தைக்கக் கல்

ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும்,

சுற்றம் என்பது துகள் அறு கல்வி,

ஏழை என்பவர் எழுத்தறியாதவர்,

தைக்கக் கற்றவன் சமர்த்தன் ஆவான்,

நையக் கற்பினும் நொய்ய நன்கு உரை,

கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன்,

தகும் எழுத்தை அறிந்தவன் தலைவன் ஆவான்,

காவலனே எனினும் கணக்கை ஓர்ந்து அறி!

நூல்: கல்வியொழுக்கம் (வெவ்வேறு வரிகள், நூலில் உள்ள வரிசையில் இங்கே இல்லை)

பாடியவர்: ஔவையார்

(இந்த வரிகளுக்கு உரை அவசியமில்லை. எனினும், வழக்கம்போல, சாத்திரத்துக்காக இது)

1. ஒருவர் எத்தனையோ செல்வங்களைச் சேர்த்திருக்கலாம், ஆனால் அவற்றுள் மிகச் சிறந்தது, கல்விதான்

2. செல்வம்மட்டுமில்லை, அவர்களுக்குச் சிறந்த சொந்தமும், அந்தக் கல்விதான்

3. கற்காத ஒருவன், எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழைதான்

4. விஷயங்கள் மனத்தில் ஊன்றும்படி கற்றுக்கொண்டவன்தான் சமர்த்து, (வெறுமனே மனப்பாடம் செய்கிறவன் அசடு 😉

5. நன்கு படித்து உணர்ந்துகொள், அப்புறம் அதைப் பிறருக்குப் புரியும்படி விளக்கிச் சொல் (அப்போது அது உன் மனத்தில் இன்னும் அழுத்தமாகப் பதியும்)

6. ஒரு நாட்டின் அரசனைவிட, கல்வி கற்றவனே உயர்ந்தவன்

7. சரியான விஷயங்களைப் படித்து உணர்ந்தவன்தான் தலைவன் ஆவான்

8. நீ நாட்டுக்கே காவலனாக இருந்தாலும் சரி, கணக்கை ஒழுங்காகப் படி

துக்கடா

 • இந்த எட்டில் எனக்கு ரொம்பப் பிடித்தது #4, அதை நாமக்கல்லுக்கு அனுப்பிவைத்தால் நலம் 😉
 • #8பற்றி எனக்கொரு சந்தேகம், ஔவையார் ‘கணக்கை ஒழுங்காகப் படி’ என்கிறாரா, அல்லது ‘கணக்கு இல்லாமல் கண்டபடி செலவு செய்யாதே’ என்கிறாரா? இந்த நூல் முழுவதும் கல்வி பற்றியது என்பதால் முதல் விளக்கத்தை உரையாகத் தந்துள்ளேன்
 • ஔவையின் ‘கல்வியொழுக்கம்’ என்ற இந்த நூல் அதிகப் பிரபலம் ஆகாதது. கிட்டத்தட்ட தொலைந்துவிட்ட நிலையில் இருந்த இதனைக் கண்டுபிடித்து மறுபிரசுரம் செய்தவர், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள்
 • ‘கல்வியொழுக்கம்’ நூலில் மொத்தம் 86 வரிகள் நமக்குக் கிடைத்துள்ளன, இன்னும் தொலைந்தவை எத்தனை வரிகள் என்று தெரியவில்லை

339/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஔவையார். Bookmark the permalink.

5 Responses to தைக்கக் கல்

 1. சுப இராமனாதன் says:

  #4 – பாளையங்கோட்டைக்கும் ஒரு பார்சல்.

 2. நெஞ்சில் பசு மரத்தாணி போல் பதியுமாறு,உள்ளிறங்கும் வண்ணம் படி என்பார்கள். தைக்கக் கல் என்பது அதுபோலத்தான்.

  தைக்கக் கல் x நாமக் கல் 😉

  நன்றாக உள்ளது.

 3. பள்ளி, கல்லூரி புது வருடம் துவங்கும் வேளையில் படிப்பைப் பற்றிய பாடல் பதிவு! சொக்கர் எப்பொழுது எந்தப் பாடலை இங்கே போட வேண்டும் என்று சரியாக அறிந்தவர் ஆயிற்றே! 🙂

  எந்த சமயத்திலும் கல்வி நமக்கு உற்ற துணை ஆகிறது. எந்த சமுதாயத்திலும் எந்த காலத்திலும் கற்றவர்களுக்கும் அறிஞர்களுக்கும் உள்ள மரியாதை மாறுவதும் இல்லை குறைவதும் இல்லை!

  ஒருவருக்கு சிறந்த சொத்தும் கல்விதான், சிறந்த சொந்தமும் கல்விதான். என்ன ஒரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கார் ஔவையார்!

  இவர் சொல்லும் இந்த விஷயத்தையும் மனதில் ஊன்றும்படி நாம் எடுத்துக் கொண்டால் நமக்கும் நல்லது தானே!

  அரசன் தன்னைச் சுற்றியுள்ள படித்த அறிஞர்களை மந்திரிகளாக வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனைப் படி நடக்கும் பொழுது அரசாங்கம் நன்கு அமைகிறது. மக்களும் பயனடைகின்றனர்.

  ஒரு தலைவனோ காவலனோ படிப்பினாலே தான் மேன்மை அடைகிறான் என்று ஔவையாரே கூறும் பொழுது ஒவ்வொருவரும் மாணவ தன்மையோடு வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டு இருத்தலே நலம் 🙂

  amas32

 4. ஆனந்தன் says:

  //#8பற்றி எனக்கொரு சந்தேகம் //
  ஒரு அரசன் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கவேண்டியதில்லை. அதற்கு அதில் திறமை வாய்ந்த ஒரு மந்திரியை நியமித்துவிட்டால் போதும்.
  ஆனால், மந்திரி போடும் பட்ஜட்டைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ளக்கூடிய அறிவு (Appreciation) மன்னருக்கும் வேண்டும்! மந்திரி கைய்யூட்டு வாங்கிக் கஜானாவைக் காலி செய்துவிடக் கூடாதல்லவா? அப்படிப்பட்ட மேலோட்டமான அறிவைத்தான் ஔவையார் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகின்றது, இது கல்வியொழுக்கம் பற்றிய நூலாதலால்.

 5. ஆனந்தன் says:

  தமிழ் அகர வரிசைக்கும் நெடுங் ‘கணக்கு’ என்று பெயர் உண்டல்லவா?
  (மற்றும் ‘கீழ்க்கணக்கு’ நூல்கள்) கணக்கு என்ற சொல் ஏன் அங்கே பயன்படுத்தப்படுகிறது? அதனால் இங்கேயும் அச்சொல் கணிதம் அல்லாத எழுத்தைக் குறிக்கிறதோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s