கண்ணை இமை காப்பதுபோல்…

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்

விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை

மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்

கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்

நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், வேள்விப் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: விசுவாமித்திரரின் யாகத்தைக் காவல் காக்கிறார்கள் ராமனும் லட்சுமணனும்

விசுவாமித்திரர் செய்யத் திட்டமிட்டிருந்த யாகம், மற்ற யாராலும் செய்யமுடியாதது. அவ்வளவு ஏன்? மற்றவர்கள் அதைச் செய்ய நினைப்பதுகூடச் சிரமம்.

இப்படிப்பட்ட அந்த யாகம், ஆறு நாள்கள் நடைபெற்றது. மண்ணை ஆளுகின்ற தசரத மன்னனின் மைந்தர்களாகிய ராமன், லட்சுமணன் இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் அதனைப் பாதுகாத்தார்கள்.

துக்கடா

 • மற்ற கம்பன் பாடல்களோடு ஒப்பிடும்போது, இந்தப் பாட்டில் விசேஷமாக எதுவும் இல்லையே என்று தோன்றுகிறதா?
 • நிஜம்தான். இந்தப் பாட்டிற்கு வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் எழுதிய விளக்கத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு செம மேட்டர் கண்ணில் பட்டது. அந்தச் சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்வதற்காகதான் வேண்டுமென்றே இதனைத் தேர்வு செய்தேன், அதாவது, பாட்டுக்காகத் துக்கடா அல்ல, துக்கடாவுக்காகப் பாட்டு
 • ’கண்ணை இமை காப்பதுபோல’ என்று நாம் அடிக்கடி சொல்கிறோம், இதன் அர்த்தம் என்ன?
 • நம் கண்ணில் தூசி விழுந்துவிடாமல் இமை பாதுகாக்கிறது, ஏதாவது காற்றில் பறந்து வருவதுபோல் தோன்றினால்கூட, சட்டென்று மூடிக்கொள்கிறது, அவ்வளவு எச்சரிக்கை
 • அதுபோல, ராம லட்சுமணர்கள் விசுவாமித்திரரின் யாகத்தைக் கவனமாகப் பாதுகாத்தார்கள். சரிதானே?
 • இங்கே வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுக்கிறார், விசுவாமித்திரரின் யாக சாலையில் லட்சுமணன் நின்றுகொண்டானாம், யாரும் உள்ளே வராமல் பார்த்துக்கொண்டானாம், ராமன் அதைச் சுற்றி வந்து காவல் காத்தானாம்
 • நம் கண்ணைச் சுற்றி இரண்டு இமைகள் உண்டு. மேல் இமை பெரியது, கீழ் இமை சிறியது, இந்தச் சிறிய இமை நகராமல் ஒரே இடத்தில் இருந்து கண்ணைப் பாதுகாக்கும், பெரிய இமை மேலும் கீழும் நகர்ந்து அதைக் Cover செய்யும், இல்லையா?
 • இதை அப்படியே ராம லட்சுமணனுக்கு ஒப்பிடுகிறார் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார். நகராத சிறிய இமை = லட்சுமணன், நகரும் பெரிய இமை = ராமன், இருவரும் சேர்ந்து கண்ணை(யாகத்தை)ப் பாதுகாக்கிறார்கள்
 • ஒரு சாதாரண மேட்டரை இப்படிக் கற்பனையெல்லாம் செஞ்சு சுற்றி வளைக்கணுமா என்று கேட்கலாம், அதானே சுவாரஸ்யம்? :>

329/365

Advertisements
This entry was posted in உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், Uncategorized. Bookmark the permalink.

24 Responses to கண்ணை இமை காப்பதுபோல்…

 1. anonymous says:

  வைமுகோ அட்டகாசம்!

  //ஒரு சாதாரண மேட்டரை இப்படிக் கற்பனையெல்லாம் செஞ்சு சுற்றி வளைக்கணுமா என்று கேட்கலாம்//

  சாதாரணக் காதலியைக் கூடச் சுற்றி வளைக்கும் போது தான் இன்பமே பொங்கும்:))
  தப்பேயில்ல!
  வளைக்கணும்:)

  • anonymous says:

   //மற்ற கம்பன் பாடல்களோடு ஒப்பிடும்போது, இந்தப் பாட்டில் விசேஷமாக எதுவும் இல்லையே என்று தோன்றுகிறதா?//

   இருக்கே!
   கம்பனை என்ன-ன்னு நினைச்சிட்டீங்க? கண்டுபுடிங்க பார்ப்போம்:)

   • இமைகளைப் போல விழிகளை விட்டு அகலாது விசுவின்/விச்சுவின் 😉 வேள்வியைக் காக்கின்றனர். இமைகள் இரண்டு. அதேபோல், இராம, இலக்குவர்கள் இருவரும் காத்தனர். இதையெல்லாம் சொக்கரே சொல்லிவிட்டார்.

    இமை விழியின் விசிறி. இராம, இலக்குவர் இருவரும் வேள்வித்தீ வளர விசிறியாய்ச் சுழன்றனர் எனலாமா?

    கேள்வியின் நாயகனே, உன் கேள்விக்குப் பதிலேதய்யா?

 2. vaadaikaatru says:

  how to write in tamil

 3. கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
  வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

  என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

 4. anonymous says:

  //மற்ற கம்பன் பாடல்களோடு ஒப்பிடும்போது, இந்தப் பாட்டில் விசேஷமாக எதுவும் இல்லையே என்று தோன்றுகிறதா?//

  இந்தப் பாட்டில் கம்பன், தமிழ் வில்லைப் பூட்டி நாண் ஏற்றுகிறான்:) வேள்வி காக்கணும்-ல்ல? அதான்!

  புரியலையா?
  தமிழில், “பொருள்கோள்” என்ற ஒரு வகை உண்டு! = பொருள் கொள்ளுதல்!
  இந்தப் பாட்டில் இருப்பது = “பூட்டு – வில் – பொருள்கோள்”

  • anonymous says:

   வில்லில் எப்படி நாண் ஏற்றுவார்கள்?

   நாண் = கயிறு (ஞாண் என்று திரியும்)
   அரை-ஞாண் = இடுப்புக் கயிறு!

   அண்ணாக் கயிறு, அரைஞாக் கயிறு ன்னு பேச்சு வழக்கில் ஆகி விட்டது!
   இப்பல்லாம் யாரும் கட்டுறாங்களா?ன்னு கூடத் தெரியாது!
   ஆனா பழனி முருகன் கட்டுறான் ன்னு தெரியும், red or black, around his waist! so sexy!:)

   அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதும்! ஞாண்-ன்னாலே கயிறு தான்! அரை-ஞாண்கயிறு ன்னு சொல்லத் தேவையில்லை!
   இது குறித்து, முன்பு ராகவன் ஒரு பதிவு இட்டிருந்தான்(ர்)

  • anonymous says:

   வில்லில் நாண் ஏற்றணும்-ன்னா….
   வில்லின் கீழ்ப்பாகத்தில் உள்ள கயிற்றைக், கொண்டாந்து, மேல்பாகத்தில் இணைக்கணும்!
   இணைத்து Tension இருக்கான்னு சுண்டிப் பார்க்கணும்

   அதே போல~, பாட்டின் கடைசிச் சொற்களை, பாட்டின் முதற்சொற்களோடு இணைப்பது = பூட்டு வில் பொருள்கோள்
   —————

   * பாட்டின் முதற்சொற்கள் = எண்ணுதற்கு ஆக்க அரிது
   * பாட்டின் கடைசிச் சொற்கள் = இமையின் காத்தனர்

   இமை போல் காத்தனர் என்ற கீழ்ப்பாகத்தை, வில்லின் மேல் பாகத்துக்கு கொண்டு வந்து, பொருள் கொள்ளுதல்!
   இமை போல் காத்தனர், இது எண்ணுவதற்கு (நினைத்துப் பார்ப்பதற்கு) மிக்க அரிதானது!

   எப்படி?
   = வில்லைப் பூட்டி இராகவன் காக்கும் வேள்வியில்
   = வில்லைப் பூட்டிக் கம்பனும் பாடுறான் பாருங்க!
   இதான் கம்பன்!

  • anonymous says:

   பூட்டுவிற் பொருள்கோள் மட்டுமில்ல! இன்னும் இருக்கு…

   இராமன் வில்லில் நாண் ஏற்றிய பின்னரும், அதைச் சுண்டிச் சுண்டி, ஒலி எழுப்பிய படியே, எதிரிகளுக்கு அச்சம் ஊட்டினான்!
   அது போல், கம்பரும் வில்லைச் சுண்டிக் கொண்டே இருக்கிறார்!

   = இதற்குத் தாப்பிசைப் பொருள்கோள் ன்னு பேரு!

   தாப்பு = தாம்பு (கயிறு); கயிற்றின் பல இடங்களில் ஒலி எழுப்புவது!
   அதாச்சும் பாட்டில் உள்ள ஒரு சொல், பாட்டின் மற்ற பாகங்களுக்குப் போய்ப் போய் வருவது…ஒரு ஊஞ்சல் போலன்னு வச்சிக்குங்களேன்!
   —————

   இமையின் காத்தனர் என்ற கடைசிச் சொற்கள்

   * பாட்டின் முதல் வரியில் உள்ள = இரண்டு-மூன்று நாள், இமையின் காத்தனர் ன்னு எடுத்துக்கலாம்
   * பாட்டின் இரண்டாம் வரியில் உள்ள = முனிவன் வேள்வியை, இமையின் காத்தனர் ன்னு எடுத்துக்கலாம்
   * பாட்டின் மூன்றாம் வரியில் உள்ள = மன்னன் மைந்தர்கள் இமையின் காத்தனர் ன்னு எடுத்துக்கலாம்

   இப்படி, இறுதிச் சொற்கள், பல வரிகளுக்கும் சென்று ஊஞ்சல் ஆடுவதால் = தாப்பிசைப் பொருள்கோள்!

  • anonymous says:

   இப்போ சொல்லுங்க சொக்கரே…
   //மற்ற கம்பன் பாடல்களோடு ஒப்பிடும்போது, இந்தப் பாட்டில் விசேஷமாக எதுவும் இல்லையே என்று தோன்றுகிறதா?//

   :))))

   #கம்பேன்டா

   • ஆகா, இவ்வளவு இருக்கா?

    அனானி, எப்படீங்க இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

    நீ எமது நண்பேன்டா!

    நன்றி.

   • ஆனந்தன் says:

    உங்கள் பின்னுட்டங்களால் 365 பா ‘அழியா அழகு’ பெறுகின்றது!

 5. விசுவாமித்திரர், யோகிக்கு வைராக்கியம் எவ்வளவு அவசியம் என உணர்த்திய கேரக்டர்…நினைத்ததை அடைந்த மனிதர்…அவ்வளவு வைராக்கியம் கொண்ட மனிதருக்கு ஒரு பிரச்சினை இருந்தது நொடியில் உணர்ச்சிவசப்படுவது…

  விஷயத்துக்கு வருவோம்..

  விண்ணவர்க்கு வேள்வி சமைக்கும் துறவிக்கு, மண்ணவர்க்கு அரசு அமைக்கும் வேந்தரிருவர் காவல் காக்கின்றனர்…

  தாடகையின் மூலம் எந்த ஒரு இடையூறும் யாகத்திற்கு நேர்ந்து விடக் கூடாது என விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு காவல் காத்ததன் பெருமையைப் பற்றி அழகாகக் கம்பன் வருணித்ததுதான் சிறப்பு..

  இங்கு பாடலின் பெருமை என்பது அழகாக எதுகை கோர்க்கப்பட்ட விதம்… எப்படி எதுகைகளும்,மோனைகளும் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் நாம் கம்பனிடத்தில் விழுந்து விடுகிறோம்…

  ராமனும்,லட்சுமணனும் நான் செய்யப் போகும் வேள்விக்குப் பாதுகாப்பு வேண்டுமெனக் கேட்டவுடனே அவருடன் ஆரண்யத்திற்குக் கிளம்பி விட்டனர்… இந்த உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமையான பணி கண்காணித்தல்(surveillance and vigilance too) .. அதுவும் ஒரே இடத்திலிருந்து கண்காணித்தல்(Stable Surveillance).. வெவ்வேறு இடத்திற்கு அலைந்து கண்காணிப்பது(Roaming Surveillance) கூட அயற்சியைத் தராது.. ஒரே இடத்தில் நின்றவாறு கண்காணிப்பது மிகவும் சலிப்பூட்டக்கூடிய பணி… நான் என்சிசியில் இருந்தேன்.. கேம்ப்பில் இருவர்,இருவராக சென்ட்ரி வேலை செய்ய வேண்டும்…கேம்ப் ஆபிஸின் முன் SLR Gun-னைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டும்…நானும்,என் நண்பன் முத்துப்பாண்டிக்கும் வாரத்தில் இரு நாள் Duty..அதில் ஒரு நாள் எங்கள் துரதிருஷ்டமாக காலை 3 மணியிலிருந்து, காலை 6 மணி வரை நிற்க வேண்டும்..ஒரே இடத்தில்,SLR Gun-னை வீஷ்ராம்(இதுலயும் ராம்-ஆ????) பொசிஷனில் வைத்தவாறு…அது முடித்து ஆறு மணியானவுடன்,நண்பன் முத்துதான் அடுத்த பேட்ச்சில் நிற்க வேண்டியவன்களைத் தட்டி எழுப்பி,அவனுகளைச் செல்லம்,புஜ்ஜிமா எந்திருங்கமா,யூனிபார்ம் போடுங்கம்மா,பரே(கேப்)-வ மாட்டுங்க ராசான்னு தாஜா பண்ணிக் கூட்டிட்டு வர்றனும்..அதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு 20 நிமிஷம் ஆயிரும்..அப்போ நான் மட்டும் தனியா நிக்கணும்…அவனுங்க வந்து நின்னாதான் எங்களுக்கு ரிலீஃப்…

  என் வாழ்வில் உச்சகட்ட வலியை ஏற்றுக்கொண்ட நாட்கள் அவை… 3 மணி நேரம், தண்ணீர் கூடக் குடிக்கச் செல்லக் கூடாது…பாத்ரூம் கூட கிடையாது…(Discipline and Obey the Order 🙂 🙂 :))

  இலக்குவன் அந்தக் கொடுமையான Stable Surveillance பணியைத் தான்
  தான் ஏற்றுக் கொண்டு, தன் அண்ணனிடத்தில் கொஞ்சம் எளிதான Roaming Surveillance பணியைக் கொடுத்ததுதான் சிறப்பு
  .அடடா.. லட்சுமணனின் சகோதரப் பாசமும்,அண்ணனுக்காக எதுவும் செய்யக்கூடிய அந்தத் தியாக உள்ளமும், யாரிடத்திலும் காண்பது அரிது..
  நான் அந்த இருபது நிமிஷ ரிலீஃப் முத்துப்பாண்டிக்குக் கொடுத்ததைப் போல..ஆனால், லட்சுமணன் ஏற்றுக்கொண்ட வலி ஆறுநாட்களுக்கு அசையாமல் நிற்கும் வலி…

  சரி.. இவ்வளவு செய்றோமே?? நமக்காக அந்த வேள்வியினால் என்ன பலன்? அவர் செய்றாரு..அதனால்,அவர் தவவலிமை அடையப் போகிறார்.. அதனால் நமக்கு என்ன பலன்? என ஒரு நிமிடம் நினைத்திருந்தாலும், இவ்வளவு கஷ்டமான அந்தப் பணியினை முழுமனதோடு செய்திருந்திருக்க முடியாது…

  கற்றறிந்தோருக்குப் பிரச்சினை என்னும் போது, அதில் பலனை எதிர்பார்ப்பது,சாதரணர்கள் செய்வது… அந்த ரகு வம்சத்தில் பிறந்து,தன் வாழ்வையே ஒரு புண்ணியச் சரிதமாக்கிச் சென்ற ராமனும்,அவன் சகோதரனும் அதை எதிர்பார்க்கவில்லை… பலனை எதிர்பாராது செய்த காவல் அது…

  ஆனால் விசுவாமித்திரர் சாதரணரா?? அந்தச் சக்கரவர்த்தித் திருமகனும்,அவன் சகோதரனும் தனக்காகச் செய்த அந்தக் கடும் காவலுக்காகத்தான் ஜனகனின் சபையில் ராமருக்காக அவர் வாதாடியது… சீதை ராமரின் வாழ்வில் நுழைய,அந்தத் திருமகளை அவனுக்கு அளிக்கப்பட்ட விசுவாமித்திரர் கருவியாக இருந்து அவர் அக்காவலுக்குப் பிரதியுபகாரம் செய்து கொண்டார்..

  கோதண்டம் தாங்கியவனுக்கு கோடி வணக்கங்கள்…

  • anonymous says:

   உனக்க்க்க்கும் கோடி வணக்கம் பாலா:)
   liked this comment so much, that too abt #NCC

   Stable & Roaming Surveiilance!
   Stable தான் இருக்குறதிலேயே ரொம்பக் கடினம்! – நி’ஜ’ வாழ்விலும்…
   அவனே என்று இருத்தலும் இருத்தல் நிமித்தமும்!

   அந்த வகையில் இலக்குவன்…ஆயிரம் குறைகள் இருப்பினும்…வாழ்க!

   • கோடி வணக்கத்திற்கு அடியேன் தகுதியானவனா எனத் தெரியாது…ஆனாலும்,உங்களின் வார்த்தைகள் அடியேனுக்கு சுகந்தமான உணர்வை ஊட்டுகின்றன..

    //Stable தான் இருக்குறதிலேயே ரொம்பக் கடினம்! – நி’ஜ’ வாழ்விலும்…
    அவனே என்று இருத்தலும் இருத்தல் நிமித்தமும்!//

    நிலை திரிபடையாமல் வாழ்வது மிகவும் சிரமமான விஷயம்தான்…. ஆனால், உலகில் Stability என்பது ஒரு மாயை என்றுதான் விஞ்ஞானம் சொல்கிறது… எந்த ஒரு நிலையான பொருளும்,சூழலும் ஒரு நிலைத்தன்மையற்ற நிலையை நோக்கியே(Stable to Unstable) செல்வதாகக் கூறுகிறது…. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும்(susceptible to all) எனக் கூறுகிறது…

    யோசித்துப் பார்த்தால் உண்மைதானோ என்றும் தோன்றுகிறது.. “அவனே என்று இருத்தலும்”, நிலையானதாகத் தோற்றமளித்தாலும், அவனின்பால் கொண்ட அன்பு மென்மேலும் பெருகிப்,பெருகி இருக்கும் நிலையைக் காட்டிலும், உயர்த்த்திக் கொண்டே போகிறதே… அதுவும் நிலைத்தன்மையின் திரிபடைதலே…

    எல்லாம் வேலைத் தாங்கியவனின் சித்தமே…

  • anonymous says:

   எனக்குப் பிடித்த வரிசை: பரத நம்பி, இலக்குவன், சத்ருக்கனன்….இராமன்

   • அடியேனுக்கும் பரதனைப் பிடிக்கும்.. சத்ருக்கனைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது..

    இந்த வரிசையில் குகனை ஏன் சேர்க்கவில்லை?? சொல்லப்போனால் பரதனுக்கும்,லட்சுமணனுக்கும் முன்னால் கொண்டு வைக்கப்பட வேண்டியவன் குகன்….ராமன் மேல் குகனின் இனம்புரியாத பாசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. “ஆழநெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ?” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் அழகான பாசச் சிலிர்ப்பை ஊட்டக் கூடியது…

    பரதன் தன் சகோதரனுக்காக தாயினையும் தூக்கி எறியத் துணிந்த உத்தமன்…

    அப்படி என்னதான் மாயமந்திரம் செய்தான் ராமன்? அவனைக் கண்டால் அனைவருக்கும் பிடிக்கிறது…(கூனியைத் தவிர).

 6. ராமாயணத்தின் ஒட்டுமொத்தப் புதைபொருளும் புதைந்திருப்பது வாதிஷ்டம் என்ற நூலில்தான் இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்..

  ராமாயணத்தின் நுட்பக் கருத்துக்களும், ராமாவதாரம் இந்த உலகிற்கு சொல்லிச் சென்ற நுண்கருத்துக்களும் வாதிஷ்டத்தில்தான் நிறைந்திருக்கிறதாமே??

  ராமாயணமும்,பாரதமும் சொல்லிச்செல்பவையாக பசும்பொன் திருமகனார் ஓர் சொற்பொழிவில் குறிப்பிட்டவை..

  ராமாயணம்- காமத்தால் அழிந்தவன் ராவணன்…

  பாரதம்-காஞ்சனத்தால் அழிந்தவன் துரியோதனன்…

  I like it so much…

 7. ஆனந்தன் says:

  ஒரு வைரக் கல்லைப் பலவிதமாகப் புரட்டிப் பார்த்து அதன் ஒளித்தெறிப்புகளைப் பலகோணங்களிலிருந்து ரசிப்பதைப் போல
  இந்தப் பாடல்களை எத்தனை விதமாக ரசிக்க முடிகிறது!

  வைரக் கற்களைத் தேடி எடுத்துவரும் சொக்கருக்கும், பட்டை தீட்டி
  ஜொலிக்க வைக்கும் அனைவருக்கும் நன்றி!

  • //வைரக் கற்களைத் தேடி எடுத்துவரும் சொக்கருக்கும், பட்டை தீட்டி
   ஜொலிக்க வைக்கும் அனைவருக்கும் நன்றி!// நீங்கள் எழுதியதை ரீட்வீட் பண்ண என் கை எத்தனித்தது 🙂 நீங்கள் கூறியிருப்பது என் எண்ணங்களையும் பிரதிபலிக்கிறது, நன்றி!

   amas32

 8. பாலாவின் விளக்கம் இந்தப் பாடலுக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது! நன்றி பாலா 🙂

  ராமனும் இலக்குமணனும் இளம் பிள்ளைகள். குருகுலம் முடித்து வந்தவர்களே தவிர களப் பணி ஆற்றியது இல்லை. ஆயினும் எவ்வளவு பெரிய பொறுப்பை எத்தனை சிரத்தையாகச் செய்கின்றனர். சிறுவர்களே ஆனாலும் ஷத்ரிய தர்மத்தை கடைபிடிக்கின்றனர். ரிஷியின் யாகத்தை நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

  இருவரும் சேர்ந்து யாகத்துக்கு எந்த கேடும் வராமல் கண்ணை இமை காப்பது போல காக்கின்றனர். அது ஒரு புறம் இருக்கட்டும். இங்கே இலக்குவன் அண்ணனையே அப்படி காக்க முற்பட்டிருக்கானே. இதில் இராமனை விடவும் இலக்குவன் அதிக பொறுப்பு எடுத்துக் கொள்கிறான்.அதிகக் கடினமான வேலையை தான் எடுத்துக் கொண்டு வேளை பளு குறைவுள்ளதை அண்ணனுக்குக் கொடுத்திருக்கார்.

  இதில் ஆறு நாட்கள் இலக்குவன் கண்ணை இமை காப்பது போல காத்தது என்ன பெரிய விஷயம்? பின்னாளில் கொடிய வனத்தில் பதினாலு ஆண்டுகள், இரவில் நித்திரையை துறந்து, அதே Stable Surveillance செய்த இலக்குவனின் அன்பையும், பக்தியையும், வைராக்கியத்தையும் என்னவென்று கூறுவது!

  amas32

  • அட ஆமால்ல.. ஒரு வேளை பிற்காலத்தில் அவன் அண்ணனுக்காக செய்த அந்தப் பணிக்கு, இந்த வேள்வியில் அவன் ஈடுபட்ட காவல் முன்னோட்டமாக அமைந்ததோ என்னவோ??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s