கரிகாலன் நாடு

ஏரியும் ஏற்றத்தினாலும் பிறர் நாட்டு

வாரி சுரக்கும் வளன் எல்லாம், தேரின்

அரிகாலின் கீழ் உகூஉம் அந்நெல்லே சாலும்

கரிகாலன் காவிரி சூழ் நாடு

நூல்: பொருநர் ஆற்றுப்படையின் பிற்சேர்க்கையாக உள்ள வெண்பாக்கள்

பாடியவர்: தெரியவில்லை

மற்ற நாடுகளிலெல்லாம், ஏரி, ஏற்றம் போன்றவற்றைக் கொண்டு நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. அதன்மூலம் அந்த ஊர் வயல்களில் ஏராளமான பயிர்கள் விளைந்து செழிக்கின்றன.

ஆனால், காவிரி ஆறு பாய்கிற, எங்களுடைய கரிகால மன்னன் ஆட்சி செய்யும் சோழ நாட்டைப் பாருங்கள். எங்களுடைய வயல்களில் நெல் விளைந்து அறுவடை செய்யும்போது கீழே சிந்துகிற தானிய மணிகளைச் திரட்டினாலே போதும், அது மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த நெல் விளைச்சலைவிட அதிகமாக இருக்கும்.

துக்கடா

  • அந்தக் காலத்தில் வயலில் நெல் அறுவடை செய்யும்போது, இப்படிச் சிதறி விழும் மணிகளைப் பொறுக்கமாட்டார்களாம், ஏழைகள் எடுத்துச் செல்லட்டும் என்று அப்படியே விட்டுவிடுவார்களாம். அப்படித் தானமாகக் கொடுக்கும் நெல்லின் அளவு, மற்ற நாடுகளின் மொத்த விளைச்சலுக்குச் சமம் என்றால், ’சோழ வள நாடு சோறுடைத்து’ என்ற வாசகத்துக்கு அர்த்தம் தெளிவாகப் புரியும்!
  • அப்புறம் ‘வையை’மாதிரி, ‘காவிரி’தான் சரி ‘காவேரி’ அல்ல 🙂
  • இந்தப் பெயருக்குப் பல காரணங்கள் சொல்வார்கள், அதில் எனக்குப் பிடித்தது இது:
  • கா = சோலை, விரி = விரிவுபடுத்துதல், செல்லும் இடமெல்லாம் நீர் வளத்தை அள்ளித்தந்து பூமியில் சோலைகளின் அளவை / பரப்பை அதிகப்படுத்துவதால், அதற்குக் காவிரி என்று பெயர் வந்ததாம் 🙂
  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • ஏரியும் ஏற்றத்தி நானும் பிறர்நாட்டு
  • வாரி சுரக்கும் வளனெல்லாம், தேரின்
  • அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
  • கரிகாலன் காவிரிசூழ் நாடு

307/365

This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சோழன், வெண்பா. Bookmark the permalink.

17 Responses to கரிகாலன் நாடு

  1. Ranga says:

    “தேரின் அரிகாலின் கீழ் உகூஉம் அந்நேல்லே” இதில் “தேரின் அரிகாலின்” என்பது எதை குறிக்கிறது ?!

    • என். சொக்கன் says:

      தேரின் = ஆராய்ந்தால்
      அரிகால் = அறுவடை செய்யும்போது

    • என். சொக்கன் says:

      அரிகால் = அரியுங்கால் … இப்பவும் பயன்படுத்தும் வார்த்தைதான், ‘வெங்காயம் அரிதல்’ன்னு

      • ஆனந்தன் says:

        கொஞசம் இப்படிப் பதவுரையும் தந்தால் தேவலை…கோடி புண்ணியம் கூட உண்டு…

      • என். சொக்கன் says:

        எனக்கும் ஆசைதான். நேரம் எங்கே? பாடலைத் தேர்வு செய்து, உரை எழுதி இடுவதற்கே தினமும் ஒரு மணி நேரத்துக்குமேல் தேவைப்படுகிறது. அதைத் தாண்டி இதற்கு நேரம் செலவழிப்பது எனக்குச் சிரமம்.

        பதவுரை தேவை என்பது புரிகிறது. ஊர்கூடித் தேர் இழுத்தால் (crowdsourcing) நன்றாயிருக்கும். தினமும் இங்கே இடும் பாடல்களுக்குப் பதவுரையை இன்னொருவர் (அல்லது சிலர்) பொறுப்பேற்று எழுதலாமே 🙂

      • Kannan says:

        அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பதிவிட்டதற்கு நன்றி.

        அரகால் = அரிதாள் = Stubble, left on a reaped field; கதிரறுத்த தாள்; என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியில் உள்ளது. அதுவும் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.

        இப்பாடலுக்கு எனது மொழிபெயர்ப்பு இங்கே:

        Abundance

  2. Ranga says:

    Thanks for the prompt response !

  3. சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், கானல் வரி முழுவதும் காவேரி என்றுதான் உள்ளது. இது ஏதேனும் பாடபேதமா ?

  4. மு.பாரிவேள் says:

    சோழம்.. சோழம்..சோழம்..

  5. muthuganesh says:

    First, thanks a lot for starting this blog.

    “thelivurai” is excellent and i learn lot from comments too. You / somebody who knows tamil well like this poem for its meaning + grammar. If possible, explain also the grammatical beauty for appropriate songs, if not for all the songs. To simply put, teach us how to taste / enjoy a proper tamil songs.

    Thanks again.
    -muthuganesh

  6. சோழ நாட்டில் காவிரி பாய்ந்ததினால் விவசாயம் எப்பொழுதும் அமோகம் தான். ஆனால் அப்பொழுது கர்நாடக மாநிலம் எனப்படும் பூகோளப் பகுதி எந்த அரசனக்குக் கீழ் இருந்தது என்று சரித்திர ஆசிரியர்களை தான் கேட்க வேண்டும். காவிரி தடை படாமல் ஒடி வந்திருக்கிறாளே!

    பாசனத்துக்கு ஏரியையும் ஏற்றத்தையும் நம்பாமல் வற்றாத ஜீவா நதிகளை நம்பும் நாடுகள் தன் நாட்டின் வளத்தைப் பற்றிப் பெருமைக் கொள்வதில் வியப்பேதுமில்லை!

    “காவிரி சூழ் நாடு” என்ற சொற்றொடர் மிகவும் அழகாகவும் அனைத்தையும் ஒரே வரியில் விவரிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

    amas32

  7. GiRa ஜிரா says:

    காவிரியா காவேரியா

    காவிரி ஆற்றில் தண்ணீர் வருமா வராதா என்பதை விட இலக்கியவாதிகளுக்குப் பெரிய பிரச்சனை எதுவென்றால் காவிரியின் பெயர் பிரச்சனை தான்.

    காகம் விரித்ததால் உண்டான ஆறு. அதனால் அதற்கு காவிரி என்று தான் பெயர் என்று ஒரு கூட்டம்.

    காவேரிதான் உண்மையான பெயராக இருக்க வேண்டும். காகம் விரிக்கும் காவிரி என்னும் விளக்கம் மதவாதிகள் புகுத்தியது. இளங்கோவடிகள் காவேரி என்றுதான் சொல்லியிருக்கிறார் என்று ஒரு கூட்டம்.

    நான் எப்பொழுதும் மன்ற(சங்க)நூல்களான எட்டுத்தொகை நூல்களிலும் பத்துப்பாட்டு நூல்களிலும்தான் பழமையான மரபு வழிகளை ஆராய்ந்து பார்ப்பது. அதற்கப்புறம் சிலப்பதிகாரம். அதற்கப்புறம் பிற்கால நூல்கள். இதுதான் ஆராய்ச்சி வரிசை.

    மன்ற(சங்க) இலக்கிய நூல்களை எடுத்துப் பாத்தால் வையை ஆற்றுக்குதான் அத்தனை பாட்டுகளும் குறிப்புகளும் இருக்கின்றன. தமிழ் மன்றங்கள் இருந்தது மதுரை என்பதாலும் தமிழ் வளர்த்தது பாண்டியர்கள் என்பதாலும் அப்படி அமைந்து விட்டது. அதனால் தான் வையைக்கு மன்ற(சங்க) நூல்களில் அவ்வளவு பெருமை.

    பரிபாடலில் முருகனுக்கும் திருமாலுக்கும் பாட்டு எழுதிய புலவர்கள் வையைக்கும் பல பாட்டுகள் எழுதியிருக்கிறார்கள்..

    இந்தப் பாடலைப் பாருங்களேன்.

    திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
    தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
    வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
    செய்யபரி பாடற் றிறம்

    அதாவது ஒவ்வொருவருக்கும் பரிபாடலில் எத்தனை பாட்டுகள் என்று இந்தப்பாட்டு சொல்கிறது.
    திருமால் – 8
    செவ்வேள் (முருகன்) – 31
    கொற்றவை – 1
    வையை – 26
    மதுரை – 4

    முருகனுக்கும் வையைக்கும் எக்கச்சக்க பாட்டுகள். காரணம் முருகனும் வையையும் தமிழோடும் வாழ்வியலோடும் புலமையோடும் இணைந்து இயைந்த பெருமை.

    இப்படியிருக்கிறபோது எந்த நூலை எடுத்து காவிரியைப் பற்றித் தேடுவது!

    தேட வேண்டும் என்று நினைத்ததும் முதலில் எடுத்துத் தேடியது பட்டினப்பாலை மற்றும் பொருநராற்றுப்படை. இந்த இரண்டுமே பத்துப்பாட்டு நூல்கள்.

    இந்த இரண்டு நூல்களையும் முதலில் எடுத்துப் பார்க்கக் காரணம் உண்டு. ஏன்? இந்த இரண்டு நூல்களுமே கரிகாற் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடியது.

    கரிகாலனோ சோழ மன்னன். அவனைப் பற்றி பாடும் போது சோழவளநாட்டையும் அந்த வளமைக்குக் காரணமான காவிரியையும் பற்றிப் பாடாமல் இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன்.

    இந்த இரண்டு நூல்களில் மட்டுமே காவிரியைப் பத்தி மொத்தம் நான்கு குறிப்புகள் இருக்கின்றன. பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரி என்று மூன்று முறை குறிப்பிட்டிருக்கிறார்.

    குறிப்பிடல் 1 – வான் பொய்ப்பினும், தான் பொய்யா, மலைத் தலைய கடல் காவிரி
    குறிப்பிடல் 2 – மாஅ காவிரி மணம் கூட்டும தூ எக்கர்த் துயில் மடிந்து
    குறிப்பிடல் 3 – தென் கடல் முத்தும், குண கடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்து உணவும் (வளம் மிகுந்த பூம்புகார் தெருக்களின் நிலை)

    ஆனால் பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் ஒருமுறைதான் குறிப்பிடுகிறார். கரிகாலனைக் காவிரி வளம் கொழிக்கும் நாட்டின் தலைவனே என்று குறிப்பிட “காவிரி புரக்கும் நாடு கிழவோனே” என்று எழுதியிருக்கிறார்.

    இதுபோக புறநானூற்றிலும் காவிரி வருகிறது.

    மொத்தத்தில் மன்ற(சங்க) நூல்களில் காவிரி என்றே ஆற்றின் பெயர் குறிக்கப்படுகிறது.

    ஆனால் இளங்கோவடிகள் காவேரி என்று சொல்லியிருக்கிறாரே!

    இளங்கோவின் காலம் மன்றம்(சங்கம்) மருவத் தொடங்குவதற்கு சற்று முன்னான காலம். இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆயினும் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காவிரி என்றே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

    சிலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்திலேயே திங்களைப் போற்றுதும் என்று முதலில் சொல்லிவிட்டு ஞாயிறு போற்றுதும் என்று அடுத்து சொல்லும் போது காவிரியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
    கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
    அம் கண் உலகு அளித்தலான்.
    ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
    காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
    மேரு வலம் திரிதலான்.
    மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
    நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
    மேல நின்று தான் சுரத்தலான்.

    இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல இந்திர விழவெடுத்த காதையிலும் வேறு சில இடங்களிலும் கூடக் காவிரி என்றே குறிப்பிடுகிறார்.

    ஆனால் கானல் வரிப்பாடலில் வரிக்கு வரி காவேரி என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

    என் அறிவுக்கு எட்டியபடி காவேரி என்று முதலில் இலக்கியத்தில் பயன்படுத்தியது இளங்கோவடிகள் என்று நினைக்கிறேன். வேறு யாரேனும் குறிப்பிட்டிருந்தால் அந்தத் தகவலை எனக்கும் தந்து உதவுங்கள்.

    ஒருவேளை காவேரி என்பது பாடபேதமாக இருக்குமோ?

    அதென்ன பாடபேதம்?

    அதாவது ஓலைச்சுவடிகளை படியெடுக்கும் போது சில எழுத்துகளை தவறாக மாற்றி எழுதிவிடுவார்கள். ஓலையெழுத்தில் இந்தப் பழுது ஏற்படுவது நிறைய நடந்திருக்கிறது.

    ஆனால் இளங்கோவின் சிலப்பதிகாரத்தில் காவேரி என்று குறிப்பிடுவதை பாடபேதமாகக் கருத முடியவில்லை.

    அதற்கு இரண்டு காரணங்கள்.

    காரணம் ஒன்று – பாடபேதங்கள் எங்காவது ஒரு எழுத்தில் நிகழும். வரிக்கு வரி அடுத்தடுத்து நிகழ்வது மிகமிக அரிது.

    காரணம் இரண்டு – இது ஒரு சிறிய ஆராய்ச்சி. சிலப்பதிகாரத்தைக் கொஞ்சம் ஊன்றிப் படித்ததால் செய்த ஆராய்ச்சி.

    காவேரி என்று எழுதுவதற்கு என்ன காரணம் என்று இளங்கோவடிகளாகச் சொல்லவில்லை. ஆனால் பலப்பல நூல்களைப் படிப்பதாலும் சிலம்பைச் சிறப்பித்து படித்து மகிழ்வதாலும் ஆராய்ந்து அறியும் விருப்பம் நமக்கெல்லாம் இருக்கிறது. அப்படி ஆராய்ந்து அறிவதே சிறந்தது.

    காவேரி என்று எப்போது இளங்கோவடிகள் கூறுகிறார்?

    கானல் வரிப் பாடலில் வரிக்கு வரி காவேரி என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    கானல் வரிப் பாடலை மாதவியின் விருப்பப்படி முதலில் கோவலன் பாடுகிறான். பிறகு மாதவி பாடுகிறாள். அதாவது இன்றைய திரைப்பட டூயட் பாடல்களைப் போல.

    தன்னுடைய யாழை மாதவி கொடுக்கவும் அதை வாங்கி மீட்டிக் கொண்டு காவிரியைப் பார்த்தபடி மாதவியின் மனம் மகிழும் படிக் கோவலன் கானல் வரிப் பாடலைப் பாடுகிறான்.

    மேற்சொன்ன தகவலைச் சொல்லும் போது இளங்கோ காவிரி என்றே குறிப்பிடுகிறார். கீழுள்ள வரிகளைப் பாருங்களேன்.

    கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
    காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,
    மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன்.
    இந்த வரிகளைத் தொடர்ந்து வருவதுதான் கோவலன் பாடும் கானல் வரிப் பாடல். அதில் சில வரிகளைப் பார்ப்போம்.
    திங்கள் மாலை வெண்குடையான்,
    சென்னி,செங்கோல்-அது ஓச்சி,
    கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாய்; வாழி, காவேரி!
    கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
    மங்கை மாதர் பெரும் கற்பு என்று
    அறிந்தேன்; வாழி, காவேரி!

    இப்படிக் கானல் வரிப் பாட்டில் காவேரி என்றே குறிப்பிடுகிறார்.

    சிலப்பதிகாரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டு.

    சிலப்பதிகாரக் கதையை நமக்கு இளங்கோ விவரிக்கிறார். அப்படி விவரிக்கும் போது கதையின் பாத்திரங்கள் ஊடாகப் பேசுகின்றன. பாடுகின்றன.

    இளங்கோவடிகளின் விவரிப்பைத் தன் கூற்று என்று வைத்துக் கொள்வோம்.

    பாத்திரங்கள் பாடுவதையும் பேசுவதையும் பாத்திரங்களின் கூற்று என்று வைத்துக் கொள்வோம்.

    இந்தப் பாத்திரங்கள் சேர சோழ பாண்டிய நாட்டில் பல வகையான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்தவை.

    இளங்கோவடிகள் தான் எழுதிய காப்பியத்தில் ஒரு புதுமை செய்தார். பாத்திரங்களின் கூற்று அந்தந்த பாத்திரங்களின் வாழ்வியலை ஒட்டிய மொழி வழக்கிலேயே இருக்கும் படிச் செய்தார்.

    கானல் வரிப் பாடல், கௌந்தியடிகள் பேச்சு, மாடல மறையோன் பேச்சு, ஆய்ச்சியர் குரவை, மதுரை மக்களின் பேச்சு, குன்றக் குரவர் பாடல்கள், சேர மகளிர் பாடல்கள் என்று ஆழ்ந்து படிக்கப் படிக்க நமக்கு அந்த உண்மை தெரியும்.

    கானல் வரி என்பது கோவலனின் கூற்றாகத் தொடங்கி மாதவியின் கூற்றாக முடிகிறது.

    அத்தோடு கானல் வரி என்பது பாடல் இலக்கணங்களுக்கு உட்பட்டது.

    சரி. இத்தனை தகவல்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

    மன்ற(சங்க) காலத்தில் காவிரி என்ற பெயர் மட்டுமே வழக்கத்தில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் உச்சரிப்புச் சிதைவால் காவேரி என்றும் வழக்கம் வந்திருக்கிறது.

    அதனால் எழுத்துத் தமிழில் காவிரி என்று எழுதிய இளங்கோ, பேச்சுத் தமிழிலும் பாட்டுத் தமிழிலும் காவேரி என்று எழுதியிருக்கிறார் என்பது கருத்து.

    இது குறித்து மற்ற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    நன்றி,
    ஜிரா

  8. என். சொக்கன் says:

    இதுகுறித்து நண்பர் ஒருவரின் அருமையான விளக்க மெயில் (அவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை)

    ******************************

    காவிரி – காவேரி
    இது பாடபேதம் அல்ல! ஓலைச்சுவடி படி எடுக்கும் போது நடந்த தவறும் அல்ல!

    சிலப்பதிகாரம் துவக்கத்தில், “காவிரி” நாடன் ன்னு தான் இளங்கோ பாடுறாரு
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் (புகார்க் காண்டம் – மங்கல வாழ்த்துப் பாடல்)

    ஆனா, கானல் வரி-ன்னு வரும் போது, அது இசைப்பாட்டு
    இசைக்கு இயைந்தவாறு, நீட்டி முழக்கி, “காவேரி” என்று ஆகி விடுகிறது! – நடந்தாய் வாழீ காவேரி
    “காவிரி” ன்னா குறில்! abrupt ஆ நின்னுரும்! “காவேரி” ன்னும் போது நெடில் நீண்டு ஒலிக்கும்
    ——-

    இதுக்கு இசை நிறை ன்னு பேரு!

    பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
    இசைநிறை என ஆறு ஏகாரம்மே (தொல்காப்பியம்/ நன்னூல்)

    அதாச்சும் இசைக்கு ஏற்றவாறு ஏகாரம் வந்து ஒலிக்கும்!
    காவிரி-காவேரி
    இசைக்கு மட்டுமே இருந்த இது, பொதுமக்கள் நீட்டி நீட்டிப் பேசுற பேச்சுல, காவேரி-ன்னே மாறிப் போச்சு:))
    ——

    இதே போல் ஆண்டாளும் நீட்டி நீட்டிப் பேசுவா:)
    சிங்கத்துக்கு, சிலுப்பும் போது மயிர் விரியும்! ஆனா இந்த விரி->வேரி ன்னு பாடுவா

    மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
    சீரிய சிங்கம்
    வேரி மயிர்ப் பொங்க…

    மாரி, சீரி ன்னு நெடிலுக்கு அளபெடுக்க, விரி மயிர் -> வேரி மயிர் ன்னு ஆகுதுல்ல? அது போலத் தான் கா-விரி -> கா-வேரி:)))

  9. என். சொக்கன் says:

    test

  10. ஆனந்தன் says:

    தோன்றாத் துணையாக முருகனருள் இன்னும் இருக்குப் போலிருக்கே!

  11. Pingback: Abundance « Loud Thoughts

Leave a reply to என். சொக்கன் Cancel reply