காதல்மலி நெஞ்சம்

செல விரைவு உற்ற அரவம் போற்றி

மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை

யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,

வேண்டாமையின் மென்மெல வந்து,

வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,

வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினைப்

பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,

ஆகம் அடைதந்தோளே, அது கண்டு

ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்

பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்

பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே!

நூல்: நற்றிணை (#308)

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார்

சூழல்: பாலைத் திணை, பொருள் தேடுவதற்காக மனைவியைப் பிரிந்து வெளியூர் செல்ல முடிவெடுக்கிறான் கணவன், அப்போது…

இன்னும் சிறிது நேரத்தில், என் பயணம் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால், வீடுமுழுவதும் ஒரே சத்தம்.

இதனால், தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த என் மனைவிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மை இட்ட, குவளை மலர் போன்ற அவளுடைய கண்களில் நீர் வடிந்தது. கலங்கி நின்றிருந்தாள்.

நான் அவளை அருகே அழைத்தேன். வெட்கத்துடன் வந்தாள்.

அந்த மெதுநடையிலேயே, எனக்கு அவளுடைய மனம் புரிந்துவிட்டது. நான் வெளியூர் செல்வதை அவள் விரும்பவில்லை.

ஆனால் அதேசமயம் அதைப்பற்றி என்னிடம் கேட்கவோ என்னைத் தடுக்கவோ அவளுக்கு மனம் இல்லை. மௌனமாகத் தலை குனிந்தாள்.

அவளுடைய திரண்ட கேசத்திலிருந்து வீசும் நறுமணம் என்னை மயக்கியது. ஆனால் அவள், நன்கு வடிவமைக்கப்பட்ட பாவை இயந்திரம் செயல்படாமல் அழிந்துபோனதுபோலக் கலக்கத்துடன் நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள், யாரும் பேசவில்லை. திடீரென்று அவள் என் மார்பில் தஞ்சமடைந்தாள்.

அவ்வளவுதான். ஈர மண்ணில் செய்த மண்பாண்டத்தின்மீது பெருமழை பெய்ததுபோல, செல்வத்தின்மீது ஆசை கொண்ட என்னுடைய நெஞ்சம் கரைந்தது, அவளுடன் கலந்தது, மகிழ்ந்தது.

துக்கடா

 • இந்தப் பாடலின் சூழலை அப்படியே இன்றைக்கும் பொருத்தமாக மாற்றலாம், என்ன வரிகள்தான் ‘எங்கேயும் போகாமல், தினம் வீட்டிலேயே நீ வேண்டும்’ என்று மாறிப்போகும் :>
 • ’செம்புலம் பெயர்ந்த நீர்த்துளிபோல’ என்பதற்கு இணையான ஓர் அழகிய உவமை, இந்தப் பாடலின் நிறைவுப் பகுதியில், பச்சை மண்ணில் செய்த பாத்திரத்தின்மீது பெருமழை பெய்தால் அது அப்படியே கரைந்துவிடுமல்லவா, அதுபோல, அவளுடைய அன்பைத் தாங்கமுடியாமல் இவனது ‘காசு ஆசை’ கரைகிறது, இதன் மறைமுகமான அர்த்தம், இவனும் அரை மனதோடு காசைத் தேடிக் கிளம்பியிருக்கிறான் என்பதுதான்!
 • ‘பொறி அழி பாவை’ என்பது இன்னோர் அழகிய உருவகம், இந்தக் காலத்துக்குப் பொருந்தவேண்டும் என்றால், Computer with frozen windows என்று எடுத்துக்கொள்ளலாம் 🙂
 • அது நிற்க, இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள் ‘மென்மெல வந்து’, எத்தனை அழகு!

346/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, காதல், நற்றிணை, பாலை. Bookmark the permalink.

24 Responses to காதல்மலி நெஞ்சம்

 1. அருமை….அருமை
  //நன்கு வடிவமைக்கப்பட்ட பாவை இயந்திரம் செயல்படாமல் அழிந்துபோனதுபோலக் கலக்கத்துடன் நின்றிருந்தாள்.//

  இயந்திரம் சங்ககாலத்தில் இருந்துள்ளனவா??

  • yep!
   telescope, spare wheel (சேம அச்சு), unmanned mini vehicle (வலவன் ஏவா ஊர்தி), packing slip (கண்ணுப் பல் பொதி) etc etc
   but here, what chokkar means is not a machine, but a mechanised toy! may be a spring loaded bommai:)

 2. முருகா…..ஒரு மெல்லிய அழகு…இந்தப் பாட்டு பூராக் கொட்டிக் கிடக்கு! கபிலரின் குறிஞ்சி கூட இந்தப் பாலைக்கு ஈடாகாது;
  சொக்கரின் துக்கடா வாசிச்ச கையோட, பாட்டை நேரடியா ஒரு கா வாசிச்சிருங்க…ஒங்களுக்கே தெரிஞ்சீரும்!

  • உவமை ஒரு பக்கம்…உணர்ச்சி ஒரு பக்கம்…
   ஆனா…பாட்டின் அமைப்பைப் பாருங்க, ஒவ்வொரு வரியிலும் வினையெச்சம் இருக்கு!

   போவதா? வேணாமா??…போவதா? வேணாமா?? ன்னு முடிவு எடுக்காமல் தவிப்பதைக் காட்ட
   முடிவு பெறாத வினைகளையே, வரிக்கு வரி வச்சி, பாடலைக் கட்டுறாரு கவிஞரு! ஆகா!

   அரவம் போற்றி..
   உண் கண் பனி வர..
   யாம் தற் கரையவும்..
   மென்மெல வந்து..
   செல்லாள் ஆகி..

   துறு முடி தயங்க..
   பாவையின் கலங்கி..
   அது கண்டு..
   ஈர் மண் செய்கை..
   பெருமழைப் பெயற்கு..
   ………….ன்னு வரீசையா, வினையெச்சங்கள்!

   கடேசீல, அத்தனைக்கும் ஒரே வினைமுற்றை வச்சி முடிக்கிறாரு! = புணர்ந்து உவந்தன்றே!
   வினை முற்றியது… எந்த வினை? பொருள் தேடும் வினையா? இல்லை புணர்தல் வினை:)) = புணர்ந்து உவந்தன்றே!

   தெய்வமே…இது கவிதை!

   • மிக நுணுக்கமா கவனிச்சுயிருக்கீங்க… செய்ய வேண்டிய வினை செய்யாமல் நிற்க வினையெச்சம் கடைசி வார்த்தையா வருவது அருமையா பொருந்தது. இது ஏதேனும் உத்தியா?

    பிரிவாற்றாமையைப் பாடிய தமிழர்கள் தான் “திரை கடலோடியும் திரவியம் தேடு”ன்னு உசுப்பேத்தியவங்க..

  • எங்கேயும், போகாமல்
   ……தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
   சிலசமயம், விளையாட்டாய்
   …….உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

   வசீகரா
   என் நெஞ்சினிக்க
   உன் பொன் மடியில்
   தூங்கினால் போதும்…அதே

 3. கபிலரை விட….ன்னு சொன்னதுக்கு கபிலரின் ரசிகர்கள் கோவிச்சிக்காதீக:)
  Me too Kabilar Fan, you wud have seen from my earlier comments, but, சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு!

  கபிலர் = பெரும் கவிஞர்; அதிகம் அறியப்பட்டவர்! எட்டுத் தொகையுள் ஏழு தொகையில் வருபவர்…
  ஆனா, இந்தக் கவிஞரைப் பாருங்க = “எயினந்தை மகன் இளங்கீரன்”

  எயினன் = கள்வன்
  பாலை நிலத்து மக்கள், பெரும்பாலும் எயினர்களே! வழிப்பறி செய்துண்ணும், நாகரீகம் பின் தங்கியவர்களாகவே, சங்கச் சித்திரங்கள் காட்டும்!
  ———–

  ஆனா, இங்கிட்டு பாருங்க…..
  ஒரு கள்வர் கூட்டத்தில் பொறந்த புள்ள, என்னமாத் தமிழ் பாடுறான்!
  * பொறி இயங்காத இயந்திரப் பொம்மை ன்னு உவமை!
  * வினையெச்ச அடுக்கிலே கவிதை!

  இவன் ஒரு பாலைத் திணை Specialist!
  எப்படி குறிஞ்சிக்கு கபிலரோ, அப்படி, பாலைக்கு இவன்! சங்கத் தமிழில் இவன் பாடிய அனைத்துமே பாலைப் பாட்டு தான்! (அகநானூறு உட்பட)

  எயினன் தந்தையின் மகன் = இளங்கீரன் = May be hez an young guy!
  ஆனா, கீரன் போல அதே மிடுக்கு! அதே தமிழழகு! Like u iLangkeera:)))

 4. ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்
  பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு,
  இந்த உவமை திருக்குறளிலும் வருகிறது. அருமை. நன்றி

 5. முருகா, இந்தூருல இணையம் குடுத்ததுக்கு நன்றி! இந்தப் பாட்டு என்னை, என்னமோ செய்யுது:)
  So, the same, “sanga tamizh – coffee uRinjum technique”; two two sippings at a time!
  ————

  //செல விரைவு உற்ற அரவம் போற்றி
  மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை//

  ஆரம்பமே கலக்கல்!
  கண்ணுல தண்ணி தானேய்யா வரும்? பனி வருதாம்! எப்படி?:)

  போகும் போது அழக் கூடாது-ன்னு சொல்லுவாங்க!
  அது இவளுக்குத் தெரிஞ்சிருக்கு! அதான் தண்ணி வராம, பனி வருது ன்னுட்டாரு!

  • எப்போ பனி வரும்?
   ஈரப் பதமெல்லாம் ஒறைஞ்சி போச்சு-ன்னா = பனி!
   இவ மனசும் உறைஞ்ச நிலையில் நிக்குறா… கண்ணுல பனி! Foggy!

   இவ மனசு அப்படி! அம்புட்டு ஆழமான காதல்!
   தன் மனசின் உணர்ச்சிகளுக்காக, அவன் செயல்களைக் கட்டுப்படுத்த இவளுக்குத் தோனலை!
   அதே சமயம் அன்பை அடக்கவும் வழி தெரியல! முருகா! என்ன பண்ணுவா? = கண்ணுல Fog! ஒரு மாதிரியான மேகமூட்டம்!
   ————–

   பாட்டைப் பாருங்க
   //செல விரைவு உற்ற அரவம் போற்றி
   மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை//

   * செல விரைவு உற்ற = போக வேகமா ஏற்பாடு நடக்குது
   * அரவம் போற்றி = ஒரே சத்தம்!

   ஏய், Contact Lens எடுத்து வச்சிட்டியா? My lucky violet color ties…போற எடத்துல, violet colorஆ தேடிட்டு இருக்க முடியாதுடீ…எடுத்து வச்சிட்டல்ல?
   அப்பறம், அந்த yellow color sleep pants! அதைப் போட்டாத் தான் எனக்குத் தூக்கம் வரும்! ஏன்னா அது நீ போட்டுக் குடுத்தது…அதுல உன் வாசம் இருக்குடீ…

   ஏய்…என்ன கண்ணுல? அழுகை மாதிரியும் தெரியல! omg! why your eyes are so foggy? but no drops?
   * மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை

   மலர் ஏர் = மலர் அழகு; உண் கண் = உள்ளே மையிட்ட கண்
   மலரில் பனித்துளி பாத்து இருக்கேன்!
   ஆனா பனி மூட்டமே வந்து உட்கார்ந்து பார்த்ததில்லையே!
   ஓ, கெளம்பும் போது அழுதா, எனக்கு ஆகாதா? அடியே…

 6. //யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
  வேண்டாமையின் மென் மெல வந்து//

  மென் மெல வந்து! ஆகா..சொல்லும் போதே மெல்ல்ல்ல்ல வராப்புல இருக்கு:)
  “மெல்ல மெல்ல அருகில் வந்து
  மென்மையான கையைத் தொட்டு..
  செம பாட்டு! MSVயா? கேவி மகாதேவனா?

  * யாம் தற் கரையவும் = சத்தம் போட்டுக்கிட்டே கிளம்பிக்கிட்டு இருந்தவன், இப்போ லேசாக் கரைஞ்சி நிக்க
  * நாணினள் = அந்தச் சோகத்திலும் ஒரு வெட்கம்….
  காம வெட்கத்தை விட, சோக வெட்கம்/ ஊடல் வெட்கம் ரொம்ப இனிமை; Dont ask me how I know:)

  * வேண்டாமையின் மென் மெல வந்து = அதென்ன வேண்டாமையில் வருதல்?
  = வருவதா? வேண்டாமா? ன்னு மென் மெல வந்தாளாம்!
  = அவன் கிட்டக்க இப்போ போவதா? வேணாமா? கெளம்புற நேரத்துல இதுக்கு நம்மள இவ்ளோ கிட்டக்க கூப்புடுறான்?
  = வேண்டாமையின் மென் மெல வந்து…வந்து…வந்து…

  • >>வேண்டாமையின் மென் மெல வந்து = அதென்ன வேண்டாமையில் வருதல்?
   >>=வருவதா? வேண்டாமா? ன்னு மென் மெல வந்தாளாம்!

   ஆகா, அருமையான விளக்கம்.

 7. //வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,
  வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினைப்//

  தகைத்தல் = தடுத்தல்! தத்துவம் அன்று, தகவேலோ ரெம்பாவாய் ன்னு குத்து விளக்கெரிய பாட்டுல பாடுவாள்-ல்ல? அதே தான்! வினவல் = கேள்வி கேட்டல்!

  * வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி = கேள்வியும் கேக்க மாட்டேங்குறா, தடுக்கவும் மாட்டேங்குறா! என்னா பொண்ணு இவ?:)
  போகும் போது, எங்கே போறீங்க, என்ன ஏது-ன்னு கேள்வியும் கேட்கக் கூடாது, அழவும் கூடாது:))
  ———–

  * வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினை
  = வெறி-ன்னா நறுமணம், வாசம்!
  = காதலில், அவன் வாசம் அவளை என்னமோ பண்ணும்:)
  = சில உள்ளங்கள், அவன் சட்டையோ, ஆடையோ கூட எடுத்து வச்சிப்பாங்க! அவன் இல்லாத நேரங்களிலும், அவன் வாசம்!:) Again, dont ask me how i know all these:))

  துறு முடி = கட்டிய முடி!
  பின்னிய கூந்தல் ன்னு சொல்லல! கட்டிய முடி-ங்கிறாரு! அப்படீன்னா கொண்டை போட்டிருக்காப் போல!
  காலை நேர அவசரமோ என்னவோ, கொண்டை தானே வசதி? Any girls? ladies? answer plz:)

 8. //பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
  ஆகம் அடை தந்தோளே, அது கண்டு//

  நல் வினைப் பொறி அழி பாவை
  என்னவொரு உவமை!

  வீட்டில் கலகல ன்னு சத்தம் போட்டு விளையாடும் ஒரு பொம்மை; திடீர்ன்னு Battery தீர்ந்தோ, இல்லை வேற ஏதோ ஒன்னால…படக்க்க் குன்னு நின்னு போச்சின்னா??
  = அப்போ, அந்தக் குழந்தை மூஞ்சியைப் பார்த்து இருக்கீங்களா?:))))

  அப்படி இருக்காம் இவ மூஞ்சி!
  = நல்ல வினை, ஓடியாடி செயல் செய்யக் கூடிய பாவை (பெண்); அவள் பொறி (இயக்கம்) அழிஞ்சாப் போல….
  —————–

  • அதென்ன பொறி? அரிசிப் பொரியா?:)
   => புலன் & பொறி

   * பொறி = கண், காது, வாய், மூக்கு, உடல்
   * புலன் = காட்சி, ஒலி, சுவை, மணம், உணர்ச்சி
   (கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் – ஐம்புலனும்
   ஒண் தொடி கண்ணே உள – குறள்)

   பொறி வேற, புலன் வேற!
   * பொறி = உடல் உறுப்பு
   * புலன் = அந்த உறுப்பால் பெறும் உணர்வு/ அறிவு

   “புலன் அடக்கம்” ன்னு தான் சொல்லுவாங்க! “பொறி அடக்கம்” ன்னு சொல்ல மாட்டாங்க:))
   சிலர், தேவையில்லாம, கண்ணைக் கட்டி, நாக்கைக் குத்தி, ஊசி மேல நின்னு தவம் பண்ணுவாங்க! இதெல்லாம் = “பொறி அடக்கம்”:)
   குண்டலினி ன்னு சில பேரு பெங்களூரில் குதிச்சாங்களே! அது போல!:))

   பொறியை அடக்கி, ஒரு பயனும் இல்ல!
   பொறியால் வரும் அறிவை (புலனை) அடக்கணும்! = “புலன் அடக்கம்”!

 9. இல்லறத்தில் பொறி/புலனடக்கம் தேவையில்ல! கூடவும் கூடாது!

  நாம பாட்டுக்கு வருவோம்;
  * இந்தப் பேதைப் பொண்ணு, பாவம் பொறியை அடக்கப் பாக்குறா = கண்ணுல பனி
  * புலனை அடக்க முடியல = மனசு பூரா அவன்!
  அப்பறம் என்ன ஆச்சு?
  ———

  * பொறி அழி பாவையின் கலங்கி = Spring போன பொம்மை போல் அசைவற்று
  * நெடிது நினைந்து, = மனசு பூரா ஒரே யோசனை!
  * ஆகம் அடை தந்தோளே = ஆகம் ன்னா உடம்பு! அதை அடை தந்தாள்! அவனிடம் ஒப்புவிச்சிட்டா!

  பின்னே?
  கண்ணுல தண்ணியும் தடுக்குறா; கேள்வியும் கேக்க மறுக்குறா; விதம் விதமாக் கட்டுப்படுத்தறா!
  எதுன்னாலும், அவன் நல்லா இருக்கணும்! நம்ம உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவோம்!

  ஆனா, அவனும் நல்ல பையன் போல…
  அவ உணர்ச்சியைப் புரிஞ்சிக்கிட்டான்…”ஏய் என்னடீ?” ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டான்! ஒரே வார்த்தை!
  அப்படியே, அவன் மேல சாய்ஞ்சிட்டா! = ஆகம் அடை தந்தோளே

  • //அது கண்டு
   ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்
   பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு//

   ஏற்றாங்கு! ஆங்கு = உவம உருபு! கடற் கண்டாங்கு = திருமுருகாற்றுப்படை உவம உருபு
   மீண்டும் என்னாவொரு உவமை அற்புதம் பாருங்க!

   இவ, அவன் மேல, அப்படியே விழுகுறா!
   இவ ஒடம்பு, அவன் ஒடம்பு மேல அப்படியே விழுகுது!

   பச்சை மண்ணுல செஞ்ச பாத்திரத்தில், தண்ணி புடிச்சாப் போல இருக்குதாம்!
   யாரைப் பச்சை மண்ணு ன்னு சொல்றாரு! அவளையா?

  • அல்ல! அவனை!

   எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை! ஆனா, இவன் இப்படி இருக்கான் = பச்சை மண்ணு!
   மனதில் ஈரம் ’ஜா’ஸ்தி போல! பாவம்…சமூகம்/ சுற்றி இருக்கறவங்க இவனை அழிக்காம இருந்தாச் சரி! முருகா!

   அவள் உடம்பு = பெரு மழை!
   அவன் உடம்பு = பச்சை மண் கலம்!

   என்ன ஆகும்?
   = மண்ணு நீரோட கலந்துருமா? நீரு மண்ணோட கலந்துருமா?
   = அதான் ஆகும்!:)
   ———–

   ஒரு ஆண், சுட்ட மண்ணாய் இருந்தா நல்லது தான் = தண்ணி புடிச்சி வைக்கலாம்!
   ஆனா, இந்த மண்கலம், இதைத் தானே முன்வந்து ஏற்றுக் கொள்கிறது! திணிக்கவில்லை! யார் மேலயும் பழி போடலை!
   இயற்கையோடு இயைந்து விடுகிறது! = மண்ணின் நீராக மாறி விடுகிறது!

   ஊற்று நீரைக் குடிக்க, பாத்திரம் ஏது? அப்படியே இயற்கையாக் குடிச்சிக்க வேண்டியது தான்!
   அது போல்…இந்த ஆணின் காதல் உள்ளம்…

  • பணம், புகழ், பேரு, அந்தஸ்து, சுகவாசம்….இன்னும் என்னென்னமோ…ஏந்த வேண்டிய சுட்ட மண்கலம்
   அதெல்லாம் பின்னால தள்ளி, “அன்பு” ஒன்றையே முன்னால தள்ளி….

   அவன் தன்னைப் பிரிந்து போனாலும் பரவாயில்லை, அவன் நன்மையே நல்லது ன்னு நினைக்கும் பேதை…வாயே திறக்காத அந்தப் பேதை…

   அவ, தன் மேல சாய்ஞ்ச ஒடனேயே,
   *** “பொருள்மலி நெஞ்சம்”, புணர்ந்து உவந்தன்றே! ***
   ————

   முருகா, இதை எழுதிய அந்த இளங் கவிஞனும் ஒரு ஆம்பிளை தான்! = அதுவும் ஒரு “எயினன்” மகன், இளங் கீரன்
   அவன் நல்லா இருக்கணும்! I like him so much = he “understands” the heart!

  • >>இந்தப் பேதைப் பொண்ணு, பாவம் பொறியை அடக்கப் பாக்குறா = கண்ணுல பனி
   * புலனை அடக்க முடியல = மனசு பூரா அவன்!
   <<
   ஆகா, மீண்டும்.

 10. பொதுவா, சங்கத் தமிழ் = என் மனசோட நெருக்கமான ஒன்னு….
  எல்லார் உரையும் படிப்பேன்….
  ஆனா, வரிகளை நேரா வாசிச்சாத் தான் = சுவாசிப்பேன்!:)

  இப்ப கூட…. அருகாமையில் தான் இந்தியா, சென்னை இருக்கு!
  Laptop wallpaper = one special photo:)
  But whenever screensaver bubbles come & slightly hide that face…ஒடனே bubbles விலக்க, கை துடிக்குது
  = பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன.. பூ கூட இடையில் வரக்கூடாது:) குறுந்தொகை தான் நினைவுக்கு வருது
  —————

  * Alarm Clock டொக்டொக்-ன்னு சத்தம் = கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே

  * One NGO woman telling you are so soft:) dunno what shd i reply, but = கன்றும் உணாது கலத்திலும் புகாது, எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது….

  * some friends or brothers advice not to, but = கானம் கார் எனக் கூறினும்,
  யானோ தேரேன், அவர் பொய் வழங்கலரே

  * if i read some old emails…அச்சோ புரிஞ்சிக்கவே மாட்டீயா? = கையில் ஊமன் கண்ணின் காக்கும், வெண்ணெய் உணங்கல் போல..

  * sometimes, avoiding certain food = பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

  * அடுத்து, எப்ப பார்ப்போமோ? எப்ப இந்தியா வருவோமோ-ன்னு இருக்கும் = வைகல் வைகல் வைகவும் வாரார்! நோம் என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே!
  —————

 11. இந்தச் சம்பந்தர், அப்பர், ஆழ்வார் பாட்டுல எல்லாம்….
  கடேசீயா ஒரு பாட்டு இருக்கும்! = நூற் பயன் ன்னு சொல்லுவாய்ங்க

  இந்தப் பாட்டைப் படிச்சா, ஒனக்கு நல்லது நடக்கும், குடும்பம் நல்லா இருக்கும், நல்ல குழந்தைகள் வாய்க்கும், நோய் அண்டாது, பாவம் தொலையும், இறைவன் அடிக் கீழ் இருக்கலாம் etc etc etc
  ஆனா, சங்கத் தமிழுக்கு அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்ல!

  இருந்தாலும், அனுபவிச்ச நான் சொல்லுறேன்……. நூற்பயன்!
  சங்கத் தமிழைச் (சு)வாசிப்பவர்கள் = என்றும் காதலில் பிரியாது இருப்பார்கள்!

  மருந்தாம் என்று தம் மனத்தே
  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
  பெருந்தாள் முருகப் பிரான் அடிக்கீழ்
  பிரியாது என்றும் இருப்பார்களே!

 12. Its been a field day for KRS 🙂 Such an amazing song!

  //இருந்தாலும், அனுபவிச்ச நான் சொல்லுறேன்……. நூற்பயன்!
  சங்கத் தமிழைச் (சு)வாசிப்பவர்கள் = என்றும் காதலில் பிரியாது இருப்பார்கள்!//
  அப்படியே ஆகுக! (ததாஸ்து!)

  காதலில் தான் எத்தனை வகை. அத்தனையும் தனித் தனி அழகு! ஒருவருக்காக மற்றொருவர் உயிரைக் கொடுப்பதும் காதல், பிரிந்து சென்று பிரிவாற்றாமையால் துடித்து, அனால் காதலியின் நல்வாழ்வுக்காக எத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு பொருள் ஈட்டி வருவது இன்னொரு வகையான காதல்.

  இந்தப் பாடலில் வரும் காதல் உண்மையிலேயே நெகிழ வைக்கும் காதல். வேலை நிமித்தமாக கணவன் பல முறை வேறு ஊர் செல்பவனாக இருந்தாலும் பெண்ணுக்கு அத் தருணம் ஒரு நடுக்கத்தைத் தரும் தருணம். இங்கோ பாடல் சொல்லும் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் அவன் முதல் தடவையாகச் செல்கிறான் என்று தெரிகிறது.

  ஆனால் பூங்கொடி போல் தளர்ந்து மனைவி அவன் மேல் சாய்ந்த அந்த நொடியில், அந்தக் கணவன் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவள் ஆசையை பூர்த்தி செய்கிறான். இந்தச் செயலால் பெரிய உயரத்துக்குச் சென்று நிற்கிறான் இந்த ஆண் மகன்! கவிதையில் ஒரு சிறுகதை!

  நன்றி சொக்கரே 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s