சிட்டுக்குச் சிறகு முளைத்தது

ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்

செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு

பெருமலை அரும் சுரம் நெருநல் சென்றனள்;

‘இனியே, தாங்கு நின் அவலம்’ என்றிர்; அது மற்று

யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!

உள்ளின் உள்ளம் வேமே – உண்கண்

மணிவாழ் பாவை நடை கற்றன்ன என்

அணி இயல் குறுமகள் ஆடிய

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

நூல்: நற்றிணை (#184)

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: பாலைத்திணை – காதலி காதலனுடன் சென்றுவிடுகிறாள். அதை எண்ணி வருந்திய தாய்க்கு மற்றவர்கள் ஆறுதல் சொல்லித் தேற்றுகிறார்கள். தாய் சொல்லும் பதில் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அறிவுடையவர்களே,

எனக்கு இருப்பது ஒரே மகள். இப்போது அவளும் என்னை விட்டுச் சென்றுவிட்டாள். வலிமை மிகுந்தவன், கூர்மையான வேலை ஏந்திய காளை, அவனோடு பெரிய மலையில் உள்ள சிரமமான பாதையைத் தாண்டிப் போய்விட்டாள் அவள்.

நீங்களெல்லாம் எனக்கு ஆறுதல் சொல்கிறீர்கள். ‘துயரத்தைத் தாங்கிக்கொள்’ என்கிறீர்கள்.

அது எப்படி முடியும்? என்னுடைய மை பூசிய கண்களின் கருமணியில் உள்ள பாவை வெளியே வந்து நடை பழகியதுபோல வளர்ந்தவள் என்னுடைய அழகிய மகள். அவள் விளையாடிய நீலமணி போன்ற நொச்சியையும் தெற்றியையும் பார்க்கப்பார்க்க, அவள் பிரிந்து சென்றுவிட்ட துயரம் அதிகரிக்கிறது, என் உள்ளம் வேகிறது. இந்த வேதனையை நான் எப்படித் தாங்குவேன்?

துக்கடா

  • நொச்சி = சிறுமிகள் வீடு கட்டிச் சோறு சமைத்து விளையாடும் இடம்
  • தெற்றி = திண்ணை அல்லது முற்றம் – இங்கே அதன் பொருள், பெண் குழந்தைகள் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை ஆடும் இடம்
  • இந்தத் தாயின் வேதனையையும் மிஞ்சுகிற நம் துயரம், எப்பேர்ப்பட்ட விளையாட்டுகளையெல்லாம் இழந்திருக்கிறார்கள் நம் குழந்தைகள்!

041/365

This entry was posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நற்றிணை, பாலை, பிரிவு, பெண்மொழி. Bookmark the permalink.

Leave a comment