எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்,

….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,

மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,

….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த

….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,

….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் / திருப்பள்ளி எழுச்சி (#1)

பாடியவர்: தொண்டரடிப்பொடியாழ்வார்

பொழுது விடிந்துவிட்டது. சூரியன் கிழக்கு திசைச் சிகரத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். மிகுந்த இருள் தீர்ந்துவிட்டது. அழகாகக் காலை நேரம் புலர்ந்திருக்கிறது. எங்கும் பூக்கள் மலர்ந்துள்ளன. அவற்றிலிருந்து தேன் ஒழுகுகிறது.

உன்னைத் தரிசிப்பதற்காக, தேவர்களும் அரசர்களும் வந்து குவிந்துள்ளார்கள். அவர்கள் அழைத்துவந்த ஆண், பெண் யானைக் கூட்டங்கள் சத்தமிடுகின்றன. இடையிடையே முரசு முழங்குகிறது. இவையெல்லாம் சேர்ந்து, அலைகள் நிறைந்த கடலின் ஓசைபோல் சத்தம் கேட்கிறது.

திருவரங்கத்து இறைவனே, துயில் கலைந்து எழுந்தருள்வாய்!

துக்கடா

 • சமஸ்கிருதச் ’சுப்ரபாதம்’ உலகப் பிரபலம். தமிழிலும் அதேபோன்ற அழகான ‘திருப்பள்ளி எழுச்சி’ப் பாடல்கள் உள்ளது பலருக்குத் தெரியாது. இந்த வரிசையில் இதேபோல் மொத்தம் 10 பாடல்களைப் பாடியுள்ளார் தொண்டரடிப்பொடியாழ்வார்
 • இந்தப் பாடல் ’எழு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்ற வகையைச் சேர்ந்தது. வாய்விட்டுப் படிப்பதற்கு ஏற்றது
 • ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பது ஆண் பிள்ளையாகிய திருமால் அல்லவா? அவரை ’அரங்கத்து அம்மா’ என்று அழைப்பது ஏன்?
 • ஆண்டவனுக்கு ஆண், பெண் பேதம் இல்லை என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரிதானா?

360/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு. Bookmark the permalink.

29 Responses to எழுந்தருள்!

 1. yadhubala says:

  ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பது ஆண் பிள்ளையாகிய திருமால் அல்லவா? அவரை ’அரங்கத்து அம்மா’ என்று அழைப்பது ஏன்?..இதற்கு சரியான பொருள் ”பண்டிதர் krs@kres” விரைவில் விளக்குவார் என்று நம்புவோமாக….!!

  • டூ மச்:))))
   யதுபாலா – இப்படியெல்லாம் என்னையத் திட்டாதீங்கோ – பண்டிதன் -ன்னு!:)

   பண்டிதர் ன்னா அது = உ.வே. சாமிநாத ஐயர்!
   பண்டித மணி-ன்னா அது = மு. கதிரேசச் செட்டியார்
   Thatz it!

 2. Vigna says:

  இந்த ‘அரங்கத்து அம்மா’ இன்றைய அரசியலில் இன்னொரு பொருள் கூட தருவது கண்டு நகைத்துக் கொண்டேன்.

 3. >> ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பது ஆண் பிள்ளையாகிய திருமால் அல்லவா? அவரை ’அரங்கத்து அம்மா’ என்று அழைப்பது ஏன்?
  ஆண்டவனுக்கு ஆண், பெண் பேதம் இல்லை என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரிதானா?<<

  நாம்கூட பிரியமான ஒரு நண்பனை நாம் 'என்னம்மா கண்ணு சவுக்கியமா?' என்றும் , பிரிய சகியை 'என்னடா' என்றும் அழைக்கிறோமல்லவா?

  • ஆழ்வார்கள் பல இடங்களில்… “அம்மா” என்று விளிப்பார்கள்…

   1) அம் + மா = அப் “பெரும் பொருள்” ன்னும் வரும்!
   2) அரங்கத்து “அம்மான்” = அம்மா என்று விகாரப்பட்டும் வரும்!
   3) அம்மா = உலக்குக்குத் தாயே -என்ற பொருளும் வரும்!

   சும்மா இரு, சொல் அற என்றலுமே
   அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே – அருணகிரி அநுபூதியில் பாடுவாரு!

   அம்மா, எனக்குப் பொருள் ஒன்னும் தெரியலையே-ன்னு தான் பலரும் உடனே எடுத்துக் கொள்வார்கள்!
   ஆனால், அது அம் + மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பதே அது!

 4. கெளசல்யா சுப்ராஜா ராமா
  -ன்னு உலகம் முழுக்க பிரபலம் ஆனது, எம்.எஸ்.அம்மாவின் குரலால்!

  ஆனா அதுக்கும் பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எம்பெருமானுக்குப் பாடப்பட்டு வருவது = திருப்பள்ளி எழுச்சி!

  திருவரங்கம் மட்டுமல்ல…
  அனைத்து திருமால் கோயில்களிலும், இந்தத் தமிழ்ப் பாவைப் பாடித் தான் துயில் எழுப்ப வேணும்
  -என்பது இராமானுசர் வகுத்துக் குடுத்தது!

  அதனால், தெலுங்கு/ கன்னடத்தில் உள்ள திருத்தலங்களிலும் (108 திவ்யதேசம்), இந்தத் தமிழ்ப் பாவே ஓதப்படும் வழக்கம் இருக்கு!:)
  இந்த வீடியோ பாருங்க! எம்புட்டு சிரத்தையா, தெலுங்குல சொல்லிக் குடுக்குறாரு திருப்பள்ளி எழுச்சியை:))))
  Courtesy: Tirumala Tirupati Devasthanams (TTD)

 5. என்ன இனிமையான ஒரு வர்ணிப்பு! ஆழ்வார்கள் அருளிச் செயலுக்கு ஈடு இணை கிடையாது! கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான் – சூரியன் கிழக்கில் உதித்துவிட்டான் என்பதை என்ன கலை நயத்துடனும், அன்புடனும் வருணிக்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

  சூரியன் உதித்ததினால் இருள் அகன்றது. பொழுது புலர்ந்து பூக்களும் மலர்ந்து தேனைச் சொரிகின்றன என்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு காலைப் பொழுதும் விடிகின்றது. ஆனால் நாம் இப்படி அனுபவிக்கிறோமா என்பது தான் கேள்வி.

  மேற்கு திசையில் தேவர்களும், அரசர்களும் இறைவனை வணங்க ஆவலோடு காத்து நிற்கின்றனர். அவர்களை அழைத்து வந்த யானைகள் இடும் சப்தத்தைக் கூட என்ன அழகாக விவரிக்கிறார் ஆழ்வார் பெருமான். அதனுடன் முரசின் ஒலியும் சேர்ந்து கடல் அலையின் ஓசையாக இறைவனை மென்மையாக எழுப்புகின்றன.

  தாயிடம் தான் அனைவருக்கும் நெருக்கம் அதிகம். அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே என்று சொல்லும் பொழுதே அன்பின் நெருக்கம் தொனிக்கிறதே.

  இந்தப் பாடலைச் சொல்லிப் பார்க்கவே அமுதமாக உள்ளது! 🙂

  amas32

 6. இந்தப் பாட்டின் பின்புலம் – இந்த ஆழ்வார் கதையை அப்பாலிக்காச் சொல்லுறேன்; பாட்டின் அழகை மட்டும் பார்ப்போம்…

  வீட்டுல யாரு முதல் எழுந்து கொள்வார்கள்? = அம்மாவா? அப்பாவா? பசங்களா?
  இதுக்குப் பதில் சொல்லுறது ரொம்பக் கடினம்:)
  இப்பல்லாம் அப்பாக்கள் தான் எழுந்துக்கறாங்க-ன்னு முனுகாதீங்க! அப்பறம் @amas32 அம்மா சண்டைக்கு வந்துறப் போறாங்க:)))

  ஆனா, ஆழ்வார், அம்மாவைத் தான் முதலில் எழுப்புறாரு! = ஏன்?
  பொதுவா, பெண்களுக்கு “விழிப்புணர்வு” அதிகம்!:)

  கொஞ்சம் குரல் குடுத்தாலே எழுந்துருவாங்க; ரொம்பத் தட்டி எழுப்ப வேணாம்!
  ஆண்டாளும் யசோதாய் = அறிவுறாய் ; நந்தகோபாலா = எழுந்திராய் ன்னு தான் பாடுறா!:))
  அதென்ன பெண்களை முதலில் எழுப்பும் பழக்கம்? Too much ஆணாதிக்கம் of ஆண்டாள்:)
  ————————

  அப்பா முதலில் எழுந்தா, நமக்கு என்னா கிடைக்கும்?
  = ஒரு வாய் காப்பி கூடக் கிடைக்காது!
  = செய்தித் தாள் படிப்பாரு; Shaving பண்ணுவாரு; அவரு Shave பண்ணா நமக்கு என்னய்யா கெடைக்கப் போவுது?:)

  அம்மா முதலில் எழுந்தா?
  = காப்பி கிடைக்கும், மணக்க மணக்க
  = குக்குர் விசில் அடிக்கும்; சோறு கட்டிக் குடுப்பா
  = இன்னும் குடும்பத்துக்குத் தேவையான பலதும் கெடைக்கும்!

  அதான், அரங்கத்து “அம்மா” – பள்ளி எழுந்தருளாயே!

 7. //கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்//

  குண திசை = கிழக்கு
  குட திசை = மேற்கு

  திருச்சி மலைக்கோட்டை தான் சிகரம் -ன்னு கற்பனை பண்ணிக்கோங்க:)
  திருவரங்கத்தில் இருந்து பாக்கும் போது, கதிரவன், சிகரம் வைச்சாப் போல, செக்கச் செவேல் ன்னு ’ஜொ’லிக்கத் துவங்கி விட்டான்!

  //கன இருள் அகன்றது, காலை அம் பொழுதாய்//

  கனமான இருளாம்!
  அத்தனை கனத்தையும் இறக்கி வைக்க ஒரே நொடி தான் ஆகும்!
  அதே போல், ஒரு துளிக் கதிரவன் பட்டதும், மொத்த இருளும் அகன்றது!

  • //மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்//
   மது = தேன்; காலையிலேயே வேற ஏதோ-ல்லாம் கற்பனை பண்ணிக்காதீக:))

   //வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி, எதிர்திசை நிறைந்தனர்//
   ஒரு பக்கம் = விண்ணவர்
   ஒரு பக்கம் = மண்ணவர்
   எம்பெருமான், விழிச்சதும், யாரைப் பார்க்கப் போறானோ? ன்னு நிறைஞ்சி இருக்காங்களாம்!

   //இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும்//

   ஈட்டம் = என்ன அழகான தமிழ்ச் சொல்!
   ஈட்டுதல் = பொருள் ஈட்டுதல்-ன்னு சொல்றோம்-ல்ல? உழைத்து உழைத்துச் சேர்த்தல்!
   அதான் * பிச்சை = எடு ன்னு சொல்லி, * வருவாய் = ஈட்டு ன்னு சொல்றாங்க!

   அப்படிச் சிறுகச் சிறுகச் சேர்த்த/ ஈட்டிய களிறும் பிடியும் கூட, இறைவனை வணங்க வந்துருக்கு!
   காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்-னு சொல்லுவாரு எங்க அப்பர் சுவாமிகள்!

   • இப்படி யானையும், பசுவும் வந்து….அதிகாலைத் தரிசனத்தில் நிற்கும் காட்சி…இன்னிக்கும் அரங்கத்தில் உண்டு!

  • திருவரங்க ஆலய வழக்கம் தெரிஞ்சவங்களுக்கு, இந்தச் செய்திகள் தெரியும்!

   * இறைவனை முதலில் அந்தணர்கள் காணக் கூடாது! கோனார் என்னும் முல்லை நில மக்களே/ ஆயர்களுக்கே முதல் தரிசனம்!
   * இறைவனை, திருப்பள்ளி உணர்த்திய பின், தரப்படும் சடாரி/ மாலைகள், சன்னிதிக்குள் வந்து நிற்கும் பசுவுக்கும், யானைக்கும் தரப்படும்

   அதன் பின்னர் தான் மற்ற பூசைகள், வேதம் ஓதுதல் எல்லாம்!
   முதலில், திருப்பள்ளி எழுச்சி என்னும் “ஆழ்வாரின் ஈரத் தமிழே” ஓதப்படும்!
   ————————–

   //முரசும் அதிர்தலில்//

   தொம் தொம் என்று முரசு கொட்டுவது உண்டு!
   ஊதுகோல் ஊதி, பல்லியம், முரசு, பறை மூனும் கொட்டப்படும்!

   //அலைகடல் போன்று உளது எங்கும்//

   கடல் அலைகள், காலையில் சத்தம் போடும் அழகைப் பார்த்து இருக்கீங்களா?
   இரவில் சத்தம் அதிகம்!
   ஆனால் காலையில், அதே சத்தம், மெல்லிய அழகாய் வீசும்/ கேட்கும்!

   அப்படிக் கேக்குதாம், அரங்கனின் வீட்டில் குழுமியுள்ள இந்தக் காட்சிகளின் சத்தம்!
   அதனால், சத்தம் கேட்டுமா எழுந்திருக்கல்ல?…. அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!!!

 8. இந்தப் பாடலை, சுப்ரபாதம் பாடிய அதே எம்.எஸ் அம்மா, பின்னாளில் பாடி இருக்காங்க; ஆனா முதலில் அது பாடப்பட்டு, hitஆகி விட்டது:))
  எம். எஸ். அம்மா சுட்டி தேடினேன், கிடைக்கலை! அருணா சாய்ராம் தான் கிடைச்சுது; solpa adjust maadi:))

 9. திருவரங்கத்தில்…
  * மூலவருக்கு = பெரிய பெருமாள்
  * உற்சவர் = நம் பெருமாள்
  ன்னு தான் பேரு! “ரங்கநாத ஸ்வாமி” எல்லாம் இன்னிக்கி எழுதி ஒட்டினது:) முருகனை “சுப்ரமண்ய ஸ்வாமி” ன்னு எழுதி ஒட்டினாப் போல:))

  ஆழ்வார்கள் காலமாகட்டும்….
  ஆசாரியர்கள் – நாதமுனிகள்/ இராமானுசர் காலமாகட்டும்…
  அட, பின்னாள், அருணகிரியின் காலமே ஆகட்டும்…
  = திருவரங்கம் “பெரிய பெருமாள்” / அரங்கன் என்பது தான் அவன் திருப்பெயர்!!

  உரகபடம் மேல் வளர்ந்த
  “பெரிய பெருமாள்” அரங்கர்
  உலகளவு மால் மகிழ்ந்த …… மருகோனே!
  பகை அசுரர் சேனை கொன்று
  அமரர் சிறை மீள வென்று
  பழநிமலை மீதில் நின்ற …… பெருமாளே!! என்பது திருப்புகழ்!! அருணகிரியும் “பெரிய பெருமாள்” என்றே குறிப்பார்!
  ———————————–

  பொதுவா, “ஊரை வைத்தே பேரை வைக்கும்” வழக்கம் வைணவ சம்பிரதாயத்தில் உண்டு!
  * அரங்கன்
  * வேங்கடவன்/ திருவேங்கடமுடையான்
  * கச்சிக்கு வாய்த்தான் (காஞ்சி)
  – இப்படியே பாசுரங்களிலும் புழங்கும்!

  சொக்கர் குடுத்து இருக்கும் இந்தப் பாசுரம் = அரங்கனுக்கே வாய்த்த பாடல்!
  அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே பெருமாள் = அரங்கன் என்பதால் = “பதின்மர் பாடிய பெருமாள்” என்ற சிறப்புப் பட்டமும் உண்டு!
  (மதுரகவி, தன் குருவான நம்மாழ்வாரைத் தவிர, இறைவனையும் பாட மாட்டேன் என்ற கொள்கையில் நின்று விட்டார்)

 10. சொல்ல மறந்துட்டேனே…..
  இந்தத் திருப்பள்ளி “எழுச்சி” பாடுவது போலவே….”ஊஞ்சலும்”/ உறக்கமும் பாடுவார்கள்!
  யாரு ஊஞ்சல் ஆட்டுறாங்களாம் = அரங்கனை??

  My Darling Guy Murugan only :)))
  = வள்ளியும் கந்தனும் வடம் தொட்டு ஆட்ட….

  Hear it from the MS Subbulakshmi Video
  (இன்னிக்கு ஒரே வீடியோ பின்னூட்டமாவே இருக்கு, சொக்கா):))

 11. //முரசு –
  அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்
  ….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!//

  nnu chollum pothu, told abt the murasu-palliyam kottuthal naa?
  See / Hear it for yourself, in this thirupaLLi ezhuchi video… (Tirumalai – Thiru Venkatam)

 12. பிரமாதமான பாட்டு.
  சின்ன வயசுல, பல்லாண்டுக்கு அப்புறம் மனப்பாடம் பண்ணது திருப்பள்ளியெழுச்சி தான். ஆனா இப்பொ இந்த ஒரு பாட்டைத் தவிர எதுவும் மனப்பாடம் இல்லை 😦

  ஏதமில் தண்ணுமை எல்லாம் tongue twister. சின்ன வயசுல சொல்ல முடிஞ்சிட்டா, ல/ள/ழ உச்சரிப்பு பிரச்சனையே இருக்காது.

  • யோவ்….எங்கிருந்துய்யா இப்படி வரிக்கு வரி அனுபவிக்கிறீரு?:)
   ல, ள, ழ….

   ஏதமில் தண்ணுமை எக்கம்மத் தளியே
   யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி

   கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
   எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்

   விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
   வெள்ளெயிறு உறுவதன் விடத்தனுக் அனுங்கி

   அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
   அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே!!

   • yadhubala says:

    உங்கள் தமிழ் ஆர்வம் கண்டு வியக்கிறேன்…….!!!!!!!

   • //யோவ்….எங்கிருந்துய்யா இப்படி வரிக்கு வரி அனுபவிக்கிறீரு?:) //
    இதை யார் சொல்றாங்கன்னு பாருங்க மக்களே

 13. ஆனந்தன் says:

  பாடலுக்கும் கருத்துரைகளுக்கும் எப்போதும்போல் நன்றி!
  இந்த வேளையில் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சியையும் சற்றே நினைவு கூர்வோம்:

  கூவின பூங்குயில்;கூவின கோழி;
  குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
  ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
  ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
  தேவ! நற் செறிகழற் றாளினை காட்டாய்;
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
  யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்
  எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

  • மாணிக்கவாசகப் பெருமானின் பள்ளியெழுச்சியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி சிவ-ஆனந்தன்!
   ஓர் ஐயம்: சிவாலயங்களில், இத்திருப்பள்ளியெழுச்சி, தினமும் விடியலில் பாடும் வழக்கம் உள்ளதா? அறியத் தாருங்களேன்!

   (மார்கழி 21-30 மட்டும் சில ஆதீனங்களில் பாடிக் கேட்டிருக்கேன்; திருவெம்பாவை முடிந்தவுடன்)

 14. ஆனந்தன் says:

  தினமும் பாடும் வழக்கம் இல்லை. பாடவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு, இராமானுஜர்போல் ஒருவர் சைவத்துக்கு வாய்க்கவில்லைப் போலிருக்கிறது! திருவெம்பாவை நாட்களில் மட்டும் ஈழத்தின் அநேக சைவாலயங்களில் அதிகாலையில் படிப்பர்.
  கொழும்பு, பொன்னம்பலவாணேசர் ஆலய நிகழ்வை இலங்கை வானொலியில் நேரடி ஒலிபரப்பாகவும் கேட்டிருக்கிறேன்.

  • //இராமானுஜர்போல் ஒருவர் சைவத்துக்கு வாய்க்கவில்லைப் போலிருக்கிறது//

   எம்பெருமானே…
   சிவா – உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்! சிவாலயங்களில், தமிழ் தழைக்க.. ஒருவர் பிறந்து வரட்டும்! வர வேணும்!

   கால பூசையில் மட்டும், ஓதுவார்கள் வெளியில் நின்று கொண்டு, அரசாணைக்காக, ஓரு ஓரமாய் ஓதுவது போய்…
   கருவறைக்குள்ளேயும் எக்காலமும் தமிழ் குடிகொள்ள வழி பிறக்கட்டும்! வழி பிறக்கட்டும்! முருகா!

 15. அற்புதமான மனதை நிறைவுறச்செய்யும் பதிவு. பள்ளி எழுச்சியும், பொருளும், பெருமாள் தரிசனமும் எழுதச் சொற்களில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s