கோபம் தணிக்கும் மருந்து

தொழில் தேற்றாப் பாலகனை முன்நிறீஇப் பின் நின்று

அழல் இலைவேல் காய்த்தினர் பெண்டிர் கழல் அடைந்து

மண் இரத்தல் என்ப வயங்குதார் மா மாறன்

கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து

நூல்: முத்தொள்ளாயிரம் (#73)

பாடியவர்: தெரியவில்லை

முன்கதை

போர் என்று வந்துவிட்டால், பாண்டியனின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது. ஆவேசத்துடன் களம் புகுந்து எதிரியின் படையைத் தூக்கிச் சுழற்றிச் சூறையாடிவிடுவான்.

இதனால், அவனுடைய கண்களெல்லாம் சிவந்து காணப்படும். அப்போது அவனைப் பார்க்கிறவர்களெல்லாம் பயந்து நடுங்குவார்கள்.

அந்தச் சிவப்பு எப்போது தணியும்? எப்படித் தணியும்? அது பற்றி ஒரு புலவரின் சுவையான கற்பனை இந்தப் பாடல்.

உரை

பாண்டியனின் கண்கள் கோபத்தால் சிவந்து காணப்படுகின்றன. இப்போது அவன் முன்னே யார் சென்று நின்றாலும் ஆபத்துதான்.

ஆகவே, பாண்டியனால் வெல்லப்பட்ட எதிரி நாடுகளைச் சேர்ந்த பெண்கள் நடுங்குகிறார்கள். ‘இனி நம்முடைய நிலைமை என்ன ஆகுமோ?’ என்று கவலைப்படுகிறார்கள். ‘எங்களை எதுவும் செய்யாதீர்கள்’ என்று அவன் எதிரே நின்று கேட்கவும் பயப்படுகிறார்கள்.

அப்போது, அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. போர் செய்யும் வயது இல்லாத தங்களுடைய மகன்களை அழைக்கிறார்கள். அவர்களை முன்னால் அனுப்பி, இவர்கள் பின்னால் செல்கிறார்கள்.

அந்தக் குழந்தைகளைப் பார்த்துப் பாண்டியனின் மனம் கொஞ்சம் இளகுகிறது, அந்த நேரமாகப் பார்த்து இந்தப் பெண்கள் பாண்டியனின் கழல் அனிந்த கால்களில் விழுந்து கதறுகிறார்கள். ‘இந்தச் சிறுவர்களுக்காக, எங்களுடைய மண்ணை எங்களுக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்று கெஞ்சுகிறார்கள்.

இதனால், ஒளிர்கின்ற மாலையை அணிந்த பாண்டியன் குளிர்ந்துபோகிறான். இந்தக் கெஞ்சல் மருந்தினால் அவனுடைய கண்களின் சிவப்பும் தீர்கிறது.

துக்கடா

 • இந்தப் பாட்டு வேண்டுமானாலும் பழசாக இருக்கலாம், ஆனால் இதில் வரும் அந்த ‘டெக்னிக்’ இப்போதும் பின்பற்றப்படுவதுதான், அப்பா, அம்மாவில் ஆரம்பித்து மேனேஜர்வரை யாருடைய கோபத்தையும் தணிக்க, அவர்களுக்குப் பிடித்த இன்னொருவரை முன்னே அழைத்துவரவேண்டும், அவ்ளோதான் 😉
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • தொழில்தேற்றாப் பாலகனை முன்நிறீஇப் பின்நின்
 • றழல்இலைவேல் காய்த்தினார் பெண்டிர், கழலடைந்து
 • மண்ணிரத்தல் என்ப வயங்குதார் மாமாறன்
 • கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து

337/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நாடகம், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வீரம், வெண்பா. Bookmark the permalink.

15 Responses to கோபம் தணிக்கும் மருந்து

 1. anonymous says:

  //மாமாறன்
  – கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து//

  ஈற்றடியே ரொம்ப நல்லா இருக்கு-ல்ல?

  //யாருடைய கோபத்தையும் தணிக்க, அவர்களுக்குப் பிடித்த இன்னொருவரை முன்னே அழைத்துவரவேண்டும், அவ்ளோதான்//

  :))
  correct-O-correct!
  எனக்குத் தமிழை முன்னே அழைத்து வரவேண்டும் or #365paa
  அவ்ளோ தான்! கோபம் போயே போச்ச்:)))

 2. anonymous says:

  தொழில் தேற்றாப் பாலகன்
  = அப்படின்னா பாருங்க, தொழில்-ன்னா அது மறத்தொழில் ன்னு தான் கருதியுள்ளது அக்காலச் சூழல்!:)
  = உழவும், மறமும் = தமிழ்ப் பெரும் தொழில்கள்!
  ——–

  அழல் இலை வேல்
  = அது என்ன இலை வேல்?
  = வேல் முகமே, இலை போல விரிஞ்சி தானே இருக்கு?

  காற்றோடு போர் செய்வது எது?
  = பூவா? வேரா? கொம்பா? கிளையா?
  = இலை தானே!
  = அதான், வேலும் = இலையும் ஒன்னாயிருச்சி போல:))
  ——–

  வயங்குதார் மா மாறன்

  வயங்குதல் = விளங்குதல்;
  தார்/ தொடையல் = மாலை
  ஆண்கள் தான் பொதுவா தார் அணிவார்கள்; பெண்கள் = தொடையல்!
  ஆனா தார் அணிஞ்ச ரெண்டே பொண்ணுங்க = மீனாட்சி & ஆண்டாள்:))

  வயங்குதார் மா மாறன் = பாண்டியனின், வேப்பம் பூ மாலை!

  • ஆனந்தன் says:

   //காற்றோடு போர் செய்வது எது? இலை தானே! அதான், வேலும் = இலையும் ஒன்னாயிருச்சி போல//

   Nice one!

 3. anonymous says:

  //பெண்டிர், கழல் அடைந்து, மண் இரத்தல்//

  இது = ஆணாதிக்கம்:))
  பெண்கள், எதிரியின் காலைப் பிடிச்சிக் கெஞ்சி, நாடு வாங்குனது = தமிழ் மண்ணில் நடந்ததில்லை-ன்னே நினைக்கிறேன்!
  @amas32 அம்மா, மேல் விளக்கம் தருக!:)

  இது பாண்டியனைப் புகழ, புலவர் செய்யும் = உயர்வு நவிற்சி அணி! அவ்வளவே!

  • பெண் தன் குலம் காக்க மடி பிச்சை ஏந்துவாள். வளைந்து கொடுப்பதால் தான் வெற்றியும் பெறுகிறாள். விறைப்பாக நின்றால் வேரோடு சாய்ந்து விட வேண்டியது தான்.

   amas32

 4. இதற்கு முன் சொக்கரே இப்பாடலை காஃபி உறிஞ்சும் உத்தியில் பருகிச் சுவைத்துள்ளார். (http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=12300407&week=dec3004),

  அதிலிருந்து சில சொட்டுகள்:
  தேற்றா – தெளிவில்லாத / தெரியாத
  முன்நிறீஇ – முன்னால் நிறுத்தி
  அழல் – கோபம்
  காய்த்தினர் – கோபம் மூட்டியவர்கள்
  கழல் – காலில் அணியும் ஒரு வகை ஆபரணம்
  இரத்தல் – கெஞ்சுதல்
  வயங்கு – ஒளி மிகுந்த / விளங்கும்
  தார் – மாலை
  கண்ணிரத்தம் – சிவந்த கண்கள்

  • தமிழகத்தில் Thirumangalam Formula என்ற technique பிரபலம் ஆகியிருப்பது போல காப்பி உறிஞ்சும் techniqueஐ 365paaவுக்குக் கொண்டுவந்து, பாடல்களை அனுபவிக்கக் கற்றுக் கொடுத்து, பிரபல படுத்திய KRSக்கு நன்றி 🙂

   amas32

 5. தேற்றா – Clearing-nut tree, m. tr., Strychnospotatorum; மரவகை. தேற்றாவினுடைய விதையைக்கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற்சிதைவு தெளியுமாறுபோல (கலித். 142, உரை).
  (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.6:1:7139.tamillex)

  தேற்றாங்கொட்டை – Clearing-nut, used for clearing turbid water; கலங்கலான நீரைத் தெளியச்செய்யும் தேற்றாவிதை.
  (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.6:1:7140.tamillex)

  தேற்றாங்கொட்டைக்குளிகை – medicinal pills made of தேற்றாவிதை (winslow)

  பாண்டியனின் கோபத்தால் சிவந்த விழிகளைத் தெளியவைக்கும் தேற்றா மருந்து பாலகன் என்றும் கொள்ளலாமோ?

 6. சென்னைப் பேரகரமுதலியில்:
  தேற்றா – Clearing-nut tree, m. tr., Strychnospotatorum; மரவகை. தேற்றாவினுடைய விதையைக்கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற்சிதைவு தெளியுமாறுபோல (கலித். 142, உரை).

  தேற்றாங்கொட்டை – Clearing-nut, used for clearing turbid water; கலங்கலான நீரைத் தெளியச்செய்யும் தேற்றாவிதை.

  தேற்றாங்கொட்டைக்குளிகை – medicinal pills made of தேற்றாவிதை (winslow)

  இப்பொருளைக் கொண்டு சிந்தித்தால் –

  பாண்டியனின் கோபத்தால் Madras Eye போலச் சிவந்த விழிகளைத் தெளியவைக்கும் ‘தேற்றா’ மருந்து இளம்பாலகன் என்றும் கொள்ளலாமோ?

 7. ஆனந்தன் says:

  நல்ல பார்வை!
  ஆனால், ‘தொழில்’ தேற்றாப் பாலகன் என்று வருவதால் நீங்கள் சொல்வதுபோல் எடுக்கலாமா என்று தெரியவில்லை.

  • ஒரு சுவைக்காக அப்படிப் பொருளைச் சற்று ‘வளைத்து நீட்டி, இழுத்தேன்’, அவ்வளவுதான்.

   நீட்ட ஆரம்பித்தாச்சு, இன்னும் சற்று நீட்டுகிறேன்.

   தொழில் தேற்றா – professsional clearing drug 🙂

 8. ஆனந்தன் says:

  தமிழ்நாட்டில் ஒர் ஆலயத்தில் அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே விநாயகரைப் பிரதிட்டை செய்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் அங்கு வீற்றிருக்கும் அம்பாள் மிகவும் உக்கிரமானவள் என்றும் அவளுடைய பிள்ளையைப் பார்க்கும்போது அந்த உக்கிரம் தணிகிறது என்றும் கூறினார்கள்!
  இது திருவானைக்கா என்று நினைக்கிறேன். வேறு ஆலயங்களிலும் இப்படியான அமைப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

  இந்த பாட்டில் வரும் ‘டெக்னிக்’ ஐ இங்கேயும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னேன்.

 9. ஆனந்தன் says:

  //போர் செய்யும் வயது இல்லாத தங்களுடைய மகன்களை அழைக்கிறார்கள். அவர்களை முன்னால் அனுப்பி, இவர்கள் பின்னால் செல்கிறார்கள்.//
  அதனால் பாண்டியன் மனமிரங்கினான்; அது அந்தக் காலம்!
  பிள்ளைகளை முதலில் சுட்டுவிட்டு தாய்மாருடன் வல்லுறவு கொண்டு முலையறுத்துப் பின்பு சுட்டுக் கொலவது இந்த காலம்.

 10. இங்கே எனக்கு நரசிம்ஹ அவதாரம் தான் நினைவிற்கு வருகிறது. குழந்தை பிரஹலாதன் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று அவன் தந்தை ஹிரன்யகசிபுவிடம் சொல்லிவிடுகிறான். உடனே நாராயணன் எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கிறார். ஹிரண்யகசிபு சுட்டிக் காட்டிய தூணில் இருந்து, மனிதன் பாதி மிருகம் பாதியாக வெளிப்பட்டு ஹிரன்யகசிபுவை அந்தி மயங்கும் வேளையில், நிலைப்படியில் தன் மடி மீது வைத்து தன் கூரிய நகங்களால் அவன் வயிற்றை கிழித்து அவனை வதம் செய்து, அவன் குடலை மாலையாக அணிகிறார்.

  அதி பயங்கர அவதாரம், கோரமான அசுர வதம். மகாலக்ஷ்மி தாயார் அவர் முன் போய் அவரை சாந்தப் படுத்தத் தயங்குகிறார். குழந்தை பிரஹலாதன் தைரியமாக முன் சென்று இறைவனை வணங்கி துதிக்கிறான். இதைக் கண்ட நாராயணன் உடனே உள்ளம் குளிர்ந்து சாந்தம் அடைகிறார்.

  எந்தக் குழந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் பூமிக்கு வந்தாரோ, அந்தக் குழந்தையின் தந்தையை அவன் கண் எதிரே கொல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் அந்த குழந்தை நன்றியோடு இறைவனைப் பார்க்கையில் இளகாத மனமும் இளகும்.

  குழந்தைகளின் முன் எந்த கோபமும் செல்லாது. இதே யுக்தியைத் தான் பாண்டிய மன்னனின் கோபத்தைத் தீர்ப்பதற்கு அந்த பெண்களும் பயன்படுத்துகின்றனர்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s