புலியின்மீது படுப்போம்

கொழுங்கொடியின் விழுந்த வள்ளிக்

….கிழங்கு கல்லி எடுப்போம்,

குறிஞ்சி மலர் தெரிந்து முல்லைக்

….கொடியில் வைத்துத் தொடுப்போம்,

பழம் பிழிந்த கொழும் சாறும்

….தேறலும் வாய் மடுப்போம்,

பசும் தழையும் மரவுரியும்

….இசைந்திடவே உடுப்போம்,

செழும் தினையும் நறும் தேனும்

….விருந்து அருந்தக் கொடுப்போம்;

சின வேங்கைப் புலித் தோலின்

….பாயலில் கண் படுப்போம்,

எழுந்து கயல் கணி காலில்

….விழுந்து வினை கெடுப்போம்,

எங்கள் குறக்குடிக்கு அடுத்த

….இயல்பு இது காண் அம்மே!

நூல்: மதுரை மீனாட்சி அம்மை குறம்

பாடியவர்: குமர குருபரர்

சூழல்: மதுரை மீனாட்சி அம்மையிடம் பேசும் குறக்குடிப் பெண் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார்

(மிகச் சில வார்த்தைகளைத் தவிர இந்தப் பாடலுக்கு உரையே தேவைப்படாது. ஒரு சாத்திரத்துக்காகமட்டுமே இது)

செழிப்பான கொடியில் விளைந்த வள்ளிக் கிழங்குகளைத் தோண்டி எடுப்போம், நன்கு மலர்ந்த குறிஞ்சிப் பூக்களைத் தேர்ந்தெடுத்துப் பறித்து முல்லைக் கொடியில் தொடுத்து அணிந்துகொள்வோம்.

பழத்தைப் பிழிந்த நல்ல சாறையும் இனிப்பான தேறலையும் விரும்பிக் குடிப்போம், பச்சைத் தழைகளையும் மரவுரியையும் ஆடைகளாக உடுத்துவோம். எங்களைப் பார்க்க வருகிறவர்களுக்கு விருந்துச் சாப்பாடாக, செழிப்பாக வளர்ந்த தினையையும் நல்ல தேனையும் கொடுப்போம்.

எங்களுடைய படுக்கை எது தெரியுமா? கோபமான வேங்கைப் புலியின் தோல்தான். அதில் தூங்கி எழுந்தவுடன் அங்கயற்கண்ணியின் காலில் விழுந்து வணங்குவோம், எங்களுடைய குறைகளைப் போக்கிக்கொள்வோம்.

இதுதான் எங்களுடைய குறக்குடியின் இயல்பு.

துக்கடா

 • இந்தப் பாடல் ‘எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்ற வகையைச் சேர்ந்தது. அதிகச் சிக்கல்கள் இல்லாத மிக எளிய, இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல் வடிவம் இது, கொஞ்சம் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் எளிதாக எழுதலாம்
 • எண்சீர் ஆசிரிய விருத்தத்தை நீங்கள் சினிமாவில் நிறையக் கேட்டிருப்பீர்கள். கண்ணதாசனும் வைரமுத்துவும் இதில் விற்பன்னர்கள். உதாரணமாக, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாட்டின் ஒரிஜினல் இங்கே : http://etamil.blogspot.com/2004/06/blog-post_27.html
 • அது சரி, ‘தேறல்’ன்னா என்ன? கொஞ்சம் கூகுள் செஞ்சு பாருங்க, அது சிரமம்ன்னா, அந்தக் கால ஒயின்னு வெச்சுக்குங்களேன் 🙂

167/365

Advertisements
This entry was posted in ஆசிரிய விருத்தம், சினிமா, பெண்மொழி, வர்ணனை, விருத்தம். Bookmark the permalink.

2 Responses to புலியின்மீது படுப்போம்

 1. amas32 says:

  குற்றமொன்றில்லாத எளிமையான வாழ்க்கை முறையை எளிமையான பாடல் மூலம் சொல்கிறார் குமர குருபரர் . அமைதியான, இன்பமயமான, மனநிறைவான வாழ்க்கையை குறக்குடியினர் வாழ்ந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. காலை எழுந்தவுடன் மீனாக்ஷி அம்மனை தொழுது விடிகிறது அவர்கள் பொழுது. உழைத்து உண்கின்றனர். கிடைத்ததை பகிர்ந்து கொள்கின்றனர். இரவில் நல்லுறக்கம். உண்மையான வாழ்க்கை நெறி!
  amas32

 2. rAguC says:

  அக்கால மகளிரும் தேறல் அருந்தினார்கள் எனும் தகவல், அலாதியானது. பெண்கள் மது அருந்த கூடாது என்பவர்கள் வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது! வரலாறு முக்கியம் அமைச்சரே!

  -ரகு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s