சாப்பிடும் முறை

ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,

பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,

வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,

காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே

நூல்: திருமந்திரம் (அறம் செய்வான் திறம்)

பாடியவர்: திருமூலர்

எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா?

முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்த குணத்தை நாமும் கற்கவேண்டும்.

ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.

அப்படி இரவலர்கள் நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும். அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.

அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

சில சமயங்களில், நாம் நிறையப் பசியோடு வீட்டுக்கு வருவோம். உடனே, பரபரவென்று அவசரமாக அள்ளித் தின்னக்கூடாது. எத்தனை பசியாக இருப்பினும், நன்கு மென்று சாப்பிடுவதுதான் முறை.

364/365

Advertisements
This entry was posted in அறிவுரை, கொடை, திருமந்திரம், திருமூலர். Bookmark the permalink.

17 Responses to சாப்பிடும் முறை

 1. தொலைக்காட்சி, கணிணி முன் உட்கார்ந்து உண்ணுதல் கூடாது. நூடுல்ஸ், பீட்ஸா. சிப்ஸ் மட்டுமே சாப்பிடக்கூடாது. கண்ட நேரத்தில் கண்டபடி தின்னக்கூடாது என்றெல்லாம் யாராவது எழுதி பள்ளிகளிலே பாடமாக வைத்தால் பெற்றோருக்கு உபயோகமாக இருக்கும்.

  • amas32 says:

   outsourcing வேலை வாய்ப்புகளினால் இரவும் பகலும் வேறு மாறிவிட்டது. விடிகாலை வேளையில் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்து உணவு அருந்தி பின் உறங்கச் செல்வதும் சகஜமாகிவிட்டது 🙂

   amas32

 2. Party Starts with Feast:)
  அதான் இந்தச் சாப்பாட்டுப் பதிவு:)

  365 Eve!
  தமிழ்ப் பொழிலில் தேன் மாந்தும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  • 365-ஐத் தொடும் சொக்கருக்கும், ‘தினம் ஒரு பா’வுக்கும் வாழ்த்துகள்.

   இப்பாடல் உங்களுக்கும் தினம் ஒரு பாவுக்கும் அழகாகப் பொருந்துகிறது – ‘பழம்பொருள் போற்றன்மின்’ என்ற ஒரு வாசகம் தவிர. ஏனெனில் பழம்பாடல்களையும் ருசிக்கும்படி போற்றிப் பகிர்கிறீர்கள்.

   நீங்கள் கரைந்துண்ணும் காக்கை. இணையத்தில் இங்கு வரும் ஆர்க்கும் அவர் இவர் என்னாது இடுகிறீர்கள்.

   வேட்கையுடன் சாப்பிடும் நாங்கள் காஃபி உறிஞ்சும் உத்தியில் மெதுவாக உங்கள் விருந்தை மென்று உண்ணவேண்டும். உண்ண முயற்சிக்கிறோம்.

   நன்றி

   • I am so happy to see this reader base for #365paa!
    ஒருவர் விடாது, அனைவரும்….. என்றும் தமிழுடன் இயைந்து, இணைந்து, இன்புறவ ரெம்பாவாய்!
    —————–

    coffee uRinjum technique – இப்படிப் பரவிடுச்சே! முருகா:))))))))))

   • //365-ஐத் தொடும் சொக்கருக்கும்//

    என்னாது, சொக்கர் (எ) நாகாவுக்கு = 365 வயசா? :))
    வாழ்த்துக்கள் சொக்கரே!:))

   • // 365-ஐத் தொடும் சொக்கருக்கும் //
    நீடூழி வாழ்க என இயல்பாகவே வந்த நெஞ்சார்ந்த வாழ்த்து. 😉

 3. காஃபி உறிஞ்சும் உத்தியில் பொருள்

  //ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,//
  ஆர்க்கும் – யார்க்கும்

  (அவர் பெரிய ஆள், பணக்காரர், பதவியிலிருப்பவர், இவர் ஏழை என்று பார்க்காமல் வருபவர்) யாராக இருப்பினும் அவரை விருந்தினராகக் கருதி உணவிடுக.

  //பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,//
  பழம்பொருள் – பழமையான உணவு

  (விருந்தினர் வருகின்றனரா எனப்) பார்த்திருந்து,
  (விருந்தினர் உண்ணுவதைப்) பார்த்திருந்து (அவர்களுக்குப் பின்),
  (உனக்குப் பசி வரும் வரை) பார்த்திருந்து உணவருந்து.
  (ஊசிப்போன) பழையதை (அது எவ்வளவு சுவையுடையதாய் இருந்திருப்பினும்) போற்றி உண்ணாதே

  //வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,//
  வேட்கை – பசி ஒல்லை – காலதாமதமின்றி

  பசி எவ்வளவுதான் மிகுந்திருந்தாலும் (அல்லது முன்புள்ள பொருள் எவ்வளவுதான் மிகுந்த சுவையுடையதாக நாவில் நீர் வடியவைப்பதாக இருந்தாலும்), வேகவேகமாக உள்ளே தள்ளாதே. மெதுவாக மென்று உண்.

  //காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே//
  காக்கை கரையும் நேரம் பகிர்ந்துண்ண என்பதை அறிந்துகொள். (அதனால் பகிர்ந்தே உண்)

 4. பழம்பொருள் போற்றன்மின் – ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கப்படும் பழைய உணவைப் போற்றாதே.

  பெண்மணிகள் அறியப் ஃபிரிட்ஜில் ஒட்டவேண்டிய வாசகம். 😉

  • ஏன்…ஆண்மணிகளும் அறிய ன்னு சொல்லுங்க:)
   நியாயம் ன்னா நியாயம் தான்:)))

   • amas32 says:

    🙂

    amas32

   • “பெண்மண்கள் (ஆண்மணிகள்) அறியப் ஃபிரிட்ஜில் ஒட்டவேண்டிய வாசகம்” என்று படிக்கப்படவேண்டிய வாக்கியம் என்பதால் “பெண்மணிகள் அறியப் ஃபிரிட்ஜில் ஒட்டவேண்டிய வாசகம்” ஒரு அன்மொழித்தொகை. 😉

    அப்பாடா, மீசையில் மண் ஒட்டவில்லை.

    கண்டனக்கணைகள் பாயுமுன் தற்காப்புக் கேடயத்தை முன்கொணர்ந்தமைக்கு நன்றி.

    நண்பேன்டா.

 5. amas32 says:

  ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் என் சின்ன மாமனார் இல்லத்தில் இன்றும் குளிர்சாதனப் பெட்டிக் கிடையாது 🙂 உணவு அப்பொழுதே சமைக்கப் பட்டு சூடு ஆறுவதற்குள் உண்ணப்படும். கடவுள் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய ஆரோக்கிய குறைச்சலுக்கு பழைய உணவை சுட வைத்து சாப்பிடுவதும் ஒரு காரணமே. ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும் அவசியம் உள்ள இக்காலத்தில் சமைத்த உணவை பல நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, பின் நுண் அலை அடுப்பில் சுட வைத்துச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.

  பள்ளி, கல்லூரி நாட்களில் மதிய உணவை நண்பர்களிடையே பகிர்ந்து உண்ட நினைவுகள் மிகவும் இனிமையானவை. சில சமயம் நாம் எடுத்துப் போன டப்பா சோற்றில் ஒரு பருக்கைக் கூட நமக்குக் கிடைக்காது 🙂 கொடுக்கக் கொடுக்க தான் வறுமை விலகும், வளமை பெருகும்.

  பசித்துப் பூசி என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் அதிகம் பசித்து உண்ணும் போது அவசரப்பட்டு உண்ணுதல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்பும் அதிகம்.

  திருமூலர் சொல்வது திருமந்திரம் ஆயிற்றே!

  amas32

  • யம்மா….தாயீ…
   நீங்க திருவரங்கமா?
   கும்புட்டுக்கறேன்:)

   என்ன தான் என் முருகனோடு புகுந்த வீட்டில் இருந்தாலும், பொறந்த வீடு-ன்னா ஒரு பாசந் தேன்:))))

  • //குளிர்சாதனப் பெட்டி
   நுண்ணலை அடுப்பு//
   = அழகான தமிழ்ச் சொற்கள் -ம்மா!

   #365paa வாசகர் வட்டம், இப்படித் தமிழாளுவது கண்டு எனக்கு மட்டிலா மகிழ்ச்சி!
   சொக்கருக்கும் அப்படியே அல்லவா! வாழி!
   ——————

   // சில சமயம் நாம் எடுத்துப் போன டப்பா சோற்றில் ஒரு பருக்கைக் கூட நமக்குக் கிடைக்காது //

   yessu; poor day scholars:)
   but hostel guyz are good!
   They make sure u eat in their mess, at their cost & token!
   ——————-

   //கொடுக்கக் கொடுக்க தான் வறுமை விலகும், வளமை பெருகும்//

   உண்மை! கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

   கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
   கூடுதல் கோடி பெறும்!
   கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடை நாக்
   கோடாமை கோடி பெறும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s