வேஷமும் நிஜமும்

செய் தவ வேடம் மெய்யில் தாங்கி,

கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,

வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன

கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு

ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது

எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின்,

கூடா ஒழுக்கம் பூண்டும் வேடம்

கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு பயிறலின்

பூண்ட அவ்வேடம் காண்தொறும் காண்தொறும்

நின் நிலை என்னிடத்து உன்னி உன்னிப்

பல்நாள் நோக்கினர் ஆகலின், அன்னவர்

பாவனை முற்றியப் பாவகப் பயனின் யான்

மேவரப் பெற்றனன்போலும்!

நூல்: சிதம்பர மும்மணிக் கோவை

பாடியவர்: குமர குருபரர்

நான் ஒரு பெரிய தவ ஞானியைப்போல் என் உடல் எங்கும் வேஷம் போட்டுக்கொண்டேன். ஆனால், எனக்குள் நிறைந்திருந்தது மொத்தமும் பொய், புரட்டு, வஞ்சகம்.

அதன்பிறகு, வட திசையில் உள்ள மேரு மலை வாய் பிளந்ததுபோன்ற அம்பலத்தில் சிவபெருமான் நிகழ்த்தும் திருநடனத்தைப் பார்த்தேன். பிறவிப் பயனை அடைந்தேன்.

இந்தப் பெரிய பெருமையை அடைவதற்காக நான் எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் எனக்கு அந்தப் பேறு கிடைத்தது. ஏன்?

ஒரே காரணம்தான். நான் தவறான பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், உன்னுடைய பக்தனாக வேஷம் போட்ட காரணத்தால், உனது மற்ற (நிஜமான) அடியவர்களுடன் பழகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நானும் கொஞ்சம் திருந்தினேன்.

தவிர, நான் போட்ட வேஷத்தை மக்கள் தினம் தினம் பார்த்தார்கள். என்னை ஓர் உண்மையான பக்தன் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். சொல்லப்போனால், அவர்கள் என்னில் உன்னைப் பார்த்தார்கள்.

இப்படி அவர்கள் தொடர்ந்து பல நாள் எனக்குள் உன்னைப் பார்த்துவந்ததால், ஒருகட்டத்தில் அந்த பாவனையே உண்மையாகிவிட்டதோ? அதனால்தான் எனக்கு இந்தப் பெரிய அதிர்ஷ்டம் கிடைத்ததோ?

துக்கடா

 • ஒரு பிரபலமான கதை கேட்டிருப்பீர்கள். திருடன் ஒருவன் போலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக சாமியார் வேஷம் போடுவான். அப்போது அவனை அரசன் தொடங்கி எல்லாரும் வணங்க, ‘வெறும் வேஷத்துக்கே இத்தனை மரியாதை என்றால், நிஜமாகவே நான் துறவி ஆகிவிட்டால் என்ன?’ என்று யோசித்துத் திருந்துவான். கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு கருத்தைக் குமர குருபரரின் இந்த வரிகளும் வெளிப்படுத்துகின்றன
 • ’வேஷத்திலிருந்து நிஜம் பிறப்பதா? இந்தக் காலத்துல இதெல்லாம் சாத்தியமே இல்லை’ங்கறீங்களா? அதுவும் உண்மைதான்!

355/365

Advertisements
This entry was posted in குமரகுருபரர், சிவன், பக்தி. Bookmark the permalink.

12 Responses to வேஷமும் நிஜமும்

 1. ஆனந்தன் says:

  இராமனுடைய வேடம் போட்டபோது இராவணனுக்கும் பிறன் மனை நோக்காப் பண்பு வந்ததல்லவா? அதுபோலத்தான் இங்கும்! தவ வேடம் கொண்டதும் குமரகுருபரருக்குச் சிவபெருமான் திருநடனக் காட்சியே வாய்த்திருக்கிறது!

  முன்னையது கம்பரின் கற்பனை. பின்னையது குமரகுருபரரின் தன்னடக்கம்.
  போடும் வேடத்தை விட, யார் வேடம் போடுகிறர்கள் என்பதே அதன் விளைவத் தீர்மானிக்கிறது. சிவனடியார் வேடம் போட்டு வந்து, மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்ற முத்தநாதன் இதற்கு ஒரு உதாரணம்.

  தமது சுயலாபத்துக்காகத் தவவேடம் பூணும் சாமியார்கள் தற்கால உதாரணம்.

  • anonymous says:

   //இராமனுடைய வேடம் போட்டபோது இராவணனுக்கும்//

   இராமன் அவ்ளோ நல்லவனா?:))))
   ————-

   //யார் வேடம் போடுகிறர்கள் என்பதே அதன் விளைவத் தீர்மானிக்கிறது//

   perfecto!அருமையாப் பிடிச்சீங்க!
   * முத்தன் வேடம் போட்டது = கொல்ல
   * கரிகாலன் வேடம் போட்டது = நீதி சொல்ல
   வேடத்தின் “நோக்கமே” முக்கியம்!

   புறச் சின்னங்களான திருநீறு தரித்தலை = சிவ வேடம்-ன்னே சொல்லுவார்கள்
   வேடம், வேடம், நடிக்கின்றேன் -ன்னே ஆழ்வார்கள் பல பாசுரங்கள் பாடுவர்!

   * கள்ளத்தேன் நானும், தொண்டாய்த் தொண்டுக்கே “வேடம்” பூண்டேன் = ஆழ்வார்
   * நாடகத்தால் உன் அடியார் போல் “நடித்து” = மாணிக்கவாசகர்
   * “வேடமும்” நீறும் விளங்க நிறுத்தி = ஒளவையார், விநாயகர் அகவல்

   எதுக்கு இம்புட்டு “வேடம்”?
   அனானி வேடம்??:)))

  • anonymous says:

   “தொண்டுக்கே வேடம்” பூண்டேன் ன்னு, அதான் ஆழ்வார் சொல்லுறாரு!

   மனசு, அவ்ளோ சீக்கிரம், தன்னைத் தாழ்த்திக்க விடாது! தொண்டில் “தாழ்மை” அவசியம்!
   அதனால், தாழ்மை வேடம் பூண்டாச்சும் பிற அடியார்களோடு உறவு கொள்கிறார்கள்!
   அப்படிக் கொள்ளக் கொள்ள, இயல்பிலேயே உறவும், அன்பும் வந்து விடும்!

   ஆக நோக்கம் = “தொண்டு”! தொண்டுக்கே “வேடம்” பூண்டேன்
   ————–

   அன்னை தெரேசா, புகழ் பெற்ற பின்னரும், முக்காடு போர்த்தி மறைத்துக் கொண்டு, சில சேரிகளுக்குச் செல்வார் – உண்மை நிலவரம் கண்டறிய!

   வள்ளலார், திருவொற்றியூரில் இருந்து, கந்தகோட்டம் வரை, தன்னைப் போர்த்திக்கிட்டே தான் நடந்தே வருவாராம்
   அப்போ அவருக்கு இள வயசு – தன் புற அழகால் பிறரைச் சலனப்படுத்தக் கூடாது-ன்னு:)))

   இப்போ?
   எதையும் போர்த்திக்காம, வெளிப்படையா, தங்கக் கிரீடம் என்ன! வெள்ளிச் செங்கோல் என்ன!
   உருத்திராட்சமே 20 பவுனுக்குத் தொங்குவதென்ன!:)))
   Mr. Vallalar, you are too bad yaar! You put Vesham – you hid your identity:)))

 2. amas32 says:

  இந்த காலத்துக்கு இது ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஒருவரின் எண்ணங்களே ஒருவரை உருவாக்குகிறது. குமரகுருபரரின் எண்ணங்கள் இறை அன்பர்களின் உதவியால் தூய்மையானவையாக மாறி நடனக் கோலத்தில் நடராஜனை தரிசிக்கும் பாக்கியம் பெறும் அளவு அவரை வளர்த்து விட்டதாக அவர் எண்ணுகிறார்.

  நான் கடவுள் என்பது உண்மை தான். நானே கடவுள் என்பதில் தான் தவறு ஆரம்பிக்கிறது. துறவு ஆடையை அணிந்து பல ஆன்மீக இயக்கங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தும் வேடதாரிகளுக்குக் குமரகுருபரரின் இந்த கூற்றுப் பொருந்தாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான அடியவர்கள் கூட பழகுவதில்லையே. முற்றிலும் இறைத் தன்மையற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

  பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது உறுதி தான். நல்லவர்களுடன் கூட்டு மிக அவசியம்.

  amas32

 3. GiRa ஜிரா says:

  நாகாவுக்கு சில கேள்விகள் 🙂

  1. வடதிசைக் குன்றம் – இதுக்கு மேருன்னு பொருள் சொல்லீருக்கீங்க. தமிழில் குன்றுக்கும் மலைக்கும் வேறுபாடு உண்டு. இமயமலைதான் மலைகளிலேயே உயரமான மலை. அதை எப்படிக் குன்றம்னு குமரகுருபரர் சொல்லியிருப்பாரு?

  2. குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்று – கடவுள் மன்று(மன்றம்)னா கோயில். சரி. அதென்ன குன்றம் வாயைப் பிளந்ததைப் போன்ற கோயில்? ஏன் அப்படிச் சொல்றாரு குமரகுருபரர்?

  இந்த ரெண்டு கேள்விக்கும் விடை சொன்னா தெரிஞ்சுக்குவேன் 🙂

  • என். சொக்கன் says:

   1. வடதிசைக் குன்றம் : நான் பார்த்த (ஒரே) உரையில் ‘மேரு’ என்று குறிப்பிட்டிருந்தார்கள், வேறு விளக்கம் உண்டா என்று தெரியவில்லை

   2. குன்றம் வாய் பிளந்த : குன்றின்மீது நடனம் ஆடுவது சிரமம். சமதளம் இல்லை. அதே குன்று வாய் பிளந்தால் அங்கே ஒரு சமதளம் ஏற்படும் அல்லவா? அந்தக் கற்பனையை நடன அரங்குக்கு ஒப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்

   • anonymous says:

    :))
    இந்தப் புத்தகம் பேரு = “சிதம்பர” மும்மணிக் கோவை
    இதான் Clue! இத பிடிச்சிக்கிட்டா, நூலைப் பிடிச்சிக்கலாம்:))
    ———

    வடதிசைப் “பெருமலை” = எப்போ “குன்றம்” ஆச்சு?
    கயிலை மலை தாழ்ந்தது எப்போ?:)

    இறைவன் பொருட்டு அது தாழ்ந்தது!
    அடியார் பொருட்டு உயரச் செய்தது எதை? எப்போ?:)

    எப்போ ஒருத்தரு “வாய் பொளப்பாங்க”?
    ஆகா! -ன்னு பெரு-வியப்பு அடையும் போது தானே?
    = வடதிசைக் குன்றம், “வாய் பிளந்து” அன்ன

   • anonymous says:

    பொதுவாகவே “கயிலை” ன்னாலே ஒரு ஏற்றம்!
    மலை-ன்னாலே ஏத்தம் தானே!
    ஆனா இந்த மலை ஏத்தமோ ஏத்தம்! = ஏன்னா, இறைவன் ஆடும் மலை!

    ஆனா ஏத்தமான மலை, இறங்குச்சி!
    * வடதிசை தாழ்ந்தது = இறைவனால்
    * தென் திசை உயர்ந்தது = அடியவனால்!
    குறுமுனியே, சமநிலைக்கு ஆக்கி, தென் திசையைப் புகழால் உயர்த்தினான்!
    —————

    இந்தத் தென் திசை உயர்வினால் = இறைவரே, தென்திசையில் திருநடம் புரிகிறார்
    * வடதிசைக் குன்றம் = அப்பப்போ திருநடம்
    * தென்திசை மன்றில் = சதா திருநடம்!

    இப்போ என்ன பண்ணும் வடதிசைக் குன்றம்?
    = வடதிசைக் குன்றம் “வாய் பிளந்தன்ன” :))

   • anonymous says:

    இனித்தம் உடைய “எடுத்த” பொற்பாதமும் காணப் பெற்றால்
    = எடுத்த பொற்பாதம் எடுத்தது தான்!
    = அது இட்ட பொற்பாதமாய் ஆகவே இல்லை! = என்ன்ன்ன்ன்ன்றும் நடனம்!

    வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன = கடவுள் மன்றில்!
    திருச்சிற்றம்பலம்!!!

    குமர குருபரா! முருகா!!

 4. GiRa ஜிரா says:

  நண்பர் நாகாவிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு நானே விடை சொல்லி விடுகிறேன்.

  வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்றில் திருநடம்

  இதுதான் கேள்வி கேட்கப்பட்ட வரி.

  கேள்வி ஒன்று – வடதிசைக் குன்றம் – இதுக்கு மேருன்னு பொருள் சொல்லீருக்கீங்க. தமிழில் குன்றுக்கும் மலைக்கும் வேறுபாடு உண்டு. இமயமலைதான் மலைகளிலேயே உயரமான மலை. அதை எப்படிக் குன்றம்னு குமரகுருபரர் சொல்லியிருப்பாரு?

  விடை – குமரகுருபரர் பாடிய இந்த நூலுக்கு சிதம்பர மும்மணிமாலை என்று பெயர். தில்லைக் கோயிலை கருவாக வைத்து எழுதப்பட்ட நூல். தில்லையின் புகழ் ஓங்கிக் கொண்டே போனதால், அதன் முன்னே மிகப் பெரிய மலையான இமயமலையும் குன்றமாகி விட்டது. அதனால்தான் வடதிசைக் குன்றம் என்று இமயமலையைக் குறிப்பிடுகிறார் குமரகுருபரர்.

  அடியார் பொருட்டா வடகோடு தாழ்ந்தது! இறைவன் திருமணம் காண உலகமே ஒன்று கூடியதால் இமயம் குன்றிக் குன்றானது உண்மைதான். ஆனால் குறுமுனி தென்னாடு வந்ததால் வடகோடு மீண்டும் உயர்ந்தது. ஆகையால் அப்படிப் பொருள் கொள்வது சரியாக எனக்குத் தோன்றவில்லை.

  கேள்வி இரண்டு -. குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்று – கடவுள் மன்று(மன்றம்)னா கோயில். சரி. அதென்ன குன்றம் வாயைப் பிளந்ததைப் போன்ற கோயில்? ஏன் அப்படிச் சொல்றாரு குமரகுருபரர்?

  விடை – மன்று அல்லது மன்றம் என்பதற்கு அம்பலம் என்றும் பெயர். தில்லையில் இருப்பது பொன்னம்பலம். குன்றம் வாய்பிளந்தன்ன என்றால் குன்றம் வாய் பிளந்தது போன்ற என்று பொருள். குன்றுக்கு வாய் இருந்து அது பிளந்தால் எப்படியிருக்கும்? மிகப் பெரிதாக இருக்கும். அந்த வாயில் பலப்பலர் கூடிச் செல்லவும் வழியாக இருக்கும். அது போல தில்லையம்பலத்தின் வாயிலும் வருகின்றவர்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக பெரிதாக திறந்திருக்கிறது.

  இந்த விடைகள்தான் எனக்குத் தெரிந்தவை.

  • anonymous says:

   இராகவா
   அழகான எண்ண ஓட்டம்!

   நீங்க சொல்வது போல் அது இமய மலையே தான்! நானும் ஒங்கள போலவே யோசிச்சி இருக்கேன்:)
   தென் திசையின் சிறப்பால், வடமலை = “குன்றம்” ஆகி விட்டது:))
   ————

   குறுமுனி எதுக்குச் சொன்னேன்-ன்னா…
   இறைவன் பொருட்டு (திருமணம்) = கயிலை தாழ்ந்தது
   அடியவன் பொருட்டு, தென்திசை = “புகழால்” உயர்ந்தது!

   இப்படிப் புகழால் உயர்ந்த தென் திசையில், ஈசன் இடையறாது ஆடல் செய்கிறான்!
   அவ்வப்போது ஆடல் செய்யும் வடமலை = இடையறாது ஆடல் செய்யும் தென் தில்லை!

   இதனால் தென் திசையைப் பார்த்து, வடமலை = வாய் பிளந்தன்ன:) ன்னு யோசிச்சேன்:))

  • anonymous says:

   இராகவா,
   இன்னோரு ஐயம்

   //தில்லையம்பலத்தின் வாயிலும் பெரிதாக திறந்திருக்கிறது//

   தில்லை = “சிற்றம்பலம்” அல்லவா?
   சிறு அம்பலம்! = சிறு படிகளில், குறுகி (உயிர்களைத் தம்முள் குறுக்கி) அல்லவோ ஈசன் திருநடனம்!
   தில்லையில், சிற்றம்பல வாயில் பெரிதாக இருக்குமோ? தில்லைக் கோயிலை அறிந்தவர்கள், அறியத் தாருங்களேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s