சுவையோ சுவை!

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,

….சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

….தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

….எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

….அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா

பாடியவர்: இராமலிங்க வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்?

அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

துக்கடா

 • மிக வித்தியாசமான பாடல், முதல் ஐந்து வரிகளில் சமையல் குறிப்பு, அடுத்த மூன்று வரிகளில் ஆன்மிகக் குறிப்பு :>
 • இந்தச் சமையல் குறிப்பு சொல்லும் பண்டம் என்ன? முக்கனி அல்வா?
 • முக்கனிகளையும் ஒன்றாகச் சேர்த்துச் சாறு எடுக்கக்கூடாதாம், தனித்தனியே சாறு எடுத்து, சக்கைகளை வடிகட்டி, அதன்பிறகு கலக்கணுமாம், நாட்டுச் சர்க்கரை, இப்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரை (கற்கண்டுப் பொடி), தேன், பசும்பால், தேங்காய்ப் பால், நெய்… இதெல்லாம் கலோரி சேர்க்கும் சமாசாரங்கள், இவற்றை மறந்து தில்லை அம்பல நடராஜனை வணங்கினால், உடம்பும் லேசாகும், மனசும் லேசாகும்!
 • இந்தப் பாடலை இசை வடிவத்தில் கேட்க (பாடியவர்: மதுரை மணி ஐயர்) http://www.esnips.com/displayimage.php?pid=5912468

345/365

Advertisements
This entry was posted in சிவன், திருவருட்பா, பக்தி, வள்ளலார். Bookmark the permalink.

3 Responses to சுவையோ சுவை!

 1. ஆனந்தன் says:

  Diabetes இருப்பவர்கள் இந்தப் பாடலை வாசிக்காமல் இருப்பது நல்லது!

 2. //மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து//

  வாழையில் சாறு எடுக்க இயலுமோ?? விளக்கம் வேண்டுகிறேன்..

 3. முக்கனிகளுடன் அனைத்து இனிப்புப் பண்டங்களையும் சேர்த்து, பாலும், பருப்பும், நெய்யும் இட்டு செய்யப் பட்ட பதார்த்தத்தை விட சுவையான அமுதம் இறைவனே என்று நமக்குப் புரிய வைக்க வள்ளலார் எடுத்துக் கொண்ட முயற்சியே இப் பாடல். நாம் அறிந்தவற்றைச் சொன்னால் தான் நம் மர மண்டைக்கு விளங்கும் என்று தெரிந்தே, சுவைக்கத் துடிக்கும் பண்டங்களின் கலவையைக் கூறி, இத்தனை இனிய சுவைகள் தரும் இன்பத்தை விட மேலான இன்பத்தை, இறைவனை அடையும் பொழுது நமக்குக் கிடைக்கும் என்கிறார்.

  பிறப்பு இறப்பில்லா நிலையை அடைய நடராஜனின் திருப் பாதங்களுக்குப் பாமாலைச் சூட்டி மகிழ்கிறார் வள்ளலார். இறைவனின் அழகிய திருப் பாதங்களோ ஒரு மென்மையான மலர் வனம். அவ்வழகிய பாதங்களுக்கு வள்ளலார் பாமாலை அணிவிக்கிறார். உலகின் சிறந்த பூ மாலையை விட மணம் பொருந்திய, அழகு நிறைந்த, குளுமையான பாமாலையைக் கொடுத்த வள்ளலாருக்கு இறைவன் அவர் கேட்கும் பிறவா வரத்தை எப்படி அருளாமல் இருக்க முடியும்!

  இப்பாடலின் மூலம் புலனடக்கம் பற்றியும் கூறுவது போல எனக்குத் தோன்றுகிறது. புலன் இன்பத்தை விடுத்து இறைவன் பால் அன்பு வைத்தால் அனைத்துக்கும் மேலான பேரின்பத்தை அடையலாம் என்று உணர்த்துகிறார் வள்ளலார்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s