ஒட்டுதல்

மலைப்பினும் வாரணம் தாங்கும், அலைப்பினும்

அன்னே என்று ஓடும் குழவி, சிலைப்பினும்

நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்

உடன் உறையும் காலமும் இல்

நூல்: நான்மணிக்கடிகை (#25)

பாடியவர்: விளம்பிநாகனார்

 • மேலே அமர்ந்துள்ள பாகன் என்னதான் துன்புறுத்தினாலும், யானை அவனைக் கீழே தள்ளிவிடாது
 • தாய் கண்டித்தாலும், குழந்தை அவளை வெறுக்காது, ‘அம்மா’ என்று அங்கேதான் ஓடும்
 • நல்ல நண்பர்கள் நடுவே எத்தனை கருத்துமோதல்கள், சண்டைகள் வந்தாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கமாட்டார்கள்
 • ஆனால், மனத்தளவில் ஒட்டாத இருவர் என்றைக்கும் சேர்ந்து பணிபுரிய / வாழ்வதுமட்டும் எப்போதும் சாத்தியமில்லை
துக்கடா
  அந்த நான்காவது புல்லட் பாயின்ட், நண்பர்களுக்குச் சொன்னதாக இருக்கலாம், தம்பதிகளுக்குச் சொன்னதாக இருக்கலாம், பிஸினஸ் பார்ட்னர்களுக்குச் சொன்னதாகக்கூட இருக்கலாம்!

185/365

Advertisements
This entry was posted in அறிவுரை, நான்மணிக்கடிகை, வெண்பா. Bookmark the permalink.

5 Responses to ஒட்டுதல்

 1. balaraman says:

  மிகவும் அருமையான பாடல். இதிலுள்ள கருத்துடன் முழுவதுமாய் ஒத்துப்போகிறேன்!

  நன்றி திரு.சொக்கன் அவர்களே.

 2. Rex Arul says:

  என்ன ஒரு அருமையான கருத்தாழமிக்கப் பாடல்! நான்காவது புல்லட், இருவர் இயைந்து செயலாற்றும் எல்லா மேடைகளுக்கும் பொருந்தும் – மனம், மணம், நட்பு, அரசியல், கருமம், பணி, புரட்சி – என்று மேடைகள் மாறலாம், அனால், கூறப்பட்டிருக்கும் கருத்து, அனைத்துக்கும் பொதுவானதே!

  கண்டிப்பாய் மனப்பாடம் செய்யப்பட வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்றே.

  நன்றி, சொக்கன்!

 3. GiRa ஜிரா says:

  விளம்பி நாகனார் தெளிவாச் சொல்லீட்டாரு. மறுக்கவே முடியாது. இது புரிய வேண்டிய பலருக்குப் புரியாமலேயே இருக்குது. என்ன செய்றது.

  நான்மணிக்கடிகை பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளது. மன்றம்(சங்கம்) மருவிய காலத்து நூல்களில் ஒன்று.

  இதுல நாகனார் அவரோட பேரு. விளம்பி அவரோட ஊராம். இவரு பதினென்கீழ்க்கணக்குல இருக்கும் மற்ற நூலாசிரியர்களை விட காலத்தில் கொஞ்சம் பிந்தியவர்னும் சொல்றாங்க.

  முந்திரிக் கொத்துன்னு ஒரு பலகாரம் ஊர்ப்பக்கம் ஒரு பலகாரம் செய்வாங்க. மூனு இனிப்புருண்டைகளை ( சீடை அளவுக்கு ) ஒன்னா வெச்சு பச்சரிசி கரைச்ச மாவுல முக்கிப் பொரிச்சி எடுப்பாங்க. பலகாரம் ஒன்னு. ஆனா ஒரு பலகாரத்துக்குள்ள மூனு உருண்டைகள்.

  அது மாதிரிதான் நான்மணிக்கடிகை. வித்தியாசம் என்னன்னா இங்க நாலு உருண்டைகள். கடிகைன்னா துண்டம். இப்ப உள்ள தமிழில் துண்டு. நான்கு மணிகளை உடைய ஒரு துண்டம்.

  ஏன் அப்படியொரு பேரு? ஒவ்வொரு பாட்டுலயும் நாலு தகவல்கள் சொல்லி கருத்தைப் புரிய வைப்பாரு.

  இந்தப் பாட்டுலயே பாருங்க புரியும்.

  1. பாகன் படுத்துனாலும் யானை அவனைச் சுமக்கும்
  2. என்னதான் அடிச்சாலும் அஞ்சு நிமிசம் கழிச்சி கொழந்த அம்மான்னுதான் ஓடி வரும்
  3. கருத்துல வேறுபாடு வந்து விவாதம் பண்ணாலும் நண்பர்கள் ஒருத்தரையொருத்தர் வெறுக்க மாட்டாங்க.
  4. ஆனா…. மனசு ஒத்துப் போகாத ரெண்டு பேர் சேந்து ஒன்னும் பண்ண முடியாது

  மொதல் மூனும் நீரடிச்சு நீர் விலகாத எடுத்துக்காட்டுகள். ஆனாக் கடைசி வரி?

  அது எலிக்கும் தவளைக்கும் உண்டான நட்பு மாதிரி.

  ஒரு பஞ்சதந்திரக் கதை உண்டு.

  ஒரு எலியும் தவளையும் நண்பர்களா ஆனாங்களாம். நாள் ஆக ஆக தவளைக்கு எலியப் பிரிஞ்சு இருக்க முடியல. அதுனால தன்னோட கால்ல ஒரு கயிறக் கட்டி எலியோட கால்லயும் கட்டுச்சாம். முட்டாள் எலிக்குத் தவளையோட மூடத்தனம் புரியலை. ரெண்டு பேரும் நடந்து போறப்போ ஒரு கொளம் வருது. கொளத்தப் பாத்ததும் தவளைக்கு ஒரே கொண்டாட்டம். டபக்குன்னு ஒரே தவ்வு. தண்ணி நல்லாக் குளுகுளுன்னு இருக்கும்னு குதிச்சிருச்சு. எலியால ஒன்னும் பண்ண முடியலை. அதுவும் தண்ணீல விழுந்துருச்சு. ஆனா அதால தண்ணீல நீந்த முடியாமத் தவிக்குது. மூச்சு முட்டி செத்தும் போச்சு. செத்துப் போன எலி தண்ணீல மெதக்குது. இப்ப தவளையால எங்கயும் போக முடியல. தண்ணீல நனஞ்சு கயிறு இறுகீருச்சு. எலியோ தண்ணீல வீங்கிப் போனதால தவளையால இழுக்க முடியலை. அப்ப ஒரு பருந்து வந்து எலியத் தூக்கீட்டுப் போச்சு. தவளையும் கூடயே போய் உயிரை விட்டுருச்சு.

  இப்பிடி தான் அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கமா இல்லையான்னு கூட புரிஞ்சிக்க முடியாத மூடர்கள் உண்டு. அவர்களால் அவர்களுக்கும் துன்பம். அடுத்தவர்களுக்கும் துன்பம்.

  அதுனாலதான் எதிலும் பொருத்தம் வேண்டும். நட்பு, திருமணம். தொழில், இப்பிடி எல்லாத்துலயும் இது பொருந்தும்.

  இந்தப் பாடலில் எனக்குப் பிடிச்ச சொல்லாடல் “சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினை செய்யார்”

  அதென்ன சிலைப்பினும்? சிலைன்னா கற்சிலையா? பொற்சிலையா?

  ரெண்டுமில்லை. இங்க வந்தது சொற்சிலை. சிலை என்றால் ஒலி என்றும் பொருள். சிலம்புவதால்தான் சிலம்பிற்கு அந்த பெயரே வந்தது. “ஆர்க்கும் சிலம்பே அணி முரசா”ன்னு சொன்னாரு புகழேந்திப் புலவர் நளவெண்பாவில்.

  ரெண்டு நண்பர்கள் பேசுறப்போ குரல் சாதாரணமா இருக்கும். ஒரு விவாதம்னு வர்ரப்போ குரல் ஏறும். அதுதான் “சிலைப்பினும்”. அப்படிக் குரல் ஏறி ஒலித்துப் பேசும் விவாதங்கள் நடந்தாலும் பொருந்திய நட்பினர் சேர்ந்தே இருப்பர்.

  பொருந்தாமப் போனாத்தான் குழப்பம்.

  • சிலைப்பினும்-Altercation ன்னு சொல்லலாமா, இல்ல அதற்கு முந்தைய நிகழ்வா

   • GiRa ஜிரா says:

    Altercationதான். நண்பர்களுக்குள் வாக்குவாதங்கள் வருவதுண்டு. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s