கேள்வியும் பதிலும்

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,

ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார்

*

சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல்,

உற்றது உரைத்தல், உறுவது கூறல்,

இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி

நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப

நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386)

பாடியவர்: பவணந்தி முனிவர்

கேள்விகள் ஆறு வகைப்படும். இந்த ஆறையும் புலவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்:

1. அறி வினா (பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார், ‘இந்தியாவின் தலைநகரம் எது?’)

2. அறியா வினா (பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி. உதாரணமாக, மகன் தாயைக் கேட்கிறான், ‘அம்மா, இன்னிக்கு என்ன டிஃபன்?’)

3. ஐயுறல் வினா (சந்தேகமாகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?’ 😉 )

4. கொளல் வினா (ஒன்றைப் பெறுவதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’)

5. கொடை வினா (ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? வெறும் காலோட நடக்கறே? உன் காலுக்குச் செருப்பு இல்லையா?’)

6. ஏவல் வினா (ஏவுதல் / கட்டளை இடுதல் பொருட்டுக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? சாப்டாச்சா?’)

*

அதேபோல், பதில்கள் ஆறு வகைப்படும். இதில் முதல் மூன்றைவிட, அடுத்து வரும் ஐந்து மிகவும் சிறந்தவை:

1. சுட்டு விடை (ஒன்றைச் சுட்டிக்காட்டிச் சொல்வது, உதாரணமாக, ‘அதோ அந்த வழியா நடந்தா ஆத்தங்கரைக்குப் போகலாம்’)

2. மறை விடை (எதிர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்யமாட்டேன்’ என்ற பதில்)

3. நேர் விடை (நேர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்வேன்’ என்ற பதில்)

4. ஏவல் விடை (ஏவுதல் / கட்டளை இடுதல். உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நீயே செய்’ என்ற பதில்)

5. வினாதல் விடை (ஒரு கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே கேட்பது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா எனக்கு என்ன தருவே?’ என்ற பதில்)

6. உற்றது உரைத்தல் விடை (நடந்ததைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த  வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நேத்துலேர்ந்து எனக்கு ஒரே தலைவலி’ என்ற பதில்)

7. உறுவது கூறல் விடை (இனிமேல் நடக்கப்போவதைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா என் உடம்பு வலிக்கும்’ என்ற பதில்)

8. இனமொழி விடை (நேரடிப் பதில் சொல்லாமல் அதோடு தொடர்புடைய இன்னொரு விஷயத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என்ற பதில்)

துக்கடா

 • ’இந்த உரையே துக்கடமாதிரிதான் இருக்கிறது. இன்னும் எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் எழுதப்போகிறானா?’ என்று டென்ஷனாகாதீர்கள். ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்
 • ‘நேர்மறை எண்ணங்கள்’ என்று படித்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து, அப்படி எழுதுவது சரியல்ல, ‘நேர் எண்ணங்கள்’ போதும்
 • உதாரணமாக, இந்த இரண்டாவது சூத்திரத்தில் ’மறை, நேர்’ என்ற பகுதியைக் கவனியுங்கள். ‘நேர்’ என்றால் ‘நேர்’தான், குழப்பம் இல்லை, அதற்கு oppositeஆக ‘எதிர்’ என்று சொல்லாமல் ‘மறை’ என்று பயன்படுத்துகிறார் பவணந்தி முனிவர், தமிழில் இதன் அர்த்தம், எதிர்மறுத்தல்
 • ஆக, ‘எதிர்மறை’ என்றால், கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருமுறை ‘எதிர்’க்கிறோம். அதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. ‘நேர்மறை’ என்றால்? ‘நேர் எதிர்’ என்று அர்த்தமா?

362/365

Advertisements
This entry was posted in இலக்கணம், நன்னூல், பட்டியல். Bookmark the permalink.

15 Responses to கேள்வியும் பதிலும்

 1. yadhubala says:

  அருமை….!! எதிர்மறை என்றால் ”எதிர்எதிர்” என்று வராதோ..?? திரு krs எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்…..!

 2. //ஐயுறல் வினா = ‘நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?’//

  நாள் நெருங்க நெருங்க, சொக்கருக்கு நெக்கலு தூக்கலாப் போச்சு:)))
  ஆனா சொக்கரைத் தப்பு சொல்ல முடியாது…
  முன்பு இதே சொக்கன் தானே, நக்கீரனிடம்…”அறிந்தது, அறியாதது…அனைத்தும் அறிவோம்” ன்னாரு?
  அப்பவே நக்கீரன் கேட்டிருக்கணும்: “எச்சூஸ் மீ, நீங்க லார்ட் சிவனா? லார்ட் லபக்கு சிவனா?” ன்னு :)))

 3. //நேர்மறை எண்ணங்கள்’ என்று படித்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து, அப்படி எழுதுவது சரியல்ல, ‘நேர் எண்ணங்கள்’ போதும்//

  இந்த விடயத்தில் சொக்கரின் கருத்தே என் கருத்தும்!
  * நேர்மறை வாக்கியம் ன்னு சொல்லத் தேவையில்லை!
  * நேரான வாக்கியம் ன்னு சொன்னாலே போதும்!

  என்னாது? தரவா??
  இதுக்கு நான் குடுக்குணுமா என்ன?:)))

  சரி, சொக்கர் குடு-ன்னாக் குடுக்குறேன்!:)

  • இதுக்கு, இலக்கண விளக்கம் என்ன-ன்னா…

   எதிர்மறை வினையெச்சம் ன்னு இருக்கு!
   ஆனா நேர்மறை வினையெச்சம் ன்னு இருக்கா?:)

   * வண்டி ஓடாது; ஆ=எதிர்மறை விகுதி
   * வண்டி ஓடியது; அ=?

   இதை நேர்மறை விகுதி-ன்னு சொல்ல மாட்டோம்!
   = “உடன்பாட்டு விகுதி”-ன்னு சொல்லுவோம்!
   = எதிர்-மறை X உடன்-பாடு
   ——————–

   தமிழில் பொருளாழம் உண்டு!
   Opposite = எதிர் ன்னு சொன்னாலே போதும்; eg: எதிர்ச்சொல்
   அப்பறம் என்ன, எதிர்மறை?

   Negative Thoughts = எதிர்மறை எண்ணங்கள்
   அதாச்சும் மறை=மறு! மறுத்தல்
   * எதிராக மட்டும் இல்லாது, ஒன்றை நமக்கு மறுப்பதால் = எதிர்+மறை!
   * உடன் இருந்து, ஒன்றை நமக்குப் படுப்பதால் (கொடுப்பதால்) = உடன்+படு (அ) நேர்ப்படு
   ——————–

   உடன்பாட்டு வினை
   எதிர்மறை வினை
   “நேர்” என்பது பிற்கால வழக்கம்!

  • When Arithmetic & Math gained awareness…
   Positive & Negative க்கு தமிழ்ச் சொற்கள் தேவைப்பட்டன!

   Positive=நேர்முறை
   Negative=எதிர்முறை

   எதிர்-மறை-ன்னு, முன்பே அப்பொருளில் வழங்கியதால்…. எதிர்மறை-ன்னே பிரபலமாகி விட்டது!
   ஆனா இந்தப் பிரபலத்தில் மாட்டிக் கொண்டது=நேர்-முறை; நேர்-மறை ஆயிருச்சி:)))

   நேர்-மறை ன்னா மறுத்தல் ன்னு பொருள்படும்
   அதனால், நேர் (அ) நேர்-முறை ன்னு சொல்லப் பழகிக் கொள்வோம்! தமிழுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லது:)

  • தமிழ்க் கணிதத்தில்
   * Positive = நேர்மம்
   * Negative = எதிர்மம்

   Positive No = நேர்ம எண்
   Positive Sq. Root = நேர்ம மூலம்
   Negative Fraction = எதிர்மப் பின்னம் etc…

 4. முக்கியமா, சொக்கருக்கும், அனைவருக்கும் ஒரு கேள்வி
  * கேள்வி -ல்ல 6 வகைகள்
  * பதில் -ல்லயும் 6 தானே இருக்கணும்? 8 வகை இருக்கே? = ஏன்?:)

  Boss கேள்வி கேட்டா… எதுக்கும் extraவா 2 பதில் கைவசம் வச்சிக்கணும்-ன்னு சொல்லாமச் சொல்லுறாரா நன்னூலார்?:)))

 5. ஆனந்தன் says:

  முதலில் இந்த 365பா நிறைவு விழா ஒன்று சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தக்கோர்களுக்கு வேண்டுதல் விடுக்கிறேன். இது முடிவல்ல, ஆரம்பம் என்பதுபோல் 365பா என்பதை 1000பா ஆக மாற்ற வேண்டும் என்றும் தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்!

  சொக்கருடன் மற்றோரும் சேர்ந்தால் இது முடியாத காரியம் அல்ல. சங்கப் பாடல்களில் சிற்ந்த 1000 பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டால் அது எத்தனை சிறப்பாக அமையும்? பலருக்கு வரமாக அமையும் அல்லவா?

 6. இன்று அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது “கேள்வி பதில்” என்னும் பகுதி! இந்தப் பகுதியில் கேள்வி கேட்பவர்கள் கேட்கும் கேள்விகள் : பவணந்தி முனிவர் எழுதிய இந்தப் பாடலில் வரும் ஆறினுள் அடங்கிவிடுவது அதிசயம் தான்!

  அதே போல பதில் அளிக்கும் “மேதாவிகளும்” நகைச் சுவை உணர்வோடு அளிக்கும் பதில்கள், அறிவுசார்ந்த பதில்கள், உண்மையான விடையைச் சொல்லத் தயங்கி திசைத் திருப்பும் யுக்தியுடன் அளிக்கும் பதில்கள், என்று அனைத்து வகையான பதில்களும் இப்பாடலில் வந்து விடுகிறது.

  அது தவிர நம்முடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துக் கேள்வி பதில்களும், முக்கியமாக சிறு குழந்தைகள் கேட்கும் கேள்வி வகைகளும் அவர்களைச் சமாளிக்க நாம் சொல்லும் விடை வகைகளும் இப்பாடலில் அடங்கியுள்ளது!

  amas32

 7. அருமையான பதிவுகள்! பாராட்டுகள்! சொக்கன் அவர்களுக்கும் கருத்தளித்த அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்க!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s