எழுத்தெழுத்தாக…

ஏந்திய வெண்படையும், முன்னாள் எடுத்ததுவும்,

பூந்துகிலும், மால் உந்தி பூத்ததுவும், வாய்த்த

உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றாச் சேர்க்கத்

தலை, மலை, பொன், தாமரை என்றாம்

நூல்: தண்டியலங்கார உதாரணம்

பாடியவர்: தெரியவில்லை

1. திருமால் கையில் ஏந்திய வெள்ளைச் சங்கு

2. முன்பு ஒருநாள் கண்ணனாக அவதரித்தபோது, மக்களை மழையிலிருந்து காப்பதற்காக அவன் கையில் ஏந்திய மலை

3. அவன் அணிந்துள்ள அழகிய ஆடை

4. அவனுடைய தொப்புளில் மலர்ந்த பூ

இந்த நான்கு சொற்களுடன் ஒவ்வொரு எழுத்துகளைச் சேர்த்தால், தலை, மலை, பொன், தாமரை ஆகியவை தோன்றும்.

துக்கடா

 • இந்தப் பாட்டின் உரை மிகக் குழப்பமாக இருக்கிறதல்லவா? அதற்கு ஒரு தனி விளக்கம் தேவைப்படுகிறது
 • இது, ‘எழுத்து வருத்தனம்’ என்ற வகையைச் சேர்ந்த பாடல். இதற்கான இலக்கணம் : ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து வேறு பொருள் வருமாறு பாடுவது
 • உதாரணமாக, இந்தப் பாடலின் முதல் வரி : திருமால் ஏந்திய வெண் சங்கு, இதைக் குறிக்கும் இன்னொரு சொல், ‘கம்பு’, அதில் இருந்து ‘கம்’ என்ற சொல்லைமட்டும் எடுத்துக்கொண்டால், அதன் பொருள் ‘தலை’
 • அடுத்து, இந்த ‘கம்’ உடன் ‘ந’ என்ற எழுத்தை முதலில் சேர்த்தால், ‘நகம்’, இதன் பொருள், மலை (கண்ணன் குடையாகத் தூக்கிய கோவர்த்தன கிரி)
 • அடுத்து, இந்த ‘நகம்’ உடன் ‘க’ என்ற எழுத்தை முதலில் சேர்த்தால், ‘கநகம்’, இதன் பொருள், தங்கம் (திருமாலின் ஆடை)
 • அடுத்து, இந்த ‘கநகம்’ உடன் ‘கோ’ என்ற எழுத்தை முதலில் சேர்த்தால் ‘கோகநகம்’, இதன் பொருள், தாமரை (திருமாலின் தொப்புளில் தோன்றிய மலர்)
 • இப்போது, பாட்டை மீண்டும் படியுங்கள் 🙂 விளையாட்டு புரியும்!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஏந்திய வெண்படையும் முன்னாள் எடுத்ததுவும்
 • பூந்துகிலும் மாலுந்தி பூத்ததுவும், வாய்த்த
 • உலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் சேர்க்கத்
 • தலைமலைபொன் தாமரையென் றாம்

357/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், திருமால், வார்த்தை விளையாட்டு, விஷ்ணு, வெண்பா. Bookmark the permalink.

7 Responses to எழுத்தெழுத்தாக…

 1. எழுத்து விளையாட்டு பலே பலே. தமிழ் இலக்கிய ஆழ் கடல் முத்துக்கள் ஜொலிக்கட்டும்.

 2. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் விளக்கத்தில் இருந்து;

  வருத்தனம் என்பதற்கு வளருதல் என்பது பொருளாகும். ஒரு
  செய்யுளில் பல கருத்துகள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.
  அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது
  என்று கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும்
  மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம்
  (எழுத்து வளர்த்தல்) என்னும் சித்திரகவியாகும்.

  எடுத்துக்காட்டு:

  “மதுரை” என்பது ஓர் ஊரின் பெயர்.

  அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும்.
  அதனோடு ந என்ற எழுத்து
  சேர்ந்தால் நமது என்ற உடமைச்
  சொல் கிடைக்கும். இவ்வகையில்
  கிடைத்த சொற்கள் மதுரை, மது,
  நமது என்பனவாகும்.

  மேலே சில தொடர்கள் உள்ளன. இவற்றுள் மூன்றாவது
  தொடரான நமது என்பதில் உள்ள ‘ந’ எழுத்து வருத்தனம்
  ஆகும்.

 3. மேற்கண்ட விளக்கமுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகப் பக்கம் –

  http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02146l3.htm

  • amas32 says:

   தமிழும் கணிதம் போல உள்ளதே! வார்த்தை விளையாட்டில் தமிழில் தான் எத்தனை வகைகள்! மிக்க நன்றி ஐயா 🙂

   amas32

 4. amas32 says:

  இந்தப் பாடலில் திருமாலின் வெள்ளைச் சங்கு, சுண்டு விரலால் தூக்கிய கோவர்த்தன மலை, அவரின் அழகிய பொன்னாலான உடை, அவர் தொப்புளில் தோன்றிய செந்தாமரை மலர் என்று அனைத்தும் விஷ்ணுவைப் போற்றும் புகழ் மாலையாக உள்ளது. ஆனால் சிறப்பு அது அல்லவே! ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு, பின் ஒரு எழுத்தைக் கூட்டியோ குறைத்தாலோ அழகிய வேறு பொருள் தரும் சொல் வருகிறதே. அந்த திறன் புலவரின் பெருமையை பறைசாற்றுகிறது.

  வாழ்க தமிழ்!

  amas32

 5. ஆனந்தன் says:

  ஒரு கவிதைக்கு முதற் சிறப்பு அதன் பொருள். பின்னர் வருவது சொல் நயம், சொல் விளையாட்டு முத்லிய பிற என்பது எனது கருத்து. அப்படிப் பார்க்கும்போது இந்த்க் கவிதையில், வெண்பாவுக்கே உரிய அழகையும், சொல் விளையாட்டையும் தவிரக் கருத்துச் சிறப்பு அதிகமில்லை என்பது எனது first impression.

  நல்ல link ஒன்று தந்த கந்தசாமிக்குக் கனக்க நன்றி!
  சித்திரக்கவிகள் பற்றி, பரிதிமாற் கலைஞர் 1939ம் ஆண்டு எழுதிய புத்தகம் ஒன்றை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்:
  http://www.openreadingroom.com/wp-content/uploads/2011/11/சித்திரக்-கவி-விளக்கம்.pdf

  அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் இருவரும் இதுபோன்ற, ஆனால் பொருள் பொதிந்த, பல பாடல்கள் பாடியுள்ளனர். மாலைமாற்றுப் பாடல் ஒன்றை இங்கு முன்னரே சொக்கர் இட்டிருக்கிறார்:
  https://365paa.wordpress.com/2011/07/30/025/

  • என். சொக்கன் says:

   சொல் விளையாட்டுக்காகவே எழுதப்பட்ட பாட்டுகள் பல உண்டு. தப்பில்லை, அது தரக்குறைவும் இல்லை என்பது என் கருத்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s