மழைக்கால எதிர்பார்ப்புகள்

வான்பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய,

கான்பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே!

இனையல் வாழி தோழி, எனையதூஉம்

நின்துறந்து அமைகுவர் அல்லர்,

வெற்றி வேந்த பாசறையோரே

நூல்: ஐங்குறுநூறு (#461)

பாடியவர்: பேயனார்

சூழல்: முல்லைத் திணை, போர் காரணமாகத் தன்னைப் பிரிந்து சென்றுவிட்ட காதலனை எண்ணி வருத்தத்தில் இருக்கிறாள் காதலி. மழைக்காலம் தொடங்குகிறது. ’அவன் வருவதாகச் சொன்ன நேரம் வந்துவிட்டது, நீ கலங்காதே’ என்று அவளை உற்சாகப்படுத்துகிறாள் தோழி.

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி,

வானத்தில் மழை பொழியத் தொடங்கிவிட்டது, அந்த மழையை ஏற்றுக்கொண்ட காடு அதனைச் சிறுதுளிகளாக மாற்றித் துவுகிறது. பிடவ மொட்டுகள் கொத்துக்கொத்தாக அரும்பிவிட்டன, அதனால் இந்தக் காட்டுக்கே அழகு கூடிவிட்டது.

இதையெல்லாம் பார்க்கும்போது உனக்கு விஷயம் விளங்கவில்லையா? கார்காலம் தொடங்கிவிட்டது. உன் காதலன் திரும்பி வருவதாகச் சொன்ன நேரம் இது.

வெற்றி நிறைந்த அரசனின் போர்ப் பாசறையில் உள்ள உன் காதலன், இனிமேலும் உன்னைப் பிரிந்து தனியே இருக்கமாட்டான், வேகமாகக் கிளம்பி வந்துவிடுவான், நீ கவலைப்படாதே!

துக்கடா

 • மேலே வானத்தில் பெய்யும் மழை மரத்தின்மீது விழுகிறது, மரம் அந்தப் பெருமழையின் வேகத்தைக் குறைத்து வடிகட்டிச் சிறு துளிகளாக மாற்றிக் கீழே சிதறடிக்கிறது. இயற்கை ஷவர் 🙂
 • பிடவம் என்பது சங்க காலச் செடிகளில் ஒன்று. இந்தத் தாவரத்தின் இப்போதைய பெயர் / தாவரவியல் பெயர் எனக்குத் தெரியவில்லை. ‘நெருக்கமான குலைகளை உடைய, மாலை நேரத்தில் மலர்கின்ற ஒரு செடி’ என்று விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டுள்ளார்கள்

154/365

Advertisements
This entry was posted in அகம், இயற்கை, ஐங்குறுநூறு, காதல், தோழி, பிரிவு, முல்லை, வர்ணனை. Bookmark the permalink.

14 Responses to மழைக்கால எதிர்பார்ப்புகள்

 1. amas32 says:

  Women need emotional support. They need reassurance all the time. Girl friends are best for that. பெண்கள் தோழிகளிடம் அந்தரங்கமான செய்திகளை பகிர்ந்துகொள்வது போல் ஆண்கள் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதில்லை என்பதே உண்மை. அதனால் தான் கதைகளிலும் காவியங்களிலும் தோழிகளுக்கு முக்கியத்துவம். ஆனாலும் பெண் all the time dependent on man only. அவன் சொன்ன நேரத்தில் வராவிட்டால் அவனை நினைத்து ஏங்கி தவிக்கிறாள், வாடுகிறாள்!
  amas32

 2. GiRa says:

  அன்று முதல் இன்று வரை ஒரு வழக்கம் மட்டும் மாறவேயில்லை.

  அது என்ன தெரியுமா? மனைவியர்/காதலியர், கணவனிடம்/காதலனிடம் பகிர்ந்து கொள்ளாத செய்திகள் உண்டு. ஆனால் அவைகள் தோழிக்கும் தெரிந்திருக்கும். இது இன்றைக்கும் உண்மை. எந்தப் பெண்ணும் மறுக்க முடியாது.

  போருக்குப் போயிருக்கிறான் கணவன். அவனுக்கு அடி படாம இருக்கனும், முழுசாத் திரும்பி வரனும்னோ தலைவியோ தோழியோ கவலைப்படுற மாதிரி தெரியலை. 🙂 தன்னுடைய மெய்வேதனை தீர்க்க அவன் வரலையேன்னுதான் கவலை. இதுதான் இந்தப் பெண்ணின் காதல். 🙂

  சரி. இன்னும் சொன்னால் என்னை ஆணாதிக்கவாதி என்பார்கள். 🙂

  போர் என்றால் தலைவன் அரசனோடுதான் கூட்டாளி.
  கார் என்றால் தலைவன் உன்னோடுதான் கூட்டாளி.
  ஆகையால் அவன் உறுதியாக வந்து விடுவான்.
  கார்காலம் வந்த பிறகும் தலைவியோடு கட்டிப் போர் செய்யாமல் பகைவனோடு கத்திப் போர் செய்ய எவனாலும் முடியாது என்பது தோழியின் கருத்து. அதைச் சொல்லித் தேற்றுகிறாள் தலைவியை.

  பிடவம் குறித்து ஒரு தகவல் இருக்கிறது. யாரும் சொல்லாவிடில் பிறகு நான் சொல்கிறேன்.

 3. அன்புள்ள GiRa அவர்களுக்கு,

  உங்கள் கருத்திலிருந்து நான் சிறிது மாறுபடுகிறேன்… சங்க காலப் பெண்கள் தன் மெய் வேதனை தீர்க்கத் தன் மணவாளன்,காதலன் வரவில்லையென்று பசலை நோயுற்று வருந்தித்தான் தோழிகளிடம் மனவேதனைப் படுவதாகவும், செருக்களம் சென்ற தன் மன்னவனுக்கு என்ன ஆகுமோ?திரும்பி வருவானோ?வரமாட்டானோ? அவனுடைய உயிருக்கு என்னவாகுமோ என்று மருந்துக்கும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. இங்குதான் நான் மாறுபடுகிறேன்..

  மார்பில் வேல்தாங்கிப் பிள்ளைகளையும், மணவாளர்களையும், தம் குடும்பத்து ஆண்களையும் குலப்பெருமையாக வீறுகொண்டு பெருமிதத்துடன் பாடித்திரிந்த நம் மறக்குல அணங்குகள், எவ்வாறு பாசறைக்குச் சென்ற தம் காதலனை நினைத்துப் பயங்கொள்ள இயலும்?? மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவனுடைய காதலன் தான் முதல் ஹீரோ… அவன் போர்க்களத்தில் செய்து கொண்டிருக்கும் வீரச்செயல்களை எண்ணிப் பெருமைப்பட்டு, பெருமிதத்தால் மனம் விம்மிக் கொண்டிருக்கும் நம்குல மங்கையரால் எவ்வாறு அவனை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க முடியும்… பேடியின் மனைவியோ,அல்லது காதலியோதானே அவ்வாறு மனம் வெதும்ப முடியும்…

  அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தால், அவனைக் கட்டி அணைத்துக் கட்டில் இன்பம் துய்ப்பதற்காக மட்டுமே என்று பொதுப்படையாகக் கூற முடியுமா?? இதைக் “காக்க காக்க” படத்தில் ஜோதிகா சொல்வது போல,”It is a girls thing.They can only understand it.” பெண்கள் மட்டுமே உணர முடிகிற,உணர வேண்டிய உணர்வு… அந்த உணர்வை நாம் விரக தாபம் என்று பொதுப்படுத்த முடியாது… அந்த உணர்வை, உளவியலாளர்கள் கூட எளிதில் அறிந்து கொள்ள முடியாத அந்த மெல்லிய, காமமும்,அதிகப்படியான காதலும் எக்குத்தப்பாகக் கலந்து கொண்டு ஒரு ஈர்ப்பைத் தரும் அந்த உணர்வை, சங்கப் புலவர்கள் பட்டையைக் கிளப்பும் விதமாகப் பயன்படுத்தியதுதான் ஆச்சர்யம்.. நம்மைப் போன்ற ஆண்களால் சில உணர்வுகளை உணர்ந்து கொள்ள இயலாது..அந்த இயலாமைதான், சில சமயங்களில் “மண்டு,மக்கு” போன்ற செல்லமான பட்டப்பெயர்களை நமக்குப் பெண்களிடத்தில் பெற்றுத் தருகிறது என்பதும் உண்மை… எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. அதனால், நான் கூறியதில் எதுவும் சரியான கருத்துக்கள் இருப்பின் அது வேலவன் அருளால் வந்தது என்றும், தவறான கருத்து இருப்பின் அது அடியேனுடைய பிழையினால் நிகழ்ந்தது எனவும் கூறிக்கொள்கிறேன்..

  • வேலவன் காட்ட…..வருவது பிழையும் ஆமோ?:)
   பாலா,
   ராகவன் சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னது! சிரிப்பான் இருக்கே, பார்க்கலையா?:)
   எனினும் உரையாடல் நனி நன்று!

   தலைவன், தலைவனுக்காக, ஆற்றலும் ஆற்றி இருத்தலும் முல்லைத் திணை!

   தலைவன் நலமுடன் திரும்ப வேண்டி…(நலம்-ன்னா அவளுக்கு….அவன் புகழாம்)…
   தமிழ்க் கடவுளான திருமால் ஆலயத்தில் முல்லைப் பூ விரித்து…அவனுக்காகவே ஆற்றி இருக்கிறாள்….
   இது குறித்த பல பாடல்கள் சங்கத் தமிழிலே உண்டு!

   http://madhavipanthal.blogspot.com/2010/08/mullaipaattu.html
   http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

  • //It is a girls thing.They can only understand it//

   Liked it soooooooooooooo much:)

   //அதைப் புரிந்து கொள்ள இயலாமை தான்…“மண்டு, மக்கு”…..போன்ற செல்லமான பட்டப்பெயர்களை நமக்குப் பெண்களிடத்தில் பெற்றுத் தருகிறது//

   he he!
   முருகனை இப்படித் தான் பலமுறை திட்டுவேன்:)
   மண்ண்ண்ண்டு முருகா! மக்க்க்க்க்கு முருகா 🙂

  • பிடவம்=காட்டு மல்லி!
   வன மல்லிகை (வனமாலி)-ன்னு வடமொழியில் சொல்வதுண்டு!

   காடும், காடு சார்ந்த இடங்கொண்ட பெருமாளுக்கு உகந்த பூ! படம் இங்கே = http://t.co/ghbuQLY5

   இலை இல பிடவம்-ன்னே சங்கப் பாடல்! இலைகள் மிகவும் சிறுத்து, பூ மாலையில் மலர்ந்து, மல்லி/முல்லை போலவே மணக்கும் பூ!

 4. அய்யகோ..சிரிப்பான் என் ப்ரவுசர் பிரச்சினையினால பூச்சி மாதிரியில்ல காண்பிச்சது.. இது தெரியாம ரொம்ப சீரியஸா ஒரு முழு நீளப் பதிவே இட்டு விட்டேனா?? மயிலேறி வருபவனுக்கு இதே விளையாட்டுத்தான்…

  Kannabiran அவர்களே, மாதவிப்பந்தல் பூக்களை நுகர்ந்தேன்… புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணையின் பொருள்…

  இப்பத்தான்யா புரிஞ்சது,இந்தப் பயலுவோ ஹனிமூன்னா ஏன் மலைவாசஸ்தலத்தைத் தேடிப் பிடிச்சுப் போறாய்ங்கன்னு….

 5. பெண்ணுக்கு அவனை விட, அவன் வந்து இன்பம் குடுக்கலையே உணர்ச்சி தான் அதிகம் இருக்கு!

  இது ஓரளவுக்கு உண்மையும் கூட!

  இந்த உரையாடலில், சில சங்கத் தமிழ்க் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்-ன்னு நினைக்கிறேன்! அனுமதிப்பீர்களா?:))

 6. @KRS + 100000000000000000000000 LIkes 😀 😀

 7. @KRS சங்கத் தலைவரே, கரும்பு தின்னக் கூலியா? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி..

 8. உம்ம்.. சொக்கரைத் திட்டி ஆரம்பிப்போம்:)

  ஏன் தலைவரே இன்னிக்கிச் சிறப்புச் சொல் போடலை?
  *** பிசிர் = பிசிர்தல் (Sprinkle/Drizzle)
  எவ்வளவு அழகான சொல்! தெளித்தல், சிதறுதல்-ன்னு எந்தச் சொல்லும் இதற்கு ஈடாப் போட முடியாது! பிசிர்தல்-னா பிசிர்தல் தான்!
  வான் பிசிர்க் கருவி = கான் பிசிர்க் கார் காலம்!
  ————

  கார் காலம்-ன்னா, அது எப்படித் தலைவன் வருவதற்கு அறிகுறி?
  அந்நாளில்…மழைக்காலத்தில் போர் நடப்பதில்லை! அதற்கு முன்பே போர் முடிந்து விடும்!

  எனவே கோடைக்காலம் முடிஞ்சி, மழை/சிறு தூறல் வந்தாலே, எதிர்பார்ப்புகள் அதிகமாகி விடும்! இந்நேரம் அவன் திரும்பி வருவானா, வருவானா?-ன்னு:)
  ———–

  முதலில் முல்லை! அப்பறம் தான் குறிஞ்சி!

  முதலில் எங்கப்பா திருமால், அப்பறம் தான் என் காதலன் முருகன் – அதுக்காகச் சொல்லுறேன் யாரும் நினைச்சிறாதீக:)))
  தொல்காப்பியரே இப்படித் தான் சொல்கிறார்! இயற்கை அமைப்பும் அப்படியே!

  “மாயோன் மேய காடுறை உலகமும்..
  சேயோன் மேய மை வரை உலகமும்..
  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
  சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”

  * முல்லை பெரும்பொழுது/சிறுபொழுது = கார்காலம்/மாலை
  * குறிஞ்சி பெரும்பொழுது/சிறுபொழுது = கூதிர்காலம்/இரவு

  முதலில் மழைக்காலம்…அப்பறம் குளிர்காலம்
  முதலில் மாலை…அப்பறம் இரவு

  * முல்லை= (காத்து) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!
  * குறிஞ்சி= புணர்தலும், புணர்தல் நிமித்தமும்!

  முதலில் அவனுக்காகக் காத்து இருப்பது…
  அப்பறம் அவனைக் கூடிப் புணர்வது…
  எப்பமே காத்திருந்து ஏங்கி அடையும் இன்பத்துக்கு தனி உத்வேகம் இருக்கு அல்லவா?:))

  இப்போ புரியுதா, தமிழில் திணை அமைப்புகள்?
  முல்லை, குறிஞ்சி = இருத்தல், புணர்தல்

 9. தலைவி, “காத்து” இருக்காள் = அவனுக்கு!
  எதுக்கு?
  அவனை “ஆசை தீர”, புணர்வதுக்கு மட்டுமா?

  GiRa சொன்னது:
  //அவனுக்கு அடி படாம இருக்கனும், முழுசாத் திரும்பி வரனும்னோ தலைவியோ தோழியோ கவலைப்படுற மாதிரி தெரியலை!
  தன்னுடைய மெய்வேதனை தீர்க்க அவன் வரலையேன்னுதான் கவலை. இதுதான் இந்தப் பெண்ணின் காதல்:) //
  —————

  இராகவன் சொன்னதன் பிற்பகுதி முற்றிலும் உண்மை! ஆனால் முற்பகுதி???

  போர்க் காலம் முடிஞ்சிருச்சி!
  மழைக் காலம் தொடங்கியாச்! இன்னும் கொஞ்ச நாளில் கூதிர் காலம்…(குளிருக்கு யார் சூடு தருவா?:))
  மாலை துவங்கிருச்சி(முல்லை)…இன்னும் சிறிது நேரத்தில் இரவு்(குறிஞ்சி)…இரவில் யார் இன்பம் தருவா?:))

  ஒரு பெண்ணின் மனசு (அ) பெண் போல மனசு-ன்னு வச்சுக்குங்களேன்…அது ரொம்ப ஆழமானது…
  காமத்தில் சில விடயங்கள், அவனுக்குக் கூடச் சொல்லாது…ஆனா தோழி கிட்ட பகிர்ந்து கொள்ளும்!
  பெண் உடல் கூறும் தெரியும், தன்னோட உள்ளமும் தெரியும் அல்லவா? அதானோ!!!

  * உடல்+உள்ளம் ரெண்டுமே “புரி”ந்தவள் தோழி
  * உடல்+உள்ளம் ரெண்டுமே “அறி”ந்தவன் அவன்
  புரிதல் பெருசா? அறிதல் பெருசா?:)))

 10. ஒரு பெண் (அ) பெண் போல ஒரு மனசுக்கு, “ஆசை” இல்லாம இருக்காது! அதுவும் நியாயம் தானே!

  * ஆணின் ஆசை ஓர் இடத்தில் மட்டுமே….பெண்ணின் ஆசை உடலெங்கும், மனமெங்கும்!
  * ஆணின் ஆசை அடங்கி விடும்! பெண்ணின் ஆசை கூட வரும்!

  அதான் அவ, அவனுக்காகக் “காத்து” இருக்கா!
  “காத்திருப்பு” என்பது, காமத்தை விட மிக நுணக்கமானது! = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்…
  —————-

  எதுக்கு “காத்திருப்பு”? = தன்னுடைய மெய்வேதனை தீர்க்க அவன் வரலையே-ன்னா?
  அவனுக்குப் போரில் என்ன ஆனா என்ன? அவன் கை-காலு போனாக் கூடப் பர்வாயில்லை, சீக்கிரம் வந்து, தன் பசியைத் தீர்க்கணும்-ன்னா அவ காத்திருக்கா?:((

  இல்லை…
  இந்தக் காத்திருப்பு, அவளின் பாற்பட்டது அல்ல! அவனின் பாற்பட்டது!
  இல்லீன்னா…காத்திருக்கவே வேணாமா! இன்பம் அடைய எத்தனையோ வழிகள் நாட்டில் இருக்கே! எதுக்கு அவனுக்கு-ன்னே “காத்து”+”இருக்கா”?
  —————

 11. முல்லை நிலத்தில், திருமாலின் கோட்டத்தில், அவனுக்காக நேர்ந்து கொண்டு, முல்லைப்பூவை விரிச்சி, காத்துக் கிடக்கிறா!
  கோட்டத்து ஆய்ச்சி, அவளுக்கு ஆறுதல் சொல்லுறா!
  http://madhavipanthal.blogspot.com/2010/08/mullaipaattu.html

  அப்போ தான், கார் காலம் தொடங்குது! காட்டு மல்லி மாலையில் பூக்குது…
  பூப்பூவா மழையின் தூறல் பார்த்து, அவன் வர மாட்டானா-ன்னு ஏங்கி இருக்கா = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்!

  எப்போ வருவான்? = தெரியாது!
  இந்நேரம் போர் முடிஞ்சி இருக்கும்; ஆனாலும் ஒரு தகவலும் இல்லை!
  பேச்சு வார்த்தையே இல்லை! Phone Call, Gtalk, Twitter எதுவுமே இல்லை! வெறும் மனசோடு பேச்சு மட்டுமே!
  ——————-

  எந்த நம்பிக்கையில் “காத்து” இருக்கா?
  அவனுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா? சேச்சே! அவன் தமிழ் வீரன்! அந்த நம்பிக்கை இருக்கு!
  ஒரு வேளை, ரொம்ப அலைச்சல், அசதி, களைப்பு அடைஞ்சி இருப்பானோ?

  முல்லைப் பூ விரிச்சி அவன் நல்லபடியாத் திரும்பி வரணும்-ன்னு வேண்டிக் கொண்டவள்…
  மாலை சாய்ந்து, இரவு எட்டிப் பார்க்கப் பார்க்க…மனசுல வேற ஒன்னு தோனுது!

  தன்னுடைய மெய்வேதனை தீரவா?
  இல்லை…அவன் களிப்பு கண்டு தான் களிப்பு கொள்ளவா?

  அவன் வந்தா, அவன் களைப்புக்கு என்ன தரலாம்? = தன்னையே தரலாம்!
  உம்ம்ம்…அவனுக்கு எப்படியெல்லாம் தன்னைத் தரலாம்?

  * யோசிக்கத் துவங்கிட்டா!
  * காதல் காமம் ஆகுது!
  * மாலை இரவு ஆகுது!
  * முல்லை குறிஞ்சி ஆகுது!
  * இருத்தல்-இருத்தல் நிமித்தம்….புணர்தல் புணர்தல் நிமித்தம் ஆகுது!

  முருகா!….இந்த மெய்வேதனை=மெய்யான வேதனை! இதைத் தீருடா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s