யானையோ யானை

’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,

’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.

‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.

’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.

‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை

‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.

‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: வீரராகவ முதலியார்

முன்கதை

ஒரு பாணன். அவனுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது.

அந்த ஊரில் இராமன் என்ற பணக்காரன் இருந்தான். அவனைச் சந்தித்துப் பாடிப் பரிசு பெற்று வரலாம் என்று இந்தப் பாணனுக்கு ஆசை.

பாணனின் பாட்டு இராமனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. மகிழ்ச்சியாக அவனுக்கு ஒரு யானையைப் பரிசளித்தான்.

அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம், யானையை வைத்துக்கொண்டு என்ன செய்யும்? தலையைச் சொறிந்தபடி வீடு திரும்புகிறான் பாணன். அங்கே…

உரை

மனைவி (பாணி): ‘இராமன் என்கிற வள்ளலின் புகழ் பூமியெங்கும் வானமெங்கும் பரந்திருப்பதாகச் சொல்வார்கள், அப்படிப்பட்ட இராமனைச் சந்தித்துப் பாடச் சென்றாயே, அங்கே என்ன நடந்தது? என்ன பரிசு பெற்றுவந்தாய்? எங்களூக்கு என்ன கொண்டுவந்தாய்?

பாணன்: வம்பதாம் களபம் (கயிறு அணிந்த யானை)

பாணி: ஓ, வாசனை உடைய சந்தனத்தைப் பெற்றுக்கொண்டுவந்தாயா? நல்லது, அதை நீயே பூசிக்கொள்!

பாணன்: சந்தனம் இல்லை, மாதங்கம் (யானை)

பாணி: ஓ, மா தங்கம், உயர்ந்த தங்கத்தைப் பரிசாகப் பெற்றுவந்தாயா? இனி நம் துன்பம் தீர்ந்தது, நாம் மகிழ்ச்சியாக வாழலாம்

பாணன்: தங்கம் இல்லை, பம்பு சீர் வேழம் (நிறையப் புகழ் உடைய யானை)

பாணி: ஓ, செழிப்பான கரும்புதான் பரிசாகக் கிடைத்ததா? சரி, அதைக் கொண்டு வா, முறித்துச் சாப்பிடலாம்

பாணன்: கரும்பு இல்லை, பகடு (யானை)

பாணி: ஓ, வள்ளல் உனக்கு எருமைக்கடாவைக் கொடுத்தாரோ? பரவாயில்லை, நம் வயலை உழுவதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

பாணன்: எருமை இல்லை, கம்ப மா (அசைகின்ற யானை)

பாணி: ஓ, கம்ப மா, கம்பினால் செய்யப்பட்ட மாவு பரிசாகக் கிடைத்ததோ? கொண்டு வா, அதை வைத்து நல்ல களி கிண்டித் தின்னலாம்

பாணன்: கம்பு மாவு இல்லை, கைம்மா (கையை உடைய விலங்கு)

பாணி: அடடா, யானையா? அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது? (கலங்கி நிற்கிறாள்)

துக்கடா

  • அத்தனை அவலத்திலும் கணவனும் மனைவியும் சிலேடையாக வார்த்தை விளையாட்டு நடத்துகிறார்கள். கணவன் மாறி மாறி யானைக்கான வெவ்வேறு சொற்களை அடுக்குகிறான், மனைவி அதை நம்ப விரும்பவில்லை, வேண்டுமென்றே அதே வார்த்தைகளுக்கான வேறு பொருள்களைச் சொல்லிச் சமாளிக்கிறாள், கடைசியில் உண்மை நிலை அறிந்து இருவரும் வேதனையில் மூழ்குகிறார்கள்
  • அடுத்து என்ன நடந்திருக்கும்? பாணனின் யானையை யாராவது விலைக்கு வாங்கிக்கொண்டிருப்பார்களோ? குறைந்தபட்சம், இந்த அருமையான பாட்டுக்காகவாவது இன்னொரு வள்ளல் அவனுக்கு ஓர் உருப்படியான பரிசு கொடுத்து ஆதரித்திருக்கவேண்டும்!
  • இந்தப் பாடலைப் பாடிய கவிஞர் கண் பார்வை இல்லாதவர், ’அந்தகக்கவி’ என்று அழைக்கப்படுகிறவர்
  • இன்றைய அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் பத்மா அர்விந்த் (http://twitter.com/#!/padmaa). அவருக்கு நன்றிகள்

186/365

This entry was posted in கதை கேளு கதை கேளு, சிலேடை, தனிப்பாடல், நண்பர் விருப்பம், நாடகம், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to யானையோ யானை

  1. GiRa ஜிரா says:

    அந்தகக் கவி வீரராகவர். பிறவியிலேயே இவருக்குக் கண்பார்வை கிடையாதாம். எல்லாரையும் போல எழுதிப் படிக்கவில்லை. ஆசிரியர் சொல்லச் சொல்லச் செவியில் கேட்டுப் படித்தாராம்.

    இச்செவியில் கேட்டு அச்செவியில் விடும் மாணவராய் பலர் இருக்க, இரு செவியில் கேட்டு உச்சிக்குத் தமிழை ஏற்றிய வீரராகவரைப் புகழாது இருக்க முடியவில்லை.

    பிற்காலப் புலவர்களில் இவர், காளமேகம், பொய்யாமொழி, காளமேகம், சொக்கநாதப் புலவர் (பலபட்டைச் சொக்கநாதப் புலவர்), இரட்டைப் புலவர்கள் ஆகியோர்கள் நினைவு கொள்ளத்தக்கவர்கள். யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அது என் அறியாமை. மன்னிக்க.

    இவர் மேல் பொறாமை கொண்ட புலவர்கள் இவர் அரசவைக்கு வரும் வழியில் திரைச்சீலை வைத்ததாகவும். குறிப்பால் மாணவர் கூற செய்யுள் பாடி திரை எரிந்ததாகவும் சொல்வார்கள்.

    இவருடைய பாடல்களையும் படிக்க வேண்டும். சிலேடையிலும் இவர் எழுதியிருக்கிறார் என்று இன்று அறிந்தேன்.

    இந்தப் பாடலில் சிலைடையைக் காட்டிலும் நான் ரசித்தது ஒன்றுண்டு. 🙂 ஆம். அந்தப் பாணியின் மறுமொழிகள்.

    பாணன் பாடிப் பரிசு பெறப் போயிருக்கிறான். ஏதேனும் வந்தால் நல்லது என்று அவளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு.

    வந்தவன் யானை என்று வேறுவேறு விதமாகச் சொல்கிறான். அவள் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறாள்?

    சந்தனம்
    தங்கம்
    கரும்பு
    எருமைக்கடா
    கம்பமாவு

    இதில் தங்கத்திற்கு அவள் கூறும் மறுமொழி என்ன? ”யாம் வாழ்ந்தேம்”. அப்பாடா பொழச்சோம்டா சாமி. இனிக் கவலையே இல்ல. அப்படியான ஒரு மகிழ்ச்சி பொங்கும் மறுமொழி.

    கம்பமா என்று நினைக்கும் பொழுது “நல்களியாம்” என்றாள். சரி. ஒரு வேளைச் சாப்பாட்டுக்காச்சும் ஆச்சே என்ற எண்ணம்.

    மற்றவைகளுக்கு என்ன சொல்கிறாள்?

    சந்தனம் – பூசும்
    கரும்பு – தின்னும்
    எருமைக்கடா – உழும்

    ஒருமையில் வருகிறது மறுமொழிகள். 🙂 ஒரு எரிச்சல். ஓ சந்தனமா குடுத்தான்… பூசிக்கோ. ( நல்லவேளை, குடி என்று சொல்லவில்லை).
    கரும்பா, நீயே தின்னு. எருமைக்கடா வாங்கீட்டு வந்திருக்க. போய் வயல்ல உழு. ஒரு எருமைமாடு வாங்கீட்டு வந்திருந்தா பால் வித்துப் பொழச்சிருக்கலாம்.

    தன்னுடைய எரிச்சலை அழகாக வெளிப்படுத்துகிறாள் அந்தப் பாணி.

    யானை என்று தெரிந்ததும் கலங்கிப் போகிறாள். இரண்டு வயிறுகளுக்குச் சோறு போடுவதே பெரும்பாடு. இதில் யானை வேறா?

    யானையை எங்கு விற்பது? யார் வாங்குவார்கள்? கொடுத்தவனிடம்தான் விற்க வேண்டும். விற்றார்களா என்று தெரியவில்லை. 🙂 கற்பனைக் கவிதை என்பதால் நமக்குப் பிடித்த முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 🙂

  2. rAguC says:

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள், இங்க பாட்டுலயும் யானயை வைத்து எதனை அழகான பொருள்.

    பள்ளிகளில் மனப்பட செய்யுளில் வைக்க அருமையான பாட்டு,குழந்தைகளும் விரும்பி படிப்பார்கள், அதிகமான தமிழ் வார்த்தைகள் தெரிந்து கொள்ளவும் உதவும், அதோடு பாடி பரிசில் பெற்று வாழும் மக்களும் அவர் தம் நாகரீகமும்,எதிர்பார்ப்பும்,ஆசைகளும், பரிசு வழங்கும் மக்களும் என பல தகவல்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு பாடல்! அருமையான தேர்வு!

  3. அருமை. எத்தனை நளினம். மாணவ பருவத்தில் படித்தது.

  4. amas32 says:

    புலவனின் மனைவி தான் எத்தனை பொறுமை சாலியாக இருக்க வேண்டும்! எனக்கு இங்கே பாரதியாரின் மனைவி தான் ஞாபகத்துக்கு வருகிறாள். பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வைத்த ஆழாக்கு அரிசியை முற்றத்தில் உட்கார்ந்தபடியே காக்கைக் குருவிகளுக்கு உணவாகத் தந்தவரை வைத்துக் கொண்டு அவளும் குடும்பம் நடத்தி இருக்கிறாள்.
    ராகவன் சொல்லியிருப்பது போல் சந்தனம், காளை மாடு, கம்பு மாவு என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்ட மனைவி மனம் நொந்து அல்லது வெறுத்துப் பதிலளிக்கிறாள்.
    Poets lived by their wits!
    amas32

  5. ஆனந்தன் says:

    சொக்கன் தருவது வைரமென்றால், ஜி.ரா வின் வரிகள் அதற்கு பட்டை தீட்டுவது போல் இருக்கிறது!
    நன்றி!

Leave a comment