16/16

துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,

அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு,

புதிதாம் பெருமை, அறம், குலம், நோவு அகல் பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

பாடல் சிறப்பு: ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். அதன் அர்த்தம் ‘16 பிள்ளைகள்’ அல்ல, இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 16 வரங்கள்தாம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மதுரையில் குடிகொண்டுள்ள பரம்பொருளே, எனக்கு இந்தப் பதினாறு வரங்களைத் தருவாய்:

  1. துதி (புகழ்)
  2. வாணி (கல்வி)
  3. வீரம்
  4. விசயம் (வெற்றி)
  5. சந்தானம் (குழந்தை)
  6. துணிவு
  7. தனம் (செல்வம்)
  8. அதிக தானிய வளம்
  9. சௌபாக்கியம் (சிறந்த இன்பம்)
  10. போகம் (சுகம்)
  11. அறிவு
  12. அழகு
  13. தொடர்ந்துதினந்தோறும் கிடைத்துக்கொண்டே இருக்கும் சிறப்புகள்
  14. கொடுக்கின்ற குணம்
  15. நல்ல குலப்பிறப்பு
  16. நோய் இல்லாமை, நீண்ட ஆயுள்
045/365
This entry was posted in காளமேகம், தனிப்பாடல், பட்டியல், Uncategorized. Bookmark the permalink.

2 Responses to 16/16

  1. PVR says:

    Thanks, I had not known Kavi KaaLamEgam has also written abt this ‘sweet 16’ (!). 🙂
    I was earlier using one from Abhiraami Pattar, which u may like to see:

    அபிராமி பதிகம் :

    கலையாத கல்வியும் குறையாத வயதும்
    ஓர் கபடு வராத நட்பும்,
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்,
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்,
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வராத கொடையும்,
    தொலையாத நிதியமும் கோணாத கோலும்
    ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
    அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    அதிக்கடவூரின் வாழ்வே
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாய் நீ அபிராமி…

    1. கலையாத கல்வி
    2. குறையாத வயது
    3. கபடில்லா நட்பு
    4. கன்றாத வளமை
    5. குன்றாத இளமை
    6. பிணியில்லா உடல்
    7. சலிப்பில்லா மனம்
    8. அன்பான வாழ்க்கை துணை
    9. தவறாத மக்கட்பேறு
    10. குறையாத புகழ்
    11. வார்த்தை தவறாத நேர்மை
    12. தடையில்லாது தொடரும் கொடை
    13. தொலையாத செல்வம்
    14. பராபட்சம் இல்லாத அரசு
    15. துன்பம் இல்லாத வாழ்க்கை
    16. இறைவனின் அருள்

    • என். சொக்கன் says:

      ஆஹா, அருமை – இதுபோன்ற உடனடி + பொருத்தமான பதில்கள் / ரெஃபரன்ஸ்கள்தான் வலைப்பதிவின் வாசிப்பு அனுபவத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. தேடி எடுத்துப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

Leave a comment