அன்பின் ருசி

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;

அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,

பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்தபோதே,

இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவது என்னோ?

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தரகாண்டம், கடல் தாவு படலம் #49)

பாடியவர்: கம்பர்

சூழல்: சீதையைத் தேடிக் கடல்மீது பறந்து செல்கிறான் அனுமன். அங்கே திடீரென்று மைந்நாகம் என்ற மலை தோன்றுகிறது. ‘என்மீது சிறிது நேரம் தங்கி இளைப்பாறிச் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்களேன்’ என்று வேண்டுகிறது. தன்னுடைய வேலையில்மட்டுமே கவனமாக இருக்கும் அனுமன் அந்த விருந்தோம்பலை மறுத்துப் பேசுகிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மைந்நாக மலையே,

இந்தப் பெரிய கடலைக் கடந்து செல்வதால் எனக்குக் களைப்பு எதுவும் இல்லை. அதற்குக் காரணம், என் பெருமான் ராமன் என்மீது வைத்திருக்கும் காதல்.

களைப்பே இல்லாதபோது நான் எதையும் சாப்பிட்டு, குடித்துப் பசியாறவேண்டிய அவசியமும் இல்லை. ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், சீதையைக் கண்டுபிடிக்கவேண்டும், அந்த ஆசை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும். அதற்காக முனைப்போடு சென்றுகொண்டிருந்த என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.

பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா? அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கிச் சாப்பிட்டுவிட்டதாகதான் அர்த்தம்.

துக்கடா

 • இன்றைய அரிய சொல்: பிணித்தல் / பிணைத்தல் – கட்டுதல்
 • உதாரணங்கள்:
 • 1. யாம் பிணித்த நெடுநல்யானை எம்பரிசில் – புறநானூறு
 • 2. பிணித்த நோய்ப் பிறவிப் பிரிவு எய்துமாறு… – தேவாரம்
097/365
This entry was posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர். Bookmark the permalink.

2 Responses to அன்பின் ருசி

 1. தேன் தேன்-ன்னு வர கம்ப ரசமா?:)
  பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வரத் துடித்தேன்…உனைத் தேன் என நான் நினைத்தேன்…மலைத் தேன் இவள் என மலைத்தேன்:)
  ———–

  //அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்//

  குடிக்கக் கூட மாட்டானாம் அனுமன்! ஆசையையே ஊத்தி ஊத்திக் குடிச்சிப்பானாம்! என்னவொரு கற்பனை கம்பனுக்கு!
  ———-

  இராகவன், தன் உள்ளத் துணைவியை, ஊரார் முன்னிலையில், வேறு மாதிரி நடத்தினாலும்…
  உள்ளத்தில் வேறு மாதிரி நடத்துகிறான்…

  சீதையைத் தேடி முடிக்கும் வரை, தன் நாட்டிலே, ஒரு பங்களாவுக்குள் வந்து இருக்குமாறு சுக்ரீவன் சொல்ல…
  அப்போது, அனுமனைப் போலவே…இராகவனும் சொல்கிறான்!

  அவள் இல்லாமல் – அருந்தேன்
  அவள் இல்லாமல் – உண்ணேன்
  அவள் இல்லாமல் – பாரேன்
  அவள் இல்லாமல் – விரும்பேன்
  அவள் இல்லாமல் – வாழேன்

  ஏழ்-இரண்டு ஆண்டு, யான் போய், எரி வனத்து இருக்க என்றேன்..
  யாழிசை மொழியோடு அன்றி, யான் உறை இன்பம் என்னோ?

  இப்படி இருக்கும் இராகவா – இப்படி இருந்துமா, அவளைத் தீக்குளிக்கச் சொன்னாய்?:((

 2. அனுமன் பற்றிய பா-வை இடும் போதெல்லாம், நான் வைக்கும் அதே விண்ணப்பம்…இன்றும் வைக்கிறேன்!

  என் ஆசை நிரப்பி அல்லால்,வானவன் வைத்த காதல்-ன்னு…விரைந்தோடி…அவளைத் தற்கொலையில் காத்தாயே…இரு உள்ளங்களைச் சேர்த்தாயே….அவள் மேல் பிழையில்லை என்று புரிய வைத்தாயே…

  அதே போல், சேர்த்தருள்!

  இந்த விண்ணப்பத்தையே விண் அப்பமாக….
  படையலாக…..ஏற்று அருள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s