கண்ணே, கொஞ்சம் மூங்கில் சாப்பிடு!

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று

இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த

தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்

வான் கலந்த வண்ணன் வரை

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச்செயல்

பாடியவர்: பூதத்தாழ்வார்

வானத்தின் நிறம் கொண்ட திருமால் எழுந்தருளியிருக்கும் திருவேங்கட(திருப்பதி) மலை.

அங்கே, மத நீர் பெருகும் ஓர் ஆண் யானை, அதற்கு இணையாக ஒரு சிறந்த பெண் யானை.

அந்த ஆண் யானை, தன் காதலிக்கு அன்பாக ஒரு பரிசு கொடுக்க நினைத்தது. பக்கத்தில் இருந்த இளம் மூங்கில் செடியிலிருந்து இரண்டே இரண்டு கணுக்களைமட்டும் ஒடித்தது. அதைத் தேன்கூட்டில் வழிந்து ஓடும் தேனில் தோய்த்து அதனிடம் ஆசையுடன் நீட்டியது.

துக்கடா

 • இளம் மூங்கிலில் தேன் தோய்த்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்? நமக்கு ஒருமாதிரியாகத் தோன்றினாலும், யானைகளுக்கு அது இனிமையான உணவுதானே? ‘காதலன் காதலிக்குக் குலோப்ஜாமூன் ஊட்டுவதுபோல்தான் இதுவும்’ என்கிறார் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • பெருகுமத வேழம்மாப் பிடிக்குமுன் நின்று
 • இருகண் இளமூங்கில் வாங்கி, அருகிருந்த
 • தேன்கலந்து நீட்டும் திருவேங் கடங்கண்டீர்
 • வான்கலந்த வண்ணன் வரை

341/365

This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

25 Responses to கண்ணே, கொஞ்சம் மூங்கில் சாப்பிடு!

 1. மனமொத்த இரு காதலர்கள்…
  Blore Forum Mall இல், Shopping முடிச்சி, ஒரே பசி…

  இவ்ளோ நேரம், Shopping செய்யும் போது, அப்பப்போ ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து, கண்ணாலேயே சாப்பிட்டாங்க…
  ஆனால் இப்போ, விழிப்பசி கடந்து… மெய்யாலுமே வயித்துப் பசி!

  MTR இல் Onion Rava Dosai, order செய்தாகி விட்டது, ஆனால் கூட்ட மிகுதி, தாமதமாகும் போல!
  அவன் அருகில் உள்ள Burger King சென்று, Fries மட்டும் வாங்கி வருகிறான்… தொட்டுக்க Sauce ஐப் பிரிச்சிட்டான்….
  ஒரு Fries எடுத்து, sauce இல் முக்கி, வாயில் போடும் முன்….

  “இந்தா”….
  அவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்
  அவன் Finger இல் இருந்தே Finger Fries கடிக்கிறாள்!

  Sauce தொட்டுத் தொட்டு, Fries ஊட்ட ஊட்ட
  இரு கண் இள மூங்கில் வாங்கி, அருகு இருந்த, தேன் கலந்து நீட்டும்… பெருகு மத வேழம், மாப் பிடிக்கு!

 2. திருவேங்கட மலை = இன்று வேணும் ன்னா பணம் கொழிக்கும் மலையாக மாறி இருக்கலாம்!
  ஆனால்….அறுபதாண்டுகளுக்கு முன் வரை, அது இயற்கை மலையே!
  குரங்கும், யானையும், கொக்கும், பறவையும் கொஞ்சி வாழ்ந்த மலை! ஆழ்வார்கள் தமிழ் மிஞ்சி வாழ்ந்த மலை!

  அதான் இப்படியொரு அருமையான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறார்!
  * கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!
  * செண்பகமாய்ப் பூக்கும் செடியாய் ஆவேனே!
  * மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே!
  * தம்பமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே!

  *** வாசல், படியாய்க் கிடந்து உன் பவழ வாய் காண்பேனே
  *** எம்பெருமான் பொன் மலை மேல், ஏதேனும் ஆவேனே

  • பிடியும் களிறும் செய்யும் காதலைப் பாருங்க!
   நல்ல இளசான மூங்கிலா பாத்துப் பாத்து ஊட்டுது; தேனைத் தொட்டுத் தொட்டு ஊட்டுது!

   பொதுவா, கலவியில் தான் காதல் இன்பம் உச்சத்தில் இருக்கும் ன்னு பலர் நினைப்பாங்க!
   ஆனா, அதை விட உச்சம் எது தெரியுமா?
   = மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு நாமே ஊட்டி விடும் இன்பம்!
   ————

   வளர்ந்த பிறகு….
   பொதுவா, பெண் ஊட்டுவா!
   ஆனா ஆண் ஊட்டுவதில்லை – அம்மா, அப்பா, தம்பி, தங்கை – எவருக்குமே ஒரு வளர்ந்த ஆண் ஊட்டுவதில்லை! (குழந்தைக்கு ஊட்டல் கூட அரிது தான்)

   ஆனா….
   ஒருத்திக்கு மட்டும் ஊட்டுவான்!
   யாருக்கு? = அவளுக்கு!
   அந்த ஊட்டலில், ஒரு தனி மயக்கமே இருக்கும்!

   கண்ணும் கண்ணும் நோக்க,
   விரல்கள்…. அவள் வாயில் விரல்-கள்
   லேசான எச்சில் தோய….இதழில் பட்டு, பல்லில் பட்டு, வருடி வருடி ஊட்டுவதில்….பசி அடங்கி, பசி எழும்:)

   • அதுவும், ஊடலுக்குப் பின், ஊட்டி விடுவது இருக்கே…. அதைச் சொல்லில் வடிக்க முடியாது!
    ஊடல் உவகை, கூடல் உவகை…. ஊட்டல் உவகை!!!

   • முருகா, என்ன இதெல்லாம்?

    முருகா, முருகா… கடவுளே, கடவுளே, கடவுளே..

 3. “திவ்யப் பிரபந்தம்” ங்கிற பேரு தான் இன்னிக்கி பிரபலம் ஆயிருக்கு!
  ஆனா, அதுக்கு உண்மையான தமிழ்ப் பேரு = “ஆழ்வார் அருளிச்செயல்”

  எப்பவோ நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
  இன்னி வரைக்கும் சொக்கர், அந்தத் தூய தமிழ்ப் பேரையும் இட்டு வருகிறார்! இந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்!
  ————–

  திவ்யப் பிரபந்தம் = வடமொழிப் பேரு!
  பாசுரங்கள் என்னவோ தெள்ளு தமிழ்! மருந்துக்குக் கூட கிரந்தம் இருக்காது!
  ஆனா, ஏன் இப்படியொரு பேரை வச்சாங்கன்னா….
  அது ஆழ்வார்கள் வச்ச பேரு அல்ல! தொகுத்தவரான நாதமுனிகள் வச்ச பேரு!

  ஆலயங்களில் வடமொழி மட்டும் கொடிகட்டிப் பறந்த காலம்! 1200 yrs back!
  தமிழை உள்ளே நுழைக்க, பெரும் விருப்பம் நாதமுனிக்கு! ஆனா அவ்ளோ சீக்கிரம் விட்டுருவாங்களோ?
  அதுக்கு ஒரு “சூழ்ச்சி” பண்ணாரு நாதமுனிகள்! 🙂
  ————–

  பாசுரங்களைத் தொகுத்து = அதுக்கு சம்ஸ்கிருத போர்வை போர்த்தினாரு! “திவ்யப் பிரபந்தம்” – திவ்யமா இருக்கோன்னோ?:))

  பாசுரங்களை, தமிழ்ப் பண்ணில் பாட மட்டும் செய்யாது…
  அதைச் சந்தை போல ஓதவும் ஒரு முறையை உருவாக்கினாரு! வேத சப்தம் போல்… நீட்டி முழக்கி ஓதுதல் = சந்தை!
  அடடா, நம்ம வேதம் போலவே இருக்கே! எப்படித் தான் ஓதறாள்-ன்னு பார்ப்போமே-ன்னு கொஞ்சமா வழி விட்டாங்க….

  கப்-ன்னு பிடிச்சிக்கிட்டு, மொத்த ஆழ்வார் தமிழையும் உள்ளே நுழைச்சிட்டாரு:)))

  • இவருக்குப் பின்னால் வந்த இராமானுசர், இந்தப் பழக்கத்தை நாளைக்கு எங்கே மாத்தீருவானுங்களோ? ன்னு பயந்து….
   ஒரு அரசியல் சட்டம் போலவே ஆக்கி வச்சிட்டாரு!

   எப்போ, எப்படி, எங்கெல்லாம் தமிழ் ஓதணும்,
   கருவறைக்குள்ளேயே ஓதணும்
   மாட்டேன்-ன்னு சொல்ல முடியாது, அர்ச்சகர்களே ஓதணும்

   * திருமஞ்சனமா? = நாரணா நீ ராட வாராய்!
   * அலங்காரமா? = மாதவிப் பூச் சூட வாராய்!
   * நைவேத்தியமா? = அப்பம் கலந்து வைத்தேன், அமுதுபடி செய்ய வாராய்
   * தீபாராதனையா? = பல்லாண்டு பல்லாண்டு
   * இரவு, தொட்டில் சேவையா? = இராகவனே தாலேலோ…
   —————

   மார்கழி மாதமா?
   முழுக்கவே கோதைத் தமிழ் தான்! Sanskrit Total Stop!
   சுப்ரபாதம் பாடவே கூடாது! திருப்பாவை மட்டுமே!
   21 நாட்களுக்கு = தமிழ்ப் பெருவிழா! திருவாய்மொழித் திருநாள்!

   உற்சவ காலமா?
   * இறைவனுக்கும் முன்னால் தமிழ் தான் செல்ல வேண்டும்!
   * இறைவனுக்குப் பின்னால், சின்னதா வேத கோஷ்டி வந்தால் போதும்!

   இப்படியெல்லாம் வகுத்து, யாரும் பின்னாளில் அழிக்க முடியாதபடி, “கோயில் ஒழுகு” ன்னு பொறிச்சி வச்சிட்டுப் போயிட்டாரு… அதுவும் 1000 ஆண்டுக்கு முன்பே!
   அந்த “இராமானுச விதி”யை மீற வழியில்லாம, தொடர்கிறார்கள் இன்றும்:)))

  • //* இறைவனுக்கும் முன்னால் தமிழ் தான் செல்ல வேண்டும்!
   * இறைவனுக்குப் பின்னால், சின்னதா வேத கோஷ்டி வந்தால் போதும்!//

   இதையெல்லாம் பார்த்த அருணகிரிக்கு மனசு அடிச்சுக்குது! இதே போல் முருகன் ஆலயங்களிலும் வந்து விட வேணுமே-ன்னு….

   திருமாலே – வண் தமிழ் பயில்வார் பின் திரிகின்றவன் ன்னு திருப்புகழிலேயே பாடி வச்சாரு!
   —————-

   இராமானுசர் காலம் = 11 CE
   அருணகிரி காலம் = 15 CE

   அதே போல், சம்ஸ்கிருதப் போர்வை போர்த்தி, தமிழை உள்ளே நுழைக்க அருணகிரியும் எவ்ளோ முயற்சி செஞ்சாரு… ஆனா…
   அருணகிரியின் பல பாடல்களில், மணிப்பிரவாளம் என்னும் தமிழ்-வடமொழி கூட்டுச் சொற்கள், அதிகம் வருவது, இந்தக் காரணத்தினால் தான்!

   இதைப் புரிஞ்சிக்காம, பல பேரு, தமிழ் இலக்கியத்தில் அருணகிரிக்கு இடமில்லை-ன்னுட்டாங்க:((
   ஆனா, டாக்டர் மு.வ, நீதியரசர் மு.மு. இஸ்மாயில் போன்றவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில், இதைப் புரிந்து கொண்டு, அருணகிரிக்கு உரிய இடத்தினை அளித்தார்கள்!

 4. கேள்விகள்:))

  1. அது என்ன பூதத்தாழ்வார்? = பூதம் போல படு பயங்கரமா இருப்பாரா?:)
  2. //வான் கலந்த வண்ணன் வரை//
  வரை-ன்னா மலை! அது என்ன “வான் கலந்த வண்ணன்”?
  வானத்துல கலந்துட்டாரா பெருமாளு?:) = Atmospheric Pollution?:))

  • பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் எழுதிய பன்னிரு ஆழ்வார்கள் புத்தகத்தில், “மகத் பூதம், ப்ரஹத் பூதம் என்றெல்லாம் வடமொழி நூல்கள் திருமாலை அழைத்தன. அவ்வாறே கடல்வண்ணன் பூதன் முதலான தமிழ்ச் சொற்றொடர்களால் இவ்வாழ்வார் திருமாலைப் போற்றிப் புகழ்ந்ததால், இவரை பூதத்தாழ்வார் என்றழைத்தனர்”

   இது சரியான விளக்கம் அல்லவா?

   amas32

  • anonymous says:

   நன்றி-ம்மா; மின்னஞ்சல் பாருங்களேன்

 5. கேள்விக்கு எதிர்கேள்விதான் கேட்கமுடிகிறது. பூதம் எனில் பஞ்சபூதம் எனக்கொண்டு பஞ்சபூதத்தில் ஆழ்ந்தவர் என்று கொள்வதா? உடம்பு எனக் கொண்டு அதில் ஆழ்ந்தவர் எனக் கொள்ள முடியாது. (அவர் என்ன narcissist-ஆ?)

  பூதம் எனில் சுத்தம், சத்தியம் எனக்கொண்டு அவற்றில் ஆழ்ந்த Mr. Clean அல்லது சத்தியவான் எனக்கொள்வதா? மெய்யறிவு பெற்றவர்?

  பூதம் எனில் பூதவம்,ஆலமரம் எனக்கொண்டு அதன் கீழ் தவம் புரிந்த துறவி என்பதா?

  தமிழ் இணையக் கல்விக்கழகம் பெயர்க்காரணத்தை இவ்வாறு சொல்கிறது.

  பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து
  தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது.
  (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே
  அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர்.

  எனக்குச் சரியாக புரியவில்லை.

  சரி, வான் கலந்த வண்ணன் – வானின் நிறம் கலந்த வண்ணமுடையவன் என்பது நேரடிப் பொருளாகத் தெரிகிறது. வானில் கலந்த (மணி)வண்ணன் என்றால் வான் வரை ஓங்கி உலகளந்ததாலா?

  திருமாலில் அவதாரப் பெயர் கொண்டவர்களுக்கு இது புரியலாம். அவர்களே விளக்கி அ/பொருள் புரியட்டும்.

  • பூதம் என்பது தமிழ்ச் சொல்லே!
   = ஐம் பூதம், பூத உடல், பூத காலம் (இறந்த காலம்)
   = மணிமேகலாத் தெய்வம், கடல் பூதம் என்றெல்லாம் மணிமேகலையும் சொல்லும்!

   பூதம் = ஆவி போல!
   பூதத்தாழ்வார் = எம்பெருமானை ஆவியாப் பற்றிக் கொண்ட ஆழ்வார்!

   பேயாழ்வார் = பேய் போல் பற்றிக் கொண்டவர்! பேய் புடிச்சா, அம்புட்டு சீக்கிரம் இறங்குமா?:)) அது போல் இறைவனை விட்டு இறங்காதவர்!

   • room போட்டு யோசிச்சும் பூதத்தாழ்வார் என்பதற்கு இந்தக் கோணத்தில் பொருள் காணாமால் விட்டுவிட்டேன்.

    ‘காதல் பிசாசு காதல் பிசாசு’ என்பதுபோல, கடவுளைப் பூதமாகப் ‘பிடி’த்துக்கொண்டவர். 🙂

    நன்றி, கண்ணா!

 6. அகநானூறு-8-இல் ஒரு காட்சி.

  வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில்
  படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய
  பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
  விண்டோய் விடரகத் தியம்பும்

  களிறு படுகுழியில் சிக்கிக்கொள்ள, தன்துணை வெளியே வரப் படியமைப்பதற்காகப் பிடி பெருமரத்தை ஒடிக்கும் ஓசை விண்ணைப் பிளக்கிறது.

  மனதில் இடம் ‘பிடி’த்தவனுக்காக ஒரு பிடியின் போராட்டம்.

  ஆழ்வார் அருளிச்செயல் காட்சியில் – பெருகு மதவேழம் தனக்குப் பிடித்தவளுக்காக இரு கண் இளமூங்கில் வாங்கி (‘காட்டுத்தனமாக’ ஒடித்தல்ல) தேன்கலந்து நீட்டுகிறது. மென்மையான காட்சி.

  அதே களிறு இடரில் படுகுழியில் விழுந்து வருந்த, காதல் பிடி விண்ணின் இடிபோல் ஒலியுடன் பெருமரங்களைத் திருகி ஒடித்துப் படியமைக்கிறது. வன்மையும் வேகமும் கொண்ட காட்சி.

  • //படு கடுங் களிற்றின் வருத்தம்
   பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல்//

   அருமை, கந்தசாமி ஐயா!
   காதலன் படும் தவிப்பு கண்டு காதலி படும் தவிப்பு – அப்படியே தெறிக்கிறது சங்கத் தமிழில்…

 7. ஆனந்தன் says:

  இதுபோன்ற ஒரு காட்சி வரும் கம்பராமாயணப் பாடலை ‘வேங்கையும் யானையும்’ என்றதலைப்பில் முன்பு சொக்கர் இட்டிருந்தார். “உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி…”
  அதை இங்கே காணலாம்:
  https://365paa.wordpress.com/2012/05/01/300/

  இன்னுமொரு காட்சி (நற்றிணை):
  “கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி
  இரும் பிணத் தடக் கை நீட்டி, நீர் நொண்டு
  பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்…”
  https://365paa.wordpress.com/2012/04/24/293/

 8. பூதம்:

  பூதம், சரஸ்ச, மகதாவ்ய, பட்டநாத,
  ஸ்ரீ பக்திசார, குலசேகர, யோகிவாகாம்,
  பக்தாங்க்ரி ரேணு, பரகால, யதீந்திர மிஸ்ராம்,
  ஸ்ரீமத் பராங்குச முனிம், பிரண்தோஸ்மி நித்யம்

  • பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை,
   ஐயன், அருள் மாறன், சேரலர்கோன் — துய்ய
   பட்டநாதன், அன்பர்தாள்தூளி, நற்பாணன், கலியன், ஈதிவர்
   தோற்றத்(து) அடைவாம் இங்கு!
   ————-

   ஆழ்வார்கள் வாழி, **”அருளிச் செயல்”** வாழி
   தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
   உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
   செய்ய மறை தன்னுடனே சேர்ந்து!

 9. இறைவனை போற்றிப் பாடும் நம்முடைய பாசுரங்களில்/பாடல்களில் இலக்கியச் சுவை நிறைந்த காதல், மற்றும் இல்லற வாழ்வு போன்றவையும் போற்றிப் பாடப்படுகின்றன. Nothing is taboo in our religion. இது எவ்வளவு பெரிய விஷயம்!

  திருவேங்கட முடையான் வாழும் திருமலையில் முன்பு மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் யானைகள் துணையோடு மகிழ்ந்து வாழ்ந்தன. இப்பொழுது மக்கள் பெருக்கம் அதிகரித்ததில் அவர்கள் இடங்களை நாம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளோம். இப்பொழுது சிறுத்தைகள் வந்து மக்களை அடிக்கும் பொழுது அவற்றை வேட்டையாட வனவிலங்கு அதிகாரிகள் வரவழைக்கப் படுகின்றனர்.

  இயற்கையிலும் விலங்குகளிலும் அன்பையும் திருமாலின் அருளையும் பார்த்த ஆழ்வார் திருவடிகளே சரணம்.

  amas32

  • //Nothing is taboo//

   Well said amma!:)
   ஆணாதிக்கம் தழைத்த காலத்திலேயே, “ஐவருக்கும் ஒருத்தி” ன்னு கண்ணன் முன்மொழிந்ததை எண்ணிப் பார்க்கிறேன்..
   “புனிதம்” உடைத்து, திருநங்கையான சிகண்டியை, தன் தேர்த் தட்டிலே ஏற்றியதை எண்ணிப் பார்க்கிறேன்….

   Muruga, I know u have no taboos abt me!

 10. vellakaran says:

  ‘வான் கலந்த வண்ணன் வரை’
  – வானம் வரை நீண்ட {வண்ணன் வரை(அழகர்மலை)}.
  வாமன அவதாரம் செய்த திருவிளையாடல் தானே இது? ஒரு அடி மண் கேட்டு வான் வரை உயர்ந்து நின்றது..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s