இனிய செய்வான்

’அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்,

அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும்,

அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்

அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ’ என்று அருள் செய்தார்

நூல்: பெரிய புராணம் / கண்ணப்பர் புராணம்

பாடியவர்: சேக்கிழார்

சூழல்: ’முன்கதை’யில் காண்க

முன்கதை

சிவகோசரியார் என்பவர் பெரிய பக்தர். தினமும் சிவபெருமானுக்கு அக்கறையுடன் பூஜை செய்கிறவர்.

திடீரென்று ஒருநாள், அவரது கோயிலை யாரோ ‘அசுத்தப்படுத்தி’விடுகிறார்கள், எங்கு பார்த்தாலும் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடக்கிறது, கடவுள்மீதுகூட.

சிவகோசரியார் பதறிப்போகிறார், ‘இந்த அசுத்தத்தைச் செய்தது யார்?’ என்று கவலைப்படுகிறார், கோயிலைச் சுத்தப்படுத்திவிட்டு பூஜையைத் தொடர்கிறார்.

மறுநாளும் அதே பிரச்னை, அதே கோயில், அதே அசுத்தம், அதே கவலை, அதே சுத்தப்படுத்தல், அதே பூஜை.

இந்தக் கதை தினமும் தொடர்வதால், சிவகோசரியாரின் கவலை கோபமாக மாறுகிறது. ’தினந்தோறும் இந்த அசுத்தத்தைச் செய்கிறவன் யார்? அவனுக்கு நீ தண்டனை கொடுக்கமாட்டாயா?’ என்று கடவுளிடம் முறையிடுகிறார்.

அப்போது, இறைவன் சொல்லும் பதில் இந்தப் பாடல்.

உரை

’சிவகோசரியாரே,

இந்தக் கோயிலை அசுத்தம் செய்கிறவன், நீங்கள் நினைப்பதுபோல் சாதாரண ஆள் இல்லை, அவனும் பெரிய பக்தன்தான்.

அவனுடைய உருவம், அன்புமயமானது. (என்மேல் வைத்திருக்கிற அன்பே ஒரு மனித வடிவம் எடுத்து வருவதுபோன்றவன் அவன்.)

உங்களுக்கெல்லாம் அவன் அறிவில்லாத அற்ப மனிதன்போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவனுடைய அறிவுதான் உங்களையெல்லாம்விட மேலானது, என்னை முழுமையாக அறிந்துகொள்ள விரும்பும் அறிவு அது.

அவனுடைய செயல்கள் எல்லாம், உங்களுக்கு அருவருப்பாக இருக்கலாம், ஆனால் எனக்கு அவை இனிமையானவை. அதைப் புரிந்துகொள்’ என்று அருள் செய்தார் சிவபெருமான்.

துக்கடா

 • கண்ணப்பர் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதை இன்னொரு கோணத்திலிருந்து அறிமுகப்படுத்தும் அழகான பாட்டு இது
 • ’அன்பே ஒரு வடிவம் எடுத்து வந்தவன்’ என்று கண்ணப்பனை வர்ணிக்கிறார் சிவன், அன்பும், இறைவனை அறிய விரும்பும் அறிவும் கலந்ததுதான் பக்தி, அப்படிப்பட்ட பக்தரின் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவை கடவுளுக்கு இனியவைதான்!

338/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், சேக்கிழார், பக்தி, பெரிய புராணம். Bookmark the permalink.

2 Responses to இனிய செய்வான்

 1. //’அன்பே ஒரு வடிவம் எடுத்து வந்தவன்’ என்று கண்ணப்பனை வர்ணிக்கிறார் சிவன், அன்பும், இறைவனை அறிய விரும்பும் அறிவும் கலந்ததுதான் பக்தி, //
  ரொம்ப அருமையான விளக்கம், திரு சொக்கரே!

  “அன்பே சிவம்” என்று புரிந்து கொள்ளும் பொழுது அன்பே அனைத்தும் என்பதும் விளங்கும்! ஒருவர் மேல் அன்பு வைக்கிறோம். நம் கண்களுக்கு அவர் செய்யும் செயலில் தவறு தெரிவதில்லை. இப்படி உலகில் உள்ள அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு வைத்தால் வாழ்வில் துன்பம் ஏது? But that is a utopian dream 🙂

  எதையும் திரும்பி எதிர்பார்க்காமல் கொடுக்கப் படும் அன்பே தூய்மையானது, ஆகச் சிறந்தது. அதைத் தான் கண்ணப்பன் சிவபெருமானிடம் காட்டினார். ஆகம விதிகளைவிட அன்பின் விதிகளே உயர்ந்தது. இங்கே அன்பே ஞானத்துக்கு வழி காட்டுகிறது!

  amas32

 2. ஆனந்தன் says:

  இறைவனை அடைவதற்குப் பெரியோர் குறிப்பிடும் மூன்று பிரதான வழிகளான பக்தி (அதாவது இறைவன்மேல் அன்பு), ஞானம் (அதாவது இறைவனைப் பற்றிய அறிவு), கர்மம் (செயல்கள் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தல்) இந்த மூன்றைப் பற்றியும் இந்தப் பாடலில் சிவபெருமானே எடுத்துரைக்கிறார்! கோடிட்டுக் காட்டுகிறார்!

  உண்மையான பக்தியின் விளைவு என்ன? அன்பே வடிவாக ஆகிவிடுவது. Amas32 கூறியதுபோல அன்பே சிவம் என்று உணர்ந்து விடுவது.
  //அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்//

  உண்மையான ஞானத்தேடல் எப்படிப்பட்ட்து? நிலையான பொருள் எதுவெனத் தேடி அறிவது. அதுவே இறையென்று அறியும் வரை அத்தேடல் தொடரும்.
  //அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும்///

  உண்மையான செயல் எப்படி இருக்க வேண்டும்? எல்லாச் செயல்களையும் இறைவனுக்காகவே செய்வது. அவற்றின் பயனையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)
  //அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்//

  இதையே கண்ணப்பர் செய்தார்! இந்த மனநிலை வாய்க்கப்பெற்றவர் எத்தனை பேர்?

  இதில் சிறப்பு என்னவென்றால், கீதையில் கண்ணன் கூறும் அதே விடயங்களை இங்கே சிவன் கூறுவதுதான்! உண்மை யாவர்க்கும் பொதுவானதல்லவா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s