சூட்டினேன் சொல் மாலை

வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக … செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்

பாடியவர்: பொய்கையாழ்வார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

இந்த உலகத்தை ஒரு பெரிய அகலாக எண்ணினேன், அதில் உள்ள கடல் நீரை நெய்யாக நினைத்தேன், அந்தக் கடலில் உதிக்கும் வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக நினைத்து ஒரு விளக்கை ஏற்றிவைத்தேன்.

சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையை( பாடல்களை)ச் சூட்டி வணங்கினேன், என்னுடைய துன்பக் கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறேன்.

துக்கடா

  • இன்று கார்த்திகை தீபத் திருநாள். அதை முன்னிட்டு உலகத்தையே விளக்காக்கி வணங்கும் ஆழ்வார் பாடல்
  • இதேபோல் இன்னொரு ‘மெகா’ விளக்கும் உண்டு. அதைப் பாடியவர் பூதத்தாழ்வார்:
  • அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா
  • இன்பு உருகு சிந்தை இடுதிரியா … என்பு உருகி
  • ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
  • ஞானத் தமிழ் புரிந்த நான்
  • இந்த இரண்டு விளக்குகளுக்கும் இடையே என்ன ஒற்றுமை? என்ன வேறுபாடு? எந்த விளக்கு அதிக வெளிச்சம் தரும்? யோசித்தால் பல சுவாரஸ்யங்கள் தட்டுப்படும்
  • இன்றைய பாடலின் வெண்பா வடிவம்:
  • வையம் தகளியா வார்கடலே நெய்யாக
  • வெய்ய கதிரோன் விளக்காக … செய்ய
  • சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொல் மாலை
  • இடராழி நீங்குகவே என்று
155/365
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, வெண்பா. Bookmark the permalink.

5 Responses to சூட்டினேன் சொல் மாலை

  1. ramachandran bk says:

    ஆண்டவனை வெளியே தேடுவது, தனக்கு உள்ளே தேடுவது

  2. amas32 says:

    அகல், தீபம், நெய், அனைத்துக்கும் உவமை சொன்ன ஆழ்வார் திரியை விட்டு விட்டாரே. நம்முடைய பக்தி தான் திரி என்று கொள்ளலாமா? எவ்வளவு பெரிய விளக்கு ஏற்றி வைக்கிறார்! நான் கண்ணால் பார்த்த பெரிய விளக்கு அண்ணாமலையார் தீபம் மட்டுமே. விஸ்வரூப இறைவனுக்கு ஏற்ற மாதிரி விளக்கேற்றுகிறார் ஆழ்வார். இறைவன் தான் சூரியனுக்கே ஒளித் தருகிறார். அந்த ஒளியில் இறைவனின் திருப் பாதங்கள் முதல் திரு முகமண்டலம் வரை தரிசிக்கின்றோம். இந்த பாமாலையை சூட்டி தம் பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை வேண்டுகிறார் பொய்கையாழ்வார். இந்தப் பாடல்கள் எல்லாம் நமக்காகப் பாடப்பட்டவை. நாம் வேண்டுவதற்கும் நம் மன இருள் அகன்று இறைவனின் பெருமையை உணர்வதற்கும் இயற்றப்பட்டவை.

    அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா
    என்று தொடங்கி பூதத்தாழ்வார், இறைவனைக் காண, இருள் அகல ஞானவிளக்கேற்றுகிறார். ஒருவர் மற்றோருவரை மிஞ்சுகிறார். இதை விட அருமையாகப் பேயாழ்வார்

    திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்;
    என்கிறார். அன்னையின் திரு ஒளியினால் திருமாலை தரிசிக்கிறார். ஆழ்வார்களின் பக்திக்கு ஈடு இணை இல்லை!
    amas32

  3. psankar says:

    “உயிர் தீயில் தீபம் ஏற்றினேன். என்னைக் கொண்டு எண்ணெய் ஊற்றினேன்.” என இது திரைப்பாடல்களில்/பாடலில் உபயோகிக்கப் பட்டது.

  4. என்று என்பதற்கு so that என்ற பொருளில் முடித்திருக்கிறார்.
    அந்தாதி என்பதால் அடுத்த பாடல் ‘என்று’ என்ற சொல்லில் துவங்க வேண்டும்.

    ‘என்று கடல் கடைந்தது’ (when) என்று துவங்கியிருப்பார்.

  5. ஹரிஹரன் சரவணன் says:

    தாசன் அடியேன்

Leave a reply to psankar Cancel reply