வெண்ணிலவே வெண்ணிலவே

ஈர மதியே, இள நிலவே, இங்ஙனே

சோர்குழலின்மீதே சொரிவது எவன், மாரன்

பொரவு அளித்தான், கண்ணி உனக்குப் புலரா

இரவு அளித்தான் அல்லனோ இன்று

நூல்: நளவெண்பா (சுயம்வரக் காண்டம்)

பாடியவர்: புகழேந்தி

சூழல்: நளனை நினைத்து வாடும் தமயந்தி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள்

குளிர்ச்சியான, இளமையான நிலவே,

என்ன ஆயிற்று உனக்கு? ஏன் திடீரென்று என்மீது போர் தொடுக்கிறாய்? நான்பாட்டுக்குக் களைப்பாகக் கூந்தலை அவிழ்த்துவிட்டுப் படுத்துக்கிடக்கிறேன், என்மேல் உன்னுடைய கதிர்களைப் பாய்ச்சித் தொந்தரவு செய்கிறாயே, ஏன்?

எனக்குத் தெரியும், உன்னை எனக்கு விரோதமாகத் திருப்பிவிட்டது அந்த மன்மதன்தானே? உன் தலையிலும் கழுத்திலும் போருக்கு உரிய மலர்களை மாலையாகச் சூட்டியவனும் அவன்தான்,

அதெல்லாம்கூடப் பரவாயில்லை, விடியாத ஓர் இரவை உன் கையில் ஆயுதமாகக் கொடுத்துவிட்டானே, நான் இனிமேல் என்ன செய்வேன்?

துக்கடா

 • நாமும் இதுவரை எத்தனையோ ஆயுதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ராத்திரியை, அதுவும் விடியாத ராத்திரியை ஓர் ஆயுதமாகக் கற்பனை செய்திருப்போமா? அதுதான் புகழேந்தி!
 • இந்தப் பாடலின் தொடக்க வரிகளான ஈர நிலாவே, இளைய நிலாவே என்பவை இன்றைக்கும் சினிமாப் பாடலாசிரியர்களின் ஃபேவரிட் வரிகள்!
 • ’மாரன்’ என்றால் மன்மதன். இதுகூட சில சினிமாப் பாட்டுகளில் வந்திருக்கிறது, Guess செய்யுங்கள் பார்க்கலாம்!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஈர மதியே இளநிலவே இங்ஙனே
 • சோர்குழலின் மீதே சொரிவதெவன், மாரன்
 • பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
 • இரவளித்தான் அல்லனோ இன்று

352/365

Advertisements
This entry was posted in காதல், சினிமா, நளவெண்பா, வெண்பா. Bookmark the permalink.

12 Responses to வெண்ணிலவே வெண்ணிலவே

 1. anonymous says:

  நாளும் நிலவது தேயுது மறையுது,
  “மாரன்” கணைவந்து மார்பினில் பாயுது…
  #இதழில் கதை எழுதும்…

  “மாரன்” அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…
  #நின்னையே ரதியென்று…

  திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்,
  சிலைபோன்ற “மாரன்” துணைதேடி வந்தாள்
  #TMS-Susheelamma – மிட்டாய் மம்மி

  மார்பில் ஒளிந்து கொண்டால், “மாரன்” அம்பு வரும்
  கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
  #மலர்களே மலர்களே இது என்ன கனவா

  • anonymous says:

   oops..how can i forget..
   மாரன் கலைக்கூடம், மஞ்சத்தில் உருவாக்கும்
   மேஸ்திரி – காதல் சாஸ்திரி
   #மாயா மச்சிந்திரா
   :)))

   சினிமாப் பாட்டு-ன்னா மட்டும் கொட்டுது; சங்கப் பாடல்-ன்ன?:))

 2. anonymous says:

  மாரன் = மன்மதன்
  மாறன் = பாண்டியன்/ நம்மாழ்வார்
  ——-

  மன்மதனின் ஆயுதங்கள் மிகவும் ரொம்ப மெல்லீசானவை;
  * கரும்பு வில்
  * வண்டுகளால் கட்டிய நாண்
  * பூவால் ஆன அம்பு
  ஆனால் அதை வைத்துக் கொண்டு வலியவர்களையும் வென்று விடுவான்:)

  * திங்கள், மன்மதனுக்குக் குடையாகச் சொல்லப்படும்!
  * இரவு = போர்வை
  * கிளி, குயில், தென்றல், வேனில்(வசந்தம்) = நான்கு படைகள்
  ——-

  விறல் மாரன், ஐந்து மலர் வாளி சிந்த-ன்னு அருணகிரி பாடுவாரு!:) – திருச்செந்தூர் முருகனை!
  மன்மதன் அம்பு (ச்சே கமல் படம் அல்ல, நெசமாலுமே அம்பு), மொத்தம் மலர்களால் தொடுத்துக் கட்டப்பட்டிருக்குமாம்!
  = அதான் “விறல் மாரன், ஐந்து மலர் வாளி”

  தாமரை, முல்லை, மாம்பூ, அசோகப்பூ, நீலோற்பலம் ன்னு ஐந்து மலர்களைக் கட்டிய அம்புகளை, ஒன்னு ஒன்னா எய்ய..
  “குளிர் மாலையின் கண், அணிமாலை தந்து
  குறைதீர வந்து குறுகாயோ – முருகா, குறைதீர வந்து குறுகாயோ”

  • anonymous says:

   மன் + மதன்
   = மனங்களை மத்து போல் கடைவதால், இந்தப் பேரு!
   = திருமாலின் மனத்திலே உதித்தவன், பின்பே வள்ளி பிறந்தாள்; அதனால் வள்ளிக்கு அண்ணன்!

   = சிவபிரான் எரித்ததால், அங்கம் இல்லாமல் போன=அனங்கன்
   = ரதி, ஈசனை வேண்டியதால், அவளுக்கு மட்டும் உருவமோடு தெரிபவன்
   ————-

   முருகன் தோன்ற வேண்டுமே என்பதற்காக, தன் உடலையும் இழந்த உத்தமன் = மன்மதன்!
   இந்த நிகழ்ச்சிக்குப் பிறகே, முருகன் தோற்றம்!

   அண்ணன் எரிந்த பின் பிறந்த முருகவனையே, மனத்தால் எந்நாளும் வரித்துக் கொண்டவள் = வள்ளி!

   முருகனுக்கு முன்பே தோன்றியவள் வள்ளி! = திருமாலின் தவப் புதல்வியாக!
   முருகனை விட மூத்தவள்:))

   • amas32mas32 says:

    You are giving ideas to put forth valid arguments to those in love with older girls 🙂
    amas32

   • // முருகனை விட மூத்தவள்:))//
    இவ்வளோ நாள் தெரியாத செய்தி இது. amas32 அம்மா சொன்ன மாதிரி சிலர்க்கு பயன் தரலாம். 🙂

    அப்புறம், இன்னொன்னு, இந்த மன்மதன் வில்லு அம்பு சங்கதி, ரோம புராணங்களிலும் மன்மதன் மலர் அம்புகள் தொடுப்பதாக கதைகள் உண்டு. யாரவது மன்மதனை பற்றி ஒப்புவமை ஆராய்ச்சி செய்திருந்தார்கள் என்றால் இன்னும் சுவாரசியமான செய்திகள் இருக்கும்.

 3. amas32mas32 says:

  Excuse me for writing in English today 🙂

  Pulavar Pukazhenthi is really amazing. He is able to convert an enchanting moon lit night time so conducive to pleasant dreams and relaxation into a weapon! But a gentle weapon, not harsh yet hurtful.

  The moon is the culprit here and his choice of weapon is the unending night time! What an imagination!

  Mr.Chokkan, you choose the best of songs sir, to show case here 🙂

  amas32

 4. GiRa ஜிரா says:

  மாரன்
  மன்மதன்
  காமன்
  மதனன்
  கருவேள்
  எத்தனை பெயர்கள் இவனுக்கு.

  இவன் மெய்யோ பொய்யோ! ஆனால் இவனைப் பற்றி நினைத்துப் பார்க்க இனியவன்.

  செவ்வேள் என்று முருகனைக் கொண்டாடும் தமிழ்க்கூட்டம் இவனைக் கருவேள் என்று கொண்டாடியிருக்கிறது.

  புராணக்கதைகளின் படிப் பார்த்தால் செவ்வேள் தோன்றுவதற்கு கருவேள் தன்னையிழந்தான். தன் உருவமிழந்தான். ஆனால் மனைவியொருத்தி வேண்டி நின்றதால் மீண்டு வந்தான். பலர் வாழ்வில் மீண்டும் மீண்டும் வந்தான்.

  இவன் அடையாளப் பொருட்களைப் பார்த்தால் எவ்வளவு இனிமை.

  இவன் நிறம் கருப்பு. மேகமும் கருப்புதான். ஆனால் அங்குதான் குளுமையிருக்கிறது. அந்தக் குளுமையை தனக்குள்ளே வைத்துக் கொண்டு அடுத்தவர் உடம்பில் சூட்டைப் பற்ற வைக்கும் இவன் குறும்பை தூவும் மழைச்சாரலோடு ஒப்பிடுவது மிகப் பொருத்தம். மிகமிகப் பொருத்தம்.

  எல்லோருக்கும் படைக்கலம் உண்டு. ஆனால் இவனிடத்தில் மட்டும்தான் அந்தப் படைக்கலம் காதலர்க்கு அடைக்கலம்.

  இனிக்கும் கரும்புதான் வில். அதில் தோகையும் உண்டு. அவன் உடன் எப்போதும் ரதியெனும் தோகையும் உண்டு.

  கரும்பின் சுவையை உண்டு உண்டு இனிக்கும் வண்டுக் கூட்டமே அந்த வில்லின் நாண்.

  கரும்பு வில்லில் எய்யப்படும் அம்பு மட்டும் இரும்பிலா இருக்கும்?

  மா, அசோகம், தனிநீலம், முல்லை மற்றும் அல்லி என்று ஐந்து வகை மலர்களைக் கொண்டு செய்த அம்பு.

  இப்படியொரு அம்பைக் காமனார் எய்தால் அது யாரையும் மாமனார் தேட வைக்கும்.

  அது சரி. இவனுக்கு ஏன் மாரன் என்று பெயர்? இவன் அம்பு பாயுமிடம் அப்படி.

  ”மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன” என்று வைரமுத்து எழுதியது போல, இவனது அம்புகளும் மார் துளைத்து காதலை நுழைத்து பாடாய்ப் படுத்துவதால் மாரன் என்ற பெயர் சரியானதே.

  • மார் துளைப்பதால் = மாரன் Whattay கற்பனை அழகு! Sooper:)
   ஆனா மாரன் = சம்ஸ்கிருதம்:)

   சுகுமாரன் கேள்விப்பட்டது உண்டு தானே? சுகு+மாரன், சுகுமார்..
   குத்ஸிதம் புத்திம் “மார” இதி சுகு-மாரஹ!

   தமிழில் மாரன்/மன்மதனுக்கு = வேள்! காமன் விழா என்னலும் வழக்கு!

   ஏதோ “மாரன்” சினிமாப் பாட்டு தேடினேன்; 365paa க்கு இட்டாந்து வுட்டுருச்சி:)))
   அந்த நாள் ஞாபகம் வந்ததே:) | இனியவை 40 அல்ல; இனியவை 365:)

 5. GiRa ஜிரா says:

  புகழேந்தியின் புகழ் ஏந்தி வர என் நாவும் எழுத்தும் எத்தனையோ தவங்கள் செய்திருக்க வேண்டும்.

  ஆன்மீகக் கூட்டத்தாரால் கொண்டாடப் படக் காரணமில்லாதவன். குறிப்பிட்ட கடவுளைப் புகழ்ந்து பாடி அந்தக் கூட்டத்தாரால் விரும்பப்படாதவன். வேறொரு நூலைத் தழுவினாலும் பாத்திரத்தைப் பாத்திரமாக வைத்து அதன் குணக் கோத்திரத்தை மாற்றி மதம் பரப்பாதவன்.

  மொத்தத்தில் இவனொரு புலவன்.

  வெண்பாவுக்கு மட்டுமல்ல உவமைக்கும் புகழேந்திதான்.

  ”உவமைகளாலே தமயந்தி அழகை உருவாக்கினான் ஒரு புலவன்” என்று கவியரசர் ஒரு பாடலில் புகழேந்தியின் புகழ் பாடுவார்.

  புகழேந்தியைப் போல் எழுதவும் இன்று ஆளில்லை. கவியரசரைப் போல் எழுதவும் ஆளில்லை.

  கம்பன் கவிஞன். அவனது கவிதைச் சுவையை அனுபவிக்காதவன் தமிழ் கற்றவனாக இருக்கவே முடியாது. கருத்தில் அவனை ஏலாமல் போவதும் போகாததும் அவரவர் கொள்கையைப் பொறுத்தது.

  ஆனால் புகழேந்தியிடத்தில் கருத்தும் அள்ளும். கவிதையும் துள்ளும்.

  இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் எழுத்துகளையெல்லாம் கவிதை கோர்த்த இவனுக்கு என்ன செய்வதென்று சிந்தித்துச் சிந்தித்து மூளை வேர்க்கிறேன். 😦

  இந்தக் கவிதைக்கு நாகா அழகு விளக்கம் கொடுத்திருக்கிறார். பலரும் பல கருத்து கூறியிருக்கிறார்கள். நான் கவிதைக்கு விளக்கம் சொல்லப் போவதில்லை. ஒரேயொரு சொல்லையெடுத்து அந்தச் சொல்லை மட்டுமே வைத்து எவ்வளவு விளக்கம் கொடுக்கலாம் என்று காட்டப் போகிறேன்.

 6. GiRa ஜிரா says:

  நளவெண்பாவின் சுயம்வரக் காண்டத்தில் வரும் இந்தப் பாடல் எப்படித் தொடங்குகிறது?

  “ஈரமதியே” என்பதே செய்யுளின் முதற்சொல். இந்தச் சொல்லைத்தான் நாம் அலசப் போகிறோம்.

  மதியென்றால் நிலவு. இன்னொரு வகையில் மதியென்றால் அறிவு.

  நிலவு வளர்வதும் உண்டு. தேய்வதும் உண்டு. அது நம் பார்வைக்கு. உண்மையில் நிலவு முழுமையாக எப்பொழுதும் உண்டு.

  அறிவு வளர்வதும் உண்டு. தேய்வதும் உண்டு. அது நம்மைப் போன்றோர்க்கு. ஆனால் ஆன்றோர்க்கு அறிவு என்றைக்கும் முழுமையானது.

  ஈரம் என்ற சொல் கசியும் நீர்மையையும் குறிக்கும். நெஞ்சில் கசியும் இரக்கத்தைக் குறிக்கும்.

  அறிவு என்ற மதியானது மலையில் கசியும் நீர் ஆறாகப் பெருகி ஊருக்குப் பயனாவது போல அனைவருக்கும் பயனாக வேண்டும்.

  அறிவு என்ற மதியானது இரக்கம் என்ற உணர்வு இல்லாமல் கொடாமதி ஆகிவிட்டால் அது கொடுமதி ஆகிவிடும்.

  நிலவு என்ற மதியானது ஈரக் குளுமையைக் காட்டி இரவை இனிமையாக்கும். உழைத்த உடலின் களைப்பு நீக்கி புத்துணர்வூட்டும்.

  நிலவு என்ற மதியானது சிறிதும் ஈரமில்லாமல் காதலர்கள் மீது தன்னுடைய வெண்கதிர்களைப் புண்கதிர்களாக வீசினால் முறையா! பாவமன்றோ காதலர்!

  மேலே சொன்னதையே இன்னும் பல விளக்கங்களோடு சேர்த்துச் சொல்லலாம். ஒரு கவிதைச் சுவைக்கும் பொழுது எப்படியெல்லாம் சிந்தித்துச் சுவைத்து இன்புற வேண்டுமென்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக இந்தக் கருத்துகளை இங்கே இட்டேன்.

  நன்றி.

 7. ஆனந்தன் says:

  உங்கள் பின்னூட்டமும் ஒரு கவிதையைப் போலவே நயத்துடன் விள்ங்குகின்றது! நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s