மயக்குறு மக்கள்

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்,

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.

நூல்: புறநானூறு (#188)

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி

சூழல்: பொதுவியல் திணை – பொருண்மொழிக் காஞ்சித் துறை (விளக்கம் ‘துக்கடா’வில்)

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஒரு பெரிய பணக்காரர். தன் வீட்டில் பல்வேறு பண்டங்களைச் சமைக்கிறார், பலரோடு உட்கார்ந்து பிரமாதமான அறுசுவை உணவைச் சாப்பிடுகிறார். ஆனாலும், அந்த விருந்தை முழுமையடையச் செய்வதற்கு, ஒரு குழந்தை வேண்டும்.

அந்தக் குழந்தை விருந்தினர்கள் நடுவே குறுகுறுவென்று நடந்து செல்கிறது, தன்னுடைய சிறிய கைகளை நீட்டி நெய் சாதத்தைக் கலக்கி எதையோ தேடுகிறது, பின்னர் அதே கையால் தந்தை, தாயைக் கட்டிக்கொள்கிறது, கொஞ்சம் சாதத்தைத் தன் வாயில் இடுகிறது, மிச்சமெல்லாம் சுற்றிலும் சிதறுகிறது!

இதையெல்லாம் பார்க்கும்போது, ‘அச்சச்சோ, சாப்பாடு வீணாகிறதே’ என்று எந்தப் பெற்றோரும் நினைக்கமாட்டார்கள். பிள்ளையின் குறும்பை நினைத்து மயங்குவார்கள். அப்படிப்பட்ட மக்கள்செல்வம் இல்லாவிட்டால், வாழ்ந்து என்ன பலன்?

(பின்குறிப்பு: கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடை எப்பேர்ப்பட்ட ஏழை என்று இதுபோன்ற பாடல்களை ‘விளக்க’ முற்படும்போதுதான் புரிகிறது 🙂 சிரமம் பார்க்காமல் மேலே உள்ள பாடலை இன்னொருமுறை படித்துவிடுங்கள்!)

துக்கடா:

  • ’பொதுவியல்’ என்றால், புறம் வகையைச் சேர்ந்த பாடல்கள் அனைத்துக்கும் பொதுவான விஷயங்களைச் சொல்லும் திணை
  • ’பொருண்மொழிக் காஞ்சி’ என்றால், நல்ல பண்புகளைச் சொல்லும் துறை
063/365
This entry was posted in புறநானூறு, புறம், பொதுவியல். Bookmark the permalink.

11 Responses to மயக்குறு மக்கள்

  1. PVR says:

    அற்புதம். I am afraid, I am getting addicted to your தினம் ஒரு பா. Thank you.

  2. என்னவொரு குறுகுறு பா?:)
    யார் விருப்பத் தேர்வு இது?
    இல்லை ட்விட்டரில் அறிவிச்சீங்களே, பெண்ணின் பிறந்தநாள் பதிவா?:)) எதுவாயினும், வாழ்த்துக்கள்!:)

    பாண்டியன் அறிவுடை நம்பி, என்னமா அனுபவிச்சிக் கவிதை எழுதறான்!
    ஒரு மன்னன், புலவர்க்குப் பரிசு குடுப்பான்! ஆனா, அவனே தமிழாய்ந்து, கவிதை படைப்பது தான் எத்தனை சிறப்பு!
    இப்படிச் சங்க கால மன்னர்கள் எத்தனையோ பேர்!

    பாண்டியன் அறிவுடை நம்பி
    கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
    சேரமான் கணைக்கால் இரும்பொறை
    பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
    சோழன் நலங்கிள்ளி
    பாரி மகளிர் – இளவரசியர்
    …இன்னும் பலர்

    தமிழ் ஆய்ந்த தலைமகனே, தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆதல் வேண்டும்-ன்னு பாரதிதாசன் பாடுவாரு!
    அப்படியான அரசியல் தலைவர்கள் வாழ்ந்த சங்க காலம்!
    ஆனா….இன்னிக்கி தமிழ் “ஆய்ந்த” தலைவர்களை விட, பேசிப்பேசியே, தமிழ் “தேய்ந்த” தலைவர்கள் தான் நாட்டில் உளர், மஞ்சள் தமிழ்ப் போர்வை போர்த்திக் கொண்டு:(

  3. பாட்டின் இனிமைக்கு வருவோம்! என்னமா குழந்தை கண் முன்னே நடக்குது-ல்ல?

    குறுகுறு நடந்து,
    சிறுகை நீட்டி,
    இட்டும் தொட்டும்,
    கவ்வியும், துழந்தும்,
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    …ஆக மொத்தம் எல்லாம் பண்ணுது, ஆனா சாப்பிடலை:))

    துழந்து = துழாவி என்ற பொருளா?
    புதுக் கண்ணாலப் பொண்ணு, எப்படியோ துழந்து துழந்து சமைச்சா, அவன் அவளுக்காக புளிப்பைக் கூட ரசிச்சிச் சாப்பிட்டான்-ன்னு ஒரு சங்கப் பாட்டு வரும்!

  4. சிறுகை அளாவிய கூழ் – ஞாபகத்துக்கு வருது. All the stuff வள்ளுவர் summarized in குறள் வெண்பா 🙂

  5. பயக்குறை = என்னமா “மென்மையான” சொல்லாட்சி பாருங்க! = பயன்+குறை
    மயக்குறு மக்கள் இல்லாதவங்களுக்குப் பயக்குறை இல்லை! = அதாச்சும் பயனும் இல்லை! குறையும் இல்லை!

    ஏன் இப்படிச் சொல்றாரு கவிஞரு?
    எவ்வளவோ முயன்றும், பிள்ளை இல்லாதவங்க, பாவம் என்ன பண்ணுவாங்க? இறைவன் எம்பெருமான் அவங்களுக்குக் குடுத்தது அவ்ளோ தான்!
    அதுக்காக, அவங்க வாழ்க்கையே ‘பாழ்’-ன்னு ஒரே சொல்லால அடிச்சா, அது நல்லாவா இருக்கு?:(
    ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து…முதலாமவளுக்கு இல்லாமலே போயிட்டானே!

    அதான், கவிஞர், இந்த வாழ்க்கைக் குறையை, “மென் சொல்லால்”, சொல்லுகிறார்!
    தாம் வாழும் நாளே…
    ….பயக்குறை இல்லை!

    = பயன் இல்லை! குறையும் இல்லை!
    நெய்யுடை உணவை உடலின் மேல் பூசும் குறும்பு = இன்பப் பயனும் இல்லை!
    நெய்யுடை உணவு மேலே படுவதால் வரும் கறை = அந்தக் குறையும் இல்லை!

    பயக்+குறை இல்லை, தான் வாழு நாளே! முருகா!

  6. இந்தப் பாட்டைப் படிச்சிட்டு விறுவிறுன்னு ஒரு விளக்கம் கேட்டு மெயில் அடிக்கப் போயிட்டேன். நல்ல வேளை @kryes பின்னூட்டங்களைப் பார்த்தேன்.

    நீங்க பரிமாறின பருப்பு சாதத்துல நெய்யூற்றித் தந்தார் @kryes

    நன்றி முருகா!

  7. G.Ragavan says:

    பாண்டியன் என்றாலே அறிவுடை நம்பிகள் தான். 🙂 முச்சங்கம் கண்ட முதல் அரசர்கள் அல்லவா. ஆகையால்தான் தென்னவன் என்ற பட்டம் பாண்டியர்களுக்கு மட்டுமே ஆனது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தான். சேர மன்னன் தான். ஆனாலும் பாண்டியன் மீன் பொறித்த (பொரித்த அல்ல) இமயத்தில் வில் பொறித்த பெருமை அவனுக்கு.

    அப்படி முன் வந்த மன்னனுக்குத் தமிழ் நாப்பழக்கம் மட்டுமல்ல பாப்பழக்கமும் கூட என்பதை நிரூபித்திருக்கிறான். வாழிய அவன் புகழ்.

    மழலைச் செல்வம் இருக்கிறதே… அந்தச் செல்வத்தைப் பெற்ற பெருமையைச் சொல்லில் முடிக்க முடியாது. சொல்லியும் முடிக்க முடியாது.

    தான் மலடு அல்ல என்று உலகுக்கு எடுத்துச் சொன்ன மூத்த குழந்தையை அன்னை கொண்டாடுவாள். தான் இன்னும் ஆண் என்று உலகோர் உணரச் செய்த கடைக்குட்டியைத் தந்தை கொண்டாடுவார். இருவருடைய அன்பும் இடைக்குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

    இப்படிப்பட்ட மழலைச் செல்வத்தைப் பாராட்டி வளர்க்க வேண்டும் என்று உலக நாயகி விரும்பித்தான் முருகன் கூட வாய் வைத்து உண்ணா முலையைச் சம்பந்தனுக்குத் தந்தாள் என்றும் ஒரு தமிழ்க்கதை உண்டு.

  8. G.Ragavan says:

    இந்த மக்கட் செல்வத்தைப் பற்றிப் பேசும் பெரிய புலவர்கள் எல்லோரும் மிகவும் உயர்ச்சியாகவோ மிகவும் தாழ்ச்சியாகவோ பேச மாட்டார்கள்.

    திருவள்ளுவர் கூட நடுநிலையாக ஒரு செய்தியைச் சொல்வது போலத்தான் கூறுகிறார்.

    குழல் இனிது யாழ் இனிது என்று கூறுகின்றவர்கள் தங்கள் மழலைச் சொல் கேட்டதில்லை
    அமிழ்தை விட இனியது தம்மக்கள் சிறுகை விட்டு உழப்பித் தரும் கூழ்.

    இங்கும் அதுதான். மக்கட்பேறு இன்பத்தை அனுபவிக்க முடியாத வாழ்க்கை நேர் கோடு போன்றது. இன்ப ஏற்றமும் இல்லை. துன்ப இறக்கமும் இல்லை.

    இதில் இன்னொரு மறைபொருள் இருக்கிறது. பிள்ளைகளால் பெற்றோருக்கு நற்பெயரும் வரலாம். அவப்பெயரும் வரலாம். குழந்தை இல்லாதவர்க்கு இரண்டுக்கும் வாய்ப்பில்லை. இன்றைக்குப் பல பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் பார்க்கும் பொழுது “ஏன் பிறந்தாய் மகனே” என்ற கண்ணதாசன் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.

    அதைத்தான் பாண்டியன் தெளிவாகவும் நடுநிலையோடும் மறைபொருள் கொண்டும் என்று மூன்று வகையில் கருத்து சொல்லியிருக்கின்றான்.

  9. Sabari GS says:

    உரைநடை clean bold..

  10. Sabari GS says:

    உரைநடை clean bowled..

  11. Pingback: அமிழ்தினும் இனிது « தினம் ஒரு ’பா’

Leave a comment