கண்டீரோ? கண்டோம்!

’எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,

தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்,

அன்னாரிருவரைக் காணிரோ? பெரும!’

‘காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை,

ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்.

பல வுறு நறும் சாந்தம் படுப்பவருக்கு அல்லதை

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

ஏழ்புனர் இன்னிசை முஅர்ல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

எனவாங்கு,

இறந்த கற்பினாள்கு எவ்வம் படரன்மின்,

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறம் தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே!’

நூல்: கலித்தொகை (#8)

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ

சூழல்: பாலைத்திணை, காதலனும் காதலியும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். காதலியின் தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள், வழியில் சந்தித்த சிலரிடம் விசாரிக்கிறாள்

அந்தணர்களே, பெருமைக்குரியவர்களே,

இந்தப் பாலைவனப் பாதையில், வெப்பத்தை உமிழ்கின்ற சூரியனின் கதிர்களை உங்களுடைய குடைகள் ஏந்திக்கொள்கின்றன. அத்தகைய குடைகளில் நிழலில் நீங்கள் நடக்கிறீர்கள்.

உங்களிடம் உள்ள தண்ணீர்க் கமண்டலம் உறியில் தொங்குகிறது, முக்கோலைத் தோளில் சுமந்திருக்கிறீர்கள்.

நீங்கள் எப்போதும் நல்லதையே நினைக்கிறவர்கள், தீயவற்றை மனத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உடனே மறக்கிறவர்கள். ஆகவே, ஐம்பொறிகளும் உங்களுடைய கட்டளைகளைக் கேட்டு நடக்கின்றன, நீங்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்கிறீர்கள்.

ஆகவே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்.

என்னுடைய மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகனான ஒருவனும் காதல் கொண்டார்கள். இன்றைக்கு அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆகவே, ஊரை விட்டுக் கிளம்பி இந்தக் காட்டுப் பாதையில் சென்றுவிட்டார்கள்.

அப்படிப்பட்ட யாரையும் நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்!

*

அம்மா, கடந்து செல்வதற்குச் சிரமமான பாதை இது. ஆனாலும், ஓர் ஆண் அழகனின் பின்னே உன் மகள் இந்தப் பாதையில் நடக்கத் துணிந்தாள். மடப்பத்தை உடைய அந்த இளம்பெண்ணைப் பெற்ற பெருமைக்கு உரிய தாயே,

நாங்கள் அந்த இருவரையும் பார்க்கவே இல்லை என்று பொய் சொல்லமாட்டோம். பார்த்தோம்.

ஆனால், அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்லிப் பிரிக்க நாங்கள் எண்ணவில்லை. ஏன் தெரியுமா?

*

சந்தன மரம், மலைமீது பிறக்கிறது. ஆனால் அங்கே வாழ்கிறவர்கள் அதைப் பயன்படுத்தமுடியாது. கீழே தரையில் உள்ள யாரோதான் அந்தச் சந்தனக் கட்டையை அரைத்து உடலில் பூசிக்கொள்வார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

சிறந்த முத்துகள் கடல் நீரில் பிறக்கின்றன. ஆனால் கடலில் வாழ்கிற யாரும் அவற்றைப் பயன்படுத்தமுடியாது. தரையில் உள்ள யாரோதான் அவற்றைக் கோத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்துகொள்வார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

யாழில் ஏழு வகையான இனிய இசை தோன்றுகிறது. ஆனால் அது அந்த யாழுக்குப் பயன்படுவதில்லை. வேறு யாரோதான் அந்த இசையைக் கேட்டு மகிழ்கிறார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

*

தாயே,

உன் மகள் நல்ல கற்பு நெறியைக் கொண்டவள். சிறந்த ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறாள். இது உலக வழக்கில் உள்ள விஷயம்தான். நீ அதுபற்றி வருந்தாதே!

துக்கடா

 • கலித்தொகைப் பாடல்கள் அனைத்துமே கிட்டத்தட்ட குறும்படத் திரைக்கதைகள்போல் அமைந்தவைதான். குறிப்பாக இந்தப் பாடல், மிகச் சிறப்பான காட்சி அமைப்பு, அருமையான வசனங்களைக் கொண்டது
 • இது சொல்லும் கருத்தை நாம் இன்றைய வாழ்வியல் கோணத்தில் ஏற்காமல் இருக்கலாம். சங்க காலத்து மரபு இது என்ற அளவில் புரிந்துகொண்டால் நல்லது

361/365

Advertisements
This entry was posted in கலித்தொகை, நாடகம், பாலை. Bookmark the permalink.

33 Responses to கண்டீரோ? கண்டோம்!

 1. Rex Arul says:

  இப்பாடலை பல வருடங்களாய் தேடி வந்தேன். கடைசியாக நீங்கள் பதித்து என்னை மகிழ்வடைய செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி!

  • Rex இந்த “ஓடுகாலிப் பாட்டைப்” பல வருடங்களாய்த் தேடியதின் இரகசியம் என்னவோ?:))

  • இந்தப் பாடலை கல்லூரியில் படித்த ஞாபகம். தமிழ் வாத்தியார் இரவுக் குறிப்பு பாடலை படித்து விட்டு இதை நடத்தினார், கதை போலவே இருந்தது. இன்னிக்கு சொக்கர் மூலம் அந்த தமிழ் வகுப்புக்கு சென்ற ஞாபகம். நன்றி!

   பாடலில்:

   நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
   தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
   சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

   இப்படி அழுத்தம் இருக்கு! தமிழ் வாத்தியார், இந்த வரிகளுக்கு வேறு வேறு அர்த்தம் சொன்னார். ஆனா சொக்கர் எல்லாத்துக்கும் “யோசித்துப்பார்த்தால்” -ன்னு சொல்லிட்டார்!

   • என். சொக்கன் says:

    உரையாகச் சொல்லும்போது, குறிப்பாக வசன நடையில் எழுதும்போது ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தி நல்ல impact தரும். அதனாலேயே அந்த மூன்று வாக்கியங்களையும் ஒரேமாதிரி எழுதினேன். இது பதவுரை அல்ல, விரிவுரையும் அல்ல 🙂

   • உங்கள் தமிழாசிரியர் சொன்னது = உணர்ச்சியுரை
    எங்கள் சொக்கர் சொல்வது = திரையுரை
    முன்னது = கதை; பின்னது= திரைக்கதை! அப்படித் தான் ஆகும்:))

    //அழுத்தம் இருக்கு! தமிழ் வாத்தியார், இந்த வரிகளுக்கு வேறு வேறு அர்த்தம் சொன்னார்//

    ஆமாம்! பின்னூட்டத்தில் சொல்கிறேன்!

  • @சொக்கர்: உண்மைதான்! ஒரே வாக்கியத்தை திரும்ப, திரும்ப சொல்லுவது வாதத்துக்கு நல்லா இருக்கும் (விசு படம் மாதிரி 🙂 ). இந்தப் பாடலில் ஒரே வரி கொஞ்சம் கொஞ்சம் மாற்றத்துடன் இருப்பது இன்னும் சிறப்பாக தோன்றியது. நன்றிகள் பல.

   @kyres உங்க மறுமொழி பார்த்தேன். விளக்கங்களுக்கு நன்றி! 🙂

 2. எனக்கு என்ன சொல்லறது-ன்னே தெரீயல சொக்கரே!
  எண்ணிறங்கு சீரில் (#CountDown), பா வெல்லாம் அட்டகாசமா வருது!
  —————-

  கலித் தொகை!
  = கற்று அறிந்தார் ஏத்தும் கலி-ன்னு சொல்லுவாய்ங்க! தமிழர் வாழ்வியலை ரொம்ப நுட்பமாப் படம் பிடிச்சிக் காட்டுவதும் இதான்!
  நிறைய வரிகள் பாருங்க! 140 twitter limitation இல்ல:) so, minute details!

  குறுந் தொகை vs கலித் தொகை ன்னு பார்த்தா…
  * குறுந் தொகை = அத்தனை உணர்ச்சிகளுக்கும் ஒரு சிறு நரம்பு மொட்டு!
  * கலித் தொகை = நரம்பு மொட்டுத் துடித்த பின், எழும் நீண்ட கலவி:))

  அத்தனாம் பெரிய பலாப்பழத்தைச் சின்னக் காம்பு தாங்குறாப் போல = குறுந்-தொகை!
  பலாப் பழத்தைச் சுளையா சுளையா அரிஞ்சி வைச்சாப் போல = கலித்-தொகை!

  • கலி = ஓசை
   அதுவும் வல்லோசை!

   சங்க இலக்கியத்தில் ரெண்டே ரெண்டு தான் = இசைப் பா!
   மீதியெல்லாம் = இயற் பா!
   * கலித் தொகை = கலிந்து வருவது = Rock Music
   * பரி பாடல் = பரிந்து வருவது = Melody!

   பதிற்றுப் பத்திலும், சில பாடல்கள்… தூக்கு, வண்ணம் ன்னு இசை வரும்! ஆனால் முழு நூலும் அல்ல!
   கலி & பரி மட்டுமே = இசை முழுமை!
   ——————-

   தொல்காப்பியரே, இந்தக் கலி & பரியை (நூல்களை அல்ல, இசைக் குறிப்பை) விளக்கிச் செல்வார்!
   இப்படி, இசைக்கு இலக்கணம் வைத்துச் செழித்தது = தமிழ் இசை! 2000+ ஆண்டுகளுக்கு முன்பே!

   இன்னிக்கி எல்லாமே ஆரோஹணம், அவரோஹணம் ன்னு ஆயிருச்சி!:(
   * ஆரோகணம் = ஆரோசை!
   * அவரோகணம் = அமரோசை!

 3. சொக்கரின் துக்கடாவைப் படிச்சிட்டு, நேரடியாப் போயி, பாட்டின் வரிகளை நேரே படிச்சிப் பாருங்க!
  அதுக்குத் தான் பதம் பிரிச்சே, சொக்கரு எழுதறாரு!

  சங்கப் பாடலை, நேரடியாப் படிக்கும் இன்பம் போல் வரவே வராது!
  ஆயிரம் உரைகள் படிச்சாலும், நம் காதலியுடன் நாமே கூடுவது தான் = பேரின்பம்:))

  “சங்கத் தமிழ் Coffee uRinjum technique” – முன்னமே சொல்லியிருக்கேன்!
  Two Two Lines, Two Two Sips at a time!
  நல்லா இழுத்து உறிஞ்சி, மெதுவா அசை போட்டுட்டு…
  அடுத்த இரண்டு உறிஞ்சல்கள்/ வரிகள்!:)

 4. Just for a change, Letz see the last line 1st:)

  //சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
  அறம் தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே!//

  என்னவொரு வீச்சு, இந்த வரியில்!
  * அறம் தலைப் பிரியா
  = அறம் தான் முதலில் (தலை=முதல்); அறத்துப் பால் தானே முதல் பால்?
  = அறம், முதன்மைக் கொள்கையா வச்சிக்கணும்! அதிலிருந்து வழுவாத…

  * ஆறும் மற்று அதுவே
  = ஆறு = வழி! ஆற்றுப் படை = வழி சொல்வது
  = அதுவே வழியாம்! அதுவே! எதுவே?

  * சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
  = காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைக்கொடுத்து….
  = இல்லறமே நல்லறம்!
  = அந்த, அறம் தலைப் பிரியா, ஆறும் மற்று அதுவே!!

  சொல்லுறது யாரு? = துறவிகள்:)))

  • அந்தணர்கள்
   அடிகள்
   முக்கோல் பகவர்கள்!

   அவுங்க தான் இப்படியெல்லாம் சொல்லுறாங்க! = யாருங்க இந்த அந்தணர்கள், முக்கோல் பகவர்கள்?
   ——————-

   பகவன்
   = ஆதி பகவன் முதற்றே உலகு – ஞாபகம் வருதா? அந்தப் “பகவன்” தான்!

   அந்தணர்
   = அந்தணர் என்போர் அறவோர்! மற்று எவ் உயிர்க்கும்
   செந் தன்மை பூண்டு ஒழுகலான்!
   ——————-

   சங்கத் தமிழில், “அந்தணர்கள்” உண்டு!
   = ஆனா இவர்கள் சம்ஸ்கிருதம்/ வேதம் ஓதுவார், பிறப்பின் அடிப்படையில் வருபவர்கள் அல்லர்!

   * இவர்கள் பெரும்பாலும் துறவிகள்! இல்லறத்தாரும் சிலர் உண்டு!
   * பிறப்பின் அடிப்படையில் வருபவர் அல்லர்; ஒழுக்கத்தின் அடிப்படையில்
   * யார் வேண்டுமானாலும், அந்தணராக/ பகவராக வரலாம்!
   * இவர்களைப் பற்றிய பல குறிப்புக்கள் இந்தப் பாட்டில் இருக்கு பாருங்க!
   ——————-

  • முனி-வன் என்பது ஆதித் தமிழ்ச் சொல் அன்று! பின்னாளில் அப்படி ஆகி விட்டது! அது திசைச் சொல்!
   * தமிழில், முனிதல் = சினத்தல்/ வெறுத்தல்
   * வடமொழி முனி, முனிவர் வேற = வேத வ்யாஸோ மஹா முனிஹி

   இதை ஒரு முறை சொல்லப் போய் தான், இலவசக் கொத்தனார்,
   “அடப் பாவிங்களா, முனிவர் தமிழ்ச் சொல் இல்லை-ங்கீறிங்களே, அடுக்குமா ஒங்க தமிழ்/ டுமீல் பற்று?” ன்னு கேட்டாரு:))

   இதுல பற்று ஒன்னுமில்ல! உண்மை! இன்றைய நிலைமை வேற! அதுக்காகத் தொன்மத்தில் கைவைக்கக் கூடாது!
   * இன்று இன்றாக இருக்கட்டும்
   * தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்
   தொன்மத்தையே, பூசி மெழுகித் தான் பேசணும், இல்ல பேசவே கூடாது என்று எதிர்பார்ப்பது தவறு!
   ————–

   நீங்களே யோசிச்சிப் பாருங்க!
   முனிவன் = வசிஷ்டர், விஸ்வாமித்ரர் ன்னு தான் ஞாபகம் வருவாங்க!
   இளங்கோ முனிவர், கவுந்தி முனிவர்-ன்னு சொல்லுறோமா?:))

   * சமணம் = இளங்கோ அடிகள், அறவண அடிகள், கவுந்தி அடிகள்
   * திருமால் = அமுதன் அடிகள், மாலடிகள், ஊரன் அடிகள், மாறன் அடிகள்
   * சமணம்/ திருமால் = முக்கோல் பகவர், ஆதி பகவர்
   * சமணம், வைணவம் மட்டுமல்ல, சைவத்திலும் = நமிநந்தி அடிகள் நாயனார்

   முனிவர் என்பது, பின்னாளில் கலந்து விட்டது!
   எனினும் நேற்று வரை = இராமலிங்க அடிகள் தான்! இராமலிங்க முனிவர் அல்ல!:))

   • வள்ளலார் இராமலிங்க அடிகளை, இராமலிங்க முனிவர்-ன்னு யாரும் சொல்லிடாதீங்கப்பா! கெஞ்சிக் கேட்டுக்கறேன்:)

 5. நாம பாட்டுக்கு வருவோம்!

  இந்தம்மா, “ஓடிப் போன” பொண்ணைத் தேடிப் போறாங்க! வழியில முக்கோல் பகவர்களைப் பாக்குறாங்க!
  அந்தப் பகவர்கள் என்ன சொல்லுறாங்க?
  = “ஓடுகாலி, குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் கம்பு, ஆச்சாரமே போச்சு…” இப்படியெல்லாம் பேசுறாங்களா?-ன்னு நீங்களே பாருங்க!:)))
  ————–

  * இல்லறம் தழுவ, இனியானோடு சென்றுள்ளாள்!
  * பிள்ளைகள் “உங்களுக்குன்னே” பிறப்பவர்கள் அல்லர்; “உங்கள் மூலமாகப்” பிறப்பவர்கள்! அவ்வளவே!
  -இப்படித் தான் சொல்லுறாங்க! நல்ல உவமைகளோடு!

  இப்போ புரிஞ்சிக்கிட்டீங்களா, இந்தப் “பகவர்கள்” யாரு-ன்னு? = அந்தண்மை, செந்தன்மை பூண்டு ஒழுகுபவர்கள்!

  • இந்தப் பாட்டுல, “பகவர்களின்” சில முக்கிய அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கு! Note Cheyyandi:)

   1) எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய, குடை நீழல்
   = ஒரு இடத்தில் தங்காமல், எப்போதும் பயணம் செய்பவர்கள்; அதனால் நிழலுக்காகக் குடை

   2) உறித் தாழ்ந்த கரகமும்
   = கரகம் -ன்னா மண்பானை; நடைப் பயணத்துக்காக, வழியில் பருக நீர்!
   = இது ரிஷிகள் சாபம் போடும் கமண்டலம் கிடையாது:)
   = பூக் “கரகப்” பானை ன்னு கிராமத்தில் கேட்டுப் பாருங்க, தெரியும்

   ஆக, எப்போதும் பயணிப்பவர்கள்-ன்னு தெரியுது!
   ஆஸ்ரமம், தியான பீடம், ஆதீனம், முப்பது சவர ருத்திராட்சம் – இதெல்லாம் கிடையாது!:))
   அமைப்பு, ஆஸ்ரமம் ன்னு ஓர் இடத்தில் தங்கி விடாம, வழிநடைச் செல்வர்கள் = முக்கோல் பகவர்கள்!

   ———————-

  • 3) உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ

   = முக்கோல்
   = மூனு கோலை, ஒன்னாச் சேர்த்துக் கட்டி இருப்பாங்க!
   = அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஒன்னாக் கட்டினா வருவது = வீடு என்பதை உணர்த்த!
   = இதைக் கையில் ஏந்தி, எப்போதும் எடுத்துச் செல்வாங்க!

   தண்டம்-ன்னு இன்னிக்கிச் சொல்றாங்களே! காஞ்சி மடத்தில், தண்டத்தைப் பத்திப் பேசுறதே தண்டம்-ன்னு ஓடிப் போனாரே:)
   அப்படி அல்லாமல்… முக்கோல் மதிப்பு மிக்கது!
   ————

   இன்னிக்கி பாத்தீங்க-ன்னா, இராமானுசர் வழி வந்த சில துறவிகள், கன்னட பசவண்ணர் வழித் துறவிகள், “முக்கோல்” தரிப்பது வழக்கம்!
   * ஒரு கோல் = சித்து (உயிர்கள்)
   * இன்னொரு கோல் = அசித்து ( உலகம்)
   * மூன்றாம் கோல் = இறைவன்
   – இப்படி மூனும் ஒன்னாக் கட்டி, கையில் எங்கும் பிடித்தபடியே செல்வது வழக்கம்!

   உலகம் மாயை! எல்லாமே மாயை-ன்னு சிலர் சொல்லலாம்!
   = ஆனால் உலகம் மாயை அல்ல! நாமும் மாயை அல்ல!
   = உலகம் + நாம் = அனுபவித்துக் கொண்டே, இறைவனை அடையலாம் என்பதைக் காட்டும்…
   விசிட்டாத்வைதம்/ சைவ சித்தாந்த/ விதப்பொருமைத் தத்துவம் இது!

  • 3) உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ
   = சுவல் -ன்னா கற்றை!
   = துணிக் கற்றை போல, முக்கோலில் பறக்கும்! அதான் சுவல் அசைஇ!

   4) வேறு ஓரா நெஞ்சத்துக், குறிப்பு ஏவல் செயல், மாலைக் கொளை நடை அந்தணீர்!
   = அந்தணர் யாரு?-ன்னு பாத்துட்டோம்!
   = வேறு பொருள் எதுவும் விரும்பாது, குறிப்பு ஏவல் (தொண்டு) செய்பவர்கள்
   = (திரு)மாலைக் கொள்ளும், நடை(நடத்தை) உடையவர்கள்

   5) வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்!
   = வெம்மையான காட்டு வழியே செல்லும் பழக்கம் உடையவர்கள்

   இவர்களே “முக்கோல் பகவர்” !!!

 6. மேலே நான் சொன்ன அந்தணர்-முக்கோல் பகவர்கள்… அனைத்துக்குமான தரவு (ஆதாரம்): Tholkaapiyam, ThiruKural, Kali-thogai; என் தனிப்பட்ட சுய விருப்பங்கள் அல்ல!:))

  நூலே கரகம் முக்கோல் மணையே,
  யாயுங் காலை அந்தணர்க் குரிய
  – தொல்காப்பியம்

  • //சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூவரும் ஒருவரே என்று உரைப்பதுபோன்ற ஒரு முக்கோலைத் தோளில் சுமந்திருக்கிறீர்கள்//

   சொக்கரே, இது Tamil VU உரையா? அறியத் தாருங்கள்!

   ஆனால் முக்கோல் = பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்ல!
   தொல்காப்பியத்திலேயே முக்கோல் வருகிறது!
   தொல்-இல் பிரம்மா, சிவன் என்ற வடிவங்களே வரமாட்டார்கள்! இது உரையாசிரியரின் சார்பு நிலை:(

   • என். சொக்கன் says:

    Agreed. Removed that reference now. Thanks!

    Both urais I read (i didnt check tamilvu) referred to siva, vishnu, bramha, I now realize there is no direct reference, hence removed.

   • Dank u Chokkare!:)
    Wish ppl like u, write urai-s for sanga tamizh!

    Even though we appreciate today’s samayam, we also respect thonmam – what it was, was what it was!

 7. அம்மாக்காரியை, அவ வாயாலேயே… என்னமாக் காட்சிப்படுத்தறாரு பாருங்க கவிஞர்!

  //என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
  தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்,
  அன்னார் இருவரைக் காணிரோ?//

  என் மகள், யாரோ ஒரு பையனோடு போனா-ன்னு கூடச் சொல்லலை! “பிறள் மகன்” ன்னு சொல்லுறா!
  அப்படின்னா, மகள்-மகன் ன்னு உரிமை கொண்டாடுதல் தான் மிகுதியா இருக்கு!

  ஒரு அம்மா பேசுற பேச்சு மாதிரியா பேசுறாங்க?:)
  எங்கே அவர்கள் புணர்ந்து விட்டார்களோ? ன்னா யோசிப்பாங்க ஒரு அம்மா? அப்படியே யோசிச்சாலும், அதை வாய் விட்டுக் கேப்பாங்களா?

  * தம்முள்ளே புணர்ந்து = முன்பெல்லாம் யாருக்கும் தெரியாம புணர்ந்தாங்க போல (களவு)
  * தாம் அறி புணர்ச்சியர் = இப்போ ஊருக்கே தெரிஞ்சி போச்சி; அந்தத் தைரியத்தில்,அறிந்தே புணர்கிறார்கள் போலும்:)

  அவ்ளோ கோபம், வெறுப்பு! அம்மா வாயில் தானா வருது:)

  • But see, how the adigaL handles this kinda woman:)

   //காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை,
   ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய
   மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்//

   அம்மா சொன்னது = பிறள் மகன்;
   அடிகள் சொல்வது = ஆண் எழில் அண்ணல்!:)

   மாண் இழை மடவரல் = மாண்பு மிக்க பெண்
   அந்தப் பெண்ணுக்கு, //தாயிர் நீர் போறீர்// = தாய் “போல” தெரியறீங்க!

   sema punch! my daughter ன்னு சொன்ன பிறகும், “தாய் போல” தெரிகிறீர் -ன்னா என்ன அர்த்தம்?:)
   குணத்தில்/பேச்சில் = தாய்மை காணோமே ன்னு குறிப்பு!:)
   ——————-

   //காணேம் அல்லேம்; கண்டனம்!//

   வெறுமனே பார்த்தோம்-ன்னு சொல்லலாமே!
   அதென்ன, பாக்கலை-ன்னு சொல்ல மாட்டோம்! பார்த்தோம்? – Any guess from readers?

   • ‘அம்மா, நீ ஒரு வெறுப்புடனும் பதைபதைப்புடனும் கேட்பதுபோல் தெரிகிறது. களவோடிய அவர்களைப் பார்த்தோம், நிச்சயமாகப் பார்த்தோம். அதை நாங்கள் உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிடுவோம் என நினைக்காதே, கேள். உன் மகள் நன்மகனுடன்தான் சென்றுள்ளாள். சந்தனம் போல், முத்துபோல், யாழின் இசைபோல் அவள் பிறரில் செல்லவேண்டியவள்தான். சென்று அங்கும் பெருமை சேர்க்கும் நற்குணம் மிக்கவள். அதை நீ யோசித்தால், ஆராய்ந்து தெளிந்தால், அவளுடன் உறவாடிச் சுற்றம் ‘சூழுங்கால்’, மகிழ்ச்சியடைவாய்’

    உங்கள் கேள்வியைக் கண்டு தலையைச் சொறிந்தேன், ஆனால், பதில் தெரிந்தேன், புரிந்தேன் என்ற மனநிறைவில்லையே.

 8. இந்த மாதிரி அரியப் பாடல்களையும், தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும், அன்பு நெஞ்சங்களையும் எனக்கும் அறிமுகப்படுத்திய திரு சொக்கருக்கும் அவர் உருவாக்கிய #365பாவுக்கும் நன்றிகள் கோடி.

  அன்னை, வழியில் பார்க்கும் அந்தணர்களை எப்படித் துதிச் செய்து பின் கேள்விக் கேட்கிறாள் பாருங்கள்! பெண் ஓடிப் போய்விட்டாள் என்ற பதைபதைப்பு. அந்தச் சமயத்திலும் வழிப்போக்கர்களாகிய அந்தணர்களிடம் இருந்து உண்மையை கறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய நற்குணங்களை இருப்பதாய் போற்றி, பின் ஒரு பெண்ணும் ஆணும் அவ்வழியே சென்றார்களா என்று கேட்கிறாள். எந்த ஒரு நன்மகனும் இப்படி புகழ்ந்து கேட்டப் பிறகு பொய்யான தகவலை தர மாட்டான்.

  அவர்களும் உண்மையையே சொல்கின்றனர். அவளின் மகள் ஒரு நல்லவனோடு சென்றதால் தடுக்கவில்லை என்ற தகவலைச் சொல்கின்றனர். அதற்கு மேலும் அவர்கள் சொல்லும் உண்மைகள் அனைத்தும் மகத்தானவை. பெண்ணின் பெருமைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார்கள் என்று துணிந்து சொல்லலாம்.

  மனம் கமழும் அரைத்தச் சந்தனத்துக்கும், இயற்கையில் விளையும் நல் முத்துக்கும் குற்றமற்ற யாழிலிருந்து வரும் இன்னிசைக்கும் ஒப்பாகப் நல்ல நெறியுடன் வளர்க்கப் பட்ட பெண்ணைக் குறிப்பிடுகிறார்கள். அதற்காகவே கலித்தொகையில் இந்தப் பாடலை இயற்றிய பாலை பாடிய பெருங்கடுங்கோவிற்கு பெரிய நன்றி.

  Of course, இங்கே அவர் தாய்க்கும் மகளுக்கும் உண்டான அநித்திய உறவைப் பற்றிச் சொல்கையில், சந்தன மரம் மலை மேல் உள்ளது, அனால் சாந்து அரைத்து சாத்திக் கொள்வதோ வேறு யாரோ! கடல் கொடுக்கிறது நல் முத்தை. ஆனால் அது அலங்கரிப்பதோ வேறு ஒருவர் கழுத்தை! அதே போல யாழ் அனுபவிப்பதில்லை அதன் சொந்த இசையை என்று எடுத்துச் சொல்லி, தாயும் மகளை வேறு ஒரு குடும்பத்துக்கு அளிக்கவே பேணி வளர்க்கிறாள் என்பதை உணர்த்துகின்றனர். அதுவும் அந்த தளர்ந்து போயிருக்கும் தாயின் மனதைத் தேற்றுகின்றனர்.

  தாய்மையின் சிறப்பையும் பெண்மகியின் சிறப்பையும் போற்றிப் பாடுகின்ற இப்பாடாலுக்கு ஏன் வணக்கம் 🙂

  amas32

 9. //நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
  தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
  சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;//

  Most Important lines of the poem!
  நினையுங் கால் – தேருங் கால் – சூழுங் கால்!

  முக்கோல் பகவர்கள்-ல்ல? = அதான் போலும், மூனு உவமையாச் சொல்லுறாங்க!:)
  —————–

  மூனும் அருமையான உவமைகள்:

  1. சந்தனம் காட்டுல விளைஞ்சாலும், அங்கேயே இருந்தா, அதன் “மணத்துக்குப்” பெருமை இல்லீயே!
  = சந்தனம் ன்னா தேய்க்கப்படணும்! ஆண்-பெண் என்றால்? :))

  2. முத்து கடல்ல பிறந்தாலும், அங்கேயே இருந்தா, அதன் “ஒளிக்குப்” பெருமை இல்லீயே!
  = முத்து-ன்னா மாலை ஏறணும்!

  3. இசை, வெளியவே வராம, யாழுக்கே சொந்தம்-ன்னு உள்ளேயே தங்கி விட்டால்? அதன் “ஒலிக்குப்” பெருமை இல்லீயே!
  = யாழிசை, ரசிப்பவன் காதுக்கு வரணும்!
  ——————

  இப்போ நல்லாக் கவனிங்க, மூனு உவமையும்
  * சந்தனம் = வாசம் = மூக்கு
  * முத்து = ஒளி = கண்
  * யாழ் = இசை = காது
  கண், காது, மூக்கு வச்சிட்டாரு! வாய், உடம்பு??

  * இறந்த கற்பு = வாய்!
  இறத்தல் ன்னா நிகழ்ந்து விடுதல், எச்சிற் படுதல்; இறந்த காலம் ன்னு சொல்றோம்-ல்ல? அவங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி:))
  அதனால் அது இறந்த கற்பு = எச்சில் ஆகி விட்டது!

  * வழிபடச் சென்றனள் = மெய்/ உடம்பு
  தன் மொத்தமும் அவனுக்கே குடுத்து விட்டாள்; அவனை வழிபட, இல்லறம் புகுந்து விட்டாள்! இனி, உடலால் அவ்வழிபாடே அவளுக்கு!

  இப்போ, எல்லாம் ஒன்னாக் கூட்டுங்க!
  கண், காது, மூக்கு, வாய், உடம்பு என்ற ஐம்புலன் இன்பமும் ஒருங்கே கூடும் இல்லறம்! அதற்கே அவளும்-அவனும் இனி! முருகா!

 10. இந்தக் கடைசி பின்னூட்டம் Sree-க்காக:))

  //நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
  தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
  சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;//

  1) முதலில் நினைச்சிப் பார்க்கணும் – யோசிக்கணும் = நினையுங் கால்!
  2) அடுத்து, அந்த யோசனையின் பயனாக, நல்ல முடிவு எடுக்கணும் – தேர்வு செய்யணும் = தேருங் கால்!
  3) அப்படித் தேர்ந்தெடுத்ததை, வாழ்வில் கடைப்பிடிக்கணும் – சூழணும் = சூழுங் கால்!

  நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
  சந்தனம் = முதல் உவமை = யோசி
  முத்து = இரண்டாம் உவமை = தேர்வு செய்
  யாழிசை = மூன்றாம் உவமை = கடைப்பிடி

  நினையுங்கால் – தேருங்கால் – சூழுங்கால்!

 11. ஆனந்தன் says:

  //தாயிர் நீர் போறீர் = தாய் “போல” தெரியறீங்க//
  செவிலித்தாயாக (ஆயா) இருக்குமோ? செவிலித்தாயும் தனது பாதுகாப்பிலிருக்கும் பெண்ணைத் தன் மகள் என்றே அறிமுகமில்லாதோருக்கு முதலில் கூறுவாள். செவிலித் தாய் வரும் சம்பவங்களும் சங்கப் பாடல்கள் பலவற்றில் உண்டல்லவா?

  • அல்ல!
   “செவிலித் தாய்” என்பதைச் சங்கப் பாடல்கள், பல்வேறு வழிகளில் காட்டி விடும்!
   இங்கு நற்றாயே! (நல்+தாய்=பெற்றவள்)

   //என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்// என்று மாமியார்-மாமியார் உறவைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள்!
   மேலும், //நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே// – சந்தனம் காட்டில் “பிறப்பதைக்” காட்டுவதால்… இது பிறவியால் வந்த நற்றாயே!

 12. ஆனந்தன் says:

  இந்தப் பாடலை, அண்மையில் இங்கு வெளிவந்த “SCENES FROM TAMIL CLASSICS” என்ற அரிய ஆங்கிலப் புத்தகத்தில் முதன் முறையாகப் படித்தேன்:
  http://books.google.co.uk/books?id=RsWJbFW8x5EC&pg=PA218&lpg=PA218&dq=scenes+from+tamil+classics&source=bl&ots=61UfKMWS-V&sig=jsLfbKBNOLINHxGTG0y71-upXT0&hl=en&sa=X&ei=jCvyT-b_I-fH0QXlipjUDQ&redir_esc=y#v=onepage&q=scenes%20from%20tamil%20classics&f=false

 13. Maniraj says:

  சங்க காலத்து மரபு பற்றிய அருமையான அலசல் !

 14. meenakshi says:

  கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
  இல்ல, ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா

  அன்னிலேந்து
  இன்னி வரைக்கும்
  இதே கதை தான்.
  இருந்தாலும்
  இனிக்கிறது.

  சுப்பு தாத்தா.

 15. Pingback: மூன்றாம் நாள்: முத்தான வணக்கம்! « ranjani narayanan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s