இன்னம் உறங்குதியோ?

எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ?

’சில்’ என்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்,

வல்லை, உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்,

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக;

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை;

எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை, மாற்றாரை மாற்று அழிக்க

வல்லானை மாயனைப் பாடு, ஏல் ஓர் எம்பாவாய்!

நூல்: திருப்பாவை (#15) / நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: ஆண்டாள்

சூழல்: அதிகாலை மார்கழி நோன்புப் பிரார்த்தனைக்காக ஒருத்தியைத் துயில் எழுப்புகிறார்கள் அவளது தோழிகள், அங்கே நிகழும் குறும்பு நாடகம் இது

தோழிகள்: அடியே, சின்னக் கிளியே, இன்னுமா தூக்கம்?

அவள்: ‘சில்’ என்று சத்தம் போட்டுக் கூப்பிடவேண்டாம் நங்கையரே, கொஞ்சம் பொறுங்கள், வந்துவிடுகிறேன்!

தோழிகள்: நீ பேசுவதில் ரொம்பக் கெட்டிக்காரி, உன் வாய் நீளம் என்று எங்களுக்குத் தெரியாதா?

அவள்: நான் இல்லை, நீங்கள்தான் கெட்டிக்காரிகள்!

தோழிகள்: சீக்கிரம் எழுந்து வா, நாங்களெல்லாம் தூக்கம் விழித்துத் தயாராகிவிட்டோம், நீமட்டும் இன்னும் உறங்கலாமா?

அவள்: நம் சிநேகிதிகள் எல்லோரும் வந்துவிட்டார்களா?

தோழிகள்: ஆமாம். நீமட்டும்தான் பாக்கி. மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். சந்தேகமிருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள்!

வலுவான யானையைக் கொன்றவன், எதிரிகளின் பெருமையை அழிக்கும் வலிமை கொண்டவன், அந்த மாயவனைப் பாடலாம், வா!

துக்கடா

 • மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு திருப்பாவையை எடுத்துக்கொண்டு அதில் உள்ள இனிய சொல் ஒன்றுக்கு விளக்கம் அளிக்கிறார் @kryes. நண்பர்கள் பலர் குரல் வழிப் பங்கேற்கிறார்கள். அந்தத் தொடர் வரிசை : http://madhavipanthal.blogspot.com/search/label/PaavaiPodcast

178/365

Advertisements
This entry was posted in ஆண்டாள், திருப்பாவை, நாடகம், பாவைப் பாட்டு, பெண்மொழி. Bookmark the permalink.

3 Responses to இன்னம் உறங்குதியோ?

 1. amas32 says:

  ஆண்டாளை போல பொறுமையான பெண்மணியை பார்க்க முடியாது. கூட்டு வழிப்பாட்டின் முக்கியத்துவத்தை இந்த பாவை நோன்பின் மூலம் உணர்த்துகிறாள் கோதை. அவள் மட்டும் விடிகாலை எழுந்து நீராடிவிட்டு நாராயணனை துதித்து அவன் அருளை பெற்றிருக்கலாம். ஆனால் தூங்கி வழியும் அவள் தோழியர் அனைவரையும் பொறுமையாக எழுப்பி நீராடவும், இறைவனைத் தொழவும் அழைத்துச் செல்கிறாள்.
  இந்த பாசுரத்தில் தோழியுடன் ஆன உரையாடல் மிகவும் சுவையானது. எப்பொழுதுமே சேர்ந்து செல்லும் போது, யாரவது சில பேர் சொன்ன நேரத்தில் வரா விட்டால், உடனே இவள் வந்து விட்டாளா, அவள் வந்துவிட்டாளா என்று தான் நாம் கேட்போம். ஏனென்றால் இன்னொருத்தர் வராத வரையில் நாம் தாமதமாகச் சென்றாலும் நம்மேல் தவறு இல்லாத மாதிரி ஒரு தோற்றம். அதையே தான் இந்தத் தோழியும் இங்கு செய்கிறாள். ஆனால் ஆண்டாள் விடாமல், எல்லாரும் வந்தாகிவிட்டது எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக் கொள் என்கிறாள்.
  amas32

 2. ஆகா
  நான் ஊரில் இல்லாததால் #PaavaiPodcast குழந்தையைச் சொக்கர் கவனித்துக் கொள்கிறாரோ?:))

 3. karthi says:

  ஆண்டாள் என்ன நெல்லை பக்கமா ?
  பாடலை படித்தவுடன் அது தான் தோன்றியது ..
  அந்த வழகிற்கே ஒரு சந்தம் இருக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s