அந்தக் கால ‘Bed and Breakfast’

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்

கள் கமழ் நெய்தல் ஊதி எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அம்சிறை வண்டு…

நூல்: திருமுருகாற்றுப்படை

பாடியவர்: நக்கீரர்

சூழல்: திருப்பரங்குன்றத்தின் வர்ணனை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கருப்பான சேற்றை உடைய பெரிய வயல், அங்கே தாமரை மலர்ந்திருக்கிறது.

முள்ளை உடைய தண்டில் பூத்திருக்கும் அந்தப் பூவில் தேன் உண்ணுவதற்காக ஒரு வண்டு வந்தது. அப்படியே மயங்கித் தூங்கிவிட்டது.

மாலை ஆனதும், தாமரை இதழ்கள் குவிந்து மூடிக்கொள்கின்றன. வண்டு உள்ளே சிக்கிக்கொள்கிறது. இரவு முழுவதும் அங்கேயே தூங்குகிறது.

பொழுது விடிகிறது. தாமரை மீண்டும் மலர்கிறது. வண்டு வெளியே வருகிறது. பக்கத்தில் இருந்த நெய்தல் மலரில் மணம் நிறைந்த தேனை உண்கிறது. அழகிய இறகுகளைத் தெம்பாக விரித்து மேலே பறக்கிறது.

அந்தக் குன்றின்மீது உள்ள சுனைகளில் கண்ணைப் போன்ற வடிவத்தில் பல பூக்கள் மலர்ந்துள்ளன, அங்கே இப்படிப் பல வண்டுகள் வந்து சேர்ந்து சத்தமிடுகின்றன.

துக்கடா

 • திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறு படைவீடுகளும் அழகாக வர்ணிக்கப்படுகின்றன. அவற்றில் திருப்பரங்குன்றப் பகுதியில் வரும் காட்சி இது. இந்தப் பாடல் வரிகள் திருமுருகாற்றுப்படையை அறிமுகப்படுத்தி கி. வா. ஜ. அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை
 • ராத்திரி நேரத்தில் ஒரு தாமரை மலரின் உள்பகுதி எப்படி இருக்கும்? நீங்களும் நானும் போய்ப் பார்க்கமுடியாது, ஆனால் அதையும் சங்கப் புலவர்கள் பாடிவைத்துள்ளார்கள், குறுந்தொகையின் 376வது பாட்டு ’வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை’ என்கிறது. அதாவது, பகலெல்லாம் சூரியனின் கதிர்களை வாங்கிச் சூடு சேர்த்துக்கொண்டு, இரவில் அதைப் பயன்படுத்திக் கதகதப்பாகக்குளிர் காய்கிறதாம் தாமரை, Solar Water Heater ஞாபகம் வருகிறது 🙂
 • அது சரி, குறுந்தொகை காதல் நூலாச்சே, பகலில் வெப்பம் வாங்கி இரவில் குளிர் காய்கிற இந்தத் தாமரை ஏதாவது ரொமான்ஸ் சமாசாரத்துக்கு உவமையாக இருக்கணுமே? அந்தப் பாட்டைத் தேடிப் படியுங்கள், ரசிக்கலாம், கிறங்கலாம் 😉

187/365

Advertisements
This entry was posted in இயற்கை, நக்கீரர், வர்ணனை. Bookmark the permalink.

9 Responses to அந்தக் கால ‘Bed and Breakfast’

 1. balaraman says:

  அடடா! என்ன ஒரு கற்பனை!!! இப்படியெல்லாம் சிந்திக்க வாய்ப்பேயில்லாமல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள் இக்காலத்து கவிஞர்கள் (கற்பனை வளம் குறையவில்லை, இயற்கை வளம் குறைந்துவிட்டது!)

  //அது சரி, குறுந்தொகை காதல் நூலாச்சே, பகலில் வெப்பம் வாங்கி இரவில் குளிர் காய்கிற இந்தத் தாமரை ஏதாவது ரொமான்ஸ் சமாசாரத்துக்கு உவமையாக இருக்கணுமே? அந்தப் பாட்டைத் தேடிப் படியுங்கள், ரசிக்கலாம், கிறங்கலாம்//

  புரியுது! ;>

 2. amas32 says:

  உண்ட மயக்கத்தில் ஒருகுழந்தையை போல உறங்கியிருக்கிறது அந்த வண்டு! குழந்தைகள் வயிறு முட்ட பால் குடித்தவுடன் நீண்ட நேரம் உறங்கிவிடும். அதுபோல இந்த வண்டு விழிக்கும் பொழுது மாலை நேரம் வந்து விட்டது. மூடிய தாமரை மலருள் மாட்டிக் கொண்டும் விட்டது!
  நல்ல வேளை, கவிஞர், மறுநாள் காலை தாமரை மலர்ந்து, வண்டு மீண்டும் வெளியே வருகிறது என்று தொடர்கிறார். இன்னும் பல மலர்களில் தேனைப் பருகி சுற்றித் திரிகிறது! இன்னும் பல வன்டுகளோடு சேர்ந்து விளையாடுகிறது!
  A fairy tale ending 🙂
  amas32

 3. இதில் என்ன மறைமுகமான ரொமான்ஸ்?? என் தலைவர் திருப்பரங்கிரிப் பெருமான் மீது பாடப்பெற்ற இந்த ஆற்றுப்படை இவ்வளவு இனிப்பு நிறைந்ததா?? தலைவர் வேலவர் எப்போதும் ரொமான்ஸுக்குப் பச்சைக் கொடி காட்டுபவர் தானே..??

  இந்தத் திருமுருகாற்றுப்படையை நக்கீரர் பாடிய சூழ்நிலையை ரவி அவர்கள் பட்டையைக் கிளப்பும் வகையில் மாதவிப்பந்தலில் விவரித்துள்ளார்…அதைப் படித்துப் பார்த்தால் நமக்குத் தோன்றும் ஒரு கேள்வி, “இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதா???”

  ஆனால், நக்கீரர் தமக்கு வந்த சோதனைகள் அத்தனையும் வெற்றிவேலவனின் பார்வையால் தவிடுபொடியாகிப் போய் விடும்..சக்தி வேலின் பொன்னொளி வீசும் வேல் எப்பேர்ப்பட்ட ஆபத்துக்களையும் நீக்கிவிடும் என்று அணுவளமும் சந்தேகமின்றி நம்பியதாலேயே இந்த அளவுக்குக் குமால்ட்டிக்காக திருப்பரங்குன்றத்தை அவரால் வருணிக்க முடிந்தது…

  @Balaraman அண்ணா..நாமளும் நாலு வருஷம் திருப்பரங்குன்றத்துல படிச்சோம்..இந்த மாதிரி எதையாவது கவனிச்சிருப்போமா?? அவ்வ்வ்வ்…

 4. GiRa ஜிரா says:

  திருமுருகாற்றுப்படை. ஆகா! நேத்துதான் பாதிமதிநதி திருப்புகழுக்குச் சிறிய விளக்கம் எழுதுனேன். இன்னைக்கு உங்க பதிவில் முருகாற்றுப்படையிலிருந்து சில வரிகள்.

  முருகாற்றுப்படையே ஒரு ஆன்மீக நூல். அதுலயும் சொல்நயமும் பொருள்நயமும் உள்ள அழகான குட்டிக் கவிதைய எடுத்துப் பதிவு போட்டிருக்கீங்களே. அருமையோ அருமை. 🙂

  பாட்டின் பொருள் ஓரளவுக்குப் புரியுது. என்ன.. பிரிச்சுப் பிரிச்சுப் படிக்க வேண்டியிருக்கு 🙂

  இரு சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரை துஞ்சி

  ஒரு ஐயம். முள்+தாள் முட்டாள் ஆகாதா? முள் தைக்கும் காடு முட்டைக்கும் காடு ஆனதே. இதை விட இன்னொரு ஐயம். தாமரைப் பூவுல முள்ளுண்டா? 🙂

  வண்டு வந்துச்சு. தாமரை மலரில் தேன் குடிச்சுத் தூங்கீருச்சு. காலைல எந்திருச்சு நெய்தல் மலர்ல போய் தேன் குடிச்சுச்சு. கிட்டத்தட்ட தாமரைப்பூவை ஒரு லாட்ஜ் ஆக்கியிருக்கு இந்த வண்டு. தங்குன எடத்துலயே சாப்பாடு. அடேங்கப்பா.
  இந்த அழகை ரசிக்கிறது ஒரு புறம் இருக்க… இன்னும் சிலவற்றை உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

  தாமரை பூத்திருக்குன்னு சொல்றாரே நக்கீரர். எங்க பூத்திருக்காம்? குளத்துலயா? ஏரியிலயா? கண்மாயிலா? மதகுலயா? இல்ல. வயல்ல. இரு சேற்று – இருண்ட நிறமுடைய சேற்றில் செந்தாமரை மலர்ந்திருக்கிறது. அதுவும் வயல் சேற்றில். வயல்ல பயிரே ஒழுங்கா முளைக்காத இன்னைக்கு வயல்ல தாமரை முளைச்சதுன்னு நெனைச்சுப் பாக்குறப்போ நீர்வளமும் நிலவளமும் எவ்வளவு சிறப்பா இருந்திருக்கனும்.

  அட. இந்த மாதிரி வயல்ல பூக்கள் பூக்குறத நான் நாலஞ்சு வயசு இருக்குறப்போ எங்க ஊர் வயல்ல பாத்திருக்கேன். வாய்க்கால் ஓரமா டிசம்பர் பூக்களும், மஞ்சள் கனகாம்பரமும் கல்வாழையும் நெறைய பூத்திருந்தது. ம்ம்ம்.. அது ஒரு காலம். இன்னைக்குப் போனா… வேண்டாம் விடுங்க. அப்போ ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எப்படியிருந்திருக்கனும்!

 5. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டில் இன்னொரு கவியழகு உண்டு. சட்டென்று தோன்றியது. சரியாக இருக்குமோ என்று தோன்றியது. பொருத்தமென்றால் சம்மதம் கொடு முருகா என்று மனதுக்குள் நினைத்தேன். டீவியில் உடனே கவுண்டமணி முருகா முருகா முருகா என்று கத்தினார். ஆகையால் இதை முருகனின் விருப்பம் என்றே எடுத்துக் கொண்டு கூறுகிறேன்.

  திருப்பரங்குன்றம் மலையானாலும் குறிஞ்சி நிலமல்ல. அது மருத நிலம். ஆகையால்தான் வயல் அழகைப் பற்றிப் பாடுகிறார் நக்கீரர்.

  இரு சேற்று அகல் வயல் விரிந்த என்றுதானே இன்றைய பாவின் வரிகளும் வருகின்றன. மருத நிலத்தின் மலர் தாமரை. ஆக வண்டு மருத நிலத்து மலரான தாமரையில் அமர்ந்து உண்டு உறங்கி எழுந்திருக்கிறது.

  அடுத்து எங்கே போகிறது? கள் கமழ் நெய்தல் ஊதி – அதாவது நெய்தல் மலருக்குப் போகிறது. நெய்தல் மலர் நெய்தல் நிலத்திற்குரிய மலர் என்று பெயரைப் பார்த்தாலே சொல்லி விடலாம்.

  ஆற்றுப்படை வீடுகளில் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) நெய்தல் நிலம்.
  இன்றைய பாவின் தொடர்பு வரிகள் முடிந்ததும் நக்கீரர் அடுத்து பாடுவது திருச்சீரலைவாய்.
  திருப்பரங்குன்றம் – தாமரை
  வண்டு – நக்கீரர்
  திருச்சீரலைவாய் – நெய்தல்

  திருப்பரங்குன்றின் பெருமைகளைச் சொல்லிக் களித்தேன். அடுத்து திருச்செந்தூரின் பெருமைகளைச் சொல்லப் போகிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே தாமரையில் தங்கிய வண்டு நெய்தலுக்குப் போவதைக் கூறினார் போலும்.

  • amas32 says:

   Loved your explanations! Thanks for sharing 🙂
   amas32

   • GiRa ஜிரா says:

    இந்த விளக்கம் உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 🙂

    முருகன் சொல்றான். ஜிரா எழுதுறான். 🙂

 6. ஆனந்தன் says:

  வண்டு நெய்தல் மலருக்குப் போகும் காரணத்தை உய்த்துணர்ந்த விதம் பிரமாத்ம்! ஜி.ரா வுக்கு வாழ்த்துகள்.

 7. முருகன் சொல்றான். ஜிரா எழுதுறான்!!! 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s