போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!

கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ்

அம் கண் உலகு அளித்தலான்!

*

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்!

*

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல் நின்று தான் சுரத்தலான்!

*

பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு

ஓங்கிப் பரந்து ஒழுகலான்!

நூல்: சிலப்பதிகாரம் (மங்கல வாழ்த்து)

பாடியவர்: இளங்கோவடிகள்

நிலவைப் போற்றுவோம்!

எதற்கு?

மகரந்தங்கள் நிறைந்த மலர்களைத் தொடுத்து மாலையாக அணிந்திருக்கிற சோழனின் குளிர்ச்சியுடைய வெண்கொற்றக்குடையைப்போல, இந்த அழகிய உலகம் முழுவதற்கும் நிலவு அருள் செய்கிறது. ஆகவே, நிலவைப் போற்றுவோம்!

*

சூரியனைப் போற்றுவோம்!

எதற்கு?

காவிரி ஆற்றைக் கொண்ட அந்தச் சோழனின் ஆணைச் சக்கரத்தைப்போல, பொன் வேய்ந்த சிகரங்களைக் கொண்ட மேரு மலையை வலம் வருவதால், சூரியனைப் போற்றுவோம்!

*

மாமழையைப் போற்றுவோம்!

எதற்கு?

அச்சத்தைத் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகம்முழுவதற்கும் சோழன் கருணையைப் பொழிகிறான். அதுபோல, அந்தப் பெரிய மழையும் மேலே நின்று வளங்களைச் சுரக்கிறது. ஆகவே, மாமழையைப் போற்றுவோம்!

*

பூம்புகாரைப் போற்றுவோம்!

எதற்கு?

கடலை வேலியாகக் கொண்ட இந்த உலகத்தில், சோழனின் குலத்தைப்போலவே பூம்புகார் நகரமும் பழமை வாய்ந்தது, உயர்ந்தது, சிறந்து விளங்குவது, ஆகவே, பூம்புகாரைப் போற்றுவோம்!

துக்கடா

 • ’மங்கல வாழ்த்து’ என்பது ஒரு பெரும் காவியத்தை நல்ல சொற்களைச் சொல்லித் தொடங்கும் ஓர் உத்தி. அதன்படி இளங்கோவடிகள் தேர்ந்தெடுத்த நல்ல சொற்களால் நிலா, சூரியன், மழை ஆகியவற்றைப் போற்றிவிட்டுப் பூம்புகாரைப் புகழ்ந்து பாடுகிறார், அதன்பிறகுதான் ஹீரோ, ஹீரோயின் அறிமுகமெல்லாம்!
 • இப்போதும் ‘மங்கல வாழ்த்து’ உண்டு. சிலர் தங்களது சினிமா படங்கள் அல்லது நாடகங்களை ’ஆண்டவா, எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்பது போன்ற நல்ல வாசகங்களைச் சொல்லித் தொடங்குவார்கள், எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழி போடுவதுகூட இப்படிப்பட்ட பழக்கம்தானே?
 • தெரியுமா? இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு வெண்பா, 2 அல்லது 4 வரிகளைக் கொண்ட வெண்பாதான் நமக்குப் பழக்கம், இவை தலா 3 வரிகளைக் கொண்டவை, ‘சிந்தியல் வெண்பா’ என்பார்கள்

359/365

Advertisements
This entry was posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா. Bookmark the permalink.

22 Responses to போற்றுதும்!

 1. anonymous says:

  நாள் நெருங்க நெருங்க…. பாவெல்லாம் சூப்பர் சூப்பரா வருதே!:)

 2. என்னங்க இது! எல்லா பாட்டிலும் சோழனையே போற்றாறு? சேர இளவரசர் இல்ல இளங்கோ?

  • Yes Sree:)
   Thatz the “heart of Ilango”!

   பாண்டியன், சேரனையும் கூடப் போற்றுவாரு! பாண்டியனை – தென்னவன் தீதிலன் என்றும் சொல்லுவாரு!

   ஆனா, நூலின் துவக்கம் புகார்க் காண்டம் அல்லவா!
   பொய்யாக் குலக்கொடி வையை வாழி-ன்னு புகார்க் காண்டத்தில் பாட முடியுமா?:)

   புகார் = சோழனின் பதி!
   புகார் = கதை நாயகர்களின் பதி! (கோவலன்-கண்ணகி-மாதவி)
   அதான் துவக்கப் பாடலில் இயற்கை வாழ்த்தோடு, சோழனை வைத்துப் பாடுகிறார்!

   இல்லை..சேரர்களே தமிழ்க் கடவுள், சேரரே தமிழ் மானம் காத்த மன்னர்-ன்னு பீற்றிக் கொண்டால், இளங்கோவை யாரும் தட்டிக் கேக்க முடியாது தான்!
   ஆனால் இளங்கோ அப்படிப்பட்டவர் அல்லர்!
   தன்னை/ தன் சமயம்/ தன் கொள்கையைப் பின்னுக்குத் தள்ளி, தமிழை முன்னுக்குத் தள்ளும் உள்ளம் அவர் உள்ளம்! Gotcha?:)

   • நீங்க சொன்னா சரி! 😉

    சிலப்பதிகாரம் தமிழர் காப்பியமின்னு படித்த ஞாபகம் இருக்கு. கடவுள் வாழ்த்தில் இல்லை, துக்கடவிலாவது சொக்கர் சேரனையும், பாண்டியனையும் சேர்த்திருக்கலாம்! 😉

   • //துக்கடவிலாவது சொக்கர் சேரனையும், பாண்டியனையும் சேர்த்திருக்கலாம்//

    சொக்கரு சொந்தூரு சேலம்-ன்னு நினைக்கிறேன்;
    அது சோணாடு இல்ல;
    ஆனா அண்ணி சோணாடா இருக்கலாம்!
    அதான் சொக்கரின் இந்த ஒருதலைப்பட்சமோ?:)

   • Sree,
    Did u also notice one thing?
    இளங்கோ “சோழன்”-ன்னு எங்குமே சொல்லலை பாருங்க, இந்தப் பாட்டில்! அவன், அவன் ன்னு தான் சொல்லுறாரு!

    அவன் குடை, அவன் ஆழி, அவன் குலம்!
    சோழன் -ன்னு குறிப்பது “காவிரி நாடன்” என்னும் ஒரே சொல்லு தான்! காவிரி நாடு; சேலமும் = காவிரி நாடு தான்:) பெங்களூரும் காவிரி நாடு தான்!:)) இதெல்லாம் சோழம் அல்ல!

    இளங்கோ, இயற்கையைப் போற்றி,
    அதனூடே புகார் நகர மக்கள், அவர்கள் மன்னனை வாழ்த்துவது போல் வைக்கும் எளிய உத்தியே இது!

 3. சிலப்பதிகாரம்
  = காலமெல்லாம் உடனிருக்கும் காவியம் – தமிழின் முதல் காவியம்!
  = எப்படித் துவங்குது பாத்தீங்களா? = இயற்கை வழிபாடு!

  திங்களைப் போற்றுதும்
  ஞாயிறு போற்றுதும்
  மாமழை போற்றுதும்

  இவனல்லவோ தமிழ்க் கவிஞன்!
  சமணக் கொள்கை உடையவனே ஆயினும்…
  தன் பிடித்தங்களை இடைச்செருக தமிழைப் பயன்படுத்திக் கொள்ளாமல்…
  தமிழைத் தமிழாக அணுகும் குணம்!

  இளங்கோ போற்றுதும் இளங்கோ போற்றுதும்!

  • பொதுவா சூரியனைத் தான் முதலில் வாழ்த்தும் வழக்கம்…
   ஞாயிறு வணக்கம்!
   ஆனா, திங்களைப் போற்றுதும் ன்னு முதலில் திங்களை வைத்து, பின் ஞாயிற்றை வைக்கிறாரே இளங்கோ!

   ஏன்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?:)

   • சொந்தச் சரக்கில்லை. அதனால் ஞாயிறிடமிருந்து இரவல் ஒளி வழங்கும் திங்கள் போல், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் விளக்கத்திலிருந்து –

    ===============================================================
    (திங்கள் = நிலவு; போற்றுதும் = போற்றுவோம்; கொங்குஅலர் தார் = தாது நிறைந்த மலர்மாலை; சென்னி = சோழமன்னன்; அங்கண் = அழகிய இடம்; ஞாயிறு = சூரியன்; திகிரி = ஆணைச்சக்கரம்; பொற்கோட்டு = பொன் மயமான சிகரம்; மழை = மேகம்; நாமநீர் = அச்சம் தரும் கடல்; அளி = கருணை)

    எனத் தொடங்குவதில் எத்தனை நயங்கள் பாருங்கள். ‘திங்களை முதலில் கூறினார். இது பெண்மைக்கு முதன்மை தரும் காப்பியம் ஆதலால்’ என விளக்கம் கூறுவர். திங்கள் மங்கலமான சொல் என்பதால் முதலில் கூறினார் என்பர். இன்றைய திறனாய்வாளர்கள் திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை வாழ்த்துவது இயற்கை வாழ்த்து; இயற்கையில் இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். எனவே இவை இறைவாழ்த்து என்கின்றனர். அரசனையே இறைவனாகக் கண்ட இனம் தமிழ் இனம்; எனவே இவை அரசவாழ்த்து என்கின்றனர். சோழனுடைய வெண்கொற்றக் குடை போல் இருப்பதால் திங்களைப் போற்றுகிறார். அவன் ஆட்சிச் சக்கரம் போல் இமயத்தை வலம் வருவதால் ஞாயிற்றைப் போற்றுகிறார். அவன் கொடைபோன்று மேல்நின்று பொழிவதால் மழையைப் போற்றுகிறார். எனவே இவை அரசியல் வாழ்த்தே என்பர். திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இவை மூன்றும் முக்குடை; முக்குடை அருகக் கடவுளுக்கு உரியவை; பின்னர் மதுரைக்காண்டத் தொடக்கத்தில் அருகக் கடவுளைத் திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக்கீழ் இருந்த அறிவன் (சிலப்பதிகாரம்: 11: 1) என்கிறார். எனவே இத்தொடக்க வாழ்த்து அருகக் கடவுள் வாழ்த்தே என்பர்.

    இவை மட்டுமா? திங்கள், ஞாயிறு, மழை என்பன மூன்று காண்டப் பொருண்மையை உள்ளடக்கியுள்ளன என்பர். திங்கள் என்பது தண்மை-குளிர்ச்சி; அது இன்பத்தின் குறியீடு. இன்ப வாழ்வைக் கருவாகக் கொண்ட புகார்க் காண்டத்துக்குத் திங்கள் குறியீடு. ஞாயிறு என்பது வெம்மை-அனல்; அது துன்பத்தின் குறியீடு; துன்பியல் சார்ந்த மதுரைக் காண்டத்துக்கு ஞாயிறு குறியீடு. மழை என்பது அருளின் குறியீடு; அது தெய்வம் சார்ந்தது. வஞ்சிக் காண்டம் தெய்வீகம் நிறைந்தது; ஆகவே மழை வஞ்சிக் காண்டத்துக்குக் குறியீடு.

    கண்ணகியின் வாழ்வின் மூன்று நிலைகளை (இன்ப-துன்ப-தெய்வநிலை) உணர்த்தும் குறியீடுகளாகவும் இவற்றைக் கொள்வர். இவை மட்டும்தான் இவ்வாழ்த்தில் அடங்கியிருக்கின்றனவா? இல்லை. இன்னும் எத்தனை எத்தனை பொருளையோ உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. திங்கள் – கண்ணகி; ஞாயிறு – கோவலன்; மழை – மாதவி என மூன்று பாத்திரங்களைக் குறியீடாகக் கொண்டது என்பர். எப்படி? பொருத்திக் காண்போமா? பாருங்கள் எவ்வளவு நயமாக, பொருத்தமாக இது அமைகிறது!

    மழை பிறக்கிற மூலம் உவர்நீர்க் கடல்; குடிநீருக்குப் பயன்படாது வெறுத்து ஒதுக்கப்படுவது; அதுபோல மாதவி பிறப்பது உவர்நீர்க் கடல் போன்று சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிற பரத்தையர் குலம். உவர்நீர்க் கடலில் ஞாயிற்றின் வெம்மை பட உவர்நீர் நன்னீர் ஆவியாகிறது; மேகமாகிறது; அதுபோலக் கோவலனாகிய ஞாயிறு உவர்நீர் ஆகிய மாதவிபால் பட அவள் நன்னீர் மேகமாக நல்ல குலமகளாக மாறுகிறாள். திங்கள் – தண்மையின் குறியீடு. அது மழை மேகத்தில் பட, மேகம் மழையாகப் பொழிகிறது; அதுபோல் நன்னீர் மேகமாய மாதவிபால் கண்ணகியின் தண் ஒளிபட அவள் நல்ல மனைவியாக – தாயாக அமைகிறாள். எனவே திங்கள், ஞாயிறு, மழை என்பன சிலம்பின் முக்கியப் பாத்திரங்களின் குறியீடாக அமைந்து, அவற்றிற்கு இடையேயான புனிதமான உறவு நிலையையும் விளக்குகிறதன்றோ? இவ்வாறு ஆழ்ந்து பார்த்தால் பல பொருள் நயங்களை இவ்வாழ்த்துப் பாடலில் காண முடிகிறது.
    ===================================================================

   • மேற்கண்ட விளக்கம் உள்ள த.இ.க.க. பக்கம்:

    http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011124.htm

   • அருமை!
    தேடிப் பிடித்துக் குடுத்தாலும், தெவிட்டாத ஒன்னைத் தான் குடுத்து இருக்கீக; நன்றி கந்தசாமி ஐயா!
    ————

    ஞாயிறு = வில்-ஏர் உழவர்கள் போற்றுவது
    திங்கள் = சொல்-ஏர் உழவர்கள் போற்றுவது

    இலக்கியங்களில், எப்பவும் நிலவுக்கே மிக்க பெருமை! நிலவு=காதலுக்குச் சாட்சி என்பதால்!:)

   • இதுவே நான் எதிர்பார்த்த விளக்கம்!

    திங்கள் = கண்ணகி
    ஞாயிறு = கோவலன்
    மழை = மாதவி

    * கண்ணகி = கணவனையே சுற்றி வருபவள் = அவனைச் சுற்றியே தன் கருத்தை வைத்துக் கொண்டவள்!
    * கோவலன் = ஞாயிறு!
    * மாதவி = கதிரவனால் கருத்தரித்துப் பெய்யும் மேகம்/ மழை;

    மாதவிக்கு மட்டுமே மகப்பேறு வாய்த்தது!
    மாதவி என்னும் மேகம் கலைந்து விட்டாலும், அந்த மழை ஈன்ற மணிமேகலை, ஊரையே பசிப் பிணி இன்றி, அறத்தால் நனைத்தது
    ————————-

    இது குறியீடு மட்டுமே; ச்சும்மா உரை வளம்/ சுவையுரை:)

    இதைக் குறிக்கத் தான் இளங்கோ அப்படி எழுதினாரு-ன்னுல்லாம் அடிச்சிச் சொல்ல முடியாது;
    அப்படிப் பார்த்தா, நாலாவதா பூம்புகார் போற்றுதும் ன்னு சொல்லுறாரே; அது யாரு? ன்னு கேட்கலாம்! நான் பூம்புகார் = மணிமேகலை ன்னு சொல்லலாம்!:))

    இளங்கோ எழுதியது = இயற்கை வழிபாடே!

 4. * சிலப்பதிகாரம் துவங்குவதும் = வாழ்த்தில் தான்! (மங்கல வாழ்த்துப் பாடல்)
  * சிலப்பதிகாரம் முடிவதும் = வாழ்த்தில் தான்! (மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு)

  இது ஒரு “மக்கள் இலக்கியம்”!

  இன்னிக்கி தேதியில, சனநாயக ஆட்சி முறையில் கூட, ஆட்சியாளருக்குத் துதி பாட வேண்டி இருக்கு!
  ஆனா சுமார் ஈராயிரம் ஆண்டுக்கு முன்பு, மன்னர்களை வைத்தே கதை/காவியம் பேசிய காலத்தில்…

  எந்த மன்னனையும் சாராது, சாதாரண மக்களை, கதை நாயகர்களாக வைத்து உருவான மக்கள் காப்பியம் = சிலம்பு!
  மக்கள் வாழ்வு-ஒழுங்கு,
  மக்கள் இசை-நடனம்,
  மக்கள் சமயம்… ன்னு பொதுமக்கள் போக்கிலேயே தான் செல்லும்!

  மாதவி ஆடும் நடனத்தையும் காட்டும், ஆயர்கள் தங்கள் இல்லங்களில் ஆடும் குரவைக் கூத்தையும் காட்டும்; வேடர்கள் ஆடும் வேலன் வெறியும் காட்டும்!
  எதையும் மறைக்காது, திரிக்காது, ஒளிக்காது!

  இல்லீன்னா ஒரு பழுத்த சமணக் கவிஞர்… “நாராயணா என்னாத நாவென்ன நாவே, கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, இறைவன் கை வேல் அன்றே”ன்னு எழுதறாரு-ன்னா… அவர் பண்பட்ட உள்ளம் தான் என்னே!
  தன் சொந்தப் பிடித்தங்களைத் தமிழ் மேல் போர்த்தாது, மக்கள் வாழ்வியலை உள்ளது உள்ளபடிக் காட்டும் குணம்!

  • இப்படி இளங்கோவே, இயற்கை வாழ்த்தாப் பாடும் போது….
   சிலம்புக்கும் முன்னால் உள்ள சங்க இலக்கியத்துக்கெல்லாம், “கடவுள் வாழ்த்து” ன்னு எழுதிப் புகுத்துனானுங்க, பின்னாளில்:(

   சங்கப் புலவர்கள், பல்வேறு காலத்தில் எழுதியவற்றைத் தொகுத்து வைச்சா…
   பின்னாடி வந்து, எதுக்குடா கடவுள் வாழ்த்து ன்னு ஒட்ட வைக்கறீங்க?

   நீங்களா ஒரு நூல் எழுதி, அதுக்கு என்ன வாழ்த்து வேணும்-ன்னாலும் வச்சிக்கோங்க, உங்க சமயப் பிடிப்புக்கு ஏத்தாப்புல!
   ஆனா, அடுத்தவன் பாட்டுல, ஏன் தான், இப்படிக் கை வைக்கும் புத்தியோ? முருகா:(
   ———————-

   எட்டுத் தொகை நூல் ஒவ்வொன்னுத்துக்கும் சிவபெருமான் மேல் எழுதுன பாட்டு தான் கடவுள் வாழ்த்து!
   புற நானூற்றுக்கும், அக நானூற்றுக்கும் vs இந்த வாழ்த்துக்கும் என்னய்யா சம்பந்தம்?

   இதுனால சிவபெருமான் பெருமை கூடவும் போறதில்ல, குறையவும் போறதில்ல! பாவம் அவரு! இது இவனுங்களின் “எண்ணத் திணிப்பு”:(

   தொல்காப்பியர் சொல்லாத சிவபெருமானை, வாழ்த்தில் வச்சா, பிரச்சனை வந்துருமோ-ன்னு பயம்!
   அதனால் நற்றிணைக்கு = மாயோன், திருமால்
   குறுந்தொகைக்கு = சேயோன், முருகன்
   ன்னு வச்சிட்டு, மீதியெல்லாம்…. கடவுள் வாழ்த்துப் பாவாம்!

   கேட்டா, தொல்காப்பிய மரபுப்படி, முதலில் மாயோனும், சேயோனும் வச்சிட்டாங்களாம்:)) அடா அடா அடா
   ———————-

  • எனக்கும் தமிழ்க் கடவுள்களான = முருகனும், திருமாலும் பிடிக்கும் தான்!

   ஆனா ஒரு அகப்பொருள் நூலான குறுந்தொகைக்கு எதுக்கு = முருகன் வாழ்த்து? திருமால் வாழ்த்து?? அதுவும் பின்னாள் புகுத்தல்??

   தொல்காப்பியர்/ சங்கப் புலவர்கள், தங்கள் பாடல்களின் இடையே, மாயோன், சேயோன், கொற்றவை-ன்னு குறிப்பிடுவார்கள்!
   ஆனா, அவர்கள் யாரும் “சமயத் துதி” செய்ய நூல் எழுதலை!

   அவர்கள் எழுதியது = மக்கள் வாழ்வியல்!
   அந்த வாழ்வியலில் வரும் இசை, கலை, நிலம், தெய்வம் ன்னு அனைத்து கூறுகளும் காட்டிச் சென்றார்கள், அவ்வளவே!

   இப்படி அவர்களே கடவுள் வாழ்த்து பாடாத நூலுக்கெல்லாம், பின்னாள் சேர்க்கை ன்னு ஒட்ட வச்சி…
   அதை இன்னை தேதியிலும், “சங்கத் தமிழ்”ன்னே பதிப்பிச்சிக்கினு இருக்கானுங்க!:(
   ——————–

   தமிழ்ப் போர்வை போர்த்திய மதப் புலிகள்! தமிழ்ச் சமணத்தை அழித்த சகடர்கள்! காலங் காலமா இவனுங்க எழுதனதே வரலாறு:(

   பெரும்பான்மை-ல்ல? பதிப்பகம், ஊடகம் ன்னு எல்லாத்தையும் கைக்குள் வச்சிருந்தா?
   பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தழைத்த களப்பிரர் காலம் = “இருண்ட காலம்” ன்னு காலங் காலமா எழுதுவானுங்க! அதுவே பாடத் திட்டத்திலும் அரங்கேறும்!:((

   சிறுபான்மை மரபுகள்… ஒரு போதும் மரபுச் சிறப்பில் முந்தி விடக் கூடாது என்கிற ஆழ்ந்த மனப்பான்மை
   அதை உள்ளத்தில் வச்சிக்கிட்டு, வெளியே தமிழ்ப் போர்வை போர்த்திக் கொண்டு திரியும் சகடர்கள்…

   * இன்று இன்றாக இருக்கட்டும்
   * தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்
   என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாம, தங்களுக்குப் பிடித்தமானம் என்பதற்காக….தமிழ்த் தொன்மத்தில் கை வைப்பது தான் வேதனை:((

   • “அ”றம் செய்ய விரும்பு
    “ஆ”றுவது சினம்
    ன்னு alphabetical orderஇல் வரும்!

    ழளறன ன்னு வரும் போது…
    அ”ழ”கலாதன செய்யேல்
    இ”ள”மையிற் கல்
    அ”ற”னை மறவேல்.
    அ”ன”ந்தல் ஆடேல்.
    -ன்னு வரும்!

    ஆனா இந்த அ”ற”னை மறவேல் என்பதை, அ”ர”னை மறவேல்-ன்னு ஆக்கி, சிவபெருமானை மறக்காதீங்கோ-ன்னு ஆக்கிட்டானுங்க:(
    பாவிங்களா, It follows a sequence of letters, ள க்கு அப்பறம் ர வராது!
    பொய் சொல்லும் போது, பொருந்தச் சொல்லணும் ன்னு கூடவா தெரியல?:(((

    இந்த அபாண்டம்… “தெய்வத்தின் குரல்” ல்ல இன்னிக்கும் இருக்கு!
    பழைய காஞ்சிப் பெரியவரே சொல்லி விட்டதால், எவரும் கேள்வி கேக்க முடியாது! கேட்டா, பகையைத் தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்:(
    http://www.kamakoti.org/tamil/part1kurall47.htm

    முருகா – சங்கத் தமிழ் வாழ்க!!!

 5. // ‘சிந்தியல் வெண்பா’ என்பார்கள்//

  Sooper! இதைக் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி சொக்கரே!:)

  2 lines = குறள் வெண்பா
  3 lines = சிந்தியல் வெண்பா
  4 lines = நேரிசை/ இன்னிசை வெண்பா
  5-12 lines = பஃறொடை வெண்பா
  > 12 lines = கலி வெண்பா

  • சொக்கரே
   உங்க தலைப்பு “போற்றுதும்” – இது வியங்கோள் வினைமுற்று தானே? எப்பவோ படிச்ச ஞாபகம்!

 6. நிலவு, சூரியன், மழை அனைத்தும் இயற்கையின் உன்னத வளங்கள். அவையில்லாமல் உலகில் வாழ்வில்லை. அவற்றைப் போற்றி பின் பூம்புகார் நகரையும் போற்றுகிறார் இளங்கோவடிகள்.

  போற்றுவதிலேயும் உவமைகள் அனைத்தும் அரசனின் புகழைத் தான் உயர்த்திக் காட்டுகின்றன. பெரும் காப்பியத்துக்குத் தகுந்த ஒரு ஆரம்பப் பாடல். இறை வணக்கம் இல்லாமல் இயற்கை வணக்கம்! அக்காலத்தின் கலாச்சார உயர்வைக் கண்டு வியக்கிறேன்! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இளங்கோவடிகளின் பெருமையை பறைசாற்றுகிறது இந்த மங்கலப் பாடல்.

  amas32

 7. முக்கியமான ஒரு தகவல் விட்டுப் போயிருச்சி….
  தமிழ் இலக்கியங்களில், முதலடி…. பெரும்பாலும் “உலகம்” ன்னு பொருளில் தான் வரும்

  அகர முதல எழுத்தெல்லாம் – ஆதி
  பகவன் முதற்றே “உலகு” = திருக்குறள்

  இந்தப் பாட்டில் பாருங்க…
  திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
  அம் கண் “உலகு” அளித்தலான்! = சிலப்பதிகாரம்
  ————

  1 மண் திணிந்த “நிலனும்”, நிலன் ஏந்திய விசும்பும் = புறநானூறு

  2 “உலகம்” திரியா ஓங்குயர் விழுச்சீர் = மணிமேகலை
  3 மூவா முதலா “உலகம்” ஒரு மூன்றும் ஏத்த = சீவக சிந்தாமணி

  4 “உலகம்” உவப்ப வலனேர்பு திரிதரும் = திருமுருகாற்றுப்படை
  5 “வையம்” தகளியாய், வார்கடலே நெய்யாக = ஆழ்வார்கள் அருளிச் செயல்

  6 “உலகம்” யாவையும் தாம் உள வாக்கலும் = கம்ப ராமாயணம்
  7 “உலகெலாம்” உணர்ந்து ஓதற்கு அரியவன் = பெரிய புராணம்
  8 சீரிய “உலகம்” மூன்றும் செய்து = தேம்பாவணி

  அட, இந்த நூற்றாண்டில் வந்த இராவண காவியம் (புலவர் குழந்தை) கூட, உலகம் ன்னே துவங்குது!
  9 “உலகம்” ஊமையாய் உள்ள அக்காலையே = இராவண காவியம்

  இது தான் தமிழ் மரபு! = “உலகம்” வாழி என்னும் தமிழ் வாழி!

  • ஆனா இதுக்கும் “மத விளக்கம்” கொடுத்துட்டாங்க நம்ம ஆளுங்க:))
   அதாச்சும் அ-உ-ம் = ஓம்!
   அதுல நடு எழுத்து = உகரம்! காக்கும் எழுத்தாம்! அதனால் எல்லாத் தமிழ் இலக்கியங்களும் “உ”ல தொடங்குது-ன்னு அடிச்சி விடுவாங்க:)

   திருக்குறள் = அ-வில் தான் துவங்குது! “உலகு” என்ற சொல் முதலில் வரும்; அவ்வளவே!
   ஆழ்வார் = வையம் ன்னு தான் துவங்குறாரு! அதுல “உ”-வே இல்ல!:) உலகம்/ வையம்/ நிலம் ன்னு பாடுதல் தமிழ் மரபு! அவ்வளவே! ஓம் ல்லாம் இல்ல:))

   இப்படி, ஓம்=உகாரம் ன்னு கெளப்பி விட்டதால, அருணகிரி பாடிய “மு”த்தைத் தரு என்பதற்கும்….
   ம-கர மெய்யில் உ-கரம் ஏறி, மு= ம்+”உ” ன்னு துவங்குது ன்னு ரொம்பவே “வலிந்து” பிரசங்கம் செய்பவர்களும் உண்டு!

   நான் பெரிதும் மதிக்கும் வாரியார் சுவாமிகளும் இதைச் செய்வாரு:)))
   முருகா!
   சொன்னால் கோச்சிப்பாங்க! ஆனாலும் சொல்ல வைக்கிறியே என் செல்லமே.:)) தமிழ் = மதம் கடந்த ஒன்னுடா என் கோவணாண்டி:))

 8. சிறீலங்காபாடல்கள்
  காவல்
  றப்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s