீரே மருந்து

  சங்க காலச் சிலேடையோ?:))
  ————
  என்னா தண்ணி? = அவன் உமிழ்நீரா, இவள் கண்-நீரா? …சரி ஏதோவொரு இனிக்கும் நீர்:))
  தண்ணி எப்படி மருந்தாகும்? சினிமாவில் பார்த்திருக்கோம்-ல்ல? நட்ட நடு ராத்திரி, heroine, சொம்புல தண்ணி மொண்டு, தலைக்கு மேலே ஊத்திப்பாங்களே! 🙂
  காதல் சூட்டை, நீர் தணித்திடுமோ? 🙂 இதழ் நீர் தணிக்கும்!:))

 2. நற்றிணை = நல் + திணை = நல்ல ஒழுக்கம்!
  எட்டுத் தொகையில் இதுவே முதல் நூல்! காதல் நூல்!
  மொத்தம் 400 பாடல்களின் தொகுப்பு = நற்றிணை நானூறு-ன்னு பேரும் உண்டு!

  முன்பு, இதே #365paa ல, நும்மினும் சிறந்தது நுவ்வை, உன்னை விட உன் தங்கச்சி தான் சூப்பரு-ன்னு ஒரு பாட்டு பாத்தோமே:) அதே நற்றிணை தான்! 🙂
  —————-

  என்னமா, Dialogue வருது பாருங்க! கவிதை-ன்னாலும் உரைநடை வசனம் போலவே இல்ல?
  அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
  எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?
  அம்மா-க்கு matter தெரிஞ்சுடுச்சா? அறிந்து சொல்லுறாளா? இல்லை அன்பாச் சொல்லுறாளா? – குற்றமுள்ள காதல் நெஞ்சுக்கு எல்லாம் double doubleஆத் தெரியுது:))

 3. amas32 says:

  வெவரமான தாய், வெவரமான தோழி. காதலனுக்கு தான் வெவரம் பத்தவில்லை. தாயிடம் எதையும் மறைப்பது கடினம். இருப்பினும் இந்தத் தாயின் அறிவுரை எனக்குக் கொடுமையானதாகத் தான் தெரிகிறது. ஆனால் காதல் தாபத்தில் இருக்கும் காதலிக்கு ஜில்லென்ற தண்ணீரில் குளிப்பது சற்று இதமாகத்தான் இருந்திருக்கும் போல. மலையில் பெய்யும் மழையும், காட்டாற்று வெள்ளமும் நம் கண் முன் விரிகிறது. என்ன ஒரு அழகிய பாடல்!
  amas32

 4. இந்தப் பாட்டுல முக்கியமான சில சொல்லு-ல்லாம் இருக்கு! அத்தனையும் இயற்கைச் சொல்லு! #GoGreen
  ————-
  1. கவான் = Mountain Slope/ மலைச் சரிவு/ மடி போல இருக்கும் சரிவு!
  வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,

  2. பெயல்=மழை; கலி=ஒலி
  ஆர் கலி வானம் தலைஇ, நடுநாள்
  கனை பெயல் பொழிந்து
  மழை பெய்வதால் = பெயல்! என்ன ஆழகான காரணப் பெயர்!

  3. முளி இலை = முதிர்ந்த இலை/ Faded Leaf
  கானக் கல் ஆற்று, முளி இலை கழித்தன
  அதாச்சும் பெய்த மழையில், ஆத்துல, கல்லு அடிச்சிக்கிட்டு வருது! கூடவே முதிர்ந்த இலை-தழைகள்!
  முளி = முதிர்ந்த; முளி தயிர் திம்போம்-ல்ல?:)

  4. இணர் = கொத்து கொத்தா
  முகிழ் இணரொடு வரும்…
  ஆற்றில், முளி இலை மட்டும் மிதக்கல! கொத்துக் கொத்தாப் பூவும் மிதந்து வருது!
  —————-

  கற்பனை பண்ணிப் பாருங்க!
  ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை…அதே போல…
  Slope-இல் பெய்து, கல்லை உருட்டி, முளி இலை மிதந்து…
  பூங்கொத்துகள்,…ஆறு முழுக்க பூ வெள்ளம்!

  இதைப் பார்க்கணுமா? குளிக்கணுமா? = ரெண்டும் தான் பண்ணனும்!
  சங்க காலத்தில் Camera ஏது?
  மன lens-இல் படம் எடுத்துக்கிட்டே குளிக்கணும்!
  குளிக்கும் போது, சுவையான பூ நீரைக் குடிக்கணும்!
  = தண் என உண்டு, கண்ணின் நோக்கி, ஆடப் பெறின்,
  —————-

  விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் = இப்படி மூலிகைத் தண்ணி! இது விருந்து + மருந்து!
  போய்க் குளிச்சிட்டு வாங்க-ன்னு அம்மா சாதாரணமாச் சொன்னதை,
  அம்மா ஐயப்பட்டு விட்டாள்-ன்னு கெளப்பி விட்டு,
  அவனை அவசரப்படுத்துறாக! எதுக்கு? = டும் டும் டும்-க்குத் தான்:))

 5. ஒங்கள ஒரு கேள்வி கேக்குறேன்; என் ஐயத்தைத் தீர்த்து வைக்குறீகளா?

  >யான் அஃது அஞ்சினென், தான் அஃது<
  அது -ன்னு சொன்னா போதாதா?
  அஃது-ன்னு ஏன் சொல்லணும்?
  ரெண்டும் வேற வேறயா? ஆய்த எழுத்தின் அவசியம் என்ன?:)

 6. ஒரு வேளை மாத்திரை ஒலிக்காக அதைச் சேர்த்திருக்கலாம்.?? இது இன்னிசை அளபெடை என்றே நினைக்கிறேன்… நீங்கள் சொல்வதால் ஏதேனும் நுணுக்கமான அர்த்தம் பொதிந்து இருக்கலாம்..KRS உங்கள் விளக்கத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்…

  இயற்கையோடு இயைந்த வாழ்வை எவ்வளவு தொலைத்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன்.. இந்தப் பாடலைப் படித்து விட்டு, என் தோழியிடம் நீ எப்போதாவது ஆற்றில் குளித்து இருக்கிறாயா? என்று கேட்டேன்.. “குறைந்தபட்சம் குற்றால அருவியில் கூட குளித்ததில்லை” என்று கேட்ட பதில்மொழி எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது… எங்க அம்மாவெல்லாம் கிணத்துல,ஆத்துல டைவ் அடிச்சுக் குளிச்சுப் பழக்கமானவங்க.. இப்ப என் கூட வேலை பார்க்கும், 70% ஆண்களுக்கு நீச்சலடிக்கத் தெரியாதது வருத்ததை ஏற்படுத்துகிறது…

  “என் பொண்ணு சரியாவே சாப்பிட மாட்டேங்குறா..வயசுக்கு வந்த பொண்ணு கல,கலன்னு பேசவே மாட்டேங்குறா..வீட்டுக்கு யாராவது வந்தாக்கூட ரூம்ல போய் அடைஞ்சிக்குறா…வீட்ல யாரையும் முகங்கொடுத்துப் பேச மாட்டேங்குறா.” – இப்பிடிச் சொல்லி கவுன்சிலிங்குக்கு கூட்டிட்டு போகும் தாய்மார்களுக்கு ஏன் இப்போ அது பசலை நோய் என்று தெரியாமப் போச்சு..

  சங்கப் பாடல்கள்ல இவ்ளோ உளவியல் தத்துவங்களா? பதின்ம வயது பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டுமென்று இவ்ளோ துல்லியமா உலகின் எந்த மனநிலை மருத்துவராலும் சொல்லியிருக்க முடியாது..

  அவனின் நினைவுகள், ஒரு பெண்பிள்ளையை என்ன பாடாய் படுத்துகிறது.. எனக்கென்னமோ, அவங்க அம்மா அதைப் புரிஞ்சுகிட்டு ரொம்ப நாசூக்கா அவங்க தோழிகிட்ட சொல்லியிருக்கறதாத்தான் எனக்குத் தோணுது.. அவங்க அம்மாவுக்குத் தெரியாம இருந்துச்சுன்னா,வெள்ளந்தியா இருந்திருந்தாங்கண்ணா, அந்தப் பொண்ணை நேரடியாவே வைத்தியர்ட்ட கூட்டிட்டுப் போயிருக்கலாம்… அது பசலை நோய்னு தெள்ளத்தெளிவா உணர்ந்த அந்த அம்மா, யாரு அந்தப் பையன்னு தோழி மூலமா தெரிஞ்சுக்கக் கூட அவளை வெளிய கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிருக்கலாம்..

  சங்க காலப் பாடல்களில் நீராடல் என்பது தலைவியும், தோழிகளும் மகிழ்ந்து பலவிஷயங்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு குமால்ட்டிக்கான விஷயம்..நீராடல் சம்பந்தமா ஒரு பாடலை 365பா-வில் எதிர்பார்க்கிறேன்..அய்யா KRS அவர்களும் அதைப் பிழிஞ்சி சாறு எடுத்துப் பல விளக்கங்களைப் போடவேண்டும்..

  “காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை”-உண்மைதான்..தோழிகள் கூட அவர்களாகத்தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்… பசங்க இந்த விஷயத்தில் ஓட்டை வாய்… தொன்னந்தொன்னன்னு “,மச்சி அவ என் ஆளுடா”-ந்னு ஊருக்கெல்லாம் பறையடிச்சாதான் அவய்ங்களுக்கு சந்தோஷம்…

  நீராடப் போகும்போது, நிறையத் தோழிகளோடு செல்வதுதான் வழக்கம்..அப்போதும் இப்பிடி அமுங்கணி மாதிரி இருக்க முடியாது.. கலகலன்னு பேசியே ஆகணும்..விஷயம் வெளியே வந்தே ஆவணும்னு அவங்க அம்மா போட்டது மாஸ்டர் பிளான்.. ஆனால்,தலைவி இப்பிடி தோழியவே ஒற்று வேலை பாக்க வெச்சது தலைவியோட சூப்பர் ப்ளான்..

  ஆணோ,பெண்ணோ தன்னோட காதலை யார்ட்ட சொன்னாலும், பெத்தவங்ககிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும்.. பெத்தவங்களுக்கு இது தெரிஞ்சாலும் அவங்க கண்டுக்காம இருக்கறதுதான் அழகு..

  கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ஒரு அழகிய பகுதி.

  பேயத்தேவரோட காதல் தெரிஞ்ச அவங்க அப்பா பெரிய தேவரு எப்படி இலைமறை,காய் மறையாக் கேக்குறாரு பாருங்க..

  பெரியதேவர்:ஏலே..பேயத்தேவா..ஊருக்குள்ள என்னமோ பேசிக்கிறாகளே..அது உண்மையாடா??

  பேயத்தேவர் கூச்சத்துடன் அப்பனோட முகத்தைப் பாக்காமலேயே,தட்டையை அடுக்கிக்கிட்டு, “அதுல பாதி உண்மையுமில்ல,பாதி பொய்யுமில்ல..”

  இந்த மாதிரித்தான் பெத்தவங்களுக்குத் தெரிஞ்சும் தெரியாமலயும், பசங்க அறிஞ்சும் அறியாமலயும் இது ரொம்ப காலமா நடந்துக்கிட்டு வருது..

  எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. சங்க காலத்திலதான் பெண்கள் எந்த ஆண்மகனையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இருந்ததே..அப்புறம் ஏன் இந்தக் களவொழுக்கம் எல்லாம்..புடிச்சிருந்தா அதைப் பகிரங்கமா அவங்க அம்மாகிட்டத் தெரிவிக்க அப்படி என்ன கூச்சம்? மேலும், அப்போ எல்லாம் இந்த ஒருதலைக்காதலே இல்லியா?காதல் தோல்வி இல்லியா? அது சம்பந்தமா பாடல்களையும் தெரிஞ்சுக்கலாமே.. எப்பபாரு திகட்டுற அளவுக்கு இனிப்பா சாப்பிட்டுட்டு இருந்தா எப்பிடி??பாலைத்திணையையும் உள்ளே கொண்டுட்டு வாங்க….அய்யா KRS விளக்க வேண்டுகிறேன்..

 7. Pingback: செந்தில்நாதன் – 2 – தமிழ்க்கொழம்பு « GRagavan’s Weblog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s