கெட்டது பயம்!

ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடை மணி சேர்

திருவரை கிண்கிணி அசைபட, திடுக்கிட்டு அரக்கர்

வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக

பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!

நூல்: கந்தர் அலங்காரம் (#14)

பாடியவர்: அருணகிரிநாதர்

சூழல்: முருகனைக் குழந்தையாகக் கருதிப் பாடியது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சிவனைத் தன் உடலின் ஒரு பங்காகக் கொண்டவள் உமை. அவளுடையமகன் முருகன்.

உமை அன்னை தன் மகனுக்கு அரைஞாண் கயிறு கட்டினாள். அதில் சில மணிகள் கோர்க்கப்பட்டிருந்தன. இதனால், குழந்தை முருகன் அசையும்போதெல்லாம், கிண்கிணி என்ற ஒலி எழுந்தது.

அந்தக் கிண்கிணிச் சத்தத்தைக் கேட்டு எட்டுத் திசைகளிலும் வாழ்ந்தவர்கள் காதடைத்துப்போனார்கள், பொன் மலையாகிய ‘மேரு’ அதிர்ந்தது, அரக்கர்கள் திடுக்கிட்டு நடுங்கினார்கள், அதனால் தேவர்களின் பயம் நீங்கியது.

துக்கடா

 • ’பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்ற பஞ்ச் டயலாகின் ஆதாரம், இந்தப் ’பா டயலாக்’தானோ? 😉
 • தேவர்களைக் கொடுமைப்படுத்திய அசுரர்களை அழிப்பதற்காகவே முருகன் பிறந்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. அதைக் குறிப்பிடும்வகையில், ‘குழந்தை இடுப்பில் கட்டிய மணி ஒலியைக் கேட்டு அசுரரர்கள் நடுங்கினார்கள், தேவர்கள் நிம்மதியானார்கள்’ என்கிறார் அருணகிரிநாதர்

169/365

Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், பக்தி, பிள்ளைத்தமிழ், முருகன். Bookmark the permalink.

8 Responses to கெட்டது பயம்!

 1. //ஒருவரைப் பங்கின் உடையாள்//

  அப்பிடிப் போடு! அருணகிரியா? கொக்கா?:)
  ஆக, ஈசனைத் “தன் பங்கில்” உடையவள்!
  போனாப்போவட்டும்-ன்னு ஒரு பொண்ணு, சரிபாதி உரிமையைப் புருசனுக்கு குடுத்திருக்கா! wow!

  அதை நைசா மாத்தி, ஏதோ அவரு குடுத்தாப் போலக் காட்டிப்புட்டாய்ங்களா?:)))

 2. உக்க்க்கும்! இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல முருகா ஒனக்கு?:)
  உன் அரைஞாக் கொடி மணி கிலுகிலுத்துச்சாம்….அதக் கேட்டு எட்டுப் பட்டி மக்கள் செவிடு ஆனாங்களா?
  டேய் லூசு முருகா, why you make ettu patti ppl deaf-da? come home; i will beat u & bite u 🙂

 3. //திக்கு செவிடு பட்டு,
  எட்டு வெற்பும்
  கனக பருவரை குன்றும்//

  அது என்ன எட்டு வெற்பு (மலை)?
  ஏழு கடல் மாதிரி எட்டு மலையா? யாராச்சும் சொல்லுங்களேன்!

 4. படைப்பாளிகள் கற்பனை வறட்சி நிலையில் தலையைப் பிராண்டும்போது இதுபோல் பாடல்களைப் படித்தல் நலம். ஒரு படைப்புக்கான நடுசென்டர் பாய்ண்ட்டை எங்கே வைக்கலாம் என்பதற்கு மிக எளிய ஆனால் ரொம்பவே திடமான நல்ல உதாரணம்.

  நானும் சிம்பிளா ஒரு பதவுரை எழுதறனே சார்….

  //அழகன் முருகனோட அர்ணாக்கவுறு சவுண்டு கேட்டு அதுந்தான் அரக்கன், அடடா’ன்னிட்டு அரோகரா சொன்னான் தேவன்.//

 5. GiRa says:

  கந்தனுக்கு அலங்காரம் கந்தர் அலங்காரம்.

  அந்தக் காலத்துல ஆண்பிள்ளைகளுக்கு அலங்காரம்னா என்ன? பட்டு வேட்டி கட்டுறது. நல்ல பட்டுத் துண்டு தோளில் போட்டுக்கிறது. கைகளில் கங்கணம் போன்றவைகளை போட்டுக் கொள்வது. கழுத்தில் மணியும் மாலையும் தொங்குவது. காதில் குழை. நெற்றியில் நீறு. இப்படியெல்லாம் இருக்கும்.

  இந்தக் காலத்துல ஆண்பிள்ளைகளுக்கு அலங்காரம்னா… அதான் வீட்டுக்கு வீடு பாப்பீங்களே. அப்ப வந்த ஜீன்ஸ். பாத்தா பழசு மாதிரி இருக்கும். ஆனா தொவைக்கக் கூடாது. அது இடுப்புல இருக்காது. கொஞ்சம் கீழ எறங்கியிருக்கும். உள்ள போட்டுருக்குறது ஜாக்கியா குரோமோசோமான்னு தெரியனுமாம். அடுத்து ஒரு டீசர்ட். முகத்துக்கு மாய்ச்சரைசர். தலைக்கு ஜெல். மேலெல்லாம் பெர்ஃபியூம்.

  ஆனா இதெல்லாம் வேண்டாம்னு முருகனுக்கு சொல்லாலையே அலங்காரம் பண்ணீருக்காரு ஒருத்தர். அவர்தான் அருணகிரிநாதர். அந்த நூல்தான் கந்தரலங்காரம்.

  கந்தரலங்காரத்துல பல பொறுக்குமணிகளுக்கு முன்பு உரை தேடியிருக்கேன். இந்தப் பாட்டு விட்டுப் போச்சு. அதுனால என்ன. நீங்க போட்டுட்டீங்களே. 🙂

  சரி. பாட்டுக்கு வருவோம்.

  பாட்டோட தொடக்கமே கலக்கலான தொடக்கம். ஒருவரைப் பங்கின் உடையாள். யாரு அது? அம்மாதான். உலகநாயகிதான். அருணகிரிநாதர் மட்டும் அப்படிச் சொல்லல. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் கூடச் சொல்லீருக்காங்க.

  திருமறைக்காடு கதை தெரியுமா? ரொம்ப நாளா மூடியிருந்த கோயில் கதவு. தொறந்தா இடிஞ்சிருமோன்னு பயம். அப்போ திருநாவுக்கரசர் பதிகம் பாடிக் கதவைத் திறந்தாரு. அப்ப என்ன பாடுனாரு?

  பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ

  அடடா! உலகநாயகிக்குதான் இவர் பங்கர் போல. பங்கர்னா என்னன்னு யோசிக்காதீங்க. பங்கு தெரியும் தானே. அதுல இருந்து வந்தது பங்கர். ஆண்பால் விகுதியான “ர்” சேத்திருக்கு.

  அப்பர் மாதிரி பெரியவர் இப்படின்னா… திருஞானசம்பந்தர் இன்னும் மோசம். 🙂

  அப்பா குளத்துல முங்கிக் குளிக்கிறாரு. படிக்கட்டுல உக்காந்து பாத்த மகனுக்குப் பயம். அப்பாவைக் காணோமேன்னு. பயத்துல அப்பா அம்மான்னு அலறல். அப்பதான் உலகநாயகியும் உலகநாதனும் வந்து அந்தம்மா ஞானப்பால் குடுத்தாங்க.

  வாயில பால் வடியுறதப் பாத்துட்டு… பெத்த அப்பா விவரம் கேக்கும் போது பாடுறாரு.

  தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண்மதி சூடி

  தோடுடைய செவியனா? தோடு பெண்கள் போடுறதாச்சே. குழைதானே ஆண்கள் போடுறது. ஓ இடப்பக்கம் அம்மாவோட பக்கமாச்சே. அதான் மொதல்ல அது தெரிஞ்சிருக்கு. அதான் அம்மாவோட தோட மொதல்ல சொல்லீட்டு அடுத்துதான் மாட்டு மேல உக்காந்திருந்தார்னு சொல்றாரு ஞானசம்பந்தர்.

  இது மட்டுமில்ல. மதுரையில இருந்து ட்வீட்டர் அழைப்பு. மங்கையர்க்கரசி கூப்ட்டு விட்டிருக்காங்க. பாத்துப்போங்க நாளும் கோளும் சரியில்லைன்னு பக்கத்துக் கோயில் பூஜாரி சொல்றாரு. அப்ப திருஞானசம்பந்தர் பாடுறாரு கோளறு பதிகம். எப்படித் தொடங்குறாரு?

  வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

  வேய்னா மூங்கில். வேய்ங்குழல்னு சொல்றோம்ல. அப்படி மூங்கில் மாதிரி தோள்கள் இருக்கும் அந்த பராசக்தியின் பங்கனாம். அத மொதல்ல சொல்லீட்டுத்தான் விடம் உண்ட கண்டன். அந்தாளு வெசத்தக் குடிச்சிட்டாரு. அதுனால தொண்ட கருத்துப் போச்சுன்னு.

  பெரியவங்களுக்கு யாரை முன்ன வைக்கனும். யாரை பின்ன வைக்கனும்னு சந்தேகம் இருந்ததேயில்லை. ரெண்டும் ஒன்னுதான். அதை நம்ம விளையாட்டுத்தனமா கையாளக்கூடாது. ஆனாலும் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது. 🙂

  இப்ப ஒரு வாட்டி அந்த மொதல் வரியச் சொல்லிப் பாருங்க. ஒருவரைப் பங்கின் உடையாள் குமாரன். அடடா! படிக்கிறப்பவே தித்திக்குதே.

  சரி. இடுப்புல மணிகள் தொங்குற தங்க அரஞான் ஒலியைக் கேட்டு அரக்கன் அஞ்சினான். தேவர்கள் மகிழ்ந்தார்கள். இந்த வரைக்கும் இதப் பாத்தாப் போதும்.

  திக்கு செவிடு பட்டு எட்டு வெற்பும் கனக பருவரை குன்றும் அதிர்ந்தன.

  இந்த வரியக் கொஞ்சம் பாப்போம். இதுக்கு நேரடியாப் பொருள் சொன்னா எட்டுத் திசையிலும் அதிர அதிர எட்டு மலைகளும் பொன்மலையும் சிதறத் சிதறன்னு சொல்லலாம்.

  கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். புதுமையா ஒன்னு தோணுச்சு. சரியோ முறையோ. எழுதுவோம். பொருத்தமாயின் காலம் கொள்க. பொருந்தாதாயின் காலம் கொல்க.

  பாட்டு தொடங்கும் போதே அம்மான்னுதான் தொடங்குது. வீட்டுல அந்தம்மாவுக்குதான் மரியாதை. பொதுவா நம்ம மனைவி கை ஓங்கியிருக்கும் வீட்ட மதுரைன்னுதான் சொல்வோம். மதுரைல யார் ஆட்சி? பாண்டிய மீன் ஆட்சி. மீனாட்சி. அந்த மதுரைக்கு வந்து மீனாட்சியைத் திருமணம் செய்தார் சொக்கநாதப் பெருமான்.

  இந்த வாண்டு முருகனும் பொறந்தாச்சு. தவழ்ந்து முடிச்சு எழுந்து நடக்குற பருவம். இடுப்புல மணி ஆடுது. கிணிகிணின்னு சத்தம்.

  மதுரையைச் சுத்தி எட்டு மலைகளைச் சொல்வது பழைய வழக்கம். இதுல இன்னும் மூன்று அதே பேர்ல எனக்குத் தெரிஞ்சு இருக்கு. மத்ததெல்லாம் எனக்குத் தெரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க. அந்த எட்டு மலைகள் எதுன்னா..

  பரங்குன்று

  ஒருவகம்

  பப்பாரம்

  பள்ளி

  அருங்குன்றம்

  பேராந்தை

  யானை

  இருங்குன்றம்

  இதுல பரங்குன்றம் திருப்பரங்குன்றம். யானை – ஆனைமலை. இன்னுமிருக்கு. நான் பாத்திருக்கேன். இருங்குன்றம் திருமாலிருங்குன்றம். அதாங்க அழகர்மலை. பாப்பாரப்பட்டின்னு ஒரு ஊர் இருக்குறதாக் கேள்வி. அங்க மலையிருக்கான்னு தெரியலை.

  குழந்தை இருக்குறது தாய் வீடு. அங்க அதிருனா மட்டும் போதுமா? தந்தையோட வீட்டுலயும் அதிர வேண்டாமா? அதான் பொன்கோட்டுமலையான இமயமலையே அதிர்ந்ததாம்.

  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

  திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

  அது மாதிரி

  மதுரையிலே உன் அருணாக்கயிறு மணிச்சத்தம்

  இமயமலை மீது எதிரொலிக்கும்

  இதுதான் எனக்குத் தோன்றிய பொருள். முருகனருள் முன்னிற்கட்டும்.

  முந்தும் தமிழ்மாலை முழங்கும் வடிவேலைச் சிந்தைதனில் வைத்துச் சிறந்தார்க்குப் புகழ்மாலை! முருகா! முருகா!

  • சொல்லில் தமிழ்த் தேன் குழைச்சிக் குழைச்சிக் குடுத்தா, மயங்கிருவோம்-ன்னு நினைச்சீங்களா? இதெல்லாம் ஒத்துக்க முடியாது!:)))
   எங்க அருணகிரி தான் “ஒருவனைப் பங்கில் உடையாள்”-ன்னு பெண்ணுரிமையை வெளிப்படையாப் பாடினது! = பங்கிலே உடையவள்!

   ஞான சம்பந்தர், அப்பர் பெருமான் எல்லாம் அப்படிப் பெண்ணுரிமை பாடலை!

   * பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ = உமையைப் பங்கில் வைத்தவரோ? இரண்டாம் வேற்றுமைத் தொகை!
   * வேயுறு தோளி பங்கன் = தோளியைப் பங்கிலே வைத்தவன்! 2ஆம் வே. தொகை

   இப்படி…
   அவ”ளை”ப் பங்கில் வைத்தவன்-ன்னு தான் இருகே அன்றி,
   அவ”னை”ப் பங்கில் வைத்தவன்-ன்னு இல்ல!
   இப்படிச் சொன்னது எங்கள் அருணகிரியே!:))

   • GiRa says:

    தப்பான விளக்கம் என்பதால்தான் இந்த மறுமொழி.

    இலக்கணச் சொற்களைப் போட்டு விட்டால் யாரும் கேளார் என்ற எண்ணம் போலும்.

    உமை பங்கர் என்ற சொற்றொடரையே எடுத்துக் கொள்வோம்.

    உமை மைந்தன் என்ற சொற்றொடரும் அப்படியானதே.

    அதன் பொருள் என்ன? உமாவின் மகன்.

    இதில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் உமா. இன்னொருவர் அவரது மகன். இந்த இடத்தில் யாருக்குச் சிறப்பு? உமைக்குதானே.

    இன்னொரு வழக்கு பார்க்கலாம். முருகனைப் பெற்றவள். இந்த இடத்தில் முருகனுக்குப் பெருமை. அப்படிப் பட்ட முருகனைப் பெற்றதால் அன்னைக்குப் பெருமை.

    வக்கீல் சம்சாரம் எனும் போது வக்கீலால் மனைவிக்குப் பெருமை.

    டாக்டரோட வீட்டுக்காரர் எனும் போது டாக்டரால் கணவனுக்குப் பெருமை.

    டாக்டர் வீட்டுக்காரரில் டாக்டர் 2ம் வேற்றுமை உருபுதான்.

    டாக்டர் வீட்டுக்காரர் = உமை பங்கர்

    இப்பப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

    பாடல் தர வேண்டிய பொருளையும் தாண்டி அதீத கற்பனை புகும் போது கவிஞன் சொல்லாததையும் சொல்ல வேண்டி வரும்.

    அவைகளைத் தன் கருத்தாகக் கூறினாலும் தவறில்லை. ஆனால் அந்தக் கவிஞனே மண்டபத்தில் தன்னிடம் எழுதிக் கொடுத்தது போலச் சொல்வது தவறு.

 6. amas32 says:

  முருகன் வந்து பிறந்தாயிற்று. இனி தேவர்கள் பயப்பட வேண்டாம், அரக்கர்களுக்கு அழிவுகாலம் வந்தாகிவிட்டது என்பதை இந்த சிலம்பின் மணி ஒலியைவைத்து சிம்பாலிக்காக சொல்கிறார் அருணகிரிநாதர். முருகனின் பொன் அரைஞாணின் ச் சலங்கை சத்தம் அரக்கர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பாக உள்ளது. அதுவே தேவர்களுக்கு இனிமையான மனதை மயக்கும் மணியோசை! அழகன் முருகனின் திருப்பாதங்களே சரணம்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s