மண் ஆள வழி

களியான்,கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,

ஒளியான் விருந்துக்கு, உலையான் – எளியாரை

எள்ளான்,நீத்(து) உண்பானேல் ஏதம்இல் மண்ஆண்டு

கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து.

நூல்: ஏலாதி (#46)

பாடியவர்: கணிமேதாவியார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

1. கர்வம் கொள்ளாதவன்

2. மது அருந்தாதவன்

3. மற்றவர்கள் மது அருந்தினாலும் அதைப் பார்க்காதவன்

4. விருந்தினர்கள் வரும்போது தன்னுடைய செல்வத்தை மறைத்து வைக்காதவன்

5. நல்ல ஒழுக்கத்திலிருந்து விலகாதவன்

6. வறுமையில் உள்ளவர்களைக் கேலி செய்து பேசாதவன்

இந்த ஆறு குணங்களையும் கொண்ட ஒருவன், தன்னிடம் உள்ள உணவை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துச் சாப்பிட்டால் குற்றம் இல்லாத நாட்டை ஆட்சி செய்து வாழ்வான், அவனுடைய குலம் செழிக்கும்.

துக்கடா

  • இன்றைய அரிய சொல்: ஏதம் = குறை / குற்றம் / நோய்
  • உதாரணங்கள்:
  • 1. ஏதம் அகற்றும் என் அரசே – திருவருட்பா
  • 2. ஏதம் இல் இருகுழை – கம்ப ராமாயணம்
098/365
This entry was posted in அறிவுரை, ஏலாதி, வெண்பா. Bookmark the permalink.

10 Responses to மண் ஆள வழி

  1. nvaanathi says:

    ஐ..இந்தப்பாட்டு எனக்குத் தெரியுமே.. இப்போ இதில் ரெண்டு(2,3) இம்ப்பாசிபிள். 😉

  2. சுப. இராமனாதன் says:

    3.5 மற்றவர்கள் மது அருந்தும்போது சைட் டிஷ்-ஷை காலி செய்யாதவன் 🙂

  3. Dank u Vaanathi! U made my day:)

    //களியான்,கள் உண்ணான், களிப்பாரைக் காணான்//

    * முதல் களி-யான்=கர்வம் கொள்ளாதவன்-ன்னு பொருள் எடுத்துக்கறீங்க
    * ஆனா அடுத்த களி-ப்பாருக்கு=மது அருந்தினாலும் அதைப் பார்க்காதவன்…ன்னு பொருள் எடுத்துக்கறீங்களே! இது என்ன நியாயம், my lord?
    மது அருந்துவோரைப் “பார்ப்பது” கூட, அம்புட்டு குற்றமா?
    சொக்கா….தீர்ப்பை மாத்தி எழுதுங்கள்! 🙂

  4. GiRa says:

    நல்ல பாடல். நல்ல விளக்கம்.

    ரவிசங்கர் அவர்கள் சொன்னது போல களிப்பாரைக்குப் பொருள் வேற மாதிரி எடுத்துக்கனும்னுதான் எனக்கும் தோணுது.

    மகிழ்ச்சி வேறு. களிப்பு வேறு. மகிழச்சிங்குறது இன்பநிலை. இது எய்தப்படுவது. களிப்பு என்பது மகிழ்ச்சியின் பெருவுச்சத்தை வெளிப்படுத்துவது. சந்தோசத்துல தலைகால் தெரியாமக் குதிக்காதேன்னு சொல்றாங்களே. அதுதான் களி. அந்தக் களி கதையும் சொன்னா அது கேரளக் கத களி.

  5. GiRa says:

    ஆனா அதுக்கு மேல யோசிச்சுப் பாத்தா களிப்பானுக்குக் கள்ளுண்டவனைக் காணாமைன்னு சொல்றது பொருத்தம்னு தெரியும்.

    எப்படி? களியான்னு சொன்னதுக்குத் தலைகால் புரியாம ஆடான். சரி. ஒடனே களிப்பாரைக் காணான்னு சொன்னா தலைகால் புரியாதவங்களைக் கண்டுக்க மாட்டான்னு பொருள் கொள்ளலாம்.

    ஆனா கள்ளுண்ணான்னு சொல்லீட்டுக் களிப்பாரைக் காணான்னு சொல்லீருக்காங்க. நீங்க அடிக்கோடிட்டு பாடலில் இல்லாத வரிகள் பொருள் புரிவதற்காகன்னு சொல்வீங்களே. அதுமாதிரி கள்ளுண்னான் (கள்ளுண்டுக்) களிப்பாரைக் காணான்னு இந்த இடத்துல பொருள் கொள்ளனும்.

  6. GiRa says:

    கள்ளுண்டவங்களப் பாக்குறது தப்பா என்ன?

    பாக்குறது தப்பில்லை. காண்பது தவறு. மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு படிக்கிறோமே. பார்ப்பது செயல். காண்பது = பார்த்தது பார்த்ததன் பயனைக் கொள்வது

    புரியலைல்ல. பாத்தது கண்ணோட நிக்கும். கண்டது நெஞ்சுக்கும் போகும். கனவு கண்டேன்னு சொல்றோம். கனவு பார்த்தேன்னா சொல்றோம்? கனவு காணும்போது கண்ணுக்கு வேலையே இல்லையே.

    கள்ளுண்டு களிப்பாரைக் கண்டாலும் அதன் களிப்பையும் உவப்பையும் களிப்பாகவும் உவப்பாகவும் காணான்னு பொருள்.

  7. //பாத்தது கண்ணோட நிக்கும். கண்டது நெஞ்சுக்கும் போகும்//

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து “பார்த்து” இருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு – குறள்!

    இங்கே “பார்ப்பது” கண்ணோடு நிற்கவில்லை! நெஞ்சுக்கும் சென்று, அதற்கு மேலேயும் சிறப்பு பெற்றுச் செல்கிறதே! 🙂
    ——————————-

    //ரவிசங்கர் சொன்னது போல களிப்பாரைக்குப் பொருள் வேற மாதிரி எடுத்துக்கனும்னுதான் எனக்கும் தோணுது//

    :)))))))))))))))))))
    முருகா!
    ——————————

    அட, அனைத்துலக கள்ளுண்போர் சங்கம் சார்பாக ஒரு அக்கறையில் சொல்லிட்டேங்க…வேற ஒன்னும் இல்லை:)
    குடிக்கிறவனைப் பார்க்கவே கூடாது-ன்னா, என்னைய பாக்கவே மாட்டீயளா?:))))

  8. GiRa says:

    // குடிக்கிறவனைப் பார்க்கவே கூடாது-ன்னா என்னைய பாக்கவே மாட்டீயளா? //

    அதெப்படி அவ்வளோ சரியாச் சொல்லீட்டீக?

  9. Jokes Apart…
    ஏலாதி என்பது “அற”நூல்! அது அப்படித் தான் சொல்லும்!
    தமிழில் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று!

    திருக்குறளும் 18கீழ்க்கணக்கு தான்!
    ஆனா, அது மட்டுமே “அற”நூல் என்பதோடு நில்லாமல், பொருள்+இன்பம்-ன்னு பேசியது! – இது அந்தக் காலத்தில் மிகப்பெரும் மரபு மீறல்!

    காமம்-வெகுளி-மயக்கம் = மூன்றும் கெடணும்-ன்னு வள்ளுவர், “அற”த்துப் பாலில் சொல்லுவார்!
    ஆனா, அதே வள்ளுவர், “காமத்தை”ப் பெய்து தருவார், இன்பத்துப் பாலில்:)))
    —————

    வள்ளுவர் மனசு அப்படி!
    ஒரே அடியா…எல்லாம் மாயை, ஈசனோடு ஆயினும் ஆசை வேணாம்-ன்னு எல்லாம் சொல்ல மாட்டாரு!
    ஏன்-ன்னா அவருக்குத் தெரியும், மனிதனால் அதெல்லாம் over night-இல் முடியாதுன்னு:)

    அனைவரும் தாங்களே உணர்ந்து பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக உள் வாங்க வைப்பதே, வள்ளுவர் உள்ளம்!
    அதான்…தமிழிலே…

    * ஒரு அற நூலில், அகப் பொருளும் (காமத்துப் பாலும்) வைத்து “மரபு மீறினார்”
    * அகப்பொருள் பாடும் போது….திணை/துறை-ன்னு எதுவுமே வைக்காமல் இலக்கண “மரபு மீறினார்”
    * தமிழ், தமிழ்நாடு, குறிஞ்சி, முல்லை-ன்னு எல்லாம் எதுவுமே வைக்காமல்…கூடுமானவரை…பொதுவாகச் செய்தார்!
    நாம தான், அவரு அந்தச் சமயமோ, இந்தச் சமயமோ?-ன்னு கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கோம்:(
    —————

    ஏலாதி…திருக்குறள் போல அல்ல!
    அது “அற”நூல் மட்டுமே!
    அதனால் அப்படித் தான் பேசும்! நாம தான் நல்லபடியா எடுத்துக்கணும்!

    இன்னோன்னு கவனிச்சீங்களா?
    //இந்த ஆறு குணங்களையும் கொண்ட ஒருவன், தன்னிடம் உள்ள உணவை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துச் சாப்பிட்டால்//

    ஆறு குணம்=மது அருந்தாம இருந்தா மட்டுமே, பெரிய யோக்கியன்-ன்னு சொல்லீறலை!
    * அப்படித் தன்னளவில் குணங்களை வச்சிக்கிட்டாலும்…
    * பகிர்ந்து குடுத்து உண்ணும் போது தான், ஏலாதியும் சிறப்பித்துப் பேசுகிறது!
    தனி ஒழுங்கைக் காட்டிலும், பொது நலன் முக்கியம் என்பதே தமிழ் அற நூல்களின் அடிப்படை!

  10. GiRa says:

    கூகிளாண்டவர் துணையிருப்பது நமக்கெல்லாம் தேடிச்சொல்ல வசதியாக இருக்கிறது.

    திரும்பவும் சொல்கிறேன். பார்ப்பதிலிருந்து கண்ணை எடுக்க முடியாது. காண்பதிலிருந்து கண்ணை எடுக்கலாம். அதுதான் கனாக் காண்பது. மெய்ப்பொருள் காண்பது.

    கள்ளுண்டவனைப் புறக்கண்ணால் பார்ப்பது குற்றமன்று. ஆனால் அவன் களிப்புறுவதை நெஞ்சில் நிறுத்தி அந்தக் களிப்பை உண்மையிலேயே களிப்பாகக் காண்பானானால், அவனும் அவ்வழியே செல்வான். ஆகையால்தான் களிப்பாரைக் காணாமை சிறப்பு.

    விரிபொருளுக்கு அட்டியொடு
    ஏதங்கொள் பெருமையும் சீரே
    சட்டி வாய்ச்சிக்குச் சுனங்கன் சீரே

Leave a reply to GiRa Cancel reply