பாயிரம்

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை

நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே

கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்

வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே

நூல்: நன்னூல் (#47)

பாடியவர்: பவணந்தி முனிவர்

நூல்களின் தொடக்கத்தில் ‘பாயிரம்’ என்று ஓர் அறிமுகப் பாடலை எழுதுவார்கள். அதில் கீழ்காணும் விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும்:

1. ஆக்கியோன் பெயர், அதாவது இந்த நூலை எழுதியவர் பெயர் என்ன?

2. வழி, அதாவது இந்த நூல் வேறு ஒரு நூலின் அடிப்படையில், அல்லது அதனைத் தழுவி எழுதப்பட்டதா? ஆம் எனில், அந்த முதல்நூலின் பெயர். இல்லை எனில், ‘இதுவே முதல்நூல்’ என்று குறிப்பிடவேண்டும் (உதாரணம்: கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)

3. எல்லை, இந்த நூலின் கதை / அதில் வரும் சம்பவங்கள் எங்கே நடக்கிறது? எந்த எல்லைகளுக்குள்?

4. நூற்பெயர், புத்தகத்தின் தலைப்பு என்ன?

5. யாப்பு, எந்த இலக்கணத்தின் அடிப்படையில் இந்த நூலில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன?

6. நுதலிய பொருள், இந்த நூல் சொல்லும் மையப்பொருள் என்ன?

7. கேட்போர், இந்த நூல் அரங்கேற்றப்பட்டபோது அதனைக் கேட்ட பெரியவர்கள் யார் யார்? (அதாவது, அவர்களால் இந்த நூல் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பொருள்)

8. பயன், இந்த நூலைப் படித்தால் அதன்மூலம் என்ன பயன் கிடைக்கும்?

துக்கடா

 • என்ன அழகான இலக்கணம்! இத்தனை தெளிவான அறிமுகம் இருந்தால், பாயிரத்தைப் படித்தவுடன் அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கலாமா வேண்டாமா என்று தீர்மானித்துவிடமுடியும் அல்லவா?
 • இந்தக் காலப் புத்தகங்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்:
 • ஆசிரியர் பெயர், நூலின் பெயர் : அட்டையில், பக்கத்துக்குப் பக்கம் குறிப்பிடுகிறார்கள்
 • வழி : ’சுட்ட பழம்’ என்றால் பெரும்பாலும் சொல்வதில்லை 😉
 • எல்லை: பெரும்பாலும் சொல்வதில்லை
 • யாப்பு: சான்ஸே இல்லை
 • நுதலிய பொருள், பயன்: பெரும்பாலான புத்தகங்களின் பின் அட்டைகளில் சொல்லப்படுகிறது (blurb)
 • கேட்போர்: அதே பின் அட்டையில் சிறு விமர்சனங்களாகக் குறிப்பிடப்படுகிறது (பிரபலங்களின் பாராட்டுகள்)
 • இவைதவிர, இப்போது புதிதாகச் சேர்ந்துகொண்டிருக்கும் விஷயங்கள், பதிப்பகத்தின் பெயர், விலை, பதிப்புரிமை, முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, இன்னபிற உரைகள், ஆசிரியரின் புகைப்படம் / வாழ்க்கைக் குறிப்பு / அவர் எழுதிய வேறு புத்தகங்கள் / முகவரி / ஃபோன் நபர் / ஈமெயில், (வெற்றிபெற்ற புத்தகம் எனில்) இந்தப் புத்தகம் இதுவரை எத்தனை பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்ற விவரம், இதே பதிப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புத்தகங்களின் விளம்பரம்…

306/365

Advertisements
This entry was posted in இலக்கணம், நன்னூல், பட்டியல். Bookmark the permalink.

5 Responses to பாயிரம்

 1. GiRa ஜிரா says:

  நன்னூல் – 13ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் எழுதிய இலக்கண நூல். இவர் ஒரு சமண முனிவர். ஒரு சமணர் ஒரு இலக்கண நூலை இயற்றி அது ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில்தான் 13ம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் இருந்திருக்கிறது. நன்று. நன்று.

 2. GiRa ஜிரா says:

  பாயிரம் எழுதும் வழக்கம் பின்னால் வந்தது. முன்பு இருந்ததில்லை. சங்கநூல்களைத் தொகுத்தவர்கள் தொகுத்த நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதினார்களே தவிர பாயிரமெல்லாம் எழுதவில்லை.

  சில ஆர்வக்கோளாறு புலவர்கள் ஏற்கனவே இருக்கும் பழைய நூல்களில் இவைகளைப் புதிதாக எழுதிப் புகுத்தி விடுவார்கள். ஓலையில் மட்டும் எழுதப்பட்ட காலகட்டத்தில் புகுந்த இடைச்செருகல்களும் தொடர்ந்து வந்து விடும்.

  சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் வெண்பா இருக்கும். இந்த வெண்பாக்கள் இடைச்செருகல்கள். அதுபோல நூல்களிலும் ஆங்காங்கு இடைச்செருகல்கள் உண்டு. இரசிகமணி போன்ற தமிழறிஞர்கள் ஆய்ந்து ஆய்ந்து விளக்கங்களோடு நமக்கு இடைச்செருகல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

 3. GiRa ஜிரா says:

  ஊருக்கு உபதேசம் என்று சொல்வார்கள். சிலர் ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்வார்கள். ஆனால் அவர்களின் செய்கை அதற்கு நேர்மாறாக இருக்கும்.

  பாயிரத்துக்கு இவ்வளவு விளக்கம் சொல்லியிருக்கும் பவணந்தி முனிவர் தான் எழுதும் நன்னூல் என்னும் நூலுக்கு பாயிரத்தை இந்த இலக்கணங்களின் படி எழுதியிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்.

  ஒருவேளை அவரும் ஊருக்கு உபதேசியாக இருப்பாரோ என்று ஒரு ஐயம். 🙂 ஐயம் இட்டு உண் என்று ஔவை சொல்லியிருக்கிறாரே. அதனால் அவர் எழுதிய பாயிரத்தைப் படித்துப் பார்த்தேன்.

  அடடா! தான் சொன்ன இலக்கணத்திற்கு எந்தக் குறைவும் இல்லாமல் மிக விரிவாகவும் தெளிவாகவும் பாயிரம் எழுதியிருக்கிறார் பவணந்தி முனிவர்.

  அந்தப் பாயிரத்திலிருந்து பாயிர இலக்கணத்திற்கு உட்பட்ட விவரங்களைத் தருகிறேன். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

  1. ஆக்கியோன் பெயர் – பவணந்தி முனிவன்

  2. வழி – முன்னோர் நூலின் வழி (தொல் என்றால் பழைய/முன் என்று பொருள். தொல்காப்பியத்தையும் அதற்குப் பிறகு வந்த எல்லா இலக்கண நூல்களையும் பின்பற்றி இந்த இலக்கண நூலை எழுதினார் எனக் கொள்ள வேண்டும்)

  3. எல்லை – குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ்க் கடலுள் (தமிழ்மொழி பேசப்படும் தமிழ்நாட்டு எல்லைகளைக் குறிப்பிடுகிறார். தமிழர்க்கு இந்த இலக்கண நூல் பயன்படும் என்பதால் அப்படிக் குறிப்பிடுகிறார்)

  4. நூற்பெயர் – நன்னூல்

  5. யாப்பு – நிகண்டு கற்று, இலக்கியப் பயிற்சி செய்தபின் இந்நூல் கேட்கத் தக்கது

  6. நுதலிய பொருள் – அரும்பொருள் ஐந்து (எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்து பொருள்களுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார் பவணந்தி முனிவர்)

  7. கேட்போர் – இலக்கியப் பயிற்சி செய்தவர் (சீயகங்கன் என்னும் அரசன் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவன் அருங்கலை வினோதன் என்றும் தெளிவாகப் பதிவு செய்கிறார் )

  8. பயன் – மொழித்திறத்தின் முட்டறுத்தல்

  9. காலம் – சீயகங்கன் காலம்

  10. களம் – சீயகங்கன் சபை

  11. காரணம் – சீயகங்கன் சொன்னமையும் யாவரிடத்தும் இரக்கமுடைமையும்

  இந்தத் தகவல்களோடு தன்னுடைய ஊரின் பெயரையும் தந்தையாரின் பெயரையும் சார்ந்துள்ள சமயத்தையும் கூடத் தெளிவாகப் பதிந்திருக்கிறார்.

  இவர் சமணர் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஊர் என்ன?

  இவரது ஊரின் பெயர் சனகாபுரம். சரி. தந்தையாரின் பெயர் என்ன?

  இவரது தந்தையின் பெயர் சன்மதி முனிவர்.

  இதிலிருந்து பவணந்தி முனிவர் ஊருக்கு உபதேசி அல்ல என்று அறியலாம். அத்தோடு அவர் சொல்லிய வண்ணம் செய்த பெருமாள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 🙂

  அன்புடன்,
  ஜிரா

 4. திரு.சொக்கரே, நீங்கள் துக்கடாவில் இக்காலப் புத்தகங்கள் இவற்றை பின்பற்றுகின்றனவா என்று ஆராய்ந்து, பட்டியலிட்டுக் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் அருமை. 🙂

  ராகவன், நீங்கள் பவணந்தி முனிவரையே ஆராய்ந்து அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் தான் என்று பட்டமே கொடுத்துவிட்டீர்கள் 🙂

  உங்கள் இருவரின் உழைப்புக்கும் நன்றி!

  பாவாயிரம், பாடல் இயற்றிய பிறகு சேர்க்கப் படுமா இல்லை முதலிலேயே அறிமுகப் பாடலாக பாடப்பட்டு ஆரம்பிக்கப் படுமா?

  amas32

 5. Pingback: நெஞ்சை அள்ளும் முன்னுரை | நாலு வரி நோட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s