தக்கோர் வாழும் ஊர்

நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று ஐந்து

புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார் போற்று ஓவார்,

சலம், நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலச்சங்கை

நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

இறைவா,

நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் ஆகிய ஐம்பூதங்களாகத் திகழ்கிறவனே, ஐந்து புலன்களையும் வென்று நிற்பவனே,

பொய் பேசாதவர்களின் போற்றுதலைமட்டும் ஏற்கிறவனே, வஞ்சகம், இழி செயல்களில் ஈடுபடாத நல்லவர்கள் வாழும் தலைச்சங்கையின் அழகிய கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உன்னை வணங்குகிறேன்!

துக்கடா

 • இந்தப் பாடல் ‘தலைச்சங்கை’ என்ற சோழ நாட்டுத் திருத்தலத்தைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது சொல்லும் செய்தி மிகவும் பொதுவானது: மலர் தூவி பூஜை செய்தால்மட்டும் இறைவன் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டுவிடமாட்டான், கோயிலுக்குக் கோடிகோடியாக அள்ளிக்கொடுப்பதெல்லாம் போதாது, பொய் பேசக்கூடாது, கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது, அப்படிப்பட்ட தூய்மை உள்ளவர்களின் பிரார்த்தனைக்குதான் அவன் காது கொடுப்பான், அப்படிப்பட்டவர்கள் வாழும் ஊரில்தான் அவனும் விரும்பிக் குடியேறுவான்!

351/365

Advertisements
This entry was posted in அறிவுரை, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

13 Responses to தக்கோர் வாழும் ஊர்

 1. anonymous says:

  //போற்று ஓவார்//

  சொக்கரே, எ.பி?
  போற்றுவார் (அ) போற்றூஉவார் = அளபெடை?

 2. Manion says:

  துக்கடா செம்ம நருக்!

 3. ஐம்பூதங்களுக்கும் அதிபதி அவர் தான்! ஐம்புலன்களையும் தோற்றுவித்தவரும் அவர் தான். ஆகவே அவர் நிகரில்லாதவர். அனைத்தையும் வென்ற அவரை ஏமாற்ற முடியாது.

  ஆகவே வெறும் மேல் பூச்சான வார்த்தைகளுக்கு அவர் மயங்கி விட மாட்டார். உண்மையின் உறைவிடமாகிய இறைவனிடம் பொய்யான வார்த்தைகளுக்கு இடமில்லை. எங்கு தூய்மையான அன்பு உள்ளதோ, எங்கு சத்தியமான எண்ணங்கள் நிலவுகின்றதோ அங்கு இறைவன் குடி கொள்கிறார். அது நம் உள்ளமே என்று நான் நம்புகிறேன்.

  பொய் பித்தலாட்டம் இல்லாத தலைச்சங்கையில் வாழும் சிவனையும் வணகுகிறேன்!

  amas32

 4. anonymous says:

  இந்தப் பதிகத்தையும் பாட்டையும் படிக்கும் போது…
  திருஞான சம்பந்தரை நினைச்சாப் பாவமா இருக்கு:(
  எந்த காலத்து வினையோ, இன்னிக்கி வந்து வாட்டுது:((

  அவர் போற்றி வளர்த்த ஒரு நிறுவனம்…
  இன்னிக்கி சைவத்தை வளர்க்கவில்லை… தமிழை வளர்க்கவில்லை,
  அதை வளர்க்கலீன்னாக் கூடப் பரவாயில்லை…ஆன்ம நேயத்தையும் வளர்க்கவில்லை!:(

  //1. கோயிலுக்குக் கோடிகோடியாக அள்ளிக்கொடுப்பதெல்லாம் போதாது,
  2. கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது,
  3. அப்படிப்பட்ட தூய்மை உள்ளவர்களின் பிரார்த்தனைக்குதான் அவன் காது கொடுப்பான்,
  4. அப்படிப்பட்டவர்கள் வாழும் ஊரில்தான் அவனும் விரும்பிக் குடியேறுவான்//
  = மதுரையில் குடியேறுவியா சொக்கா?

  கோடிகோடியாக அள்ளிக் கொடுப்பதும், சிங்காசன, தங்க ‘ஜொ’லிப்புகள் தான், தலையிலும், ஒடம்பிலும் தொங்குது…
  அதையே “பெருமையா” வேற பேசிக்கறது:))
  இப்படிப்பட்டவர்கள் வாழும் ஊரிலா விரும்பிக் குடியேறுவான்?:(

  ஆத்தா மீனாட்சி கர்ப்ப கிருகத்தில், தனி இடம் வேணுமாம்! விட்டா மீனாட்சியையே வித்துருவாங்க:((
  ——————–

  • anonymous says:

   இது போன்றவர்களைப் பார்த்தா, சிவபெருமான் நிலை எப்பிடி இருக்கும்? எங்கள் அப்பர் பெருமான் சொல்லுறாரு!

   பொக்கம் மிக்கவர் பூவும் நீறும் கண்டு
   நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே!

  • ஆனந்தன் says:

   இந்தப் பாடலைப் போட்டதற்குப் பொருத்தமான காரணம் என்ன என்று இதுவரை யோசித்துக்கொண்டிருந்தேன்..இப்போது புரிகிறது!

  • amas32mas32 says:

   I feel your pain and I am as much saddened.
   amas32

 5. anonymous says:

  தலச்சங்கை = மிகப் பழமையான ஊர்
  சிலப்பதிகாரத்திலேயே வருது!
  தாழ்நீர் வேலித் தலைச் சங்கானத்து…

  தலை+சங்கு+காடு = அதுவே தலைச்சங்காடு என்று ஆகி விட்டது!
  காவிரிப் பூம் பட்டினத்துக்கு கிட்டக்க இருக்கும் ஊரு; சங்கு வாணிபச் சந்தை, ஆதலால் = தலைச் சங்கானம்!
  தலை+சங்கு+ஆனம் என்பது தொல் தமிழ்ப் பெயர்!

  தலைச்சங்க நாண்மதியம் என்ற 108 திருத்தலமும் கூட!
  *தாயார் = தலைச்சங்க நாச்சியார்
  *பெருமாள் = நாண்மதியன்

  சம்பந்தர் பாடிய காவிரித் தென்கரைச் சிவத்தலம்
  * இறைவன் = சங்காரண்யேஸ்வரர்
  * இறைவி = சௌந்திரநாயகி
  சம்பந்தரின் ஒரு முழுப் பதிகமும் (10 பாடல்=1 பதிகம்) பெற்றுள்ளதால், இது வைப்புத் தலம் அன்று! தேவாரத் தலமே!

 6. GiRa ஜிரா says:

  திருஞானசம்பந்தருக்கு ஆளுடைய பிள்ளையார் என்றும் ஒரு பெயருண்டு. மூன்று சமயக்குரவர்களிலும் செல்லப்பிள்ளை இவர்தான். உலகநாயகனையும் உலகநாயகியையுமே அம்மையப்பராகப் பெற்ற பிள்ளையார்.

  எத்தனையோ குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஞானசம்பந்தன் என்னும் அந்த ஒரு குழந்தையின் அழுகையைத்தான் தொழுகையாக ஏற்றுக் கொண்டு அம்மையே ஞானப்பால் ஊட்டினார்.

  அந்தக் குழந்தை பாடிய இந்தப் பாடலில் முதல் வரியிலேயே மிகப் பெரிய உண்மையிருக்கிறது.

  நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று ஐந்து புல நீர்மை புறம் கண்டார்

  இதுதான் அந்த வரி.

  மனிதர்களுக்கு இருக்கும் புலன்கள் ஐந்து. நாம் அனுபவித்தது ரசிப்பதெல்லாம் இந்த ஐந்து புலன்கள் வழியாகத்தான்.

  அந்த ஐம்புலன் ரசனைதான் நம்மையெல்லாம் ஆட்டி வைப்பது.

  இந்த ஐந்து புலன்களையும் உள்ளடக்கிய மனித உடல் எதனால் ஆனது? அதுவும் ஐந்து பொருட்களால் ஆனது. அந்த ஐந்துதான் நிலம், நீர், காற்று, நெருப்பு, மற்றும் ஆகாயம் ஆகியவை.

  அப்படி ஐந்து பொருட்களாகவும் ஆகி நிற்பது ஆண்டவனே. இதைச் சொல்வதுதான் ”நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று” என்ற வரி.

  இப்படி ஐம்பொருட்களால் ஆன ஆண்டவனை நம்முடைய ஐம்புலன்களால் உணர்ந்து அறிய முடிகிறதா? இல்லை.

  அதைச் சொல்வதுதான் “ஐந்து புல நீர்மை புறம் கண்டார்”.

  திரும்பவும் சொல்றேன். சரியாக் கேட்டுக்கோங்க.

  ஐந்து பொருட்களால் ஆனவர்கள் நாம்.

  அந்த ஐந்து பொருட்களாக இருப்பதோ ஆண்டவன்.

  ஆனாலும் நம்முடைய ஐந்து புலன்களுக்குப் புலப்படாமல் புறத்தில் இருக்கிறான் இறைவன்.

  இதுதான் நம்முடைய நிலமை.

  ஏன் இந்த நிலை? அதைத்தான் மீதிப் பாடல் சொல்கிறது.

  ஆண்டவனை எப்படி உணர்வது?
  எப்போதும் பேர் சொல்லிக் கொண்டேயிருந்தால் உணர்வோமா?
  எப்போதும் பூசெய்து கொண்டேயிருந்தால் உணர்வோமா?
  எப்போதும் வேள்வியில் அமர்ந்தால் உணர்வோமா?
  இல்லை. இல்லை. இல்லவேயில்லை.
  வெறும் சடங்குகள் ஆண்டவனை கண்முன் நிறுத்தாது.

  பொக்காம் செய்யார் போற்றி ஓவார் – பொய் சொல்லாதார் போற்றுதலையே ஏற்றுக் கொள்வானாம் ஆண்டவன்.

  சலம், நீதர் அல்லாதார் தக்கோர் – தவறான இழி செயல்களைச் செய்யாதவர்களே இறைவனை அறிந்து கொள்ளத் தக்கவர்கள்

  அப்படிப்பட்ட நல்ல பண்மை நாம் வளர்த்துக் கொண்டால் ஐம்பொருள்களாக ஆகி நிற்கும் ஆண்டவனை ஐம்புலன்களால் நாமும் உணர்ந்து அறியலாம்.

  • amas32 says:

   அருமையான விளக்கம் ராகவன் 🙂

   amas32

   • GiRa ஜிரா says:

    நன்றி அம்மா. நானிடும் விளக்கங்கள் உங்கள் ரசிப்புக்கும் உரியவை என்பதறிந்து மகிழ்ச்சி. 🙂

  • ஆனந்தன் says:

   ஆழமான பின்னூட்டம்! மிக நன்று.
   //அந்த ஐந்து பொருட்களாக இருப்பதோ ஆண்டவன்.
   ஆனாலும் நம்முடைய ஐந்து புலன்களுக்குப் புலப்படாமல் புறத்தில் இருக்கிறான் இறைவன்.//
   இதைத்தான், “சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ” என்று சிவவாக்கியர் பாடியுள்ளார் போலும்.

   • GiRa ஜிரா says:

    அதே அதே. சரியாகப் பிடித்தீர்கள். சட்டுவத்தில்தான் கறியிருக்கிறது. ஒருவகையில் கறிக்கு சட்டிதான் ஆதாரம். ஆனாலும் சட்டிக்குச் சுவை தெரியவில்லை. சட்டிக்கு வாயிருந்தாலும் இரை தெரியவில்லை. நமக்குப் புலனிருந்தாலும் இறை தெரியவில்லை. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s