கடந்தன்

நையுறு சிந்தையள், நயனம் வாரியின்

தொய்யல் வெம் சுழி  இடைச் சுழிக்கும் மேனியள்,

‘ஐய, நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை,

எய்தியது எப்பரிசு? இயம்புவாய்!’ என்றாள்.

*

’சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூய தாள்

ஒருங்கு உடை உணர்வினார் ஓய்வு இல் மாயையின்

பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,

கருங்கடல் கடந்தன் என் காலினால்’ என்றான்

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தர காண்டம், உருக்காட்டுப் படலம், பாடல்கள் #96 & #97)

பாடியவர்: கம்பர்

சூழல்: அசோக வனத்தில் அனுமன் சீதையைச் சந்திக்கிறான். அப்போது அவள் அவனிடம் கேட்கும் ஒரு கேள்வியும் அதற்கு அனுமனின் பதிலும்

சீதை உருகுகின்ற மனத்தை உடையவள். அவளுடைய விழிகளில் இருந்து வழிகின்ற கண்ணீர் கீழே விழுந்து சேறு கலந்த குளமாக, அதில் ஏற்படும் சீர்ச்சுழியில் சிக்கிச் சுழல்கிறது சீதையின் தேகம்.

அப்படிப்பட்ட சீதை, அனுமனை வியப்புடன், பிரமிப்புடன் பார்த்தாள். ’ஐயனே, யாராலும் அள்ளமுடியாத பெரும் கடலைத் தாண்டி நீ இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். அது எப்படி? சொல்’ என்றாள்.

*

அனுமன் சொன்னான்:

‘சின்னஞ்சிறு இடையைக் கொண்ட அன்னையே,

உன்னுடைய கணவன், அந்த ராமனின் திருவடிகளைச் சிந்தித்த ஞானிகள், முடிவில்லாத, மாயை என்கிற பெரிய கடலையே தாண்டிச் சென்றுவிடுகிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இந்தக் கருங்கடல் எம்மாத்திரம்?

அவனை வணங்கினேன், அவன் அருளால், என் கால்களால் கடலைச் சாதாரணமாகத் தாண்டிவந்தேன், அவ்வளவே!

துக்கடா

 • #365paa முதல் ஈடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை தொடர்ந்து வாசித்தவர்கள், விமர்சித்தவர்கள், விவாதித்தவர்கள், தொலைபேசியில், ஈமெயிலில், நேரில் என்று கருத்துச் சொன்னவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
 • இதுகுறித்து நண்பர் ரவிசங்கர் தயாரித்திருக்கும் ஒரு புதிர்ப் போட்டி, புதுமையான பரிசுகளுடன் : http://madhavipanthal.blogspot.in/2012/07/365paaq.html
 • ஒரு வருடம்முழுவதும் தினம் ஒரு பாடலைப் பிரசுரிப்பது பெரிய விஷயமே அல்ல, அதற்காக நான் வாசிக்க முடிந்த நூல்கள் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்புடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண மேட்டர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தின் உயர்வை இந்தத் தொடருக்காக ஆங்காங்கே அதனைப் புரட்டியபோதுதான் புரிந்துகொண்டேன். அதனை முழுக்கப் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன், உணர்ந்து படிப்பது இன்னொருகாலம், அதற்கும் இறைவன் ஒரு வழி செய்வான்
 • இன்ஷா அல்லா, இன்னொரு சீஸனில் சந்திப்போம்!

365/365

Advertisements
Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர் | 79 Comments

சாப்பிடும் முறை

ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,

பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,

வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,

காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே

நூல்: திருமந்திரம் (அறம் செய்வான் திறம்)

பாடியவர்: திருமூலர்

எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா?

முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்த குணத்தை நாமும் கற்கவேண்டும்.

ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.

அப்படி இரவலர்கள் நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும். அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.

அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

சில சமயங்களில், நாம் நிறையப் பசியோடு வீட்டுக்கு வருவோம். உடனே, பரபரவென்று அவசரமாக அள்ளித் தின்னக்கூடாது. எத்தனை பசியாக இருப்பினும், நன்கு மென்று சாப்பிடுவதுதான் முறை.

364/365

Posted in அறிவுரை, கொடை, திருமந்திரம், திருமூலர் | 17 Comments

காவல்காரி, காதல்காரி!

திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,

தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்

புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்

மனம் காக்கவைத்தார் மருண்டு

நூல்: திணை மாலை நூற்றைம்பது (#30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது

சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

துக்கடா

 • ஐந்து அகத்திணைகளைப் பற்றிய 150 பாடல்களைக் கொண்ட நூல் இது. ஆகவே ‘திணை மாலை நூற்றைம்பது’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • ஒரு ரகசியம், நூற்றைம்பது என்பது சும்மா பெயர்மட்டும்தான், உண்மையில் இதில் கொசுறாக 3 பாடல்கள் உண்டு 🙂
 • ’இதென்ன நியாயம்? நாட்டாமை, பேரை மாத்து!’ என்று கோபப்படாதீர்கள். முத்தொள்ளாயிரம் 3 * 900 = 2700 பாடல்களில் நமக்குக் கிடைத்தது நூற்றுச் சொச்சம்தானே? பாக்கியெல்லாம் தொலைந்துபோய்விடவில்லையா? அதோடு ஒப்பிடும்போது இந்த மூன்று எக்ஸ்ட்ரா பாடல்கள் தம்மாத்தூண்டு :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
 • தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
 • புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
 • மனம்காக்க வைத்தார் மருண்டு

363/365

Posted in அகம், ஆண்மொழி, காதல், குறிஞ்சி, திணை மாலை நூற்றைம்பது, வெண்பா | 31 Comments

கேள்வியும் பதிலும்

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,

ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார்

*

சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல்,

உற்றது உரைத்தல், உறுவது கூறல்,

இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி

நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப

நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386)

பாடியவர்: பவணந்தி முனிவர்

கேள்விகள் ஆறு வகைப்படும். இந்த ஆறையும் புலவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்:

1. அறி வினா (பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார், ‘இந்தியாவின் தலைநகரம் எது?’)

2. அறியா வினா (பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி. உதாரணமாக, மகன் தாயைக் கேட்கிறான், ‘அம்மா, இன்னிக்கு என்ன டிஃபன்?’)

3. ஐயுறல் வினா (சந்தேகமாகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?’ 😉 )

4. கொளல் வினா (ஒன்றைப் பெறுவதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’)

5. கொடை வினா (ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? வெறும் காலோட நடக்கறே? உன் காலுக்குச் செருப்பு இல்லையா?’)

6. ஏவல் வினா (ஏவுதல் / கட்டளை இடுதல் பொருட்டுக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? சாப்டாச்சா?’)

*

அதேபோல், பதில்கள் ஆறு வகைப்படும். இதில் முதல் மூன்றைவிட, அடுத்து வரும் ஐந்து மிகவும் சிறந்தவை:

1. சுட்டு விடை (ஒன்றைச் சுட்டிக்காட்டிச் சொல்வது, உதாரணமாக, ‘அதோ அந்த வழியா நடந்தா ஆத்தங்கரைக்குப் போகலாம்’)

2. மறை விடை (எதிர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்யமாட்டேன்’ என்ற பதில்)

3. நேர் விடை (நேர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்வேன்’ என்ற பதில்)

4. ஏவல் விடை (ஏவுதல் / கட்டளை இடுதல். உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நீயே செய்’ என்ற பதில்)

5. வினாதல் விடை (ஒரு கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே கேட்பது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா எனக்கு என்ன தருவே?’ என்ற பதில்)

6. உற்றது உரைத்தல் விடை (நடந்ததைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த  வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நேத்துலேர்ந்து எனக்கு ஒரே தலைவலி’ என்ற பதில்)

7. உறுவது கூறல் விடை (இனிமேல் நடக்கப்போவதைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா என் உடம்பு வலிக்கும்’ என்ற பதில்)

8. இனமொழி விடை (நேரடிப் பதில் சொல்லாமல் அதோடு தொடர்புடைய இன்னொரு விஷயத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என்ற பதில்)

துக்கடா

 • ’இந்த உரையே துக்கடமாதிரிதான் இருக்கிறது. இன்னும் எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் எழுதப்போகிறானா?’ என்று டென்ஷனாகாதீர்கள். ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்
 • ‘நேர்மறை எண்ணங்கள்’ என்று படித்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து, அப்படி எழுதுவது சரியல்ல, ‘நேர் எண்ணங்கள்’ போதும்
 • உதாரணமாக, இந்த இரண்டாவது சூத்திரத்தில் ’மறை, நேர்’ என்ற பகுதியைக் கவனியுங்கள். ‘நேர்’ என்றால் ‘நேர்’தான், குழப்பம் இல்லை, அதற்கு oppositeஆக ‘எதிர்’ என்று சொல்லாமல் ‘மறை’ என்று பயன்படுத்துகிறார் பவணந்தி முனிவர், தமிழில் இதன் அர்த்தம், எதிர்மறுத்தல்
 • ஆக, ‘எதிர்மறை’ என்றால், கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருமுறை ‘எதிர்’க்கிறோம். அதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. ‘நேர்மறை’ என்றால்? ‘நேர் எதிர்’ என்று அர்த்தமா?

362/365

Posted in இலக்கணம், நன்னூல், பட்டியல் | 15 Comments

கண்டீரோ? கண்டோம்!

’எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,

தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்,

அன்னாரிருவரைக் காணிரோ? பெரும!’

‘காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை,

ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்.

பல வுறு நறும் சாந்தம் படுப்பவருக்கு அல்லதை

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

ஏழ்புனர் இன்னிசை முஅர்ல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

எனவாங்கு,

இறந்த கற்பினாள்கு எவ்வம் படரன்மின்,

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறம் தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே!’

நூல்: கலித்தொகை (#8)

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ

சூழல்: பாலைத்திணை, காதலனும் காதலியும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். காதலியின் தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள், வழியில் சந்தித்த சிலரிடம் விசாரிக்கிறாள்

அந்தணர்களே, பெருமைக்குரியவர்களே,

இந்தப் பாலைவனப் பாதையில், வெப்பத்தை உமிழ்கின்ற சூரியனின் கதிர்களை உங்களுடைய குடைகள் ஏந்திக்கொள்கின்றன. அத்தகைய குடைகளில் நிழலில் நீங்கள் நடக்கிறீர்கள்.

உங்களிடம் உள்ள தண்ணீர்க் கமண்டலம் உறியில் தொங்குகிறது, முக்கோலைத் தோளில் சுமந்திருக்கிறீர்கள்.

நீங்கள் எப்போதும் நல்லதையே நினைக்கிறவர்கள், தீயவற்றை மனத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உடனே மறக்கிறவர்கள். ஆகவே, ஐம்பொறிகளும் உங்களுடைய கட்டளைகளைக் கேட்டு நடக்கின்றன, நீங்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்கிறீர்கள்.

ஆகவே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்.

என்னுடைய மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகனான ஒருவனும் காதல் கொண்டார்கள். இன்றைக்கு அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆகவே, ஊரை விட்டுக் கிளம்பி இந்தக் காட்டுப் பாதையில் சென்றுவிட்டார்கள்.

அப்படிப்பட்ட யாரையும் நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்!

*

அம்மா, கடந்து செல்வதற்குச் சிரமமான பாதை இது. ஆனாலும், ஓர் ஆண் அழகனின் பின்னே உன் மகள் இந்தப் பாதையில் நடக்கத் துணிந்தாள். மடப்பத்தை உடைய அந்த இளம்பெண்ணைப் பெற்ற பெருமைக்கு உரிய தாயே,

நாங்கள் அந்த இருவரையும் பார்க்கவே இல்லை என்று பொய் சொல்லமாட்டோம். பார்த்தோம்.

ஆனால், அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்லிப் பிரிக்க நாங்கள் எண்ணவில்லை. ஏன் தெரியுமா?

*

சந்தன மரம், மலைமீது பிறக்கிறது. ஆனால் அங்கே வாழ்கிறவர்கள் அதைப் பயன்படுத்தமுடியாது. கீழே தரையில் உள்ள யாரோதான் அந்தச் சந்தனக் கட்டையை அரைத்து உடலில் பூசிக்கொள்வார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

சிறந்த முத்துகள் கடல் நீரில் பிறக்கின்றன. ஆனால் கடலில் வாழ்கிற யாரும் அவற்றைப் பயன்படுத்தமுடியாது. தரையில் உள்ள யாரோதான் அவற்றைக் கோத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்துகொள்வார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

யாழில் ஏழு வகையான இனிய இசை தோன்றுகிறது. ஆனால் அது அந்த யாழுக்குப் பயன்படுவதில்லை. வேறு யாரோதான் அந்த இசையைக் கேட்டு மகிழ்கிறார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

தாயே,

உன் மகள் நல்ல கற்பு நெறியைக் கொண்டவள். சிறந்த ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறாள். இது உலக வழக்கில் உள்ள விஷயம்தான். நீ அதுபற்றி வருந்தாதே!

துக்கடா

 • கலித்தொகைப் பாடல்கள் அனைத்துமே கிட்டத்தட்ட குறும்படத் திரைக்கதைகள்போல் அமைந்தவைதான். குறிப்பாக இந்தப் பாடல், மிகச் சிறப்பான காட்சி அமைப்பு, அருமையான வசனங்களைக் கொண்டது
 • இது சொல்லும் கருத்தை நாம் இன்றைய வாழ்வியல் கோணத்தில் ஏற்காமல் இருக்கலாம். சங்க காலத்து மரபு இது என்ற அளவில் புரிந்துகொண்டால் நல்லது

361/365

Posted in கலித்தொகை, நாடகம், பாலை | 33 Comments

எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்,

….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,

மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,

….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த

….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,

….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் / திருப்பள்ளி எழுச்சி (#1)

பாடியவர்: தொண்டரடிப்பொடியாழ்வார்

பொழுது விடிந்துவிட்டது. சூரியன் கிழக்கு திசைச் சிகரத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். மிகுந்த இருள் தீர்ந்துவிட்டது. அழகாகக் காலை நேரம் புலர்ந்திருக்கிறது. எங்கும் பூக்கள் மலர்ந்துள்ளன. அவற்றிலிருந்து தேன் ஒழுகுகிறது.

உன்னைத் தரிசிப்பதற்காக, தேவர்களும் அரசர்களும் வந்து குவிந்துள்ளார்கள். அவர்கள் அழைத்துவந்த ஆண், பெண் யானைக் கூட்டங்கள் சத்தமிடுகின்றன. இடையிடையே முரசு முழங்குகிறது. இவையெல்லாம் சேர்ந்து, அலைகள் நிறைந்த கடலின் ஓசைபோல் சத்தம் கேட்கிறது.

திருவரங்கத்து இறைவனே, துயில் கலைந்து எழுந்தருள்வாய்!

துக்கடா

 • சமஸ்கிருதச் ’சுப்ரபாதம்’ உலகப் பிரபலம். தமிழிலும் அதேபோன்ற அழகான ‘திருப்பள்ளி எழுச்சி’ப் பாடல்கள் உள்ளது பலருக்குத் தெரியாது. இந்த வரிசையில் இதேபோல் மொத்தம் 10 பாடல்களைப் பாடியுள்ளார் தொண்டரடிப்பொடியாழ்வார்
 • இந்தப் பாடல் ’எழு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்ற வகையைச் சேர்ந்தது. வாய்விட்டுப் படிப்பதற்கு ஏற்றது
 • ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பது ஆண் பிள்ளையாகிய திருமால் அல்லவா? அவரை ’அரங்கத்து அம்மா’ என்று அழைப்பது ஏன்?
 • ஆண்டவனுக்கு ஆண், பெண் பேதம் இல்லை என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரிதானா?

360/365

Posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 29 Comments

போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!

கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ்

அம் கண் உலகு அளித்தலான்!

*

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்!

*

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல் நின்று தான் சுரத்தலான்!

*

பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு

ஓங்கிப் பரந்து ஒழுகலான்!

நூல்: சிலப்பதிகாரம் (மங்கல வாழ்த்து)

பாடியவர்: இளங்கோவடிகள்

நிலவைப் போற்றுவோம்!

எதற்கு?

மகரந்தங்கள் நிறைந்த மலர்களைத் தொடுத்து மாலையாக அணிந்திருக்கிற சோழனின் குளிர்ச்சியுடைய வெண்கொற்றக்குடையைப்போல, இந்த அழகிய உலகம் முழுவதற்கும் நிலவு அருள் செய்கிறது. ஆகவே, நிலவைப் போற்றுவோம்!

*

சூரியனைப் போற்றுவோம்!

எதற்கு?

காவிரி ஆற்றைக் கொண்ட அந்தச் சோழனின் ஆணைச் சக்கரத்தைப்போல, பொன் வேய்ந்த சிகரங்களைக் கொண்ட மேரு மலையை வலம் வருவதால், சூரியனைப் போற்றுவோம்!

*

மாமழையைப் போற்றுவோம்!

எதற்கு?

அச்சத்தைத் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகம்முழுவதற்கும் சோழன் கருணையைப் பொழிகிறான். அதுபோல, அந்தப் பெரிய மழையும் மேலே நின்று வளங்களைச் சுரக்கிறது. ஆகவே, மாமழையைப் போற்றுவோம்!

*

பூம்புகாரைப் போற்றுவோம்!

எதற்கு?

கடலை வேலியாகக் கொண்ட இந்த உலகத்தில், சோழனின் குலத்தைப்போலவே பூம்புகார் நகரமும் பழமை வாய்ந்தது, உயர்ந்தது, சிறந்து விளங்குவது, ஆகவே, பூம்புகாரைப் போற்றுவோம்!

துக்கடா

 • ’மங்கல வாழ்த்து’ என்பது ஒரு பெரும் காவியத்தை நல்ல சொற்களைச் சொல்லித் தொடங்கும் ஓர் உத்தி. அதன்படி இளங்கோவடிகள் தேர்ந்தெடுத்த நல்ல சொற்களால் நிலா, சூரியன், மழை ஆகியவற்றைப் போற்றிவிட்டுப் பூம்புகாரைப் புகழ்ந்து பாடுகிறார், அதன்பிறகுதான் ஹீரோ, ஹீரோயின் அறிமுகமெல்லாம்!
 • இப்போதும் ‘மங்கல வாழ்த்து’ உண்டு. சிலர் தங்களது சினிமா படங்கள் அல்லது நாடகங்களை ’ஆண்டவா, எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்பது போன்ற நல்ல வாசகங்களைச் சொல்லித் தொடங்குவார்கள், எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழி போடுவதுகூட இப்படிப்பட்ட பழக்கம்தானே?
 • தெரியுமா? இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு வெண்பா, 2 அல்லது 4 வரிகளைக் கொண்ட வெண்பாதான் நமக்குப் பழக்கம், இவை தலா 3 வரிகளைக் கொண்டவை, ‘சிந்தியல் வெண்பா’ என்பார்கள்

359/365

Posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா | 22 Comments