வயல்வெளியில் ஒரு காட்சி

பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்

….பூட்டும் பொழுதில் ஒரு புல்லைக் காளை

மோட்டு வரால் குதிக்க, முகத்தை மாறி,

….முடுக்கி மறிக்கும், ஆளை முட்டி ஓட,

’மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன்’ என்றே

….வடிவு அழகக் குடும்பன் வந்து மறித்தான்,

கோட்டு முனையால் அது குத்தும் அளவில்

….குடும்பன் சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்

நூல்: முக்கூடற் பள்ளு

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: வயலில் உழவு வேலைகள் தொடங்குகின்றன. ஒரு batch காளை மாடுகள் உழுது முடித்ததும், அவற்றைக் கழற்றிவிட்டு அடுத்த batch மாடுகளைப் பூட்டத் தொடங்குகிறார்கள், அப்போது…

அதுவரை ஏரில் பூட்டி உழுத காளைகளை விவசாயிகள் அவிழ்த்து மேயவிட்டார்கள். பூட்டப்படாத வேறு காளைகளை அழைத்துவந்து ஏரில் பூட்டினார்கள்.

அப்போது, வயல்வெளியில் ஒரு வரால் மீன் துள்ளிக் குதித்தது. அதைப் பார்த்த ஒரு மஞ்சள் நிறக் காளை மாடு மிரண்டுவிட்டது, முகத்தில் கோபத்துடன் அங்கும் இங்கும் ஓடியது. எதிரில் வருபவர்களையெல்லாம் முட்டித் தள்ளியது.

மற்றவர்களெல்லாம் என்ன செய்வது என்று புரியாமல் பதறும்போது, ஒரு பள்ளன் தைரியமாக முன்னே வந்தான், ‘கவலைப்படாதீர்கள், இந்த மாட்டின் குறும்பை அடக்குவதற்கு நான் இருக்கிறேன்’ என்றான்.

மறுவிநாடி, அவன் தைரியமாக மாட்டின் முன்னே பாய்ந்தான், அதைத் தடுத்து நின்றான்.

மாடு அசருமா? அவனைக் கொம்பின் நுனியால் குத்தித் தள்ளியது. பள்ளனும் மயங்கி விழுந்தான்.

துக்கடா

 • மாட்டினால் முட்டப்பட்ட அந்தப் பள்ளனுக்கு என்னாச்சு என்று பதறுகிறீர்களா?
 • கவலையே வேண்டாம், பள்ளனுக்கு ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள். இருவரும் வயலுக்கு வந்து அவனுக்கு ’ஆறுதல்’ சொல்ல, பழைய வேகத்துடன் துள்ளி எழுந்துவிடுகிறான் அவன்!
 • இந்தப் பாட்டின் சுவையான பகுதி, என்னதான் உழவுக்காக வளர்க்கப்படும் மாடுகள் என்றாலும், அவற்றைத் தொடர்ந்து வயல் வேலையில் சிரமப்படுத்தாமல், factoryகளில் இருப்பதுபோல் ஷிஃப்ட் முறைப்படி உழுகிறார்கள், இதன்மூலம் காளைகளுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கிறது
 • கோட்டு முனை என்றால்?
 • தமிழில் ‘கோடு’ என்றால் கொம்பு, யானைக்குத் தந்தம், ’பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’ என்று பிள்ளையாரை வர்ணிப்பார் ஔவையார்
 • இங்கே வரும் கோடு, மாட்டின் கொம்பு, ’ஏற்றுக் கோடு அஞ்சுவானைப் புல்லாளே ஆய மகள்’ என்கிறது கலித்தொகை, அதாவது, மாட்டின் கொம்பைப் பிடிக்கப் பயப்படுகிறவனைப் பெண் (அவனது மனைவி) தழுவமாட்டாளாம்
 • இந்தப் பாட்டில் வருகிறவனுக்கு அந்தப் பிரச்னையே இல்லை, தைரியமாக மாட்டின் முன்னே போய் நிற்கிறான், அதனால்தான் இரண்டு மனைவிகளோ? 😉

348/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நாடகம், பள்ளு, மருதம். Bookmark the permalink.

12 Responses to வயல்வெளியில் ஒரு காட்சி

 1. இரண்டு மனைவிகள் என்றால் கவலையும், பொறுப்பும் அதிகம்தானே? வேண்டுமானால் “வீர”னாய் சொல்லிக்கொள்ளலாம்

 2. GiRa ஜிரா says:

  முக்கூடற்பள்ளு நூலில் வரும் முக்கூடல் ஊரை இப்பொழுது சீவலப்பேரி என்று அழைக்கிறோம். சீர்வல்லப ஏரி என்பது மருவி சீவலப்பேரியாகிவிட்டது.

  நாம ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இன்னார் எழுதுனோம்னு கையெழுத்து போடுறோம். ஆனா முக்கூடற்பள்ளுங்குற அருமையான நூலை எழுதுனவரு பெயரைக் குறிச்சி வெக்காமப் போயிட்டாரு. ம்ம்ம்ம்.

  ஆடுவோமே பள்ளு பாடுவோமேன்னு பாரதியார் பாடியதிலிருந்து பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தின் புகழை அறியலாம்.

 3. This song is light and breezy! 🙂

  ஒரு வரால் மீன் துள்ளிக் குதித்ததைப் பார்த்து பெரிய காளை மாடு மிரண்டு ஓடுவது ஒரு வேடிக்கையான நிகழ்வு. அதையும் தைரியமாக ஒரு பள்ளன் அடக்க நினைக்கிறான். ஆனால் அடிப்பட்டு சாய்கிறான்.

  வீரம் தமிழனோடு கூடப் பிறந்தது. ஆனால் காலப் போக்கில் mutationல் அது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

  amasa32

 4. GiRa ஜிரா says:

  மாடு பிடிக்கிறது லேசில்ல. மாடு மேய்க்கிறதும் லேசில்ல.

  ஊர்கள்ள தொழுவத்துல மாடு வெச்சிருக்கிறவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். பசு மாடு பொதுவா அமைதியா இருக்கும்.

  காளை மாடும் அப்பிடித்தான். ஆனா நல்லா உழைக்கும். பொதுவா காளை மாட்ட வண்டியிலயும் உழவுலயும் பூட்டுறது வழக்கம். செக்குல எண்ணெயாட்டுறதுக்குக்கும் பூட்டுவாங்க.

  உழைச்ச காளை மாடு நல்லா உரமாயிருக்கும். அதுக்கேத்த மாதிரி தீனியும் இருக்கும். ஆட்டுன பருத்திக் கொட்டை, புண்ணாக்குன்னு பலவிதமான சத்தான தீனிகள்.

  இப்பிடியெல்லாம் இருக்கும் மாடு தவ்விப் பாஞ்சா எப்படியிருக்கும்?

  ஒரு முட்டு முட்டுனா நம்ம முட்டி தெறிச்சிரும். அதை அடக்கனும்னா ஒடம்பு நல்லா கிண்ணுன்னு இருக்கனும்.

  முந்தி வரும் காளையை முதல்ல தடுத்து நிறுத்தி முன்னேற விடாம பின்னாடி தள்ளனும்.

  அப்படித் தள்ளுறதுக்கு ஒரே பிடிமானம் மாட்டோட கொம்பு. அப்படி கொம்பைப் பிடிச்சுத் தள்ளும் போது ஒடம்புக்குப் பிடிமானம் வேணும். அதுக்குதான் இருக்கு நம்ம ரெண்டு காலும். ரெண்டு காலையும் நல்லா அழுத்தமா நெலத்துல ஊணிக்கிட்டு மாட்டோட கொம்பைப் பிடிச்சித் தடுத்து பின்ன தள்ளனும்.

  அதுதான் வீரம். அதை ஏன் வீரம்னு சொல்லி வெச்சாங்க?

  அப்ப வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது. இயற்கையோடு இணைந்து இயைந்த வாழ்க்கை.

  விலங்குகளோட கலந்துதான் வாழ்க்கை. இப்ப மாதிரி செல்லப் பிராணி வெச்சுக்கிறதுல்ல அப்பத்தைய வாழ்க்கை.

  வீட்டு விலங்குகளை மட்டுமல்ல, அப்பப்ப காட்டு விலங்குகளோடயும் மோதனும். அதனால்தான் வீரம் முன்னிறுத்தப்பட்டது.

  சரி. கதைக்கு வருவோம். மாடு பிடிச்சவன் ஏன் கீழ விழுந்தான்? ஏன் அவனால காலை ஊணி நின்னு மாட்டை நிறுத்த முடியல?

  ஏன்னா அது உழவு நெலம். ஆழ உழுது நல்லா கீறிப்போட்டிருக்கு. அதுவுமில்லாம வாய்க்கால்ல தண்ணி பாஞ்சு அதுல வரால் மீன்கள் வேற. அதனால வரப்பு சொதசொதன்னு இருக்கு.

  மாடு பிடிக்கப் பாஞ்சவனுக்கு அழுத்தமா கால ஊன்றி நிக்க முடியாம நிலமும் உழுதிருக்கு. வரப்பும் சொதசொதன்னு இருக்கு. வாய்க்கால்ல தண்ணீர் ஓடுது.

  அதுக்கும் மேல ரெண்டு பொண்டாட்டிகள் வேற.

  ஒரு பொண்டாட்டி கட்டுனா வாழும் போதே சொர்க்கத்தப் பாக்கலாம். ரெண்டு பொண்டாட்டி கட்டுனா வாழும் போதே நரகத்தப் பாக்கலாம்னு சொல்வாங்க.

  அப்படிப் படாதபாடு பட்டவனால மாட்டையும் பிடிக்க முடியலை. பாவம்.

  • மிக்க நன்றி; சுவையான பின்னூட்டம்;
   சில வரிகளை வாசிக்கும் போது கிராமத்துக்கே சென்ற ஞாபகம்…

   //அப்ப வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது. இயற்கையோடு இணைந்து இயைந்த வாழ்க்கை.
   விலங்குகளோட கலந்துதான் வாழ்க்கை. இப்ப மாதிரி செல்லப் பிராணி வெச்சுக்கிறதுல்ல அப்பத்தைய வாழ்க்கை//

   :))
   ஆமா!

   மாட்டுச் சாணத்தைக் கையாலேயே அள்ளுவர் – ஆண்களும் பெண்களும்!
   ஒரு முகச் சுழிப்பு, சேச்சே, உவ்வே போன்ற ஒன்னுமே இருக்காது:)
   அதுவே நிலத்துக்கு உரமும் ஆகும்…
   வறட்டி, முற்றம் மெழுகல், ஏன் தானியம் புடைக்கும் முறத்துக்குக் கூட மெழுகல் உண்டு!

   ஆனா, இப்பத்தி பசங்க, உவ்வே ன்னுதுங்க:)))
   தங்கச்சி பொண்ணு கிட்ட, பள்ளியில் யாரோ ஒரு தோழி சொல்லிட்டாளாம்; விபூதி (திருநீறு) அதில் இருந்து தான் பண்ணுறாங்க-ன்னு…
   அவ்ளோ தான், அவங்க அம்மா கிட்ட ஒரே அடம், திருநீறு – குங்குமம் எதுவுமே பூசவே மாட்டேன்-ன்னு:))

   நான் போயிருந்த போது, இதைக் கவனிச்சிட்டேன், கபாலி கோயில்ல… ஏன்மா பூச மாட்டேங்குற-ன்னு கேட்டா…
   Mama, U also telling to put “shit” on my face, cha cha ங்குறா:)))

   அடிப்பாவி…கான்வென்ட்டு? நாங்க கிராமத்தை விட்டு வராம இருந்திருந்தா, நீயும் அங்கே தான்டீ பொறந்துருப்ப-ன்னு சொல்ல வாய் வந்துச்சி…
   ஆனா பாவம் சின்னப் பொண்ணு தானே?… ஒரு பொய்யைச் சொல்லிச் சமாளிச்சேன்:))

   இல்லம்மா…அந்தக் காலத்துல அப்படிப் பண்ணாங்க, இப்போல்லாம் அப்படியில்ல, perfumed.. மண்ணு/ பாறைல இருந்து பண்ணுறாங்க…
   Jesus க்கு கூட Ash Wednesday இருக்கு…மந்திரமாவது நீறு பாட்டைப் பாடிக் காட்டினேன்…அப்பறம் உன் இஷ்டம்…No forcing ன்னு சொல்லிட்டேன்…

   அவளுக்குப் பாட்டு-ன்னா பிடிக்கும்; என்னைப் பார்த்து, தயங்கித் தயங்கி, அப்பறமாப் பூனை மாதிரி பூசினா:)))
   சின்னதா இட்டுக்கோ போதும் ன்னு சொல்லிட்டேன்; அவ அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்… அந்தக் கத்துக் கத்தினோம், இவ கேக்கலை, இவன் பாட்டு ஏதோ பாடிப் “பொய்” சொன்னான்…பூசுறாளே-ன்னு:)

   பின்னே, குட்டிப் பொண்ணு கிட்ட தரவு எல்லாமா குடுக்க முடியும்?:))
   அவளுக்குப் புடிச்ச பன்னீர் பட்டர் மசாலா தான் குடுக்க முடியும்; வாங்கிக் குடுத்தேன்:)

 5. //ஒரு மஞ்சள் நிறக் காளை மாடு மிரண்டுவிட்டது//

  சொக்கரே,
  காளை மாடு மஞ்சாக் கலர்-ல்ல இருக்குமா?:)
  இந்தச் சந்தேகத்தைக் கட்டாயம் நீங்க தீர்த்து வைக்கணும்!
  ஒருகா, “கலைஞ்சர்” வீட்டு மாடா?:))

 6. anonymous says:

  //பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
  ….பூட்டும் பொழுதில்//

  இது பல கிராமங்களில் இருக்கும் நடைமுறை..
  விடியற் காலைலயே உழுகத் தொடங்கீருவாங்க! அப்போ மாடு வேற! ஆனா இணை-மாடாப் பார்த்து நுகத்துல பூட்டணும்! = ஒரே உசர மாடுகள்!
  அப்போ தான் ஏர்… கோணாம, சாயாம, சீராக உழுகும்!

  எட்டு மணி வாக்குல, வீட்டில் இருந்தோ (அ) பக்கத்து வீட்டு மாடுகளையோ ஓட்டியாருவாங்க!
  கூடவே தூக்குல பழைய சோறு-கொழம்பு, வெங்காயம்-கூழு!
  ஓட்டினவரு ஒரு கழனி முடிச்சி ஒதுங்க, அடுத்த கழனிக்குப் புது மாட்டைப் பூட்டி, வேற ஒருத்தரு உழுகுவாரு…

  ஆனா, சில சமயம் இணை-மாடு கிடைக்கலீன்னா…. சித்தப்பா ஒரே சோடியைப் பூட்டியே மதியம் வரைக்கும் ஓட்டுவாரு!
  பாக்கப் பாவமா இருக்கும்!: நுரை விடும்:(
  தடவிக் குடுப்பேன்… திட்டுவாரு!:) ஏன்டா காளை மாட்டைப் போயித் தடவுற? கிறுக்கா ன்னு:))

  வீட்டுக்கு வந்தாப் பொறவு, காளை மாட்டுக்குத் தண்ணி காட்டும் போதோ, புண்ணாக்கு கலந்து வைக்கும் போதோ, பசு மாட்டோட, சேத்து வச்சித் தண்ணி காட்டினா…அதுங்களுக்கு அப்பிடியொரு சந்தோசம்:)) முங்கி முங்கிக் குடிக்குங்க:)

  அந்தச் செவலைக் காளை, என் கிட்ட மட்டும் மக்கர் பண்ணாது;
  சித்தப்பா கேலி பண்ணுவாரு, தடவிக் குடுத்தே, காளையைப் பசுவாக்குறான் கூறு கெட்ட பய-ன்னு:)) அவர் எப்பமே சாட்டை ஸ்டைலு, அடிப்பாரு; நான் தான் மாறிப் பொறந்துட்டேன்:)

 7. anonymous says:

  //பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
  ….பூட்டும் பொழுதில்//

  இது பல கிராமங்களில் இருக்கும் நடைமுறை..
  விடியற் காலைலயே உழுகத் தொடங்கீருவாங்க! அப்போ மாடு வேற! ஆனா இணை-மாடாப் பார்த்து நுகத்துல பூட்டணும்! = ஒரே உசர மாடுகள்!
  அப்போ தான் ஏர்… கோணாம, சாயாம, சீராக உழுகும்!

  எட்டு மணி வாக்குல, வீட்டில் இருந்தோ (அ) பக்கத்து வீட்டு மாடுகளையோ ஓட்டியாருவாங்க!
  கூடவே தூக்குல பழைய சோறு-கொழம்பு, வெங்காயம்-கூழு!
  ஓட்டினவரு ஒரு கழனி முடிச்சி ஒதுங்க, அடுத்த கழனிக்குப் புது மாட்டைப் பூட்டி, வேற ஒருத்தரு உழுகுவாரு…

  ஆனா, சில சமயம் இணை-மாடு கிடைக்கலீன்னா…. சித்தப்பா ஒரே சோடியைப் பூட்டியே மதியம் வரைக்கும் ஓட்டுவாரு!
  பாக்கப் பாவமா இருக்கும்!: நுரை விடும்:(
  தடவிக் குடுப்பேன்… திட்டுவாரு!:) ஏன்டா காளை மாட்டைப் போயித் தடவுற? கிறுக்கா ன்னு:))

  வீட்டுக்கு வந்தாப் பொறவு, காளை மாட்டுக்குத் தண்ணி காட்டும் போதோ, புண்ணாக்கு கலந்து வைக்கும் போதோ, பசு மாட்டோட, சேத்து வச்சித் தண்ணி காட்டினா…அதுங்களுக்கு அப்பிடியொரு சந்தோசம்:)) முங்கி முங்கிக் குடிக்குங்க:)

  அந்தச் செவலைக் காளை, என் கிட்ட மட்டும் மக்கர் பண்ணாது;
  சித்தப்பா கேலி பண்ணுவாரு, தடவிக் குடுத்தே, காளையைப் பசுவாக்குறான் கூறு கெட்ட பய-ன்னு:)) அவர் எப்பமே சாட்டை ஸ்டைலு, அடிப்பாரு; நான் தான் மாறிப் பொறந்துட்டேன்:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s