வீரத்துக்கு மரியாதை

நகை நீ கேளாய் தோழி! அல்கல்

வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ

இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு

நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து

அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற

தறுகட் பன்றி நோக்கி, கானவன்

குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி

மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது

‘அருவழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்’ என

எய்யாது பெயரும்

நூல்: அகநானூறு (பாடல் எண் 248ன் முதல் 10 வரிகள்)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை. காதலன் வாசலில் நிற்கிறான். அவன் காதில் விழும்படி காதலியிடம் பேசுகிறாள் தோழி

தோழி,

நேற்று ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. அதைச் சொல்கிறேன் கேள்!

காட்டில் வேட்டையாடுவதற்காகச் சிலர் வந்தார்கள். அவர்கள் தங்களுடன் ஒன்றிரண்டு வேட்டை நாய்களையும் அழைத்துவந்தார்கள்.

அந்தக் காட்டின் ஓரத்தில் ஒரு பன்றிக் கூட்டம். வருபவர்கள் தங்களைதான் கொல்லப்போகிறார்களோ என்று நினைத்துவிட்டது.

உடனே, அந்தக் குடும்பத்தின் தலைவனாகிய ஆண் பன்றி தைரியமாக எழுந்தது. தன் துணையாகிய பெண் பன்றிக்கு ஆறுதல் சொன்னது. அதையும் குட்டிகளையும் பத்திரமாகக் காட்டுக்குள் அனுப்பிவைத்தது.

பின்னர், அந்த ஆண் பன்றி வேட்டைக்காரர்களை எதிர்கொள்ளத் தயாராக முன்னே வந்தது. முதல் வேலையாக, அவர்கள் அனுப்பிவைத்த நாய்களைக் கடித்து வீழ்த்தியது.

இதைப் பார்த்த வேடர்களுக்குக் கோபம். ஒரு வேடன் அந்தப் பன்றியைக் கொல்வதற்காக வில்லில் அம்பு தொடுத்தான்.

ஆனால் ஏனோ, அவன் அந்தப் பன்றியைக் கொல்லவில்லை. தயங்கினான். ஏன்?

ஒரு தேசத்தின்மீது பகைவன் படையெடுத்து வருகிறான். உடனே, அந்த நாட்டின் தலைவன் ராணுவத்தைத் திரட்டிக்கொண்டு அந்த எதிரியுடன் மோதுகிறான்.

ஆனால், போர்க்களத்தில் அந்தப் பகைவனைப் பார்த்ததும், அவனுடைய படையில் உள்ள வீரர்கள் எல்லாரும் பயந்துவிடுகிறார்கள். புறமுதுகு காட்டி ஓடிவிடுகிறார்கள்.

ஒரே ஒரு வீரன்மட்டும், அப்படி ஓடவில்லை. தைரியமாகப் பகைவனை எதிர்த்து நிற்கிறான்.

இந்த ஆண் பன்றியைப் பார்த்தவுடன், வேடனுக்கு அந்த வீரனின் ஞாபகம்தான் வருகிறது. ஆகவே, அதைக் கொல்லாமல் திரும்பிச் சென்றுவிடுகிறான்.

துக்கடா

 • அகநானூறில் இந்தப் புறப்பாட்டு எப்படி நுழைந்தது என்று சந்தேகப்படவேண்டாம். இது அச்சு அசல் அகப்பாட்டுதான். 16 வரி கொண்ட பாடலின் ஒரு பகுதியைமட்டும் இங்கே நறுக்கித் தந்திருப்பதால், காதலைக் காணவில்லை, வீரம்மட்டுமே பேசப்படுகிறது
 • அப்படியானால், இந்தக் காட்சியை முன்வைத்துக் கபிலர் சொல்லும் காதல் சமாசாரம் என்ன?
 • இதில் வரும் வேடன் நினைத்திருந்தால், அந்தப் பன்றியை அரை நொடியில் கொன்றிருக்கலாம். ஆனால் அவன் அதன் வீரத்தை மதித்துக் கொல்லாமல் விடுகிறான். அதுபோல, இந்தப் பாடலின் கதாநாயகன் தன் காதலியின் தாய்முன்னே வந்து நிற்கிறான், இவன் எதற்காக வந்திருக்கிறான் என்பது புரிந்தும்கூட, அவனுடைய நல்ல பண்புகளை மதித்துத் தாய் ‘கண்டுகொள்ளாமல்’ ஒதுங்கிவிடுகிறாள்
 • வீரத்தை மதித்த அந்த வேடனும், காதலை மதித்த அந்தத் தாயும், வாழ்க வாழ்க 🙂

356/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், கபிலர், குறிஞ்சி, நாடகம். Bookmark the permalink.

15 Responses to வீரத்துக்கு மரியாதை

 1. வீரமும், காதலும், தாய்மையின் புரிந்து கொள்ளும் மேன்மையும் ~அருமையான விளக்கம்

 2. anonymous says:

  “அக”-நானூற்றில் “புற”-நானூற்றைத் தந்தமைக்கு நன்றி சொக்கரே!:)

  “காதலுக்கு மரியாதை” மாதிரி “வீரத்துக்கு மரியாதை” ன்னு தலைப்பு வச்சிருக்கீங்களே! – இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலையா?:)
  காதலே சிறந்தது! அப்பறம் தான் வீரம்! காதலுக்குத் தான் முதல் மரியாதை!:)

  ஆனா, காதலிக்கவும் ஒரு “துணிவு” தேவைப்படுதே!
  அப்படீன்னா = வீரத்துக்கே முதல் மரியாதை:)))

 3. வேடரைக் கண்டபோது வீர ஆண்பன்றியும் (தறுகண் பன்றி), ஆபத்தின் போது தன் குட்டி (பறழ்)களைத் தழுவியவாறு அங்கிருந்து வெளியேறிய பாசப் பெண்பன்றி (பிணவல்) இரண்டும் செய்தவற்றை ஒரே நேரத்தில் நேர்முக வருணனைபோல மாற்றி மாற்றி நயமாகச் சித்தரிக்கிறது இப்பாடல்.

  இங்க ஆண்பன்றி அங்க பெண்பன்றி

  வய நாய் எறிந்து – வன்பறழ் தழீஇ

  இளையர் எய்துதல் மடக்கி – கிளையொடு நால்முலைப் பிணவல் சொலிய

  கான்ஒழிந்து
  அரும்புழை முடுக்கர்
  ஆள் குறித்து நின்ற
  தறுகட் பன்றி

 4. சொற்பொரு அடைப்புக்குறிக்குள்.

  நகைநீ கேளாய் தோழி அல்கல்
  (நகை – வேடிக்கை, அல்கல் – இரவு)

  வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ
  (வயநாய் – வலிய நாய், எறிந்து – கடித்தெறிந்து)
  (பறழ் – பன்றிக்குட்டி, தழீஇ – தழுவி, அணைத்து)

  இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு
  (எய்து – நெருங்கு கிளை – சுற்றம்)

  நான்முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து
  (பிணவல் – பெண்பன்றி
  (சொலிய – நீங்க????)
  (கான் – காடு, ஒழிந்து – விட்டு விலகி)

  அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற
  (அரும்புழை – அரிய சந்து) முடுக்கர் – முடுக்கில்)
  (ஆட்குறித்து – ஆளை எதிர்நோக்கி)

  தறுகட் பன்றி நோக்கிக் கானவன்
  (தறுகண் – வீரம், கானவன் – வேடன்)

  குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
  (குறுகு – அணுகு)
  (கூர்வாய்ப் பகழி – கூரிய முனையுடைய அம்பு)

  மடைசெலல் முன்பில்தன் படைசெலச் செல்லாது
  (மடைசெலல் – ?)
  (முன்பு – வலிமை செல்லாது – தான் விலகிச் செல்லாது நின்று)

  அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம் என
  (அருவழி – பகைவர் வரும் அரிய வழி
  (விலக்கும் – (பகைவரை எதிர்த்து) விலக்கும்)
  (பெருவிறல் – மிகுந்த வலிமை)

  எய்யாது பெயரும்
  எய்யாது – (அம்பு) எய்யாது
  பெயரும் – (அவ்விடத்தை விட்டு) நகரும்

  சொலிய – ???
  மடைசெலல் – ???

  • anonymous says:

   பதம் பிரித்துப் பொருள் தரும் பான்மைக்கு நன்றி கந்தசாமி ஐயா!
   மிக நல்ல முயற்சி!

   • anonymous says:

    கந்தசாமி ஐயா, ??? என்று குறிப்பிட்டவைக்கு மட்டும் சொல்லிக்கறேன்:)

    * சொலிய = தப்பிக்க
    * மடை செலல் = பாய்ந்து வருதல்

    மடை திறந்தாற் போல-ன்னு சொல்லுறோம்-ல்ல? மடையை ஒடைச்சிக்கிட்டு தண்ணி வராப்புல அம்பு வருதாம்
    “கூர்வாய்ப் பகழி மடைசெலல்
    முன்பின் படைசெலச் செல்லாது”

    பகழி = அம்பு
    பகழிக் கூத்தர் ஞாபகம் வருதா? திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடிய திருமால் அன்பர்!:)

  • ஆனந்தன் says:

   ரொம்ப நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள இடுகை!

   • அனானி

    மடைசெலல் முன்பின் கூர்வாய் –
    மடைசெலல், சொலிய இவற்றின் பொருளை ‘மடை’திறந்தாற்போலச் ‘சொலு’ம் கூர்வாய் வலிமை உடையவர் நீங்கள்.

    நீங்கள்தான் ஐயா, நானெல்லாம் ஐயே.

 5. anonymous says:

  பொதுவா
  *அகம் = Love
  *புறம் = War
  ன்னு சொல்லுவது வழக்கம்!

  ஆனா, தமிழ் இலக்கியம் அப்படியல்ல!
  இரண்டிலும் இரண்டுமே இருக்கும்!
  அகத்தில் = அகம் “மிகுந்து” இருக்கும், அவ்ளோ தான்! அதுக்காக, புறமே வரக் கூடாது ன்னு சொல்லீற முடியாது!

  அகம்-புறம் ன்னு ஒரே நூலில் “வெளிப்படையா” வைத்த முதல் தமிழ் நூல் = திருக்குறள்!

  • anonymous says:

   ஒரு எடுத்துக்காட்டு காட்டினாப் புரியும்!
   * கலித் தொகை
   = இது அகப் பொருள் நூல் தான்! காதலன்-காதலி அன்பையே அதிகம் பேசும்!
   = ஆனா, ஏறு தழுவுதல் (வீரம்)! மாட்டை அடக்கும் உத்தி, அந்த வீரப் பெருமிதம், இதெல்லாம் ஊடால காட்டும்!

   கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை – மறுமையும்
   புல்லாளே ஆய மகள்!
   -ன்னு காதலி, அவன் வீரத்தையே பெரிதும் ரசிப்பதைக் காட்டும்!
   = அப்போ, இது புறமா? அகமா??;))

   ஆனா, இதே காதலி, அவன் ஊருக்குப் போகும் முன்னால, எங்கே தன்னை மறந்துடுவானோ-ன்னு அழுவா!
   அப்போ, மண்ணின் பெரு மரபு = தமிழ்க் கடவுளாம் திருமால் மேல் ஆணை-ன்னு சத்தியம் செய்வான் இந்தப் பய!:) உடனே நீண்ட முத்தக் காட்சி:)
   = அப்போ, இது அகமா? புறமா??;))
   ———————

   * பொருள் = 2;
   = அகப் பொருள்; புறப் பொருள்

   * திணை = 5 + 7
   அகத் திணை = ஐந்து
   புறத் திணை = ஏழு

   பொதுவா, திணை மட்டுமே அதிகம் கலக்கக் கூடாது-ன்னு விதி! (குறிஞ்சி-மருதம்); ஆனா பொருள் கலக்கலாம்! (அகம்-புறம்)

   குறிஞ்சித் திணையில், மயில் போன்ற கருப்பொருட்கள் அதிகம் வரலாம்; ஆனா நாரை-ன்னு வந்தா, அது மருதம் ஆயீரும்!
   = இதுக்கு “திணை மயக்கம்” ன்னு பேரு!
   = அதுக்காக வரவே கூடாது-ன்னு இல்ல! அதிகம் வரக் கூடாது!
   தாமரை = மருதம்! ஆனா குறிஞ்சி முருகனுக்குத் தாமரை வரலாம்! ஆனா கடம்பு, காந்தள் தான் அதிகம் காட்டப்பெறும்!

 6. anonymous says:

  இந்தப் பாட்டைப் பார்ப்போமா?
  எதைப் பார்த்து, அம்மாக்காரி, தலைவனை ok-ன்னு நினைச்சாளாம்?:)

  காட்டுப் பன்றி
  = முதலில் வேட்டை நாய்களை அப்புறப் படுத்துது
  = அடுத்து, தன் பெண்டையும், பிள்ளையும் பத்திரமா அனுப்பி வைக்குது
  = அடுத்து வீரமா, முன்னாடி வந்து நிக்குது!

  முதலில் விவேகம், அப்பறம் வீரம்! = இப்படிப்பட்டவங்களைத் தான் மாமியார்களுக்கு ரொம்பப் பிடிக்கும்:))
  மாப்பிள்ளை எடுத்த உடனேயே மொறைச்சிக்கக் கூடாது! விவேகம் காட்டி, அப்பறமா வீரம் காட்டணும்!

  அப்படிக் காட்டிய பன்றியின் செயலை ரசித்தவன், அவனும் அப்படித் தானே இருப்பான்?
  சரி, இவன் கிட்ட, எம் பொண்ணு நல்லா இருப்பா-ன்னு உள்ளுக்குள் ஒரு தைரியம் வரவே, முட்டுக்கட்டை போடாம, ok ok ensoyன்னு சொல்லீடறா…
  ————–

  முன்பு பார்த்த பாட்டில், பொண்ணை வெளியே போவ விடாம, ஒரு அம்மாக்காரி, இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு தூங்குறா-ல்ல?
  ஆனா, இந்த அம்மாக்காரியைப் பாருங்க! so many types of ammas:) @amas32 – any comments?:))

  ச்சே, why cant all guyz take this “maamiyar” route?:) = becoming fan boy for maamiyar:)

  • amas32 says:

   அம்மாவின் உள்மனசுக்குத் தெரியும் பையன் எப்படிப் பட்டவன் என்று! அதனால் சில சமயம் மகளைப் பிடித்து வைத்துக் கொள்வாள், சில சமயம் வரப் போகும் மருமகனுக்கு ராஜபாட்டை போட்டு வரவேற்பாள் 🙂

   amas32

 7. amas32 says:

  பன்றியின் மூலம் ஒரு இல்லத் தலைவனின் கடமை என்னவென்று காட்டுகிறார் கபிலர்! குடும்பத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு முதலில் அனுப்பிவிட்டு, பின் துணிச்சலுடன் எதிரிக்குத் துணையாக உள்ள நாய்களை முதலில் தாக்கி வீழ்த்துகிறது. தலைவனுக்கு முதலில் வீரம் தேவை.கோழையை யாரும் காதலிப்பதில்லை. இது நிதர்சனமான உண்மை!

  வீரமும் விவேகமும் தான் ஒரு ஆண் மகனை பிற ஆண் மகன்களிடம் இருந்து உயர்த்திக் காட்டுகிறது. வராஹ அவதாரத்திலும் திருமால் ஹிரண்யாக்ஷனை தேடிக் கண்டுப் பிடித்து வதம் செய்து, கடலுக்கு அடியில் இருந்து பூமா தேவியைத் துளிக் கூட அலுங்காமல் தன் கோரைப் பற்களின் மேல் வைத்து, மேலே கொண்டு வந்தார். அது தான் புருஷ லக்ஷணம்!

  amas32

 8. பிணவல் – பெண்பன்றி.

  பொதுக்குறிப்பு.

  பிணா, பிணை, பிணவல், பிணவு என்ற இச்சொறகள் எல்லாம் விலங்கின் அல்லது பொதுவாகப் பெண்டைக் குறிப்பன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s