காவல்காரி, காதல்காரி!

திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,

தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்

புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்

மனம் காக்கவைத்தார் மருண்டு

நூல்: திணை மாலை நூற்றைம்பது (#30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது

சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

துக்கடா

 • ஐந்து அகத்திணைகளைப் பற்றிய 150 பாடல்களைக் கொண்ட நூல் இது. ஆகவே ‘திணை மாலை நூற்றைம்பது’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • ஒரு ரகசியம், நூற்றைம்பது என்பது சும்மா பெயர்மட்டும்தான், உண்மையில் இதில் கொசுறாக 3 பாடல்கள் உண்டு 🙂
 • ’இதென்ன நியாயம்? நாட்டாமை, பேரை மாத்து!’ என்று கோபப்படாதீர்கள். முத்தொள்ளாயிரம் 3 * 900 = 2700 பாடல்களில் நமக்குக் கிடைத்தது நூற்றுச் சொச்சம்தானே? பாக்கியெல்லாம் தொலைந்துபோய்விடவில்லையா? அதோடு ஒப்பிடும்போது இந்த மூன்று எக்ஸ்ட்ரா பாடல்கள் தம்மாத்தூண்டு :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
 • தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
 • புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
 • மனம்காக்க வைத்தார் மருண்டு

363/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, காதல், குறிஞ்சி, திணை மாலை நூற்றைம்பது, வெண்பா. Bookmark the permalink.

31 Responses to காவல்காரி, காதல்காரி!

 1. //காவல்காரி, காதல்காரி//

  பூந்தோட்டக் காவல்காரா (ரி) – பூப்பறிக்க இத்தனை நாளா?
  மாந்தோப்புக் காவல்காரா (ரி) – மாம்பழத்தை மறந்து விட்டாயா? மறந்து விட்டாயா?:)))

 2. ஆனந்தன் says:

  அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரி- புனம் காவல்காரி
  நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரி

 3. திரைவரிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், என் பங்காக –

  ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான்
  சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள்

 4. மனம் காக்கவைத்தார் மருண்டு.

  ‘காக்கவைத்தார்’ என்று வருகிறதே. ஒரு கா(த)வல்காரியா? பல கா(த)வல்காரிகளா?

  இந்தப் புனவள்ளி, அவன் மனமள்ளி, மனங்கிள்ளி, பிற ‘மனங்கொத்திப் பறவை’களிடமிருந்து அவன் மனத்தைக் காக்கும் புருவ ‘வில்’லி. காதல் கவண் ‘கல்’லி. விழி ‘வேலி’, வீசினாள் அவன் காலி.

  வேல்வீசு கண்ணாளே வள்ளி வென்றாள்
  வேலணிந்த திருமுருகன், வள்ளி கொன்றாள்.

  • சூப்பரு கந்தசாமி ஐயா! You in full form:)

   மனங்கிள்ளி = I like this name
   எலே படுபாவி… என் மனங்கிள்ளி முருகா:)
   ———

   பக்தர்கள் கோச்சிக்காதீக… நானும் அவனும் இப்படித் தான் கொஞ்சிப்போம்:)
   * படுபாவி = படுப (என்) ஆவி
   * கொடியவா = (சேவற்) கொடியோனே
   etc etc etc

  • காட்டுவள்ளியைப் பற்றிய பாடல் என் வீட்டுவில்லியை 😉 நினைவுபடுத்திவிட்டது. சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். வேறொன்றுமில்லை.

   காதல்காரி -> காவல்காரி -> வீட்டுக்காரி 🙂

 5. ஆனந்தன் says:

  //இந்தப் புனவள்ளி, அவன் மனமள்ளி, மனங்கிள்ளி, பிற ‘மனங்கொத்திப் பறவை’களிடமிருந்து அவன் மனத்தைக் காக்கும் புருவ ‘வில்’லி. காதல் கவண் ‘கல்’லி. விழி ‘வேலி’, வீசினாள் அவன் காலி//
  Wow! great!

 6. திணைமாலை-150 = பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று!
  பொதுவா கீழ்க்கணக்கில் பலவும் நீதி நூல்கள்; ஆனா இது காதல் நூல்!

  கணி மேதாவியார் = கவிஞர் மட்டுமல்ல; பெரும் கணித மேதை!
  ஏலாதி என்ற நூலும் இவரு எழுதினது தான்!
  ————–

  //ஒரு ரகசியம், நூற்றைம்பது என்பது சும்மா பெயர்மட்டும்தான், உண்மையில் இதில் கொசுறாக 3 பாடல்கள் உண்டு//

  நாலாயிர திவ்ய பிரபந்தம் ன்னு சொல்லுறாங்க! 4000 ஆ இருக்கு?:))
  3776 தான் இருக்கு!
  அதெல்லாம் adjust maadi:)

 7. சரி, விளையாட்டு விளையாடி நாளாச்சு; இலக்கணக் கேள்வி கேட்கட்டுமா?:))

  இலக்கணக் குறிப்பு வரைக:
  1) வில் எழுதி =
  2) வேல் விலக்கி =
  3) புனம் காக்க =
  4) மனம் காக்க =
  நாலும் ஒரே விடை தான்:)

  5) பூங்குழலைப் போந்து = ?

  • 1-4: இரண்டாம் வேற்றுமைத் தொகை. என்று நினைக்கிறேன்.
   வில்லை எழுதி, வேலை விலக்கி, புனத்தைக் காக்க, மனத்தைக் காக்க என்று இரண்டாம் வேற்றுமை உருபாகிய ‘ஐ’ தொக்கி நிற்கிறது.

   இந்நான்கிலும் இரண்டாம் வேற்றுமைத்தொகை தான் ஒற்றுமை.

   5. பூங்குழல் – பூவை அணிந்த குழல். ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபும், அணிந்த என்ற பயனும் தொக்கி வருவதால் இரண்டாம் வேற்றுமை உடன் தொக்க தொகை?

  • //1-4: இரண்டாம் வேற்றுமைத் தொகை//

   சரியே:)

   //பூங்குழலைப் போந்து//

   இது பாதி தான் சரி:)
   பூங்குழலைப் போந்து = அதான் “ஐ” உருபு வெளிப்படையா இருக்கே! அப்பறம் எப்படி “தொகை”?

   ஆனா தொகை தான்!:)
   எப்படியா? = அன்மொழித் தொகை!
   பூங்குழலைப் போந்து -ன்னா = பூங்குழலை உடைய பெண்ணைப் போந்து…

   உடைய, பெண் போன்ற மொழிகள் எல்லாம் நாமாக் கூட்டிப் படிக்க வேண்டி இருக்கு! அந்த மொழிகள் நேரடியா இல்லை (அல்-மொழி)
   = அதனால் அன்மொழித் தொகை!

   இரண்டாம் வேற்றுமை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை!

   • ஆனந்தன் says:

    நியூயார்க்கில் நீங்கள் ஒரு தமிழ் வகுப்பு -TWO WEEK CRASH COURSE – நடத்தினால் வரச் சித்தமாயுள்ளேன்!
    இன்னொரு கேள்வி…
    இந்த UNICODE தமிழ் எழுத்துகளில், ‘ர்’ என்ற எழுத்து ‘ர’வுக்குரிய அரவு இல்லாமல் எழுதப்படுகிறதே? இது சரியா?

   • சிவா – ஏன்யா என்னை மட்டும் இந்தப் பாடு படுத்தறீரு? (கேள்வி கேட்டு) :)))
    —————

    ர்-ர
    பொதுவா, பல அச்சுப் புத்தகங்களை எடுத்துப் பாத்தீங்கன்னா…
    ர் என்பது, எழுத்துக்களுக்குக் “கால்” போடுறோமே = ா ; அதுக்கு மேல ஒரு புள்ளி வச்சித் தான் இருக்கும்!
    ஒற்று எழுத்துக்கு மட்டும் தான் இப்படி! ஆனா “ர” வை ர-ன்னு, கீழே இழுப்பாங்க!

    இது நடுவில் வந்த பழக்கம்!
    பழங்காலச் சுவடிகளில் இப்பழக்கம் இல்லை = ர்-ர என்றே எழுதினர்!
    புள்ளியே வைக்காத சுவடிகள் விதிவிலக்கு!
    சுவடிகள் மட்டுமல்ல, கல்வெட்டுக்களும் கூட = ர்-ர தான்! (வட்டெழுத்து)

    நடுவில் யாரோ கிளப்பி விட்டிருக்க வேணும்;
    இப்போ இணையத்தில் சிலர் எழுத்து-க்கள் தவறு, எழுத்து-கள் ன்னு தான் எழுதணும் ன்னு எல்லாம் டைப் டைப்பாக் கிளப்பி விடுறாங்களே, அது போல!:)
    may be they thought, கால் போல இருக்கும் ர் க்கு, எதுக்கு கீழே வேற “கால்” இழுக்கணும்?:))))
    —————-

    தந்தை பெரியாரும், அதற்கு முன்பே சில தமிழறிஞர்களும், எழுத்துச் சீர்திருத்தம் பற்றி முனைந்த போது, இந்த ர்-ர வைக் கணக்கில் கொண்டார்கள்!
    ஆனால் இந்தக் குறை, Unicode – ஒருங்குறி வந்து…. ஒட்டுமொத்தமாய்க் களையப்பட்டு விட்டது! நல்லதே!
    = ர்-ர தான் சரி!

   • ஆனந்தன் says:

    ரொம்ப தாங்க்ஸ், வாத்தியாரே! நீங்களே இப்படிக் கோபப்படலாமா? இனியெல்லாம் யாரைக் கேக்கப் போறேனோ? சொக்கரும் 365 உடன் கையை வுட்டுட்டார். ரொம்ப சோகமா இருக்கேன். நீங்க வேற…

 8. காஃபி உறிஞ்சும் உத்தியில் பொருள் காண்போம் –

  >> திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி <> தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண் <>புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்<> மனம்காக்க வைத்தார் மருண்டு <<
  (மருள் – மயக்கம் மருண்டு – மயங்கி)
  மனதைக் காக்கவைத்தார் மயங்கி

  • //காஃபி உறிஞ்சும் உத்தியில் பொருள் காண்போம்//

   போச்சுறா…
   இந்த உத்தி இப்படிப் பரவிருச்சே!:))
   ———–

   ஒரு வேண்டுகோள்
   காஃபி = காக்ஹ்பி ன்னு ஒலிக்கும்;
   அஃகேணம் = ஃ = F sound களுக்குப் பயன்படுத்தல், பிழையான பயன்பாடு!

   காபி என்றே எழுதலாம்!
   இடத்துக்கு ஏற்றாற் போல், ஒலிக்கும் நெகிழ்வு, தமிழில் உண்டு!
   கந்தன் = kanthan, (not gandhan)
   சு-கந்தன் = Sugandhan ன்னு ஒலிப்பதில்லையா? அதே போலத் தான்!:)

   • சரி, காஃபியை விட்டுட்டு இனிக் காபியே உறிஞ்சறேன்.

    அழகான ‘மாடல்’ ஒன்று செய்தால் அதைக் காப்பி அடிக்கிறோமல்லவா? அப்படித்தான் காபி உறிஞ்சுவதைக் கற்றுக்கொடுத்த ‘மாடலைப்’ பார்த்து நாங்களும் காப்பி அடிக்கிறோம்.

    காக்காய்க் கூட்டத்தைப் பாருங்கம்மா – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்கம்மா? 🙂

 9. காஃபி உறிஞ்சும் உத்தியில் பொருள் காண்போம் –

  == திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி ==
  (திங்கள் – நிலா, தேராது – ஆராயாது, விலக்கி – பொருத்தி)
  நிலாப் போன்ற முகத்தில் வில் போன்ற புருவங்களை வரைந்து
  (அதனால் என்போன்றவர்களுக்கு நேரும் தீமைகளை ஆராயாது கண்ணில்)
  வேலையும் பொருத்தி

  == தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண் ==
  (உளாள் – உள்ளாள், தாழ்வு – எளிமை, இங்கண் – இங்கு)
  தங்கள் இனத்தில் வந்தவள் என்ற எளிய காரணத்தினால் இங்கு

  == புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்==
  (புனம் – தினைப்புனம், காடு, பூங்குழல் – பூவை அணிந்த கூந்தல், போந்து – புகுந்து)
  பூக்கள் அணிந்த கூந்தலை உடைய அவளை தினைப்புனத்தைக் காக்கவைத்தது போல, புகுந்து எனது

  == மனம்காக்க வைத்தார் மருண்டு ==
  (மருள் – மயக்கம் மருண்டு – மயங்கி)
  மனதைக் காக்கவைத்தார் மயங்கி

  • ஆனந்தன் says:

   நன்றி, கந்தசாமி. ஒரு ஐயம். //விலக்கி – பொருத்தி//
   ‘விலக்கி’ என்றால் ‘விலக்குதல்/நீக்குதல்’. அது எவ்வாறு ‘பொருந்துதல்’ என்ற எதிர்ப் பொருளில் வருகிறது?

   • சென்னைப் பேரகரமுதலி விலக்கு என்பதற்கு ஒரு பொருளாக –

    inset, fix; அழுத்து. வேல்விலக்கி (திணைமாலை. 30)

    இப்பாடலையே எடுத்துக்காட்டாகத் தருகிறது.

   • ஆனந்தன் says:

    விலக்கலின் விளக்கத்துக்கு நன்றி! கீழே, பாடலின் புதிய விளக்கமும் நன்றாகவே உள்ளது.

  • தேராது = “அதோடு திருப்தி அடையாமல்” ன்னு சொக்கர் ஆண்டுள்ளார்!
   ஆனா…
   தேராது = ஆராயாது என்பதே சரி, கந்தசாமி ஐயா காட்டியுள்ளது போல்!

   (வில் போன்ற புருவங்களை வரைந்து, அதனால் என் போன்றவர்களுக்கு நேரும் தீமைகளை ஆராயாது…)

   தேறுதல் = குணமாதல், திருப்தி அடைதல்! = தேறுதல் அளித்தான்!
   அது வல்லின ற! ஆனா நம் பாடலில் உள்ளது, இடையின ர:))
   ————————-

   சபாஷ்…
   I am happy that reader ayyas are outdoing chokkan ayya :))
   இப்படி மேன்-மேலும் வளர்க தமிழும், தமிழார்வமும்!

   • என். சொக்கன் says:

    நியாயம்தான். மாற்றிவிடுகிறேன். நன்றி கந்தசாமி ஐயா

  • ஆனந்தன் says:

   “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று கண்ணகி சொன்னது போல…

 10. புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
  மனம்காக்க வைத்தார் மருண்டு

  வைத்தார் என்று பன்மையில் வருவதால் –

  திங்கள் போன்ற முகத்தில் வில் போன்ற புருவங்களையும் வேல்விழிகளையும் கொண்டவளை புனம் காக்க வைக்க அனுப்பியதைப் போல் அனுப்பி என்னை மயங்க வைத்து புகுந்து என் மனங்காக்க வைத்தனர் அவள் பெற்றோர்கள்

  என்று அவளின் பெற்றோர்களைக் குறிக்கிறதோ?

  ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ என்பதுபோல 😉

  • ‘தங்கள் உளாள்’ என்ற தொடரும் ‘வைத்தார்’ என்பது தங்கள் குலத்தில் வந்தவள் என்ற கருத்துடன் அது பெற்றோர்களைக் குறிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதுபோலவே உள்ளது.

  • amas32 says:

   சிம்புவுக்கும் சங்கப் புலவரின் அங்கீகாரம்!!!!

   amas32

 11. அக்காலப் பெண் தினைப்புனத்தைக் காத்தாள், இக்காலப் பெண் பணிப்புலத்தைக் காக்கிறாள் என்ற ஒரு வேற்றுமை தவிர இப்பாடல் இன்றைக்கும் பொருந்தும்,

  திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி
  தங்கள் உளாள் என்னும் தகைமையால் இங்கண்
  பணி பார்க்கவந்தார்போல் ‘பாப்கட்’டில் போந்தென்
  மனம் காக்கவைத்தார் மருண்டு

  🙂

 12. amas32 says:

  //புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்

  மனம் காக்கவைத்தார் மருண்டு// மிகவும் அருமையான வரிகள்.

  சாதாரண குடும்பத்தில் பிறந்ததால், தினைப்புனத்தைக் காவல் காக்கும் வேலைக்கு அனுப்பியுள்ளார்கள் அவள் பெற்றோர்கள். ஆனால் அவளோ பேரழகி! வேல் விழியாள். மயக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடையவள். வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு ஆடவன் அவள் அழகில் மயங்கிவிடுகிறான். அவன் மனதில் குடிகொண்ட அவள், அவன் நெஞ்சத்தை காவல் காக்கத் தொடங்குகிறாள். இப்பொழுதும் அவளுக்குத் தெரிந்த வேலையைத் தான் செய்கிறாள்!

  இன்றும் பெண்கள் ஆண்கள் மனதை கொள்ளைக் கொண்டு ஆட்சி புரிவது ஓர் ஆசிர்வாதமே! 🙂

  amas32

 13. கி.சிவகுமார் says:

  இதில தற்குறிப்பேற்ற அணி உள்ளதா?
  வேல்விலக்கி,போந்து-கொஞ்சம் விளங்கலை!

 14. Pingback: காவல்காரி, காதல்காரி! | Rammalar's Weblog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s