மும்முனைப் போட்டி

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ – மனம்

முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே – உயர்

சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே – மணிப்

பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே!

நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: கதாநாயகி வசந்தவல்லி தோழிகளோடு பந்து விளையாடும் காட்சி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தலையில் நிலாவை அணிந்த திருக்குற்றாலநாதர் சிறு பலா மரத்தடியில் எழுந்தருளியிருக்கிறார். சங்குப் பூச்சிகள் அணியாகச் செல்லும் அந்தத் தெருவில் பச்சை வளையல் அணிந்த வசந்தவல்லி தன் தோழிகளுடன் பந்து விளையாடுகிறாள்.

அதைப் பார்க்கிறவர்களெல்லாம் ‘யார் இவள்?’ என்று வியந்துபோகிறார்கள். ‘திருமகளா? ரதிதேவியா? தேவலோகத்தைச் சேர்ந்த ரம்பையா? மோகினியோ?’ எனக் கேள்விகளை அடுக்குகிறார்கள்.

வசந்தவல்லியின் அழகுமட்டுமில்லை, அவளது விளையாட்டு நுட்பமும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ‘பந்தை அடிக்கும்போது இவளது மனம் முந்துகிறதா, அல்லது கண்கள் முந்துகின்றனவா, அல்லது கைகள் முந்துகின்றனவா?’ என்று திகைக்கிறார்கள். அந்த அழகான மும்முனைப் போட்டியைக் கண்டு ரசிக்கிறார்கள்.

துக்கடா

 • ’மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ’ என்கிற இந்தக் கேள்வி இன்றைக்கும் நவீன விளையாட்டு அலசல்களில் பயன்படுத்தப்படுவதுதான், சந்தேகமிருந்தால் ஒவ்வொரு துறையின் ஜீனியஸ்களுடைய ஆட்ட வீடியோக்களைத் தேடிப் பாருங்கள், ‘எப்படிய்யா அந்த ஷாட்டை ஆடினான்?’ என்று இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்போம் 🙂
 • இந்தப் பாடல் ‘காதலன்’ என்ற படத்தில் (சுத்தமாகப் பொருந்தாத ஒரு சூழ்நிலையில் 🙂 ) பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மின்மினி, சுனந்தா இணைந்து பாடி மிகப் பிரபலமான அந்தப் பாடல் இங்கே:
 • கடந்த ஜூலை மாதத்தில் திருக்குற்றாலக் குறவஞ்சியின் இன்னொரு பாடல் #365paa வரிசையில் பிரசுரமானபோது (https://365paa.wordpress.com/2011/07/11/006/) இந்தப் பாடலைக் குறிப்பிட்டுக் கேட்டவர் நண்பர் சுப. இராமனாதன். அவருக்கு நன்றிகள்!
064/365
Advertisements
This entry was posted in குறவஞ்சி, சினிமா, திருக்குற்றாலக் குறவஞ்சி, நண்பர் விருப்பம், வர்ணனை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to மும்முனைப் போட்டி

 1. சுப. இராமனாதன் says:

  நன்றி சொக்கன்! 🙂

 2. 0:39 பிர‌புதேவா: அக்கா தாவ‌ணி எங்க‌ வாங்கியிருக்கும்?
  0:41 நமீ.. நக்மா: அச்சச்சோ, ஆஸ்பத்திரிலேருந்து தாவணியிலியே வந்திட்டேனே.
  0:55 இருவ‌ரும் “ந‌ய‌ன்தாரா க‌ண்ல‌ ப‌ட்ருச்சின்னா…”

 3. yeskha says:

  அப்போ என்னுடைய “அந்த” கமெண்ட் இந்தக் கட்டுரைக்குத்தான் பொருத்தமாயிருக்கும்.. இல்ல..?

  இதோ இங்கனயும் போட்டா போச்சு…
  ———————————————–
  கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
  ஒண்டொடி கண்ணே உள… (திருக்குறள் – மிஸ்டர் வள்ளுவர்)

  ஏ…. கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு.. இந்தப்
  பெண்ணில் இருக்கு…. (சிம்ரனைப்பார்த்து சூர்யா பாடும் வரிகள் நேருக்கு நேர் படத்தில் – திருவாளர் கவிப்பேரரசு வைரமுத்து)
  ———————————————–
  இதுக்கு என்ன சொல்றீங்க?

 4. நக்மா-பா நல்ல-பா
  அப்பப்பா அஃதே பா
  ஓவப்பா ஒப்பப்பா
  பாவப்பா…கங்குலி பாவமப்பா! :))

  இதான் நக்மா-பா-ன்னு வெளம்பரம் வேற குடுத்தீயளா?:)
  சிக்கனப்-பா, இது சொக்கனப்பா!:)

 5. குற்றாலக் குறவஞ்சி…ஒரு நாட்டுப்புற இலக்கியம் தான்!…ஆனால் தமிழ் நாட்டும் புற இலக்கியம்!
  அப்படியொரு செறிவும் இனிமையும் கலந்த, அகம்-புறம் தோயும் இலக்கியம்!

  பாடிய கவிராயரும் லேசுப்பட்டவர் இல்லை! காதல் மன்னரு! 🙂
  பாட்டைப் பாருங்க!
  மனம் முந்தியதோ? விழி முந்தியதோ? கரம் முந்தியதோ எனவே…

  காதல்-ல்ல விழுந்தவங்களுக்கு நல்லாத் தெரியும்! (எனக்கும் தெரியும்):)
  என்னா-ன்னு?

  அந்த “முதல் காதல்” எப்படி வந்துச்சி?
  என் ஆருயிரை எப்படி முதன்முதல் தொட்டேன்?
  மனசால தொட்டேனா?
  கண்ணால தொட்டேனா?
  இல்ல கையால தொட்டு. கையைப் பிடிச்சே இழுத்தேனா?:)

  தொடுதல் = பல வகை!

  * காதலியை….மறைவா நின்னு பாத்துக்கிட்டே இருங்க! உங்க வருகையே அவளுக்குத் தெரியாது! ஆனா திடீர்-ன்னு திரும்புவா, தன்னை அவன் பாக்குறானோ?-ன்னு!
  எப்படி? = ஏன்னா, அவளைத் தொட்டாச்சு = கண்ணால! = விழி முந்தியதோ?

  * என் முருகனை…செல்லம்…பொற்க்கி…my murugaa -ன்னு மனசுக்குள்ளாறயே கொஞ்சி, மிஞ்சி, துஞ்சிக்கிட்டே இருங்க! திடீர்-ன்னு கிட்டக்க வந்து, காதோரமாக் கவ்விக் கடிப்பான்…ஏய் என்னை பொற்க்கி-ன்னு சொன்னியா?-ன்னு!
  அடப்பாவி, ஒனக்கு எப்படித் தெரியும்? = மனசால முருகனைத் தொட்டாச்சி! = மனம் முந்தியதோ?

  * மனசாலும் தொட்டு, விழியாலும் தொட்ட பிறகு, இனி வேறென்ன?
  அவன் வியர்வைத் தீர்த்த வாசமுள்ள திருமேனி, அதைத் தான் அடுத்துத் தொடணும் = கரம் முந்தியதோ?:)

  மனம் என்னும் கை முந்தியதோ?
  விழி என்னும் கை முந்தியதோ?
  கரம் என்னும் கை முந்தியதோ?
  முந்து முந்து முருகவேள் முந்து!
  எனக்குள் வந்து வந்து, முருகவேள் முந்து!

  மனம் முந்தியதோ? விழி முந்தியதோ? கரம் முந்தியதோ..எனவே!

 6. psankar says:

  சுத்தமாகப் பொருத்தம் இல்லைன்னு சொல்ல முடியாதே

 7. G.Ragavan says:

  எனக்குத் தெரிந்து திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து மூன்றாவது பாடல். 🙂 குறவஞ்சியை மிகவும் ரசிக்கின்றீர்கள் போல.

  திரிகூடராசப்பக் கவிராயரின் சொல்லாட்சியும் பொருளாட்சியும் காட்சி ஆளுமையும் வியப்பில் ஆழ்த்துவது.

  ரவிக்கையைப் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். 🙂 எனக்குத் தெரிந்து ரவிக்கை பற்றிச் சொன்ன முதல் புலவர் இவர்தான். இதற்கும் முன்பே யாரேனும் சொல்லியிருந்தால், தெரிந்தவர் சொல்லுங்கள்.

  ஊர்வலம் வரும் சிவனைப் பார்த்துப் பெண்கள் சொல்லிப் புகழும் காட்சியில் இந்த ரவிக்கை வருகிறது.

  கொஞ்சத் தொலைவுல ஊர்வலம் வருது. யாரோ வர்ராங்க. இங்கயிருந்து பாக்குறப்பவே ரொம்பப் பளிச்சுன்னு வேற இருக்காங்க. நான்முகனோன்னு அவங்களுக்கு ஒரு ஐயம். ஆனா பாம்பும் சங்கும் இருக்கே. ஒரு வேளை பெருகும் கருணைத் திருமாலோ. இருக்காது. மூனு கண்கள் இருக்கே. அப்பச் சிவந்தான் என்று முடிவு கட்டுகிறர்கள். அந்தப் பாட்டுலதான் ரவிக்க வருது. பாட்டைக் கீழே குடுக்குறேன். படிச்சாலே புரியும் எளிய பாடல்தான்.

  ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
  ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
  புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
  பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்
  விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
  விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்
  இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
  ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.
  ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
  தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
  இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
  இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.

  • சங்கத் தமிழச்சியின் sleeveless பற்றியும், ரவிக்கை பற்றியும் அகநானூற்றுப் பாடல்களில் உள்ளது!
   சொக்கன் தேடிப் பிடித்து, sleeveless போட வேணுமாய் வேண்டுகிறேன்:)

 8. G.Ragavan says:

  திரிகூட ராசப்பக் கவிராயருக்குப் பேதையுள்ளம். பெரிய வேறுபாடுகள் நினைக்கத் தெரியாத நல்ல மனது.

  கடவுள் வாழ்த்தில் பிற்காலச் சாத்திரப் படி நாலு வரி பிள்ளையாருக்குப் பாடி விட்டு, பிறகு முருகனுக்கு ஆரவாரமாக ஆரத்தி எடுக்கிறார். அடுத்துதான் குற்றாலீசருக்கும் குழல்வாய்மொழியம்மைக்கும். இப்படிச் சிவக் குடும்பத்தை வாழ்த்தில் வைத்தவர், மற்ற தெய்வங்களை விட்டுவிடவில்லை.

  மேலே சொன்ன ”ஒருமானைப் பிடித்துவந்த” பாடலையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

  அதில் திருமாலைப் பற்றிக் குறிப்பிடுகையில் விரிகருணை மால் என்றுதான் கூறுகிறார். அளப்பரிய பெருங்கருணையுடைய மால்.

  இவரைப் போலத்தான் அருணகிரியும். பேதையுள்ளம். முருகனைத் தவறிய ஒன்றும் அறியாது ”சும்மா இரு” என்ற உபதேசத்தான் உளமொடுங்கித் தவம் செய்த உள்ளம். தற்கொலை முயற்சி வேறு. அப்பொழுது பாடுபட்ட அந்த நெஞ்சம் பண்பட முருகன் அருள்தந்தான். அப்படியானால் முருகா முருகா என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதானே. பாட்டில் எல்லாம் மாலோன் மருகனை என்று எல்லாம் ஏன் பாட வேண்டும்?

  அன்பு மட்டுமே அறிந்த பேதை உள்ளங்கள் வேறுபாடு பார்க்காது. அதுவும் சைவ வைணவச் சண்டை மிகுந்திருந்த பொழுது இப்படிப் பாடுகிறார். முருகனைப் பாடும் உள்ளங்கள் சிவனையும் அம்மையையும் மாலையும் சேர்த்தே பாடுகின்றன.

  ஆனால் அதே காலத்திலோ அதற்கு முன்னம் இருந்த காலத்திலோ ஆழ்ந்து பக்தி இலக்கியம் படைத்த பெரியவர்களுக்கு அந்தப் பேதையுள்ளம் இல்லை போலும். திருமாலை மையப்படுத்திப் பாடும் எந்தப் பழைய நூலிலும் முருகன் மாமனே என்று யாரும் பாடக் காணோம். அடுத்தவர் எப்படி இருந்தால் என்ன! அருணகிரி மற்றும் ராசப்பக் கவிராயர் போன்ற பேதை உள்ளங்கள் நல்ல எண்ணங்களை விதைத்தன. அதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

  • G.Ragavan says:

   அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன். திருமால் காப்பியங்களிலும் முருகனைப் புகழ்ந்து நிச்சயமாக ஆழ்வார்கள் பாடியிருக்க வேண்டும். மாலிடம் ஆழ்ந்தவர்களுக்கு உறுதியாக முருக பக்தியும் இருந்திருக்கும். பகழிக்கூத்தர் முருகனைப் பாடவில்லையா. ஆனால் அவர் முருகன் பாடலில் மாலைப் பாடினார். அப்படியில்லாது மாலைப் பாடிய ஏதாவது வைணவ இலக்கியத்தில் முருகா முருகா என்று சொல்லியிருப்பார்கள். என்ன செய்வது! என்னைப் போன்றவர்கள் கற்றது குறைவு. உங்களைப் போன்ற முழுதுணர்ந்த மூதோர்கள் எடுத்துச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம். அப்படியிருக்க பிழைக்கச் செய்த பிழை என்று தவறாகக் கொள்ளக் கூடாது என்று வேண்டுகிறேன்.

  • //”””ஆழ்ந்து””” பக்தி இலக்கியம் படைத்த பெரியவர்களுக்கு அந்தப் பேதையுள்ளம் இல்லை போலும்.
   திருமாலை மையப்படுத்திப் பாடும் எந்தப் பழைய நூலிலும் முருகன் மாமனே என்று யாரும் பாடக் காணோம்//

   கந்தனும் வள்ளி கலந்தொரு வடம் தொட்டு ஆட்ட
   செந்துரத் தமிழ்ச் செந்திலாய் வடம் தொட்டு ஆட்ட
   பெருவாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள்
   பெரிய பெருமாள் அரங்கர் ஆடிர் ஊசல்!!
   – இப்படியான பாசுரம்!

   மாறன் நம்மாழ்வார் – திருவாய்மொழி…
   மோட்சம் செல்லும் போது பாடும் பாசுரத்தில் முனியே நான்முகனே, முக்கண் அப்பா…என் பொல்லாக்
   கனிவாய் கரு மாணிக்கமே….ன்னும்

   விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான்…ன்னும்
   பிறைதங்கு சடையானை உன் வலத்தே வைத்து…ன்னும்
   இன்னும் பாசுரம் பல உள!

 9. G.Ragavan says:

  மனம் விழி கரம் முந்துவதைப் பத்திப் பலர் தங்கள் உள்ளத்தில் கண்டவாறு சொல்வார்கள். காதலோடு பொருந்தியும் வரும். அதுவும் உண்மைதான். வேறு இடங்களில் பயன்படுத்தவும் செய்யலாம். அழாகான பொருள் செறிந்த வரிகள்.

  ஆனால் திரிகூட ராசப்பக் கவிராயர் இந்த இடத்தில் காதலைச் சொல்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

  ஆங்கிலத்தில் Reflex என்பார்கள். வண்டி ஓட்டுகிறவர்களுக்குத் தெரியும். ஒரு கியரிலிருந்து இன்னொரு கியருக்கு மாற்ற வேண்டும் என்று எண்ணி விட்டுப் பிறகு மாற்ற மாட்டார்கள். வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதே கை கிளட்சைப் பிடிக்கிறது. கால் கியரை மாற்றி விடுகிறது. இப்படி எண்ணமும் பார்வையும் உடலும் ஒன்றுபட்டு செயலாற்றும் பொழுதுதான் செயல் சிறப்பாக இருக்கும். விளையாட்டில் அது இன்னமும் அழகாகத் தெரியும். நீங்கள் கொடுத்த விளக்கமும் மிகப் பொருத்தம்.

 10. G.Ragavan says:

  இந்தப் பாட்டில் அழகான ஒரு தமிழ்ப் பெயர் ஒளிஞ்சிருக்கு. அதை யாரும் பாக்கலை.

  சங்கணி வீதி – அதென்ன சங்கணி வீதி?

  எப்பவுமே நீர்வளம் நிறைஞ்ச இடங்களில் சங்குப்பூச்சிகளும் நத்தைகளும் நிறைய இருக்கும். இவை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகும் போது தங்கள் வீடுகளையும் தூக்கிக் கொண்டு போகும்.

  அப்படி அணியணியா சங்குகள் போகும் வீதிதான் சங்கணி வீதி.

  • அழகான ஓவியக் காட்சி!
   ஆயிரம் சங்கு அப்படியே வீதியில் ஊர்ந்து போறாப் போலக் கற்பனை செஞ்சிப் பார்த்தா, மிக்க அழகா இருக்கு-ல்ல?
   சங்கணி வீதி வரைந்து தந்த இராகவ ஓவியத்தை எனக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறேன்!:)

   ‘சங்கணி வீதியில் சங்கரி வந்தா திருவிழா’-ன்னு தெரிஞ்சிக்கோ-ன்னு ஒரு சினிமாப் பாட்டு இருக்கு-ல்ல, ரன் படத்துல?:)))

   • சுப. இராமனாதன் says:

    >>>>>‘சங்கணி வீதியில் சங்கரி வந்தா திருவிழா’-ன்னு தெரிஞ்சிக்கோ-ன்னு ஒரு சினிமாப் பாட்டு இருக்கு-ல்ல, ரன் படத்துல?:)))

    தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சிக்கோ
    தப்புத்தப்பா பாட்டு வரி எழுதினா உதை கொடுப்போம் தெரிஞ்சிக்கோ
    🙂

 11. PVR says:

  சந்தம் கொஞ்சும் திருக்குற்றாலக் குறவஞ்சி – one my favorites. Triggered by your note, I started searching kannadasa;s speeches. He has sung these lines very aptly and beautifully in one of his speeches to college students. Had I located it, I would have given the link.

  எத்தனை அழகான கற்பனை. சொல்லாட்சி. – சொக்கானுக்கும் தான்! 🙂

 12. Pingback: விருந்தினர் பதிவு: யானைக் குட்டிகள் | நாலு வரி நோட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s