குயிலே, அவன் வரக் கூவு!

மெல் நடை அன்னம் பரந்து விளையாடும்

….வில்லிபுத்தூர் உறைவான் தன்

பொன் அடி காண்பது ஓர் ஆசையால்

….பொரு கயல் கண் இணை துஞ்சா,

இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி,

….எடுத்த என் கோலக் கிளியை

உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே!

….உலகு அளந்தான் வரக் கூவாய்!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் / நாச்சியார் திருமொழி (குயில் பத்து)

பாடியவர்: ஆண்டாள்

குயிலே,

மென்மையான நடையைக் கொண்ட அன்னங்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்ற திருவில்லிப்புத்தூரில் குடிகொண்டவன், அந்தத் திருமாலின் தங்கப் பாதங்களைப் பார்க்கின்ற ஆசை கொண்டேன் நான்.

அதனால், இரண்டு கெண்டை மீன்கள் சண்டையிடுவதுபோன்ற என்னுடைய கண்கள் தூக்கத்தை மறந்தன. பல நாள்களாக நான் உறங்காமல் வாடுகிறேன்.

நீ எனக்கு ஓர் உதவி செய், ஓங்கி உலகு அளந்த அந்த உத்தமனை இங்கே அழைக்கும்படி கூவு,

அப்படி நீ அழைத்து, அவனும் இங்கே வந்துவிட்டால், உனக்கு என்ன பரிசு தருவேன் தெரியுமா?

இனிமையான சோற்றில் பாலை ஊற்றிப் பிசைந்து ஊட்டுவேன், என்னிடம் இருக்கும் அழகான கோலக்கிளியை உனக்கு அறிமுகம் செய்துவைப்பேன், நீங்கள் இருவரும் நண்பர்களாகச் சேர்ந்து விளையாடலாம்.

துக்கடா

 • பாரதியாருக்கு முன்னாலேயே ‘குயில் பாட்டு’ பாடியவள் ஆண்டாள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ‘குயில் பத்து’. அந்தப் பத்து பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கே படிக்கலாம் : http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=114
 • பொதுவாகப் புலவர்கள் தங்களுடைய பாடலில் வரும் நாயகியின் கண்களை வர்ணிப்பார்கள், இங்கே first personல் எழுதுவதே ஒரு பெண் என்பதால், தன் கண்களைத் தானே வர்ணித்துக்கொள்கிறாள், ‘சண்டை போடும் கெண்டை மீன்களைப் போன்ற கண்கள்’… அழகானவைதான், ஆனால் என்ன பயன்? தூங்காமல் இருக்கின்றனவே, அவற்றை அமைதியடையச் செய்ய, அவன் வரவேண்டும், அதற்கு இந்தக் குயில் கூவவேண்டும்
 • அது இந்தக் காலக் குயில்போல, ‘சரி, கூவுகிறேன். பதிலுக்கு நீ என்ன தருவாய்?’ என்று ’வெவரமாக’க் கேட்கிறது. ஆண்டாளும் பால் சோறு தந்து, தன் கிளியை அதற்குச் சிநேகிதம் செய்துவைப்பதாகச் சொல்கிறாள்
 • ஒரு ’கமா’வை மாற்றிவிட்டால், இந்தப் பகுதிக்குச் சற்றே மாறுபட்ட ஒரு விளக்கமும் சொல்லலாம்:
 • விளக்கம் 1: இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி, எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன் … பால் சோறு ஊட்டி, நான் கையில் வைத்துள்ள என்னுடைய கோலக்கிளியை உனக்கு நட்பு செய்துவைப்பேன் (குயிலுக்குப் பால் சோறும் உண்டு, புது நட்பும் உண்டு)
 • விளக்கம் 2: இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை, உன்னொடு தோழமை கொள்ளுவன் … பால் சோறு ஊட்டி நான் வளர்த்த என் கோலக்கிளியை, உன்னோடு நட்பு செய்துவைப்பேன் (குயிலுக்கு வெறும் நட்புதான், பால் சோறு கிடையாது)

354/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி. Bookmark the permalink.

10 Responses to குயிலே, அவன் வரக் கூவு!

 1. amas32 says:

  //பொரு கயல் கண் இணை துஞ்சா,// மிகவும் அருமையான வரி! ஆண்டாளின் உறங்காமல் அலைபாயும் விழிகளை நாம் உடனே உணரவைக்கிற சொல்லோவியம் இந்த உதாரணம். இரண்டு கெண்டை மீன்கள் சண்டையிடுவது போன்ற, என்று சொன்னாலே ஆண்டாளின் நிலையை தெரிந்து கொள்ள முடிகிறது.

  ஓங்கி உலகளந்த உத்தமரை, குயிலைப் பாட்டுப் பாடச் சொல்லி கூப்பிடச் சொல்கிறாள். இயற்கையோடு இயைந்த வாழ்வு. குயிலும், கிளியும், மயிலும் நாயகிக்கு உதவிச் செய்யும் காலம் அது..

  குயிலைப் பார்த்து பாடும் பாடல் இது. ஆண்டாள் மிகவும் அன்புள்ளம் கொண்டவள். உதவிச் செய்யும் குயிலுக்கு பால் சோறு, மேலும் தன் கிளியின் சிநேகம் இரண்டையும் தருவதாகச் சொல்கிறாள். திருமாலின் போர் பாதங்களை தரிசிக்கும் பேறு பெறவேண்டும். ஒவ்வொரு கணமும் அதுவே அவள் எண்ணம்..

  ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  amas32

  • amas32 says:

   அவசரத்தில் டைப் செய்ததில் போர் என்று தவறுதலாக வந்துவிட்டது, கவனிக்கவும் இல்லை. மிகவும் வருந்துகிறேன். திருமாலின் பொற் பாதங்கள் என்று இருக்க வேண்டும்.

   amas32

  • anonymous says:

   :))))
   அவருக்குப் போர்ப் பாதமும் கூட! சதா போர் தான்:) அதனால் உங்க எ.பி சரியே அம்மா!:)

   போர் செய்யாத ஒரே அவதாரம் = உலகளந்த அவதாரம் தான்;
   அதான் கோதை, இந்தப் பாட்டுல…கண்ணன் வரக் கூவுவாய், இராகவன் வரக் கூவுவாய் ன்னு பாடாம…
   “உலகு அளந்தான் வரக் கூவாய்” ன்னு பாடுறா பாருங்க!:)

  • anonymous says:

   “உலகளந்த பெருமாள்” என்பது மிகவும் நுட்பமான அவதாரம்;
   = சூர சங்காரம் என்று நிகழ்த்தாத ஒரே அவதாரம் இது தான்!
   = ஒரே அவதாரத்தில் இரண்டு அவதாரம் = வாமனன் + திரிவிக்ரமன்

   மாவலி = பெரும் பக்தனான பிரகலாத ஆழ்வானின் பேரன்!

   எம்பெருமானுக்கு, தேவ-அசுர என்ற பேதங்கள் கிடையாது!
   * இந்திரன் பிள்ளை = ஜயந்தன் = இவன் தேவன் தானே? ஆனால் “காகாசுரன்” என்றே சொல்லப்படுவான்
   * பிரகலாதன் = அசுரன் தானே? ஆனால் பிரகலாத ஆழ்வான் என்றே சொல்லப்படுவான்!
   = தத்தம் கருமமே கட்டளைக் கல்!
   ——————

   ஆனால், பிரகலாதன் சம்பாதித்த நற்பெயரை வைத்துக் கொண்டு…
   மாவலியின் பிள்ளை நமுசி…
   அப்பாவின் குடும்ப ஆட்சியில் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம்!
   அதுவும் பருவம் அடையும் தன்னாட்டுப் பெண்களையெல்லாம்… இளவரசனுக்கே முதலில் உரியவர்கள்:(

   மாவலி பிள்ளைப் பாசத்தால் தட்டிக் கேட்க மாட்டான்!
   வைரத்தை வைரத்தாலேயே அறுக்க வேண்டும் என்றபடிக்கு, எம்பெருமான், மூவடி மண் கேட்டு வரும் காட்சி!
   பிள்ளை நமுசிக்குச் சேர வேண்டிய நிலத்தை, தான் யாசகம் பெற்றுக் கொள்வார்! ஆனால் யாரையும் அழிக்க மாட்டார்!

   இது தான் சாக்கு என்று, மாவலிக்கு உரிமையில்லாத மற்ற நிலம்/ கோள் என்று Extra-வாகவே அளந்து,
   அனைத்து மண்ணுக்கும் விண்ணுக்கும் உரிமை தானே என்று நிலைநாட்டிக் கொள்வார்!

   மாவலி மனம் திருந்த…
   அவனைப் பாதாள உலகுக்கு அரசனாக்கி, அடுத்த எட்டாம் கல்பத்தில், அவனுக்கே “இந்திர பதவி” என்று வாக்கும் குடுத்துச் சிறப்பு செய்வார்!
   ——————-

  • anonymous says:

   இதனால் தான் ஆண்டாள்…
   “உலகளந்தவன்” மேல் மட்டும், பல இடங்களில் குறிப்பிட்டுப் பாடுவது வழக்கம்! – அழிக்காமல், அருள் செய்தமையால்!

   திருப்பாவையில், ஒவ்வொரு பத்திலும், “உலகளந்தவன்” வருவான்!
   * முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி (3)
   * இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த (17)
   * மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி (24)
   —————-

   மற்ற அவதாரங்கள் எல்லாம் = Over speed-இல் போற திருடனை Over speedல் போயே பிடித்த அவதாரங்கள்:)
   போலீசைப் பார்த்து, நீயும் Over Speedல்ல தானே வந்தே?-ன்னு கேட்க முடியுமா?:)))

   ஆனால், “உலகளந்த” அவதாரம் மட்டும் = “சூர சங்காரம்” இல்லாத ஒரே அவதாரம்!
   OverSpeedஇல் போகாமல், Helicopterஇல் போய் பிடிச்சிட்டாரு போல:))

 2. குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்?
  மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா?
  குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்?
  உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா?

  இங்கே ஆண்டாள்தான் கவிக்குயில்.

 3. >>பொரு கயல் கண் இணை துஞ்சா<<

  உறக்கம் வரப் பார்க்கிறதோ? அவன் வரவுக்கும் உறவுக்கும் ஏங்கும் கண்கள் அதை எதிர்த்துப் போர் புரியப் பார்க்கின்றனவோ?

  பொருகயல் கண் – கயல்போலப் பொரு(ந்)திய கண்கள் என்றும் கொள்ளலாமோ?

 4. ஆனந்தன் says:

  பாடல் தலைப்பு MLVஇன் பாடலை ஞாபகமூட்டுகிறது! ஆனால் அது முருகனை அழைக்கும் பாடல், ஆனாலும் உணர்வு ஒன்றுதானே?

  “குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
  குமரன் வரக் கூவுவாய் – நீ
  குமரன் வரக் கூவுவாய்

  …வருவார் வருவார் என்றே
  வழி பார்த்தே விழி சோர்ந்தே
  மாரன் கணைகள் அல்லால்
  வீரன் வரக் காணேனே!”

  பாடல்: சுத்தானந்த பாரதியார்?

  • anonymous says:

   எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு!
   முருகன் என்பதற்காக அல்ல; அவன் என்னா பெரிய இவனா? ச்சீ போடா:) Grand legend of MLV – அதுக்காகப் பிடிக்கும்!

   Here = from the old movie, மனிதன்
   http://www.raaga.com/player4/?id=204836&mode=100&rand=0.1010183182079345
   நன்றி சிவ ஆனந்தன்; கோதைப் பாட்டில் குமரன் பாட்டைக் குடுத்தமைக்கு:)

 5. anonymous says:

  //பாரதியாருக்கு முன்னாலேயே ‘குயில் பாட்டு’ பாடியவள் ஆண்டாள்.//

  கையைக் குடுங்க சொக்கரே! Thanks from my thozhi:))
  நீங்க சொன்னது தான் சரி; பொரு கயல் = சண்டை போட்டுக் கொள்ளும் கயல் விழிகள்!:)

  கிளி-குயில் இன்னோரு குறிப்பும் இருக்கு!
  * கிளி = சொன்னதை மட்டுமே சொல்லும்
  * குயில் = சொந்தமாப் பாடும்

  அதான், தூதுக்குக் குயிலை அனுப்புறா! சமயத்துக்கு ஏத்தாப் போல சொந்தமாப் பேசி அவனை convince பண்ணும்!
  ஆனா, அப்பறம் எதுக்குக் கிளியின் தோழமை?

  அவன் இங்கே வந்தாப் பிறகு, தான் சொல்லிக் குடுத்ததை மட்டுமே சொல்லிச் சொல்லி, அவனை brainwash பண்ணி, இங்கேயே இருக்க வச்சிறனும்:)
  அதுக்கு, கிளியின் “சொன்னதையே சொல்லும் திறன்” தான் சரி வரும்! அதான் குயிலுக்கு, அப்பாலிக்கா கிளியின் நட்பு:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s