பிள்ளை முருகன்

அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான்

….’ஐய, என் செவியை மிகவும்

அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்,

….அத்தன் வேலவனை நோக்கி

விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில்

….விளங்கு கண் எண்ணினன்’ என,

வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும்

….விகடம் ஏன் செய்தாய்?’ என,

’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ என்ன,

….மயிலவன் நகைத்து நிற்க,

மலை அரையன் உதவ வரும் உமையவளை நோக்கி, ‘நின்

….மைந்தரைப் பாராய்!’ எனக்

கருது அரிய கடல் ஆடை உலகு பல அண்டம்

….கருப்பமாய்ப் பெற்ற கன்னி

கணபதியை அருகு அழைத்து அக மகிழ்வு கொண்டனள்

….களிப்புடன் உமைக் காக்கவே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: சிவப்பிரகாச சுவாமிகள்

அறிமுகம்

குழந்தைகள் இருக்கும் வீட்டில், கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது.

ஆனால் அதேசமயம், ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகளாக இருந்துவிட்டால் அவற்றின் கலாட்டாக்கள் அடிக்கடி எல்லை மீறிவிடும். ஒன்றை ஒன்று கேலி செய்யும், முடியைப் பிடித்து இழுக்கும், சட்டையை அவிழ்த்துவிடும், காலை வாரும், சண்டை போட்டுக்கொண்டு முட்டி மோதும், ’அம்மா, இவனைப் பாரேன்’ என்று தேம்பிக்கொண்டே ஓடி வரும். அழுகிற குழந்தையை அணைத்துச் சமாதானப்படுத்துவார் தாய். ‘உன்னை யார் அடிச்சாங்க? நான் அவனைக் கண்டிக்கறேன்’ என்று ஆறுதல் சொல்வார்.

இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான். ஐந்து நிமிடம் கழித்து இதே குழந்தைகள் பழைய சண்டைகளை மறந்து ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். அப்புறம் மறுபடி சண்டை, மறுபடி சமாதானம், மறுபடி விளையாட்டு …

நம் வீடுகளில் தினந்தோறும் நடக்கிற இந்த நாடகம், பெரிய கடவுள்கள் வீட்டிலும் உண்டா? அதைக் கற்பனை செய்து ஒரு சுவாரஸ்யமான பாடலாக எழுதியிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ‘நன்னெறி’ என்ற புகழ் பெற்ற நூலைப் படைத்தவர்.

உரை

அரன், அதாவது சிவபெருமானிடம் ஐங்கரன், அதாவது விநாயகன் வந்து நிற்கிறான். தன் தம்பி ஆறுமுகன், அதாவது முருகனைப் பற்றிக் கோள் சொல்லிச் சிணுங்குகிறான். ’அப்பா, இந்த முருகனைப் பாருங்களேன், வேணும்ன்னே என் காதைப் பிடிச்சுக் கிள்ளறான்.’

‘அப்படியா? கொஞ்சம் பொறு, விசாரிக்கலாம்’ என்கிறார் சிவன். ‘முருகா, அண்ணனைக் கிள்ளினியா?’

இந்தக் கேள்விக்கு எந்தக் குழந்தையும் நேரடியாகப் பதில் சொல்லாது. தன்மீது குற்றம் சாட்டுகிற அண்ணன்மேல் ஒரு புகாரை ஏவுகிறான் முருகன், ‘அவன் என்ன செஞ்சான் தெரியுமா? என்னோட ஆறு முகத்துல எத்தனை கண் இருக்குன்னு எண்ணிப் பார்த்தான்.’

‘நீ அப்படிச் செஞ்சியா விநாயகா?’

இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. சட்டென்று அடுத்த புகார் பாய்ந்து வருகிறது. ’முருகன் என்னோட தும்பிக்கையோட நீளத்தை முழம் போட்டு அளந்தான்.’

இதற்குமேல் என்ன செய்வது என்று சிவபெருமானுக்கே புரியவில்லை. நமுட்டுச் சிரிப்போடு உட்கார்ந்துவிடுகிறார். ‘உங்க பிரச்னையை விசாரிச்சு நியாயம் சொல்றதுக்கு ஒரே ஒருத்தராலதான் முடியும்’ என்கிறார், உதவிக்குத் தன் மனைவி பார்வதியை அழைக்கிறார். ‘உன் பிள்ளைங்க பண்ற கூத்தைப் பாரேன்!’

மலை அரசனின் மகள், நம்மால் அளக்க இயலாத கடலையே ஆடையாக உடுத்தியவள், உலகம் முழுவதையும் படைத்த அன்னை, குழந்தைச் சண்டையை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று அவளுக்குதானே தெரியும்? ஆரம்பத்தில் புகார் சொன்ன விநாயகனை அழைக்கிறாள், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்துகிறாள். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சிரிக்கிறார்கள். நமக்கு அருள் புரிகிறார்கள்.

துக்கடா

 • இன்று வைகாசி விசாகம், முருகனின் பிறந்த நாள், அதற்கென்று ஒரு கலகலப்பான ’பார்ட்டி’ சூழல் பாட்டு 😉
 • இதன் நடுவே ஓர் இலக்கணப் பாடமும் உண்டு, சிவன் பார்வதியை நோக்கி ‘உன் மைந்தரைப் பார்’ என்கிறார், ‘உன் மைந்தர்களை’ என்று சொல்லவில்லை. ஏன்?
 • ’மைந்தன்’ என்பது ஒருமை, ‘மைந்தர்’ என்பது பன்மை, ‘மைந்தர்கள்’ என்று சொல்லவேண்டிய அவசியமில்லை, நண்பர்கள், தலைவர்கள், மன்னர்கள் எல்லாமே இப்படிதான், கொஞ்சம் எக்ஸ்ட்ரா 🙂
 • UPDATE: இந்த ‘அர்கள்’ விகுதிபற்றி ஒரு குழப்பம், கொஞ்சம் தேடியபோது நான் சொன்னது முழுக்கச் சரியில்லை என்று புரிந்தது. அதற்கான விளக்கம் இங்கே (From Twitter, Excuse unstructured text):
 • இன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் ‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா?
 • கொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது
 • ’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை
 • சங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன்
 • ஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது

333/365

This entry was posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன். Bookmark the permalink.

12 Responses to பிள்ளை முருகன்

 1. anonymous says:

  chellam….happy birthday daaa
  ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

 2. anonymous says:

  அருவமும் உருவமும் ஆகி – அநாதியாய் பலவாய் ஒன்றாய்
  பிரமமாய் நின்ற சோதிப் – பிழம்பு அதோர் மேனியாகி
  கருணை கூர் முகங்கள் ஆறும் – கரங்கள் பன்னி ரெண்டும் கொண்டே
  ஒருதிரு முருகன் ஆங்கே – வந்து உதித்தனன் உலகம் உய்ய!

 3. anonymous says:

  பிள்ளையாரும், பிள்ளை-ஆறும் பண்ணுற லூட்டி!
  அதுக்கு ஒரு Paa!

  Paa Paa White sheep, Have u any Paa?
  Yes sir Yes sir, #365 Paa:)

 4. நண்பர் என்று மரியாதை நிமித்தவாகவும் சொல்லலாம் அல்லவா? அந்த அர்த்தத்தில் நண்பர்கள் என்பது சரிதானே.

 5. ஆனந்தன் says:

  “ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
  அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்”
  கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!

  • anonymous says:

   Dank u for this video
   இதுல, ரொம்ப அப்பாவியா இருப்பான்! அப்பறம் தான் ரொம்ப பொற்க்கீ ஆயீட்டான் என் முருகன்:))

 6. வைகாசி விசாகத் திருநாள் முருகனின் பிறந்த நாள். பிறந்த நாள் கொண்டாட்டமாக அண்ணன் தம்பி கலாட்டா அருமையான தேர்வு திரு.சொக்கரே!

  முருகன் என்றாலே குமிழ் சிரிப்பும் ஆனந்த திருமுக மண்டலமும் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

  அண்ணன் தம்பி இருவருமே குறும்பு செய்வதில் சளைத்தவர்கள் அல்ல 🙂 இதில் யார் பக்கத்து நியாயத்தைச் சொல்வது? இதில் குழந்தைகள் மிகுந்த அறிவுடன் இருந்தால் சேட்டையும் அதிகமாக இருக்கும். அவர்களை சமாளிப்பதற்கும் மிகுந்த அறிவுத் திறன் வேண்டும். அது தான் அகில நாயகியான அன்னை வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

  இறைவன் வீட்டிலும் ஒரு கலகலப்பான சூழ்நிலை, குழந்தைகளுடன் கொண்டாட்டம் என்று சிவப்பிரகாச சுவாமிகள் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ஒரு summer vacation தொனியைக் கொடுக்கிறது!

  amas32

  • anonymous says:

   //.அவர்களை சமாளிப்பதற்கும் மிகுந்த அறிவுத் திறன் வேண்டும். அது தான் அகில நாயகியான அன்னை வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது//

   வர வர, பெண்ணாதிக்கம் அதிகமாயிருச்சி ம்மா, ஒங்க பின்னூட்டத்துல:))

   • உங்களுக்கு புரிஞ்சிடிச்சா? :-))))
    amas32

   • பாட்டில் சிறுபிள்ளைகள் சண்டை போட்டுக்கறாங்கன்னா, இங்க, அம்மாவும் பிள்ளையுமல்ல 😉 அடிக்கடி சண்டை போட்டுக்கறீங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s