கதவைத் திறந்தால் காதல் வரும்

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து

உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல்

கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும!

ஓரி முருங்கப் பீலி சாய

நல் மயில் வலைப் பட்டாங்கு யாம்

உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே

நூல்: குறுந்தொகை (#244)

பாடியவர்: கண்ணனார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலன் தன் காதலியைச் சந்திக்க இரவு நேரத்தில் வந்தான், ஆனால் அவளைப் பார்க்கக்கூட முடியவில்லை, வருத்தத்துடன் திரும்பினான், மறுநாள் அவனைச் சந்தித்த தோழி பிரச்னையை விளக்குகிறாள், மறைமுகமாக ஒரு தீர்வையும் சொல்கிறாள்

’பெருமைக்கு உரியவனே,

ஊரில் எல்லாரும் தூங்குகிற ராத்திரி நேரம். நள்ளென்ற ஒலியுடன் கூடிய நள்ளிரவு.

அந்த நேரத்தில், வலிமை மிகுந்த யானையைப்போல் நீ வருகிறாய். எங்கள் வீட்டின் கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்கிறாய்.

இந்தச் சத்தமெல்லாம் எங்களுக்குக் கேட்கவில்லை என்றா நினைத்தாய்? நன்றாகக் கேட்டது.’

’அப்படியா? அந்தச் சத்தம் கேட்டுமா என் காதலி எழுந்து வரவில்லை? சட்டென்று கதவைத் திறக்காமல் இப்படிச் சொதப்பிவிட்டாளே!’

’புரியாமல் பேசாதே, உடனே எழுந்து வந்து கதவைத் திறக்கிற நிலைமையில் அவள் இல்லை!’

‘ஏன்? என்னாயிற்று?’

‘ஒரு நல்ல மயில், உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது, திடீரென்று அது ஒரு வலையில் சிக்கிக்கொண்டது, இப்போது என்ன ஆகும்?

அந்த மயிலின் தலையில் உள்ள கொண்டை சிதையும், தோகை சாயும்… எப்படி இந்த வலையிலிருந்து விடுபடுவது என்று புரியாமல் திண்டாடித் தவிக்கும்…

அதுபோல, உன்னுடைய கதவுச் சத்தம் கேட்டு என் தோழி எழுந்திருக்க முயற்சி செய்யும்போதெல்லாம், அவள் ஏதோ கனவு கண்டு எழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு அவளுடைய தாய் அவளை இறுகக் கட்டிக்கொள்கிறாள்.

இரக்கமில்லாத தாயின் வலையில் உன் மயில் சிக்கிக்கொண்டதால்தான் அவள் வந்து கதவைத் திறக்கவில்லை. இப்போது புரிகிறதா?’

துக்கடா

 • இத்தனை பேசிய தோழி சொல்லாத அந்த மேட்டர், ‘சும்மா தலையைத் தலையை ஆட்டாதே, ஒழுங்கா அவளைக் கல்யாணம் செஞ்சுக்கற வழியைப் பாரு, அப்புறம் இப்படி ராத்திரியில வந்து கதவைப் பிராண்டவேண்டியதில்லை!’
 • அதென்ன ‘இரவுக் கதவு’? பகலில் கதவை அடைத்துப் பூட்டுவதெல்லாம் மாடர்ன் அபார்ட்மென்ட் பழக்கம், அந்தக் காலத்தில் வீட்டின் வாசல் கதவு என்பது ராத்திரிப் பொழுதில் மட்டுமே அடைக்கப்படும், அதனால் ‘இரவுக் கதவு’!
 • பாசமாக வளர்க்கும் தாய், ஆனால் காதலன் கதவைப் பிராண்டும்போது அவளே வலை போட்டுப் பிடிக்கும் வேடனாகத் தெரிகிறாள், இரக்கமற்றவளாகத் தோன்றுகிறாள், ரசவாதம்தான் :>

344/365

Advertisements
This entry was posted in அகம், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி. Bookmark the permalink.

17 Responses to கதவைத் திறந்தால் காதல் வரும்

 1. Manion.Ramasamy says:

  //இரவுக் கதவு//
  அப்படியே இந்த ‘துக்கடா’ எல்ல சேர்த்து ‘தினம் ஒரு தகவல்’ வலைபூ [Blog] ஆரம்பிக்கலாமே!

  • ஐயோ, என்ன பாடல் எனச் சொல்லாமல்..;(

   OKOK –
   அழகே அழகே அழகின் அழகே நீயடி
   உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
   ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
   என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
   நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
   ::
   இதயக் கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்!

 2. முன்பு சொக்கர் இட்ட நளவெண்பா – 89 (https://365paa.wordpress.com/2012/03/01/239/). (நானும் சொக்கரின் நல்ல மாணவன்தான் 😉

  நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
  தீண்டும் அளவில் திறந்ததே – பூண்டதோர்
  அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
  கற்பின்தாழ் வீழ்த்த கதவு.

  நளன்-தமயந்தி கண்கள் தீண்டியதும் கதவு தானாகத் திறக்கிறது.

  இங்கே, களிறென வந்து கதவைத் தட்டியும், முட்டியும், திறக்கவில்லை கதவு.

  காதல் வலையை வீசிவிட்டு, கட்டிப்பிடிக்க வந்தவன் வெளியே.

  வெளியே போகவிடாமல் வலையில் அகப்பட்ட மயிலெனக் கட்டிப்பிடித்திருப்பவள் தாய்.

  • நள-தமயந்தி விழிகள் தீண்ட கதவு திறந்ததல்லவா? அதே கருத்தில் ஒரு பாடல் (காதலுக்கு மரியாதை) –

   விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
   இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..

 3. உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல் –

  இரவு – இரக்கம், யாசிப்பு

  யானை போல் வந்து இரக்கம் வேண்டி (யாசித்து) கதவின் முன் பூனைபோல் பிராண்டிக் கொண்டிருக்கிறானோ?

  இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் 😉

 4. Airportஇல் சற்றுக் கிடைத்த நேரத்தில்…
  Coffee uRinjum technique:)
  ——
  //பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
  உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல்//

  பல்லோர் துஞ்சும் -ன்னா அப்போ சில்லோர் துஞ்சலை:) யாரு?:))
  நள் = நடு; நள் யாமம் = நடு யாமம்

  நள் = இருள் ன்னும் எடுத்துக்கலாம்!
  ஆனா யாமம்-ன்னாலே இருட்டு தானே?:) அப்பறம் எதுக்கு “இருட்டு இரவு”-ன்னு சொல்லப் போறாரு?
  இருட்டான அமாவாசைக்கு மட்டுமே வரக் கூடிய காதலனா இவன்?:)) ஆக நள் = நடு!

  முற்பகல்-பிற்பகல்! நடுவால? = நண்பகல்
  அதே போல் முன் இரவு-பின் இரவு! நடுவால = நள்ளிரவு!
  யாமம் = இரவு 10:00 – 2:00
  அப்போ நள் யாமம்? = 12:00 மணி:) சரியான பேய் பிடிச்ச காதலர்களா இருப்பாங்க போல:))

  • சங்கத் தமிழ்க் கால அளவுகள்:
   காலை = 6:00-10:00
   பகல் = 10:00-2:00
   எற்பாடு = 2:00-6:00

   மாலை = 6:00-10:00
   யாமம்/இரவு =10:00-2:00
   வைகறை =2:00-6:00

   இதுல, நடுவால இருக்குறத்துக்கு மட்டுமே “நள்” வரும்! = பகல் & இரவி
   நள் = நடு of நடு

 5. //உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவும் முயறல்//

  அதென்ன உரவுக் களிறு?
  = உரம் (பலம்) மிக்க களிறு!

  ஆனா யானைக்கு எவ்ளோ பலமிருந்தாலும், அது நடக்குற நடை பார்த்து இருக்கீங்களா? சத்தமே கேக்காது! (மணி எடுத்துட்டா)
  அம்புட்டு மெதுவா, அசைஞ்சி அசைஞ்சி நடை!
  ‘யாதும் சுவடு படாமல், களிறு வருவன கண்டேன்’-ன்னு நம் அப்பர் சுவாமிகள் பாடுவாரு!

  அப்படி வரானாம் இவன்! வீரத்துல சிங்கம், ஆனா வருவதோ யானை போல:)
  வந்து இரவுக் கதவம்… = முயறுகிறான்!
  ரொம்பவே முயற்சி பண்ணுறான்?
  தேய்ச்சி, தட்டி, கீறி, உஸ்-இஸ் ன்னு விதம் விதமாச் சத்தம் எழுப்பி.. 🙂
  இதெல்லாம் காதலிச்சாத் தான் தெரியும்:))

  • //கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும//

   டேய் பெரும, டேய் லூசே…
   நீ எழுப்புற சத்தம, மத்தவங்களுக்கு வேணும்-ன்னா கேட்காம இருக்கலாம்!
   சங்கேத மொழிச் சத்தங்கள்:) = இச், உச், இஸ்ஸ், உஸ்ஸ், ஆஆ, ஊஊ
   ஆனா எங்களுக்குக் கேட்கும் டா!

   போன முறை, நீ வந்து இப்படிச் சத்தம் போட்ட போது, அதைக் கண்டுபுடிக்க வக்கில்லாம, தலைவி தூங்கிட்டா-ன்னு நினைச்சி அவ கிட்ட கோச்சிக்கிட்டயாம்? அடிங்க!
   கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும; ஆனாலும் வர முடீல! ஏன் தெரியுமா?

  • ஆனந்தன் says:

   “மெல்லத் திறந்தது கதவு – என்னை வாவெனச் சொன்னது உறவு!
   நில்லடி என்றது நாணம் – விட்டுச் செல்லடி என்றது ஆசை!”

   ஆனால், அம்மாக்காரியின் அழுங்குப் பிடியினால் அடங்கிப் போனபிறகு…

   “இமை பிரிந்தது உறக்கம் – நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்”

  • ஆனந்தன் says:

   //ஆனா யானைக்கு எவ்ளோ பலமிருந்தாலும், அது நடக்குற நடை பார்த்து இருக்கீங்களா? சத்தமே கேக்காது!//
   இதை நான் யோசிக்கவே இல்லையே!

 6. //ஓரி முருங்கப் பீலி சாய
  நல் மயில் வலைப் பட்டாங்கு யாம்//

  ஓரி = ஆண் மயிர்; இங்கே ஆண் மயில் கொண்டை
  ஓரி வளைய, தோகை சாய்ந்து போக…

  அதாச்சும் ஒன் சத்தம் கேட்ட மாத்திரத்தில், இவளுக்கு எல்லாம் விரிஞ்சிக்குது, தோகை விரிஞ்சாப் போல…
  ஆனா…அப்படி விரிஞ்ச கொஞ்ச நேரத்திலேயே, இவ தோகை சாய்ஞ்சும் போகுது! ஏன்?
  = எல்லாம் இவ அம்மாக்காரி பண்ணுற கூத்து!
  ———–

  //நல் மயில் வலைப் பட்டாங்கு யாம்
  உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே//

  * இவ உயங்கும் போதெல்லாம் = எழுந்து கொள்ளும் போதெல்லாம்…
  * அவ முயங்குறா = இன்னும் இறுக்கி அணைச்சிக்குறா!
  இவ என்ன சின்னப் பப்பாவா? பயந்து போயீறக் கூடாது-ன்னு அணைச்சிக்க? வெவரங் கெட்ட அம்மா!:)
  * அறன் இல் யாயே = தர்மம் ன்னா என்னே-ன்னே தெரியாத தாய்! காதல் தர்மம்! களவு தர்மம்:)))

  * நல் மயில் வலைப் பட்டாங்கு யாம் = இவ கிட்ட மாட்டிக்கிட்டு, தலைவி படுற பாடு இருக்கே…
  நல்ல மயில், வலைக்குள் மாட்டிக்கிட்டா மாதிரி, மாட்டிக்கிட்டு முழிக்கிறா…

  இதைப் புரிஞ்சிக்காம, ஏதோ தூங்கிட்டா, சத்தம் கேக்கலை-ன்னு எல்லாம் சொல்லாதடா!
  ஒன்னு தெரிஞ்சிக்கோ! முருகா! அவ நினைப்பு எப்பவும் உன்னச் சுத்தியே தான் இருக்கு!:)

  • குறுந்தொகைப் பாடல்-ல்ல பெரிய பொருட் குற்றம் இருக்கு!:)
   ————-

   ஓரி முருங்கப் பீலி சாய
   = ஆண் மயிர், ஆண் மயில் தோகை – இதெல்லாம் எப்படிங்க தலைவிக்கு வரும்?
   = உவமையே தப்பா இருக்கே! :)))
   = இவ்ளோ தானா குறுந்தொகைக் கவிஞனின் டக்கு?:))

   மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் ன்னு கண்ணதாசனும் எழுதினாரு!
   மயிலாள் = பெண் = அதுக்கு ஏது தோகை?:)

   இப்படியான “தப்பாக” உவமித்தல்!:) அதுக்கு என்ன பேரு-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
   தெரியலீன்னா…ராகவன் கிட்ட கேளுங்க! சொல்லுவான்(ர்):))
   Tata, Cheerio:)
   ————-

   கதிர்காமக் காதலனே…. உன்பால் ஓடி வரும் ஒரு காதல் உள்ளத்தைச் சேர்த்துக்கோ…
   நோயே பட்டொழிந்தேன்…உன்னைக் காண்பதோர் ஆசையினால்…

 7. சற்றுச் சுதந்தரம் எடுத்து, இரவுக் கதவை இதயக் கதவு என்று மாற்றி இப்படி எழுதினால்:

  உரவுக் களிறுபோல் வந்து இதயக் கதவும் முயறல்

  எந்நேரமும் தலைவன் அவளின் இதயக் கதவை விடாது தட்டுவதையும், பெற்றவளின் பிடியால், காதலி வீட்டில் சிக்கி வெளியே வராத தவிப்பையும் உணர்த்தும்.

 8. காதலியின் இல்லத்தில் தமயனோ தந்தையோ இல்லை என்று நினைக்கிறேன். பொருளீட்ட வெளியூர் சென்று விட்டனரோ? அதனால் தான் யானையை போல கதவை இடித்தும் அவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்து காதலனைப் பிடித்து இரண்டு அடி கொடுத்து அனுப்பவில்லை 🙂

  மேலும் தாயும் மகளை, கோழி குஞ்சை அடை காப்பது போல் காத்து வருவதும் ஆண் மக்கள் வீட்டில் இல்லாததாலும் இருக்கலாம்.

  மகள் காதலனோடு சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டால், அவப் பெயர் தாய்க்கு தான். அவளைக் காத்து அவளை ஒரு நல்லவனிடம் பிடித்துக் கொடுக்கும் வரை அவள் பொறுப்பு குறைவதில்லை. அது தான் இரவு நேரத்திலும் அவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு தூங்குகிறாள் தாய்.

  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பாடல் இது. ஆனால் காதலன், காதலி, தோழி, தாய் ஆகியோர் அன்றும் இன்றும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏன், என்றும் அதே மாதிரி தான் இருக்கப் போகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்! 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s