நல் அக விளக்கு

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,

சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,

பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,

நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வீட்டுக்குள் உள்ள விளக்கு, அங்கே உள்ள இருளைமட்டும் போக்கும்.

ஆனால், ’நமச்சிவாய’ எனும் ஒளி நிறைந்த மந்திரம் ஒரே நேரத்தில் பல இடங்களில் பலரும் காணும்படி தோன்றும், சொல்லுக்குள் இருந்து அறியாமையை நீக்கித் தெளிவாக்கும், ஆகவே, நல்ல உள்ளங்களுக்கு அதுதான் வழிகாட்டும் விளக்கு!

துக்கடா

 • கார்த்திகை தீபம் ரொம்ப விசேஷமாச்சே, ஒரே ஒரு விளக்கோடு நிறுத்தினால் எப்படி? இன்றைக்கு இன்னொரு விளக்கு 🙂
 • திருநாவுக்கரசர் இந்தப் பாடலைப் பாடிய கதையும் மிகச் சுவையானது.
 • மாற்று மதத்தைச் சார்ந்த சிலருக்குத் திருநாவுக்கரசர்மீது பொறாமை. எப்படியாவது அவரை அழித்துவிடவேண்டும் என்று நினைத்தார்கள். அரசனிடம் சென்று கோள் மூட்டினார்கள். அவனும் அதை நம்பி நாவுக்கரசருக்குப் பலவிதமான தண்டனைகளைக் கொடுத்தான். தெய்வ அருளால் அவர் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்தார்
 • அரசனுக்குக் கடுப்பு. அவர் உயிர் பிழைக்கவே முடியாதபடி கல்லில் கட்டிக் கடலில் தூக்கி வீசச் செய்தான்.
 • தண்ணீரில் வீசப்பட்ட திருநாவுக்கரசர் ‘சொல் துணை வேதியன்’ என்று தொடங்கி ‘நமச்சிவாய’ மந்திரத்தின் பெருமைகளைப் பாடினார், கல் லேசாகி மிதந்தது, அவரது கட்டுகள் அறுந்தன, உயிரோடு கரை மீண்டார்!

156/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

17 Responses to நல் அக விளக்கு

 1. amas32 says:

  மந்திரத்துக்கு தான் எவ்வளவு சக்தி! பிரஹ்லாதனை ஹிரண்யகசிபு பல விதத்தில் கொடுமை படுத்தினான். மலை மேலிருந்து உருட்டிவிட்டான், கல்லைக் கட்டி தண்ணீருக்குள் எறிந்தான். ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரம் அவனை காப்பாற்றியது. அதே போல திருநாவுக்கரசரை, நமசிவாய என்ற ஐந்தெழுத்து திரு மந்திரம் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறரது!
  முக்கியமாக மன இருளை அகற்ற “நமச்சிவாய” ஒரு ஒளி நிறைந்த மந்திரம், அது வாழ்வுக்கு வழி காடும் விளக்கு என்ற மிக உயர்ந்த உண்மையை மிக எளிமையாக இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறோம். விடியலை எதிர் நோக்குபவர்கள் ஒளிவிளக்கான நமசிவாய மந்திரத்தை ஜபித்து நலம் பெறலாம்!
  amas32

 2. GiRa says:

  மிக அருமையானதொரு பாடலை இன்றைக்கு இட்டமைக்கு என்.சொக்கனுக்கு நன்றி. 🙂

  முதலில் தேவாரம் பற்றிச் சில செய்திகள் பார்ப்போம். பிறகு பாட்டுக்கு வருவோம்.

  பொதுவாக அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோர் அருளியது தேவாரம் என்று வழக்கு உள்ளது.

  ஆனால் அப்பர் அருளியதுதான் தேவாரம். அப்பரின் தேவாரம் சிறப்புப் பெற்று மற்றவர் நூல்களும் தேவாரம் என்றே வழங்கப்படலாயின.

  அப்பர் – தேவாரம்
  ஞானசம்பந்தர் – திருக்கடைக்காப்பு
  சுந்தரர் – திருப்பாட்டு

  இவைதான் முறையே மூவரும் அருளியவை. இன்றைக்கும் அனைத்தும் தேவாரம் என்றழைக்கப்படுகிறது. இது திருநாவுக்கரசருக்குப் பெருமையே.

  பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. ராஜராஜசோழன் ஆட்சியில் தொகுத்தார். இது குறித்து முன்பு எழுதிய சிறுகதை இங்கே. பொற்சிலையும் சொற்குவையும் என்று தேடினால் பல இடங்களில் இந்தக் கதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  http://gragavan.blogspot.com/2005/11/blog-post.html

 3. GiRa says:

  சரி. பாட்டுக்கு வருவோம்.

  இந்தப் பாட்டுல எத்தன விளக்கு இருக்கு? நாலு விளக்குகள் இருக்கு. விளக்குன்னா என்ன?

  அதுக்கு முன்னாடி.. பாட்டு “இல்”னு தொடங்குது. இல் என்றால் வீடு. வீடுன்னா என்ன?

  தொல்காப்பியர் சொன்ன மாதிரி எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு. பொருள் இல்லாத சொல் இல்லவே இல்லை.

  வீடுன்னு சொல்றமே. அப்படீன்னா என்ன?
  விடுவது வீடு
  படுவது பாடு
  கெடுவது கேடு

  முடிஞ்ச வரைக்கும் எளிமையாச் சொல்றேன்.

  மழை, வெயில், இடி, மின்னல் இப்படிப் பலவிதப்பட்ட துன்பங்களை நம்மிடமிருந்து விடுவிப்பது வீடு.

  மழை, வெயில், இடி மின்னல் இப்படிப் பலவிதப்பட்ட துன்பங்களைப் படுவது நம்முடைய பாடு.

  மழை, வெயில், இடி, மின்னல் இப்படிப் பலவிதப் பட்ட துன்பங்களால் நமக்குக் கெடுவது கேடு.

  இது பொதுப்பொருள். தத்துவப் பொருளை பார்ப்போம். நாம் ”பாடு”பட்டுக் ”கேடு”கெட்டுப் போனாலும் அவைகளில் இருந்து காப்பது இறைவனின் வீடு. (வீடுபேறு).

  அது போல விளக்குன்னா? விளக்கி வைப்பது விளக்கு. எதை விளக்கி வைப்பது?

  வீடுதான் நல்லதுன்னு சொல்லியாச்சு. அதுதான் காப்பாத்தும்னும் சொல்லியாச்சு. அந்த வீடு எங்க இருக்குன்னு தெரிய வேண்டாமா? இதுதான் வீடுன்னு நமக்கு விளக்கி வைப்பது விளக்கு. அந்த வீட்டுக்குள் என்னென்ன ஏதென்ன இருக்குன்னு வெளிச்சமிட்டு விளக்கி வைப்பது விளக்கு.

  இதுவரைக்கும் வீட்டுக்கும் விளக்குக்கும்தான் பொருள் பாத்திருக்கோம். அடுத்த பின்னூட்டத்துல பாடலுக்குப் போவோம்.

 4. நேயர் விருப்பத்துக்குச் செவி சாய்த்தமைக்கு நன்றி சொக்கரே:)
  என்ன…இந்தப் பாடல் நேற்று வர வேண்டியது! ஆனாலும் நீங்கள் செய்தது இன்னும் சிறப்பு!
  * நேற்று சிவதீபம் = ஆழ்வார் அருளிச் செயலும்
  * இன்று விஷ்ணுதீபம் = அப்பர் தேவாரமும்…
  வாழி இவ் விளக்குகள்! வாழி இவ் விளக்கங்கள்!

 5. அப்பரின் தேவாரம் போல், அகம் கரைக்கும் தே+ஆரங்கள் வேறில்லை!
  அப்பர் பட்ட பாடு அப்படி!
  அதான் 4 வரியிலும் “அக” விளக்காகவே ஏற்றுகிறார்!

  * அண்டா அண்டாவாக எண்ணெய் ஊற்றி ஏற்றும் விளக்குகள் ஒரு பக்கம் இருப்பினும்…
  * கேரளத்தில், குருவாயூரில், நாலம்பலம் என்று, மாடம் முழுக்க ஏத்தும் விளக்காக இருப்பினும்…
  அதன் ஆயுட் காலம் = ஓர் இரவு, ஈர் இரவு, மூவிரவு…அதுக்கு மேல் இல்ல!

  ஆனால் ஓர் இரவு, ஈர் இரவாக இல்லாமல்…
  முதல் இரவு முதல், இறுதி இரவு வரை = அக விளக்குகள்!!!

  இல் “அக” விளக்கு
  சொல் “அக” விளக்கு
  பல் “அக” விளக்கு
  நல் “அக” விளக்கு

  அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
  இன்பு உருகு சிந்தை இடு திரியாய்
  ஞானத் தமிழ் புரிந்த நான்!

 6. அச்சோ..கவனிக்கல…விடிகாலையில் ஊருக்கு வந்து சேர்ந்த தூக்கக் கலக்கம்!
  இராகவன் எழுதாத போது இருந்த வலைப் பக்கத்தில் எழுதத் துவங்கினேன்! பதித்த பின் தான் தெரிகிறது, இராகவனும் ஒரே சமயத்தில் எழுதியது…

  இராகவன் தொடர்வதைக் கேட்கவே ஆவல்!
  இனியது கேட்கின் எரிதவழ் வேலோய்…

 7. GiRa says:

  இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
  சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
  பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
  நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!

  இதுதான் திருநாவுக்கரசின் பதிகம். இந்தப் பதிகத்துல நாலு வரிகள் இருக்குன்னு சொல்றத விட நாலு படிகள் இருக்குன்னு சொல்றது பொருத்தம். நாலாவது படிதான் பெரும்படி. இப்போ ஒவ்வொரு படியா ஏறுவோம்.

  முதற்படி

  இல் அக விளக்கு – வீட்டிற்கு உள்ளே இருக்கும் விளக்கு
  வீட்டுக்குள்ளே இருக்கும் விளக்கு, உள்ளேயிருக்கும் இருளைப் போக்கும்.

  இருள் எங்க இருக்கும்? இருள்னு ஒன்னு தனியாக் கெடையாது. வெளிச்சம் இல்லாம இருக்குறதுதான் இருள். வெளிச்சம் எல்லாத்தையும் காட்டும். இருள் எதையுமே காட்டாது. நம்ம உள்ளத்துல இருட்டு இருந்தா நல்லது எதுவுமே தெரியாது.

  அந்த இருள் விலகுனாத்தான் நல்லது கெட்டது நல்லாத் தெரியும். எப்படி இருட்ட விலக்குறது. விளக்கு விலக்கும். ஆன்மாவாகிய வீட்டுக்குள்ளே அருட்பெருஞ்சோதி என்ற கருணை விளக்கு இருந்தால் நன்மை தீமைகள் விளங்கி அறியாமை இருள் நீங்கும்.

  அப்பாடி… ஒரு படி ஏறியாச்சு. அடுத்த படி என்ன?

  சொல் அக விளக்கு – சொல்லுக்குள் இருக்கும் விளக்கு

  அறியாமை இருள் விலகியாச்சு. இப்போ நல்லது கெட்டது புரிஞ்சு தெளிஞ்சாச்சு. தெளிஞ்சவன் என்ன செய்வான்? அந்த நல்லத எடுத்து நாலு பேருக்குச் சொல்வான். அதையும் இறைவன் பெயரால் சொல்வான்.

  “யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்” என்று அருணகிரியார் பாடுகிறார்.

  அப்படிச் சொல்லும் சொல்லுக்கும் உள்ளுக்கு இருப்பது எது? சோதி. இல்லுக்குள் இருந்த அதே அருப்பெருஞ்சோதி.

  ஒரு விளக்குல இருந்து இன்னொரு விளக்கு பொருத்துற மாதிரி, இல்லில் இருந்து வெளிச்சம் சொல்லில் வந்தது.

  சொல்லுக்குச் சோதி வந்த கதை இதுதான்.

  நம்முடைய உள்ளத்தில் அறியாமை போனால் பேசுகின்ற பேச்சும் சுடர் விடும்.

  இரண்டாவது படியும் ஏறியாச்சு. அடுத்து?

 8. GiRa says:

  ரெண்டாவது படி போதுமா? போதாது. மூணாவது படிக்குப் போவோம்.

  பல் அக விளக்கு அது பலரும் காண்பது

  பல் – பன்மை

  நமக்குள்ள எத்தனை பிரிவுகள். மதங்கள் எத்தனை. மொழிகள் எத்தனை. இனங்கள் எத்தனை. எண்ணங்கள் எத்தனை.

  இப்படியெல்லாம் பலவிதமாகப் பிரிந்தாலும், பலரும் பார்க்கும் ஒரு விளக்கு ஒரே விளக்கு.

  ஆண்டவனின் அருள் விளக்குன்னு சொல்லலாம். சூரியன்னும் சொல்லலாம். இந்து சூரியன், கிருத்துவ சூரியன்னு பல சூரியன்கள் கெடையாது. ஒன்னுதான். இந்தியால பாத்தாலும் அதே சூரியன். ஐரோப்பால பாத்தாலும் அதே சூரியன்.

  ஆனா ஒவ்வொருத்தரும் சூரியனைப் பாக்குறாங்க.

  இப்படிப் பலர் பார்க்கும் விளக்கு முன்பு சொன்ன அதே அருட்பெருஞ்சோதி விளக்கு.

  இன்னும் எளிமையாச் சொல்றேன். அருட்பெருஞ்சோதியை இல்லத்தில் கண்டு சொல்லில் சொன்ன பெருமக்கள் பலர். அதுவும் பலப்பல மொழிகளில். ஒரு விளக்கு இல்லில் இருந்து சொல்லாகிப் பல்லாகியிருக்கிறது (பலவாகியிருக்கிறது).

  இப்படி எந்த வகையில் உணர்ந்தாலும் உணரப்படுவது ஒரே சுடர்தான்.

  அதுதான் பல் அக விளக்கு – பலவற்றின் உள்ளே இருக்கும் விளக்கு பலரும் காண்பது.

  மூணுபடி தாண்டியாச்சு. நாலாவது படியான பெரும்படிக்கு வருவோம்.

  நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

  மூன்று படிகளை முறையாய் ஏறிய ஒரு உள்ளமானது உள்ளத்தில் நல்ல உள்ளம் தானே. அதை நல்ல அகம் – நல் அகம் என்று சொல்லலாமா!

  இப்படி மூன்று படிகளை ஏறி வந்த நல்ல உள்ளம் நான்காவது படியில் காணும் விளக்கு நமச்சிவாய விளக்கு.

  சரி. வேற விதமாவுஞ் சொல்லலாம்.

  மாதா, பிதா, குரு, தெய்வம்

  மாதா – இல்
  பிதா – சொல்
  குரு – பல்
  தெய்வம் – நல்

  இவைகள்

  ஈன்று புறந்தருதல் தாய். அதனாலதான் தாயிற் சிறந்த கோயில்(இல்) இல்லைன்னு சொல்றோம்.

  அந்தத் தாய் முதல் விளக்கு. அந்தத் தாய் சொன்னாத்தான் தந்தை.

  தந்தை இரண்டாவது விளக்கு. அதுனாலதான் தந்தை “சொல்” மிக்க மந்திரம் இல்லைன்னு சொல்றோம்.

  குரு – ஆசிரியர். நாம இந்த உலகத்தில் ஒருத்தரிடம் மட்டுமா பாடம் படிக்கிறோம். பாக்குற பழகுற ஒவ்வொருத்தரிடமும் பாடம் படிக்கிறோம். “பல”ரிடம் பாடம் படிக்கிறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்குதான்.

  இப்படி இந்த விளக்குகளெல்லாம் முறையாக வழிகாட்டி நாம் தெரிந்து கொள்வது நல் விளக்கு. அதுதான் நமச்சிவாய அருட்பெருஞ்சோதி.

  ஏன் சோதி? ஒரு சுடரில் இருந்து பல சுடர்களை உண்டாக்கலாம். அதுவுமில்லாமல் சுடர் கீழ் நோக்கிப் போகாது. மேல் நோக்கித்தான் போகும். எண்ணங்களும் மேல் நோக்கித்தான் போகனும். அதுதான் நல்லது.

  இந்த கார்த்திகைத் திருநாளில் இப்படியொரு அருமையான பதிகத்தைக் கொடுத்து அதற்குப் பொருளும் சொல்ல வைத்த என்.சொக்கனுக்கு நன்றி.

  இன்னும் விரிச்சுச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம். அது தேவையில்லை. சொல்ல வந்தது புரிஞ்சிருச்சுன்னா அங்கயே நிருத்தீரனும். அதான் இங்க நிருத்தியாச்சு. 🙂

  • msathia says:

   கருப்பட்டிக் காப்பி களிப்பாய் வேலை செஞ்சிருக்கே.. பலே பலே. அருமையான விளக்கங்கள் ஜிரா.

  • amas32 says:

   ஒரு சின்னக் குழந்தைக்கும் புரிகிற மாதிரி என்ன அருமையான விளக்கங்கள்! ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாக எடுத்து வைக்கிறீர்கள்! நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. வாழ்க நீவீர் வளமுடன் பல்லாண்டு!
   amas32

   • GiRa says:

    நன்றி. 🙂 தூக்கக் கலக்கத்தில் நிறைய எழுத்துப்பிழைகள். 😦

 9. செவ்வியான விளக்கங்கள்….
  படிப்படியாக 4 விளக்குகள் – இல், சொல், பல், நல்-விளக்குகளை ஏற்றியமைக்கு நன்றி ராகவா!

  சற்றே மேலதிகமாக…விட்டுப் போன ஒரு முக்கியமானதை மட்டும் சொல்ல விழைகிறேன் – அப்பர் பாட்டு என்பதால்!
  * இல்-விளக்கு
  * சொல்-விளக்கு
  * பல்-விளக்கு
  * நல்-விளக்கு
  என்று விளக்கப்பட்டது! ஆனா…ஒவ்வொன்னுத்திலும் வரும் “அகம்” என்ற முக்கியமான குறிப்பு விடுபட்டது! அதை மட்டும் என்ன-ன்னு பார்ப்போமா?
  ————-

  இல்-விளக்கு = இல்லத்தில் விளக்கு! அப்பறம் என்ன இல்-“அக”-விளக்கு?

  சும்மா அரை மணி நேரம், current off ஆனாலே தவிக்கிறோம்! generator ஓடுது!
  ஆனா, பொறக்கும் போது, 7200 மணி நேரம், விளக்கே இல்லாம, எப்படி நாம இருட்டுல இருந்தோம்?:))

  விந்து வெளிவரும் நிகழ்ச்சியும் இருட்டில் தான் நடக்குது!:)
  அது கருவைச் சேர்வதும் இருட்டுல தான்!
  உயிர் உருவாகி, அது இருட்டுலயே தானே கூனிக் குறுகி அடைஞ்சி இருக்கு?

  அம்மா இரத்தம் வழியாச் சோறு/சத்து ஊட்டலாம்? ஆனா Torch Light அடிச்சி, ஒளி ஊட்ட முடியுமா?
  பெத்த தாயாலேயே முடியாது! அப்போ யாரால முடியும்?
  ஒவ்வொரு பிறவிக்கும் மாறவே மாறாத ஒரு தாயால முடியும்! = இறைவன்! அவனால மட்டும் எப்படி முடியும்?

  = “அக” விளக்கு
  ——————

 10. கருவில் நாம என்னென்ன யோசிக்கறோம்?
  எந்த சென்ம வினை?, எப்படி புது சென்மத்தில் வளரப் போறோம்? – இதெல்லாம் நம் யோசனைக்கு வந்துச்சா? = தெரியாது! மறந்துட்டோம்!

  வெளிச்சம் இன்மை தான் = இருள்-ன்னு இப்போ சொல்லுறோம்!
  ஆனா அப்போ?
  வெளிச்சம்-ன்னாலே என்ன-ன்னே தெரியாதே! வாழ்வே இருளில் தான் துவங்குது!
  அண்ட வெளியும் கருப்பான இருள் தான்! ஆங்காங்கே சில சூரியன்கள்!

  ஆக………வெளிச்சம் இன்மை = இருள் அல்ல!
  இருள் இன்மை தான் = வெளிச்சம்:))
  ——————-

  இந்த இருளுக்கு = நம்ம கூடவே வரும் விளக்கு = நம்ம மனசு தான்!
  மனசுக்கு எல்லாம் தெரியும்!
  அது கிட்ட இருந்து மறைக்க முடியாது!

  பதிவில் ஆயிரம் பேசலாம்! ஆனா பேதங்கள் இன்றி, மனசறிய அப்படி நடக்கிறோமா? முருகா என்னும் கருணை ஊறுதா? = மனசுக்குத் தான் தெரியும்!

  இந்த மனசு……….கர்ப்ப காலக் குழந்தையில் இருந்து, மறைவு வரை, செத்த பின்னும் கூட…பல பிறவிகளா, நம்ம கூடவே வரும் விளக்கு!
  மனசை வச்சிக்கிட்டு தான், நம்மை நாமே அடையாளம் காணுறோம்! = அதான் அக விளக்கு!

  இறைவன் எல்லார் மனசுக்குள்ளேயும் இருக்கிறான்!
  * நாம = மனம்! = இல்
  * அவன் = மனதின் மனம்! = இல்+அகம் => இல்லக விளக்கு! = இல்லக விளக்கு, இருள் கெடுப்பது!
  ——————

  புரியுதா?:)
  1. கர்ப்பத்தில் தொடங்கி, அண்ட வெளி வரை, இருட்டு தான்!
  2. அதுல பயணிக்கும் நம்ம மனசு (ஆன்மா)!
  3. அதுக்கு நம்ம மனசாட்சி (இறைவன்) தான், விளக்கு!

  மனசாட்சிப் படி நாம நடப்பதில்லை!
  ஆனா, நாம நடக்கிறோமோ இல்லையோ….அது சிறு விளக்கா, இம்மாம் பெரிய இருள்-ல, நமக்கு வழி காட்டிக்கிட்டு தான் இருக்கு!

  பேச்சா ஆயிரம் பேசலாம்! பாட்டுல பூந்து வெளையாடலாம்!……..
  ஆனா…மனசாட்சி?
  தத்துவ வீடியோ அழகாப் பேசிய நித்ய ஆனந்த சாமியார்கள் எல்லாம் என்ன ஆனாங்க? = மனசாட்சி!!!

  படிப்பை வச்சிக்கிட்டு ஆயிரம் சைவ சித்தாந்தம், வைணவ சித்தாந்தம், abc சித்தாந்தம் பேசினாலும், ஒன்னும் புடுங்க முடியாது!
  அவனே என்ற சரணாகதி, மனசால நீங்க மாட்டாத அன்பு…அந்த மனசாட்சி தான் கூடவே வரும்….

  மனசாட்சி = அக-விளக்கு
  =இல்-அக-விளக்கு! இருள் கெடுப்பது!

 11. 1. இல்-அக-விளக்கு
  = மனசாட்சி = இருள் கெடுக்கும்!

  2. சொல்-அக-விளக்கு
  பொறந்தாச்சு! ஆயிரம் பேசறோம்…
  * அந்தப் பேச்சில் பேச்சு மட்டும் தான் இருக்கா? = அப்போ நாம hypocrite
  * அந்தப் பேச்சு, நம் வாழ்விலும் இருக்கா? = அப்போ நாம நம்மளையே மதிக்கின்றவனா ஆவுறோம்!

  சொல், “அகத்திலும்” இருந்தால் = சொல்லக விளக்கு!
  அதுல தான் சோதி இருக்கும்!
  வெறும் பேச்சில், சோதி இருக்காது!
  —————–

  3. பல்-அக-விளக்கு
  நாம மட்டும் தான், உலகத்துல உசுரா? பலரும் இருக்கோம்-ல்ல? அவங்க அக விளக்கும் இருக்கும்-ல்ல?
  நாம மட்டும் வீடுபேறு அடைஞ்சிட்டாப் போதுமா? மத்த உசுருங்க?

  நாம் சாப்பிடுவது போக, மத்தவங்களுக்கும் உணவு குடுத்துப் பசியாத்துவது எம்புட்டு அறமோ…அதே போலத் தான்!
  வள்ளலார் செஞ்சாரு! நபிகள் செஞ்சாரு! இராமானுசர் செஞ்சாரு!

  தான் நரகமே போனாலும், தனக்குக் கிடைச்சதை அனைவருக்கும் குடுத்து, அவங்களையும் சுயமரியாதையோடு வாழ வைப்பது…
  பல்-அக-விளக்கு = பலரும் காண்பது!
  ———————

  4. நல்-அக-விளக்கு = நம சிவாயவே!

  ந – திரோத மலம்
  ம – ஆணவ மலம்
  சி – சிவம்
  வ – திருவருள்
  ய – ஆன்மா

  இதுவே எங்கள் அப்பர் பெருமான் பாடும், நமச்சிவாயத் திருப்பதிகம்!
  நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை, விளக்காய் ஏற்றி வச்சிப் பாடினவர் எவருமே இல்ல!
  அப்பர் பெருமான் திருவடிகளே சரணம்!

 12. முத்தாய்ப்பா….ஞாபகம் வச்சிக்க….

  1. இல்-“அக”-விளக்கு = மனசாட்சி = இருள் கெடுப்பது!

  2. சொல்-“அக”-விளக்கு = சொல்லு போலவே வாழ்வது = சோதி உள்ளது!

  3. பல்-“அக”-விளக்கு = நம்மைப் போலவே பலருக்கும் அகம் இருக்கு-ன்னு உணர்வது = பலரையும் காண்பது!

  4. நல்-“அக”-விளக்கு = நாம இல்ல = இறைவன் = நமசிவாய-வே!
  ——————

  புரியுதா?
  நமக்குப் புரியலீன்னாலும் பரவாயில்ல! மனசாட்சிக்குப் புரியும்:)
  திருச்சிற்றம்பலம்!!!

 13. நல்லாவே புரிந்தது ஆசிரியர்களே… 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s