நிலாவும் நட்சத்திரங்களும்

தெரிந்து ஒளிர் திங்கள் வெண்குடத்தினால் திரை

முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்

சொரிந்ததேயாம் எனத் துள்ளி மீனொடும்

விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே!

*

அரும் தவன் சுரபியே ஆதி வானமா,

விரிந்த பேர் உதயமே மடி வெண் திங்களா,

வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையாச்

சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே!

*

எண்ணுடைய அனுமன்மேல் இழிந்த பூ மழை

மண்ணிடை வீழ்கில; மறித்தும் போகில;

அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்

விண்ணிடைத் தாங்கின போன்ற மீனெலாம்!

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தரகாண்டம், ஊர் தேடு படலம் #55, #56 & #57)

பாடியவர்: கம்பர்

சூழல்: சீதையைத் தேடி இலங்கை செல்கிறான் அனுமன். அங்கே அவன் காணும் ஓர் இயற்கைக் காட்சி

பெரிய வானம். அதில் சிறப்பாக விளங்குகின்ற சந்திரமண்டலம். அதையே வெள்ளிக்குடமாகச் செய்து, அலைகள் எழுந்து விழும் பாற்கடலில் இருந்து கொஞ்சம் பாலை மொண்டு எடுத்து யாரோ ஊற்றுகிறார்கள்.

அப்படி ஊற்றும்போது, அந்தக் குடத்தின் விளிம்பு பால் நிறைந்து காணப்படுகிறது. அதுதான் இந்த வெண்ணிலா.

குடத்திலிருந்து வெளியே வரும் பால் மண்ணில் விழுவதுபோல, அந்த நிலாவிலிருந்து வருகின்ற வெள்ளைக் கதிர்கள் வானத்தையும் பூமியையும் நனைத்து விரிகின்றன.

அப்படியானால் நட்சத்திரங்கள்?

பாலை ஊற்றினால் சில துளிகள் ஆங்காங்கே தெறிக்கும் அல்லவா? அப்படித் தெளித்த துளிகள்தான் இந்த நட்சத்திரங்கள்!

*

வசிஷ்ட முனிவன் பல அரிய தவங்களைச் செய்தவன். அவனிடம் உள்ள காமதேனு யார் என்ன கேட்டாலும் அப்படியே அள்ளித் தரக்கூடிய வள்ளல் பசு.

இப்போது, அந்தக் காமதேனுவாக இந்த வானம் தோன்றுகிறது. அதன் மடிதான், வெண்ணிறச் சந்திரன்.

மற்ற பசுக்களைப்போல, காமதேனுவிடம் யாரும் சிரமப்பட்டுக் கறக்கவேண்டாம், அதுவே பாலை வழங்கிவிடும்.

அதுபோல, இந்த நிலாவும் பாலைச் சுரக்கிறது, அது சந்திரக் கதிர்களாகக் கீழே வந்து பூமியை நனைக்கிறது.

*

எல்லோராலும் மதிக்கப்படுகிற பெருமையைக் கொண்டவன் அனுமன். அவன் மிகப் பெரிய கடலைத் தாண்டி இலங்கைக்கு வந்திருக்கிறான்.

இப்பேர்ப்பட்ட சாதனையைச் செய்த அவனை வாழ்த்திய தேவர்கள், மேலே இருந்தபடி பூ மழை பொழிகிறார்கள். அவர்கள் தூவிய மலர்கள் கீழே அனுமனை நோக்கி வருகின்றன.

ஆனால், இலங்கையை நெருங்கியவுடன், அந்த மலர்களுக்குப் பயம். பெருமையை உடைய வாள் ஆயுதத்தை ஏந்திய ராவணன் இங்கே இருக்கிறானே, அவன் கண்ணில் பட்டால் நம்மை என்ன செய்வானோ என்று அந்த மலர்கள் பயப்படுகின்றன.

ஆகவே, அந்த மலர்கள் கீழே பூமியில் விழவும் இல்லை, மேலே திரும்பிச் செல்லவும் இல்லை, அப்படியே வானத்தில் நிற்கின்றன. அவைதான் இந்த விண்மீன்கள்!

துக்கடா

 • கம்பர் காலத்தில் வீடியோ கேமெரா கிடையாது, யூட்யூப் கிடையாது, அவையெல்லாம் அவசியமும் இல்லை என்பது இந்தப் பாடல்களைப் படித்தால் தெரிகிறது!
 • பெரிதாக ஒன்றும் இல்லை, வானத்தில் நிலா, சுற்றிலும் விண்மீன்கள், இந்தச் ‘சாதாரண’க் காட்சிகூட, கம்பன் பார்வையில் வெளிப்படும்போது அதில் எத்தனை கற்பனைகள், கவி அழகு!
 • முதல் பாடலில், ’வானத்தில் இருந்து கொட்டும் பால் குடம்தான் சந்திரன், அதிலிருந்து கொட்டும் பால்தான் சந்திரக் கதிர்கள்’ என்ற கற்பனையில் நாம் இன்னும் கொஞ்சம் மசாலா கலக்கலாம்: பால் குடத்தைச் சாய்க்கத் தொடங்கும்போது, முழு வட்டம் தெரியும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பால் குறையக் குறைய அந்த முழுவட்டம் சிறிதாகி ஒருகட்டத்தில் காணாமலே போய்விடும், நிலவும் அதேமாதிரி தினசரி தேய்கிறது 😉
 • அப்போ வளர்பிறை? என்னைக் கேட்டால்? கம்பரைக் கேளுங்கள், அதற்கும் ஏதாவது அட்டகாசமான கற்பனை / உவமை வைத்திருப்பார் :>

349/365

This entry was posted in அனுமன், இயற்கை, உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், வர்ணனை. Bookmark the permalink.

22 Responses to நிலாவும் நட்சத்திரங்களும்

 1. = கம்பன் கவியே கவி!

  பாடலைக் கொஞ்சமே கொஞ்சம் பதம் பிரித்து எழுதினால் போதும்….
  விளக்கமே வேண்டாம்!
  அப்படியே இக்கால இளைஞர்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு, அழகு வந்து கொஞ்சும்!

  = கம்பன் கவியே கவி!

  மேற்சொன்னது வெறும் “முகஸ்துதியோ” (அ) “உபசாரமோ” அல்ல என்று, வாசகர்களே படிக்கப் படிக்க உணர்ந்து கொள்வார்கள்!

  • ஆனானப்பட்ட திராவிட இயக்கத் தலைவரான அறிஞர் அண்ணாவே, கம்பனை மற்ற பிறவற்றுக்குச் சாடினாலும்….:))
   தமிழையும், அடுக்குமொழியும், கம்பனிடமே அள்ளி அள்ளி மாந்துவார்!:))

   அதான் உலகத் தமிழ் மாநாட்டிலே, இளங்கோ – கம்பனை அருகருகே வைத்து சிலை கண்டார் சென்னையில்!
   பின்னாளில், தற்செயலாக, அந்த இடமே, அவர் நினைவிடமாகவும் ஆகிப் போனது!

 2. //விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே//

  நிலா ஒரு முறை தானே விரியும்?
  (தோன்றி, மறையும்)
  அது எப்படி “விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே”? :)))

  கம்பன் சார்பாக யாரேனும் சொல்றீங்களா?:))

  • கம்பன் சார்பாக இல்லை, கந்தன் சார்பாக முயற்சிக்கிறேன்.

   ‘விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே’ என்பதன் பொருள் இப்படி இருக்குமோ?

   – 1; ஒளியாக விண்ணிலும் மலைகளிலும் தரையிலும் விரிந்தது வெண்ணிலா
   – 2; (பறக்கும் அனுமனின் பார்வையில்) மேலே விண்ணிலும், மலையிலும் கீழே (உதயநிலாவாய்) கடலில் பிரதிபலிப்பாகவும்.விரிந்தது வெண்ணிலா

   காட்சியில் பெண் எவரையும் காணோம் ;), கண்டிருந்தாலாவது

   – 3; மேலே தெரிந்தது வெண்ணிலா, கீழே விரிந்தது பெண்ணிலா

   என்றிருக்கலாம். ;).

   கந்தனை விடுங்கள். கம்பன் சொல்வதாகக் கண்ணன் 😉 கருதுவது யாதோ?

  • anonymous says:

   நல்ல கற்பனை, கந்தசாமி ஐயா
   //(பறக்கும் அனுமனின் பார்வையில்) மேலே விண்ணிலும், மலையிலும் கீழே (உதயநிலாவாய்) கடலில் பிரதிபலிப்பாகவும்// = nice!:)

   //விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே//
   க்கு சொக்கர் என்ன சொல்லுறாரு, மத்த வாசகர்கள் என்ன சொல்லுறாங்க ன்னும் பார்ப்போம்:)

   • என். சொக்கன் says:

    இதிலென்ன குழப்பம்? வெண்ணிலா மேலே விரிகிறது, கீழே உள்ள கடலில் (இலங்கை தீவு அல்லவா) அதன் பிரதிபலிப்பு மீண்டும் விரிகிறது, அவ்ளோதானே?

   • anonymous says:

    குழப்பம் இல்ல சொக்கரே, சுவை! – அதுக்காகக் கேட்டேன்:)

    விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே! = மேலே விண்ணிலும், கீழே கடலிலும் என்பது சரியே! ஆனா, கூட்டிப் படிங்க….

    துள்ளி “மீனொடும்”-விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே!
    * மேலேயும் மீன் = விண் மீன்
    * கீழேயும் மீன் = மண் மீன்

    எப்படி, பாலை ஊத்தும் போது, மேலே நட்சத்திரங்கள் சிதறுகின்றனவோ, கீழே நிலவொளியில் மீன்கள் எல்லாம் சிதறுகின்றன!
    பெளர்ணமி நிலவில், கோயில் குளத்தில், துள்ளும் மீன் கூட்டத்தைப் பாக்கணுமே! You will enjoy the sight:)

   • ஆனந்தன் says:

    Excellent!

   • ஆகா, அற்புதம். நன்றி அனானி.

 3. அனுமனை வாழ்த்தவும் ஆசை!
  ஆனாலும் இராவணன் மேல் பயம்!

  போட்ட பூவெல்லாம் இலங்கையில் விழாமல், வானிலேயே தங்கி நட்சத்திரமாய் ‘ஜொ’லிக்கின்றன
  – இப்படியெல்லாம் சிந்திக்க, கம்பன் கிட்ட தான் வரம் வாங்கணும் நாம:))
  ——–

  இன்றைக்கு, Republic Day March Pastஐ எடுத்துக் கொள்ளுங்கள்!
  விமானப் படை, பூமிக்கு வந்து, நாட்டுத் தலைவரை வாழ்த்த முடியாது!
  என்ன செய்யறாரு?
  வானிலேயே மாலை போலவும், தேசியக் கொடி போலவும், வரைந்து காட்டி… தலைவருக்கு மாலையிட்டு வாழ்த்துறாரு அல்லவா?

  அதை, அப்பவே கம்பன் செஞ்சிக் காட்டுறான்!:)
  அனுமனுக்குப் பூமாலை = வானிலேயே போட்டுக் காட்டுறான்!

  #கம்பேன்டா!:)

 4. //அப்போ வளர்பிறை?
  என்னைக் கேட்டால்? கம்பரைக் கேளுங்கள்,
  அதற்கும் ஏதாவது அட்டகாசமான கற்பனை / உவமை வைத்திருப்பார் :> //

  Are u so confident chokkare? on this?? 🙂

  • Pardon for any chol mistakes; quoting from memory…

   கோணிலா வான மீன்கள்
   இயைவன கோத்தது என்கோ
   வாணிலா வயங்கு செவ்வி
   “வளர்பிறை” வகிர்ந்தது என்கோ

   நாணிலா நகையின் நின்ற
   நளிர்நிலா தவழ்ந்தது என்கோ
   பூணிலா முலைமேல் ஆர
   முத்தை யான் புகல்வது என்னோ?

   • ஒரு நிமிடத்திற்குள் #365paaவில் ஆறு அல்லது ஏழு அல்லது பதினெட்டு பின்னூட்டங்கள் வந்துவிட்டன என்றால் நீவீர் இங்கு வந்துள்ளீர் என்று தெரிந்து கொள்ளலாம் 🙂
    very happy
    amas32

   • anonymous says:

    no no!
    naan cholren ma!

  • சீதை, சபையில் நுழையுறா… அவள் மனத்துக்கினிய இராகவன்…

   அவனைப் பாக்கணும், ஆனாலும் பார்க்கக் கூடாது = குலப் பெண் நாணம்:)
   அவனைப் பார்த்து, “ஏய்.. நான் ஒன்னைப் பாத்துட்டேன்; honey, all the best” ன்னு சொல்லணும் – எப்படிச் சொல்லுறது?

   கொஞ்சம் கொஞ்சமாப் புன்னகையைக் கூட்டுறாளாம்….

   இள முறுவல்,
   மென் முறுவல்,
   வளர் முறுவல்..
   ன்னு புன்னகை வளருது…. “வளர் பிறையைப்” போல….

   எப்பூடீ?:)))
   ————

   அது மட்டுமல்ல….

   உள்ளுக்குள் அவள் மார்பகமும்,
   ஆசையால் வளருது….
   “வளர் பிறையைப்” போல…

   எப்பூடி, எப்பூடி? :))

   பூணிலா முலைமேல்
   நளிர்நிலா தவழ்ந்தது என்கோ
   “வளர்பிறை” வகிர்ந்தது என்கோ!!

 5. anonymous says:

  //அண்ணல் வாள் அரக்கனை//

  அரக்கனை, “அண்ணல்” ன்னு சொல்லுறாரே?:) எந்த “அண்ணல்” சொக்கரே?:))

  • anonymous says:

   ஆனா, தமிழில் அண்ணல் = உயர்ந்தவன் ன்னு பொருள்!
   அண்ணல் அம்பேத்கார்
   காந்தி அண்ணல் etc etc

   சிவபெருமானை = கரை மிடற்று அண்ணல் ன்னு சொல்வார் அப்பர் சுவாமிகள், தேவாரத்தில்
   அப்பேர்ப்பட்ட, “உயர்ந்த” பட்டத்தை, இராவணனுக்கும் தரும் கம்பனின் பெற்றிமை தான் என்னே!
   வால்மீகியில் இது இருக்காது!

   ஒருவனை, எப்பவும், “வெறுப்பு” என்ற கண் கொண்டு மட்டுமே பார்க்காது, குணம் நாடி, குற்றமும் நாடிக் கொள்ளுதல்!
   அதான் அண்ணல் = இராவணனுக்கும் சொல்கிறார்!
   இதே கம்பன், அண்ணல் ன்னு = இராகவனையும் சொல்லுவாரு! = அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
   —————-

   கோதை, திருப்பாவையில், இதே இராவணனைக், “கோமான்” என்று சொல்லுவாள்! கோமான், கோமகன் என்பதெல்லாம் “உயர்” பட்டங்கள்!

 6. கவிஞர்கள் நிலாவையும், பெண்ணையும் பாடியது போல (எண்ணிக்கையிலும், புகழ்வதிலும்) வேறு எதைப் பற்றியும் பாடியது இல்லை என்றே நினைக்கிறேன் 🙂

  அதுவும் கம்பனின் இந்தப் பாடல்கள் அதி அற்புதம்! என்ன ஒரு கற்பனை வளம்! வெண்ணிலவை வெள்ளிக் குடத்தின் வட்ட வாயில் தளும்பும் பால் என்கிறார். மண்ணை நனைக்கும் நிலவொளியை குடத்தில் இருந்து சொரியும் பாலின் ஒளி என்கிறார். குடத்தில் இருந்து சிதறும் பால் திவிலைகள் நட்சத்திரங்கள் ஆகின்றன!
  இது தான் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? 😉

  வேறு ஒரு கற்பனை. அள்ளி அள்ளித் தரும் காமதேனுவாக வானம். வானத்தில் இருந்து தானே மழை வருகிறது. பின் அள்ளித் தரும் வானம் தானே? காமதேனுவின் வெண்ணிற மடி தான் வெள்ளை நிலவு. அது தானாகச் சொரியும் பால் தான் நிலவின் ஒளி. அழகோ அழகு!

  மூன்றாவது பாடலை படிக்கும் போது எவரும் வியந்து போவர். தேவர்கள் அனுமனைப் பாராட்டிச் சொரியும் பூக்கள் கீழே இலங்கையில் விழ பயந்து நடு வானத்தில் நட்சத்திரங்களாக நின்றுவிடுகின்றன என்கிறார்.

  மொட்டை மாடியில் ஒரு துல்லியமான இரவு பொழுதில் தரையில் படுத்துக் கொண்டு வானத்தை இந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நம் மேல் பூக்கள் விழுந்தாலும் விழும்! அவ்வளவு தத்ரூபமாக உள்ளது அவர் கற்பனை.

  திரு சொக்கரே அனுபவித்து உரை எழுதியுள்ளதால் படிக்கவே ஆனந்தமாக உள்ளது 🙂

  amas32

  • ஆனந்தன் says:

   //மொட்டை மாடியில் ஒரு துல்லியமான இரவு பொழுதில் தரையில் படுத்துக் கொண்டு வானத்தை இந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நம் மேல் பூக்கள் விழுந்தாலும் விழும்! //
   Very good! அந்த சுகம் எப்போ இனி வருமோ..?

  • anonymous says:

   //திரு சொக்கரே அனுபவித்து உரை எழுதியுள்ளதால் படிக்கவே ஆனந்தமாக உள்ளது//

   தினமுமே அப்பிடித் தானே எழுதறாரு?:)
   ஆனா, கம்பன் ன்னா மட்டும் அவருக்குக் கொஞ்சம் ஓர வஞ்சனை:)

 7. நண்பர்களே.

  நிலா, நிலவு என்ற சொற்கள் இக்காலத்தில் திங்களை/மதியைக் குறிக்கும் சொற்களாகப் புழங்குகின்றன. ஆனால் கம்பன் காலத்தில் திங்களின் ஒளியை மட்டுமே நிலா, நிலவு என்பவை குறித்தன. நிலவொளி என்பதை நாம் நிலவின் ஒளி என்று தற்போது புரிந்து கொள்கிறோம்; ஆனால் கம்பனின் காலத்திலும் அதற்கு முன்னரும் நிலவாகிய ஒளி என்ற பொருளில் தான் அது புழங்கியது.

  இப்பாடல்களில் வரும் திங்கள் என்பது மதியைக் குறிப்பதையும், நிலவு என்பது மதியின் ஒளியைக் குறிப்பதையும் கொஞ்சம் நெருங்கிப் படித்தால் காணலாம்.

  மீனொடு மேலும் கீழும் விரிந்தது மதியின் ஒளியாகிய வெண்ணிலா; மதியஏ இல்லை.

  அருந்தவன் சுரபியின் மடி தான் வெண்திங்கள்; நிலவு இல்லை; அந்த மடி சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றம்; திங்களின் தோற்றம் இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s