அருள அருள் செய்!

உம்பர் தரு, தேனு, மணிக் கசிவாகி,

….ஒண்கடலில் தேன் அமுது உணர்வு ஊறி,

இன்ப ரசத்தே பருகிப் பலகாலும்,

….எந்தன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே,

தம்பி தனக்காக வனத்து அணைவோனே,

….தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே,

அன்பர் தமக்கு ஆன நிலைப் பொருளோனே,

….ஐந்து கரத்து ஆனை முகப் பெருமாளே!

நூல்: திருப்புகழ் (விநாயகர் துதி #3)

பாடியவர்: அருணகிரிநாதர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஐந்து கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட விநாயகனே,

தம்பி முருகனுக்கு உதவி செய்வதற்காக யானை உருவம் எடுத்துக் காட்டுக்குள் வந்தவனே,

தந்தை, தாயை வலம் வந்து ஞானப் பழத்தைப் பரிசாகப் பெற்றவனே,

பக்தர்களுக்காக என்றும் நிலைத்திருப்பவனே,

தேவர்கள் உலகத்தில் உள்ள கற்பக மரமும் காமதேனுவும் சிந்தாமணியும் யார் என்ன கேட்டாலும் அள்ளித் தருகின்ற வள்ளல் குணத்தைக் கொண்டவை. அப்படிப்பட்ட ஓர் ஈகைத்தன்மையை நானும் பெறவேண்டும், எல்லோருக்காகவும் உள்ளம் கசிந்து வாரி வழங்கவேண்டும், அதன்மூலம் கிடைக்கிற சந்தோஷம், அன்றைக்குப் பாற்கடலில் கிடைத்த இனிய அமுதத்துக்கு இணையானது.

விநாயகனே, அடுத்தவர்களுக்கு அள்ளித் தருவதால் கிடைக்கும் அந்த இன்ப ரசத்தை நான் ரொம்ப நாளைக்குப் பருகிக்கொண்டே இருக்கவேண்டும், அதற்கு நீதான் அருளவேண்டும்!

துக்கடா

  • இந்த எட்டு வரிப் பாட்டுக்குள் எத்தனை குட்டிக் கதைகள்: அதென்ன கற்பக மரம்? காமதேனு யார்? சிந்தாமணி யார்? கடலில் அமுதம் எப்படி வந்தது? தம்பிக்காக விநாயகர் ஏன் வனத்துக்குள் செல்லவேண்டும்? அப்பா அம்மாவை வலம் வந்தால் ஞானப் பழம் கிடைக்குமா? விநாயகர்க்கு ஆனைத் தலை எப்படி வந்தது?… குழந்தைகளுக்கு இந்தப் பாட்டைச் சந்தத்தோடு சொல்லித் தந்து ஒவ்வொரு கதையாக விவரித்தால் ஜஸ்ட் எட்டே வரிக்கு ஒரு மணி நேரம் ஓடிவிடும், திருமுருக. கிருபானந்த வாரியாரின் ஸ்டைல் அது 😉
  • விநாயகரிடம் அருணகிரிநாதர் கேட்கும் வரத்தைப் பாருங்கள்: ‘எனக்கு என்று உன்னிடம் நான் எதையும் கேட்கமாட்டேன், அப்படியே நீ எதையாவது கொடுத்தாலும்கூட, அதையெல்லாம் சுயநலத்தோடு பேங்க் லாக்கரில் பதுக்கிவைத்துக்கொள்கிறவனாக என்னை மாற்றிவிடாதே, அடுத்தவர்களுக்கு வாரி வழங்குவதுதான் உண்மையான சந்தோஷம், அதை நான் எப்போதும் மறந்துவிடாமல் இருக்க அருள் செய், வாழ்நாள்முழுக்க நான் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும், அந்த இன்ப ரசத்தை அனுபவிக்கவேண்டும்.’
  • அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

179/365

This entry was posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, பிள்ளையார். Bookmark the permalink.

3 Responses to அருள அருள் செய்!

  1. amas32 says:

    முழு முதற் கடவுளுக்கு வருட முதல் நாளில் முதல் வணக்கம் 🙂
    விநாயகர் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் இந்தப் பாடலில் அருணகிரிநாதர் சொல்லிவிட்டார்.
    ஒருவரின் தேவை அறிந்து அவர்களுக்கு ஈவது அரும் பெரும் குணம். There is no joy greater than the joy of giving. இருப்பவர் கொடுத்தால் தான் இல்லாதவர் இன்புறமுடியும். ஒருவருக்கு ஈகைக் குணம் இருந்துவிட்டால் பிறகு கொடுக்காமல் இருக்க முடியாது. அந்த எண்ணம் கடைசி வரை இருக்க வேண்டுமே என்று தான் இறைவனிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
    திருப்புகழை நமக்கு ஈந்த அருணகிரிநாதர் பாதம் தொழுது அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் சொல்லிக்கொள்கிறேன்.
    amas32

  2. GiRa ஜிரா says:

    அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

    மிகப்பொருத்தமான திருப்புகழை பதிவிட்டமைக்கு என்.சொக்கனுக்கு நன்றி. 🙂

    பொதுவாக வருணிக்கும் போது பாதாதி கேசம்னு சொல்வாங்க. அதாவது பாதத்துல தொடங்கி கேசத்துல முடிக்கனும். ஆண்டவனைக் கும்புடும்போது கேசாதி பாதமா இருக்கனுமாம். தலையில் தொடங்கி அவன் அடிகளில் வீழுந்து வணங்குவதற்காக.

    இத எதுக்குச் சொல்றேன்னு கேக்குறீங்களா? இந்தப் பாட்டை கேசாதி பாதமாப் படிச்சாலும் பாதாதிக் கேசமா புரிஞ்சிக்கனும். அதத்தான் சொக்கனும் விளக்கத்துல செஞ்சிருக்காரு.

    நம்மளும் அப்படியே ஒரு de tour போடுவோம்.

    மொதல்ல கடைசி வரி.
    ஐந்து கரத்து ஆனை முகத்துப் பெருமாளே – இதுக்கு விளக்கமே தேவையில்ல. அதென்ன பெருமாள் வர்ரார்னு பாக்குறீங்களா? பெரும்+ஆள் = பெருமாள்

    அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே – அடியவர்களுக்காக என்றும் நிலையான அருட்பொருளாக இருப்பவனே

    தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே – திருவிளையாடல் படம் எல்லாரும் பாத்திருப்பீங்க. பாக்கலைன்னாலும் ஒரு வாட்டி பாத்துருங்க. 🙂 ”மூத்தபிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை”ன்னு முருகன் வசனம் பேசுவாரு. ஒரு பழத்துக்காகச் சண்டை. அதுல பிள்ளையாரு அம்மையப்பனைச் சுத்தி வந்து பழத்தை வாங்கிக்குவாரு. வலம் வர்ரதுன்னா சுத்தி வர்ரது. கோயில்ல வலப்புறமாத்தான் சுத்தி வருவோம். அதான் ”தந்தை வலத்தால்” அருள் கைக் கனியோனே

    தம்பி தனக்காக வனைத்தணைவோனே – இந்த ஒரு வரிய வெச்சித்தானே ஒரு படமே வந்தது. ஸ்ரீவள்ளி. அதுக்கு முன்னாடி நாடகம். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளோட வள்ளி திருமணம் நாடகம் மிகப்பிரபலம். காலகலாமா நடந்துட்டு வர்ரதுதானே. முருகனும் வள்ளியும் சங்ககாலத்துல இருந்தே காதலர்கள். அந்தக் காதல் ஒன்னு சேர்ரதுக்காக காட்டுக்குள்ள யானை வடிவத்துல வந்து திருமணத்தை நடத்தி வெச்சாராம் பிள்ளையாரு.

    உம்பர் தரு தேனு மணிக் கசிவாகி – உம்பர்னா வானவர்கள். தருன்னா வடமொழியில மரம். கற்பகதருன்னு சொல்றாங்கள்ள. அந்தக் கற்பக மரம். தேனு=காமதேனு. மணி=சிந்தாமணி. இந்த மூன்றையும் இங்க ஏன் சொல்றாரு? இந்த மூன்று கிட்டயும் என்ன கேட்டாலும் கிடைக்கும். பால்னா பால் கொடுக்கும். தேன்னா தேன் கொடுக்கும். தேள்னா தேளையும் கொடுக்கும். யார் கேக்குறாங்க? எதுக்குக் கேக்குறாங்கன்னு யோசிக்காமக் கொடுக்கும். அவ்வளவு சக்தி.

    நம்மாள முடியுமா? நமெல்லாம் மனிதர்கள். நமக்குன்னு இருக்கும் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் அதற்கு வழிவிடாது. திருமணமான ஒருவருக்கு காதலை வேண்டி யாரேனும் கேட்டால் கொடுக்க முடியுமா? கொடுக்கலாமா? இந்த மாதிரி கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி விடக்கூடாது என்றுதான் இந்த மூன்றும் மரமாகவும் மணியாகவும் மாடாகவும் இருக்கின்றன.

    இந்த மூன்று பொருட்களும் கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுப்பது போலத் தானும் கொடுக்க வேண்டும்.

    சரி. கொடுப்பதுதான் கொடுக்க வேண்டும். எப்படிக் கொடுக்க வேண்டும்?

    ஒண்கடலில் தேன் அமுது உணர்வு ஊறி,
    இன்ப ரசத்தே பருகிப் பலகாலும்,
    எந்தன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே

    வாரி வாரிக் கொடுக்கும் பொழுது உணர்வில் அமுது ஊற வேண்டும். அந்த அமுது ஊறிய இன்ப ரசத்தைப் பலகாலும் பருகும் இன்பப் போல வாரி வாரிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு ஆதரவு தருவாய் என்று அருணகிரிநாதர் கேட்கிறார்.

    ஒரு திருப்புகழுக்குள் இவ்வளவு தகவல்கள். இன்னும் ஒவ்வொரு திருப்புகழாக எடுத்துப் படித்தால் எவ்வளவு இன்பம்.

  3. ஆனந்தன் says:

    இந்தப் பொருள் வருவதற்கு “இன்பரசத்தே பருகப் பலகாலும்..” என்றல்லவா இருந்திருக்க வேண்டும்?
    வள்ளல் குணத்துடன் வாரி வழங்குபவராகக் கூறப்படுபவர் விநாயகர் அல்லவா?

Leave a comment