மெல்லினங்கள் பேசு கண்ணே

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில்

பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது, நெட்டு இருப்புப்

பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்

நூல்: நல்வழி (#33)

பாடியவர்: ஔவையார்

’இந்தக் காலத்துல மொரட்டுத்தனமா அதட்டினாதான் வேலை நடக்கும், மென்மையாப் பேசினா உங்களை ஏமாத்திப்புடுவாங்க’ என்று உங்களிடம் யாராவது சொல்கிறார்களா?

நம்பாதீர்கள்!

மென்மையான சொற்கள்தான் என்றைக்கும் ஜெயிக்கும். கடினமான சொற்களால் வெல்லமுடியாது.

சாட்சி வேண்டுமா? ஒன்றுக்கு இரண்டு ஆதாரங்களைத் தருகிறேன்.

1

போர்க்களத்தில் ஒரு வீரன் வேலை வீசுகிறான். அது யானையை ஊடுருவிச் சென்று வீழ்த்துகிறது.

ஆனால் அதே வேல், மென்மையான பஞ்சைத் துளைத்துச் செல்லமுடியாது. வேகம் மென்மையிடம் தோற்றுவிடுகிறது.

2

கடினமான பாறை. அதன்மீது கடப்பாரையை வைத்து அடிக்கிறீர்கள், உடைக்கமுடியவில்லை.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால், அந்தப் பாறை நெகிழ்ந்து, உடைந்து கிடக்கிறது. காரணம், அதன்மீது வேர்விட்ட ஒரு பச்சைமரம்.

ஆக, இரும்புக் கடப்பாரையை, சாதாரண மரம் வென்றுவிட்டது.

துக்கடா

 • இந்தப் பாடலின் சுவையான பகுதி, பாரை, பாறை என்று ஔவையாரின் வார்த்தை விளையாட்டுதான்!
 • ’பாறை’ தெரியும், அதென்ன ‘பாரை’?
 • இதுவும் நமக்கு நன்றாகத் தெரிந்த சொல்தான், இரும்பினால் ஆன கடப்’பாரை’ என்று சொல்கிறோம் அல்லவா, அதன் சுருக்கம்தான் ‘பாரை’!
 • அடுத்து, ‘நெக்கு’, இதன் அர்த்தம் ‘நெகிழ்ந்து’, ‘நெக்குருகி அழைத்தேன்’ என்று சொல்கிறோம் அல்லவா? அதுதான் இது. ‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்’ என்று சிவபெருமானைக் குறிப்பிட்டார் திருநாவுக்கரசர்
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில்
 • பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது, நெட்டிருப்புப்
 • பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
 • வேருக்கு நெக்கு விடும்

347/365

Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், வெண்பா. Bookmark the permalink.

5 Responses to மெல்லினங்கள் பேசு கண்ணே

 1. Radhakrishnan says:

  தென்கிழக்குச் சீமையில தெங்காத்து.. பாடலில் வைரமுத்து “வேருக்கு நெக்குவிட்ட வெட்டுப்பாறையே” என்ற வரியைக் கையாண்டிருப்பார்.

 2. Rex Arul says:

  In Australian and British English (haven’t seen it used widely in American English) there’s an idiom that goes by, “You don’t use a sledgehammer to crack a nut.” That wisdom in that cliche is precisely the same as contained in this poem. Thanks 🙂

 3. ஆனந்தன் says:

  ஔவையாரின் இதுபோன்ற இன்னொரு பாடலும் உண்டல்லவா?
  ‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
  இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்
  காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
  ஈரிரவும் துஞ்சாதென் கண்’
  “நாவற்பழம் சுடுக்கிறதா?” என்று கேட்ட இடைச் சிறுவனை வியந்து பாடியது.

  அந்தக் காட்சியையும் இங்கே கண்டு களிக்கலாம்:

 4. Super link Anandan, thank you 🙂
  amas32

 5. உண்மையிலேயே மென்மையான அணுகுமுறை பலவற்றை சாதிதிவிடும். பெரிய தொழிலதிபர்கள் பலரிடம் இந்த அணுகுமுறையை கண்டு இருக்கிறேன். ஏன், நம் வீட்டில் வேலை செய்பவர்களிடம் அன்பாகப் பேசி வேலையை செய்யச் சொல்லுங்கள், எப்படி சந்தோஷமாகவும் விரைவாகவும் வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள் 🙂

  சிறு குழந்தைகளை மிரட்டினால் வேலைக்கு ஆகாது. நல்ல வார்த்தைச் சொல்லிப் பேசிப் பாருங்கள் நாம் சொல்வதை உடனே செய்து முடிப்பார்கள். இதை ஒத்துக் கொள்ளாதவர்கள் பல பேர் இருப்பார்கள், ஆனால் இது என் அனுபவ கருத்து 🙂

  ஔவை மூதாட்டி சொன்னது என்றேனும் தவறாகி உள்ளதா? கடினமான பாறையை ஒரு சிறிய மெல்லிய வேர் துளைத்துச் செல்வது உலக அதிசயங்களில் ஒன்று தான்! அந்த உதாரணத்துடன் இந்தக் கருத்தை முன் வைப்பது அவரின் பேரறிவைக் காட்டுகிறது.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s