பத்தும் செய்யும்

குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,

அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,

நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்

புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?

நூல்: வளையாபதி

பாடியவர்: தெரியவில்லை

நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது உயர்குடிமக்களாக உயர்த்திவிடும், நாம் நினைத்த கல்வியை உலகின் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து தரும், நம்மைத் தேடி வந்தவர்களின் பசியைத் தீர்க்கும் உணவாக உதவும்… இப்படி இன்னும் பல பயன்கள் உண்டு.

ஆகவே, நிலமே பிளந்துபோகும்படி வெப்பம் நிறைந்த நீண்ட பால நிலத்தைக் கடந்து சென்றும்கூட, அந்தப் பொருளைத் தேடத் தயங்காதீர்கள். அதுமட்டும் உங்களிடம் இருந்துவிட்டால், வேறெந்தக் குறையும் எட்டிப்பார்க்காது.

துக்கடா

 • ’அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல், கொஞ்சம் ப்ராக்டிகலாகப் பேசும் பாட்டு இது. ‘இளமையிலே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது காசைத் தேடி வெச்சுடுங்கய்யா, அப்புறமா உங்க மனசுக்குப் பிடிச்ச விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கலாம்’ என்று அறிவுரை சொல்வதாகவும்கூட எடுத்துக்கொள்ளலாம்
 • ‘புலம்பு இல் பொருள்’ என்றால், ’துயரம் இல்லாமல் வாழ உதவும் செல்வம்’ என்று அர்த்தம், ஒழுங்காகப் பொருள் தேடுகிறவர்களிடம் வீட்டார் (ஹிஹி!) அநாவசியாகப் புலம்பமாட்டார்கள் என்றும் சொல்லலாம் 😉
 • ’வளையாபதி’ ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று, ஆனால் முழுமையாகக் கிடைக்கவில்லை, ‘குண்டலகேசி’யின் நிலைமையும் அதேதான், மற்ற மூன்று காப்பியங்களாவது (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி) ஒழுங்காகக் கிடைத்ததே என்று நாம் திருப்தி கொள்ளவேண்டியதுதான்

328/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், வளையாபதி. Bookmark the permalink.

30 Responses to பத்தும் செய்யும்

 1. anonymous says:

  சிலப்பதிகாரம்/ மணிமேகலை தவிர்த்து,
  மற்ற பேரிலக்கியங்களில் இருந்து, இப்பத்தான் முதல் முறை, #365paa வில் போடுறீங்களா?:) Good! வாழ்த்துக்கள் சொக்கரே!:)

 2. anonymous says:

  தமிழ்மொழியில் ஐம்பெருங் காப்பியங்கள்
  = ஐந்துமே ஒரு அணிகலனின் பேராத் தான் இருக்கும்!:) அதுவும் பெண்ணின் அணிகலன்! தமிழ், பெண்மைக்குச் செய்த பெருமை!:)

  * சிலப்பதிகாரம் = சிலம்பு (கால் அணி)
  * மணிமேகலை = மேகலை (இடுப்பு அணி)
  * சீவக சிந்தாமணி = சிந்தாமணி (தலை அணி)
  ——-
  * வளையாபதி = வளை (கையணி)
  * குண்டலகேசி = குண்டலம் (காதணி)

  • anonymous says:

   ஏன், இதை ரெண்டாப் பிரிச்சேன்-ன்னா…

   * முதல் மூனும் = கைக்குக் கிடைப்பவை!
   பக்தி இலக்கிய காலம், அதற்கும் சற்று முன்பே எழுதப்பட்டு பிரபலமும் ஆகிவிட்டவை!

   * கடைசி இரண்டும் = எங்கே போச்சோ, எங்கே கொளுத்தினாங்களோ, தண்ணீல போட்டாங்களோ தெரியாது:(((
   பக்தி இலக்கியக் காலங்களில் எழுந்தவை…பிரபலமாவதற்கு முன்பே “காணாமல்” போனவை!
   ———-

   சீவக சிந்தாமணி எப்படியோ தப்பித்தது! ஏன்-ன்னா முன்பே நன்கு பிரபலம் ஆகி விட்டது!
   விருத்தப் பாவில், அது கம்பனுக்கே முன்னோடி!

   அப்படி இருந்தும், சீவக சிந்தமாணி போன்ற “இழிநூலை” மன்னன் படிக்கிறானே-ன்னு,
   அவனைத் “திருத்த” ….. சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணம் எழுதியதாகச் சொல்வார்கள்!
   அதை இன்றும் சொல்லிக் கொண்டு, எழுதி வைப்பது தான் பெருங்கொடுமை!:((
   ———-

   தமிழ் இலக்கியத்தை, சமய நோக்கோடு அணுகினால், இப்படித் தான் அரும் பெரும் கருவூலங்களை இழக்க வேண்டி வரும்:((((

   நான் அடிக்கடி சொல்லுறது = இது தான்!
   தமிழ் இலக்கியத்தில்,
   * தமிழ்=தான் முந்தி;
   * சமயம்=அதற்குப் பிந்தி தான்!

   சமய இலக்கியங்கள் சிறப்பானவை தான்! தாராளமாய் வர வேண்டும்! ஆனால்….
   * மாற்று இலக்கியங்களைத் துடைத்து விடல் கூடாது!
   * பொதுவான அகநானாறு, புறநானூறுக்கு, கடவுள் வாழ்த்து ன்னு பின்னாளில் எழுதி, “ஒட்ட வைத்தல்” ஆகாது!
   ———-

   நமக்கு இன்னிக்கி ஒன்னு பிடித்தமாய் இருக்கலாம்!
   நேற்று வரை பிடிக்காதது, இன்று சொந்தக் காமங்களுக்காக, திடீர்-ன்னு பிடித்துப் போகிறது!
   இப்படி மாறுவது தான் மனித மனம்!

   இன்னிக்கி, ஒன்று பிடிக்கிறதே என்பதற்காக….
   தொன்மத்தில் கைவைத்து, அதை வலிந்து ஏற்றுதலோ…
   (அல்லது) தொன்மத்தில் வேறு ஒன்றைத் துடைத்தலோ கூடவே கூடாது!
   * இன்று இன்றாக இருக்கட்டும்
   * தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

   தமிழ் இலக்கியத்தை = தமிழாகவே அணுகுவோம்!

  • anonymous says:

   * வளையாபதி = 72 பாட்டு தான் இன்னிக்கி கிடைக்குது!
   * குண்டலகேசி இன்னும் மோசம் = 19 பாட்டு தான்!

   அது கூட எப்படி? மூல ஓலைகள் இல்ல!
   மற்ற இலக்கண/ இலக்கிய உரைகளில், எங்கோ நடுநடுவே, இந்தப் பாட்டுகளை மேற்கோள் காட்டுறாங்க உரையாசிரியர்கள்!
   அதனால் கிடைக்குது!

   அப்படிக் கிடைக்கிறதை வச்சி, இது தான் கதை-ன்னு ஓரளவு ஊகம் தான்!
   தமிழுக்கு, இப்படியா வரவேண்டும் ஒரு அவல நிலை?:(((
   * குண்டலகேசி = பெளத்த நூல்
   * வளையாபதி = சமண நூல்
   ———————

   முருகா!
   சமணர்களிடம், வெளிப்படையாக, இந்தத் தமிழ் அவையிலே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

  • anonymous says:

   ஐம்பெருங் காப்பியங்கள் போலவே…
   தமிழில், ஐஞ்சிறு காப்பியங்கள் இருக்கு-ன்னு தெரியுமா?:)
   = அத்தனையும் சமண நூல்கள்!

   * நீலகேசி
   * சூளாமணி
   * யசோதர காவியம்
   * நாககுமார காவியம்
   * உதயணகுமார காவியம்

   பலவும் 13th CEக்கு பிற்பட்டவை! அதனால் ஓரளவு தப்பிச்சிது:)

 3. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
  மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
  இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
  கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

  இந்த வளையாபதி சொல்லறதுக்கும் மேல கிடைக்க அபிராமி நம்மை முழுசாக் கூட பார்க்க வேண்டாம். அவளோட கடைக் கண் பார்வை போதுமே! அபிராமி அபிராமி… 🙂

 4. anonymous says:

  பாட்டுக்கு வருவோம்….

  //எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது உயர்குடிமக்களாக உயர்த்திவிடும்//

  “குலம் தரும்” என்பதற்கு, பொருள் இதுவல்ல-ன்னு நினைக்கிறேன் சொக்கரே!

  • anonymous says:

   ஏன் சொல்லுறேன்-ன்னா, பின் வருவன சரியா இருக்கா?-ன்னு கொஞ்சம் பாருங்களேன்!
   ————

   பாட்டில், செல்வம் மூலமாக் கிடைக்கும் மற்றவையெல்லாம், = நல்ல நலங்களாகவே சொல்லி இருக்கு!
   = கல்வி, அழி பசி தீர்க்கும், புலம்பல் இல்லாப் பொருள்
   ஆனா, ஒரு வரி மட்டும் – //எந்தக் குலத்தில் பிறந்தாலும், பணம் உயர்குடி ஆக்கி விடும்// ன்னு சொல்லுவாரா?

   மேலும் இது சமண நூல்! சமணத்தில் சாதி/ உயர்குடி கிடையாது!
   அப்படியிருக்க, பணம் ஒருவரை “உயர்குடி” ஆக்கும்-ன்னு சொல்லுவாரா? என்பது தான் என் ஐயம்!

   தவறு இருந்தால் திருத்துங்கள்!

  • anonymous says:

   “குலம் தரும்” என்னவா இருக்கும் ன்னு யோசிச்சிப் பார்த்தேன்….
   ஆழ்வார் பாசுரம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சி!

   குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
   நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்
   வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
   நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன், நா*** என்னும் நாமம்!

   இதிலும் குலம் தரும்-ன்னு வருகிறது! = தொண்டர் குலத்தைத் தரும் ன்னு பொருள் கொள்ளுறாங்க!
   —————

   • எனக்கும் இதே பிரபந்தப் பாடலும், இதே கருத்தும் தான் தோன்றியது 🙂 குலம் தரும் என்பது, நம் குணத்தை பொறுத்து சேருவோர் குழாமை குலம் என்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் .
    amas32

  • anonymous says:

   அதாச்சும் குலம் தரும் = நல்லவர்கள் சேர்க்கையை உண்டு பண்ணும்!

   நல்ல வழியில் பொருள் ஈட்டினால், தான தர்ம காரியங்களுக்கு, நல்லவர்கள் பலர், அந்தச் செல்வந்தரை அணுகுவார்கள்!
   முன்பு, எந்தப் பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாது, நல்லபடியாகவே நடந்து கொண்ட சரவணபவன் உரிமையாளர் (மோகத்துக்கு ஆளான கதை அப்பறம்)
   அவரை, வாரியாரே அணுகவில்லையா?

   வாரியார் என்னும் நல்லவரின் சேர்க்கையை உண்டு பண்ணியது = அவர் ஆரம்ப காலச் செல்வம்!
   = இதுவே “குலம் தரும்”! தொண்டர் குலம்/ சான்றோர் குலத்தைத் தரும்!

   சும்மா தோனிச்சி!
   தவறு-ன்னா திருத்துங்கள்; திருத்திக் கொள்வேன்; நன்றி

   • ஆனந்தன் says:

    பணம் இருந்தால் நல்லவர்கள் சேர்க்கையைவிடக் கெட்டவர்கள் சேர்க்கை வருவதற்கு வாய்ப்புகள் கூட உண்டு!

    “பானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா”-க்ண்ணதாசன்.

    நல்ல குணமுள்ளவர்கள் கெட்டவர்களைத் தவிர்த்து நல்லவர்களைத் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள்.

    சில பரம்பரைப் பணக்காரக் குடும்பங்களில் பிறந்தவர்களை உயர் குடியில் பிறந்தவர்கள் என்று கூறுவதுண்டு அல்லவா? அந்தப் பரம்பரையை முதலில் உருவாக்கியது, அதன் முன்னோர் தேடிய திரவியமே. அதனால் அந்தக் குலத்தை உருவாக்கப் பொருள் காரணமாக அமைகிறது என்று கூறலாமல்லவா?

    ஆனால், இது சாதிப் பாகுபாடற்ற ஒரு சமூகச் சூழலிலேயே சாத்தியமாகும். ie. it is possible to join or become an upper class person from lower class, if you have money. (within the same caste or in a casteless society)
    (இங்கே assumption: குலம் = நற்குடி)

   • என். சொக்கன் says:

    ரெண்டும் சரியாகவே தோன்றுகிறது, ’பணம் வந்தா அவன் உடனே உயர்குடிக்காரனைப்போல் மதிக்கப்படுவான்’னு கேலியாக்கூட அதன் புகழைச் சொல்லலாம் அல்லவா?

    ஆகவே, நான் முன்பு எழுதியதைத் திருத்தவேண்டும் என்று தோன்றவில்லை 🙂

  • anonymous says:

   * குலம் தரும் = இதைப் பாத்துட்டோம்
   * கல்வி கொணர்ந்து முடிக்கும் = செல்வம் எப்பிடிங்க கல்வியைத் தரும்?
   (சரஸ்வதி சபதம் சாவித்திரி கோச்சிக்கப் போறாங்க:))

   அதென்ன கொணர்ந்து முடிக்கும்? = கல்வி, எதைக் கொண்டாந்து, எதை முடிக்கும்? சொல்லுங்க பார்ப்போம்:)
   —————–

   * அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்
   அலந்த = உலர்ந்த;
   செடி அலந்து போச்சிப் பாரு ன்னு கிராமத்தில் சொல்வாங்க!
   அடிச்ச அடியில் ’அலண்டு’ போயிட்டேன் ன்னு சொல்லுறோம்-ல்ல! ’அலந்து’ என்பதே சரி!!

   பணத்துக்காக ஒட்டிய உறவு இல்ல! எதுன்னாலும் நமக்காகவே நின்ற உறவு!
   “உலர்ந்து போனாலும் உறவு போகாத உறவு!”
   அவங்க பசியைப் போக்கும்!
   மிச்ச ஆளுங்க பசி=பேராசைப் பசி; காமப் பசி; அது தீரவே தீராது!
   —————–

   * நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகி = பாலைவனத்துக்கும் போய்த் தேடும் பொருள்!
   இன்னிக்கி அமீரகம், சவுதி ன்னு போய், உழைப்பைச் சிந்தி, எறும்பு போல் பொருள் ஈட்டுறாங்களே! அதான் நினைவுக்கு வருது! வாழி!
   —————–

   * புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?
   புன்கண் = சோகம், வறுமை, வெறுமை

   அதென்ன புலம்பு இல் பொருள்? = இது ரொம்பவே ஆழமானது!
   சொக்கர் ’சிக்’குன்னு சொல்லி இருக்கார் பாருங்க! = //வீட்டார் (ஹிஹி!) அநாவசியாகப் புலம்பமாட்டார்கள்//
   —————–

   * பணம் வந்தாலும் “புலம்பல்” = ச்சே…ஒரு நாளாச்சும் சுடுசோறு திங்க முடியுதா?
   * பணம் இல்லீன்னாலும் “புலம்பல்” = ஐயோ, பழைய சோறு திங்க கூட, பணம் இல்லீயே!

   * நமக்குப் பணம் வந்தா, அடுத்தவன் “புலம்பல்” = பாவீ! நேத்து வரை நம்மள போலத் தான் இருந்தான்! இன்னிக்கி நல்லா இருக்கானே! சவூதி-ல்ல கள்ள நோட்டு அடிப்பானோ?
   * நம்மிடம் பணம் இல்லீன்னாலும், அடுத்தவன் “புலம்பல்” = பரதேசிங்க…நம்ம கிட்ட கடனுக்கு வந்து நின்னாலும் நின்னுருங்க! தள்ளியே இருக்கணும்!

   இப்போ தெரியுதா = “புலம்பல்” இல்லாப் பொருள்?

   =நல்ல நோக்கத்தில் ஈட்டி
   =நல்ல வழிமுறையில் ஈட்டி
   =நல்ல உறவுகளுடன் பகிரும் போது
   “புலம்பல்” இருக்காது! அன்பே தவழும்!

   இதுல, எதுனா, ஒன்னு தப்பினாலும், அந்தச் செல்வத்தில் = புலம்பல் இருந்து கொண்டே இருக்கும்! = நமக்கும் + மற்றவருக்கும்!
   ————–

   (எப்பவோ டைப் பண்ண உட்கார்ந்தேன்…நீண்டுருச்சி…அலந்த உறவின் அழிபசி தீர்க்கணும்…I mean சாப்பிடணும்…Tata:))

 5. ஆனந்தன் says:

  வளையாபதி என்பதற்ககுப் பொருள் “எந்தச் சந்தர்ப்பத்திலும் நல்லொழுக்கத்தினின்றும் வளையாத கணவன்” என்றும் பொருள் கூறலாம். அதுவும் கூட ஒரு பெண்ணுக்கு அணிகலன் அல்லவா?

  • anonymous says:

   அல்ல சிவா:)

   முன்பே சொன்னது தான்; ஒரு சொல்லுக்கு எப்படி வேணும்-ன்னாலும் பொருள் பண்ணிக்கலாம்! – எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!

   ஆனால், அச்சொல் எந்தச் சூழமைவில் (context) வருகிறது-ன்னு பார்த்துப் பொருள் கொள்வதே சிறந்தது!

   வளையாபதி கதை ஒருவாறு தொகுக்கப் பட்டிருக்கு!
   அதில் அந்தக் கணவன், பெண்ணை நிர்க்கதியாய் விட்டுட்டு உயர் சாதிப் பெண்ணோடு போனவன்!
   அவளோ, தன் மகனை வளர்த்து, மகன் மூலமாகத், தந்தை=அவனே ன்னு மெய்ப்பிக்கிறாள்!

   இப்போ நீங்களே சொல்லுங்க:
   வளையா பதி = எந்தச் சந்தர்ப்பத்திலும் நல்லொழுக்கத்தினின்றும் வளையாத கணவன் ன்னு பொருள் கொள்ளலாமா?:)))

   • அவளுடைய கண்ணீருக்கும்,அழுகைக்கும்,அவளுடைய பாசத்திற்கும்,பிள்ளையினுடைய பாசத்திற்கும் வளைந்து கொடுக்காத,கல் நெஞ்சமுடைய பதி என்று பொருளாக இருக்கலாமோ??

   • ஆனந்தன் says:

    நீங்கள் கூறுவது சரிதான்!
    எங்கேயோ கேட்டது; அதை இங்கே எடுத்து விட்டேன்…இதான், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை எல்லாம் சங்கத்தமிழ் அவையில் கொண்டுவந்து ஒப்புவிக்கக் கூடாது எனபது…

    அதிருக்க, வளையாபதி என்றால் என்ன?

   • anonymous says:

    தவறாக எடுத்துக் கொள்ளாது, புரிந்து கொண்டமைக்கு நன்றி சிவா!
    புரிதல் = மிகப் பெரிய வரம்!

    சேச்சே….நாம் எல்லோருமே எங்கோ கேட்டது/படித்தது தானே! தயங்காது #365paa வில் சொல்லுங்க!
    தகவல் தப்பா இருந்தா, நம்மில் ஒருவர், அறியத் தரப் போகிறோம்! அவ்வளவு தானே!
    இது ஒன்னும் அறிஞர்கள் அவை அல்ல! இது சுவைஞர்கள் அவை!

    Lemme take the liberty! சொக்கனே அறிஞர் அல்லர்! சுவைஞர் தான்!
    சரி தானே சொக்கரே?:)

   • anonymous says:

    //அதிருக்க, வளையாபதி என்றால் என்ன?//

    Just bcoz u asked, lemme play:)
    அதென்ன வளையாபதி? வளையாப் பதி ன்னு ல்ல இருக்கணும்??
    ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில், வலி மிகும் அல்லவா?
    அறியாச் சிறுவன்; சிரியாச் சிறுக்கி, பொறுக்காப் பொறுக்கி:)))) வளையாப்பதி
    Any guess, why?

 6. GiRa ஜிரா says:

  புலம்பு இல் பொருள் – இது ரொம்பப் பெரிய பேச்சு. இதப்பத்தி விரிவாப் பேசனும். இரவு வந்து பேசலாம். அப்படியே சீவகசிந்தாமணி பற்றியும்.

  • anonymous says:

   மன்னிக்கவும்! அந்தப் பின்னூட்டம் இட்டு முடிச்சதும் பார்த்தா, நீங்களும் அதைப் பற்றியே யோசித்துள்ளீர்கள்!

   பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை! – உங்களின் தமிழ்ப் பொருள் இல்லார்க்கும் தான்!
   புலம்பிலாப் பொருளுக்குக் காத்திருக்கிறோம்! பெய்யுங்கள்!

   • GiRa ஜிரா says:

    ஐயா தாங்கள் யார்? ஏன் இந்தத் தமிழ்மன்றத்தில் பெயரிலி முகம் காட்டுகிறீர்கள்? தமிழுக்கு பொய்முகம் தேவையில்லை. தாங்கள் தங்கள் பெயரிலேயே வருவது சிறப்பு.

   • anonymous says:

    இது “பொய்”முகம் அல்ல ராகவா! என் முருகவன் “செய்”முகம்!

    நான்கு மாதங்களுக்கு முன்பு, “இந்த மன்றத்தில், உன் பெயரைப் பார்க்கவும் பிடிக்கவில்லை! அதைப் பாராது இருக்கணும்” ன்னு ஓர் அன்பர் அறைந்தனர்!அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
    “சரி, பெயர் வேண்டாது, தமிழ் மட்டும் வேண்டிக் கொள்” ன்னு தமிழ்க் கடவுளாம் திருமுருகன் எனக்குச் செய்து வைத்த “செய்”முகம்! அவ்வளவே!

    வருந்தற்க!
    இம்முகங் கொண்டு, யாரையும் தாக்கவில்லை! தமிழ் மட்டுமே தந்தும் கொண்டும் நிற்கிறேன்; தாய் வைத்த பெயர், தாய்க்கு மட்டும் இருக்கட்டும்!

    உங்கள் நற்பொருள் நுகரக் காத்துள்ளோம்; அறியத் தாருங்கள்!

   • என். சொக்கன் says:

    ராகவன், ‘அனானிமஸ்’,

    இப்போதுதான் மீண்டும் பழைய வேகத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள், மகிழ்ச்சியாக உள்ளது, தமிழுக்காகச் சண்டையை மறந்து தனித்தனியாகவேனும் தொடர வேண்டுகிறேன்,

   • anonymous says:

    “தனி” என்று தனியாக ஒன்றுமில்லை சொக்கரே!
    “தணி”யாத் தமிழ் மட்டுமே உளது

    அடியவர் இச்சையாலே அனானி ஆனேன்:)
    அடியவர் இச்சைக்கும் ஏதும் ஆவேன்!

    அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
    அவை தருவித் தருள் பெருமாளே!:))

 7. பணத்தின் முக்கியத்துவம் இந்தப் பாடலில் வருகிறது. Sanga Paatalkal somehow often speak of esoteric topics only, and here we have a beautiful song which talks about the importance of money which is so required and relevant in our lives, be it in the past or now!

  உலகில் வாழ்வாதாரமாக இருப்பது காற்று, நீர், வெப்பம் ஆகிய இயற்கை வரங்களும் பணம் என்கிற செயற்கை வரமும் தான். இன்று நல்ல காற்றையும், நீரையும், வெப்பத்தையும் வாங்கவே அந்த பணம் தேவையாக உள்ளது. நல்ல வாழ்க்கை தரத்திற்கு பணம் அவசியமாகிறது. சோறு போங்குவதில் இருந்து பள்ளி/கல்லூரி படிப்பு முதல், உடல் நோய்க்கு மருத்துவம் தேடுதல் என்று அனைத்துக்கும் பணமே முன் நிற்கிறது.

  குடும்பத் தலைவன் தேவையான பொருள் ஈட்டி வந்தால் தகுந்த மரியாதை வழங்கப் படுகிறது. அல்லவென்றால் ஒரு மாற்றுக் குறைவு தான். தான தர்மம் செய்வதற்கும் குடும்பத் தலைவன் வேண்டிய பொருள் ஈட்டுவது அவசியம் ஆகிறது. நல்ல எண்ணங்கள் இருந்தும் வேண்டிய பொருள் இல்லை என்றால் புலம்பல் தான் மிஞ்சும்.

  ஆக எப்பாடு பட்டாவது (ஆனால் நேர்மை வழிகளில்) பொருள் ஈட்ட வேண்டியது நம் கடமையாகிறது. வேலை செய்ய வேண்டிய வயதில் சோம்பித் திரிதல் கூடாது என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.

  amas32

 8. என். சொக்கன் says:

  //சொக்கனே அறிஞர் அல்லர்! சுவைஞர்தான்!//

  Of course, இதிலென்ன சந்தேகம்? இங்கே நான் வெளியிடும் பல பாடல்களை வெளியிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகதான் முதன்முறை வாசிக்கிறேன், அறிஞர்கள் எழுதிய உரையை வாசித்துப் புரிந்துகொண்டு அதைக் கொஞ்சம் வேறு பாணியில் எழுதிப் பார்க்கிறேன், அவ்வளவே!

 9. // புலம்பு இல் பொருள் //

  பொருள் தேடுவது எவ்வளவு அத்தியாவசியம்…? பொருள் தேடுங்கள் சுகமான வாழ்வு வாழலாம் என்று சொல்லவில்லை..பொருள் தேடுங்கள் பட்டு மஞ்சத்தில் புரலாம் என சொல்லவில்லை.. பொருள் தேடுங்கள் பகட்டு வாழ்வும்,பட்டாடையும்,பளிங்கு கிண்ணத்தில் பால் சோறும்,பளபளவென ஜொலிக்கும் ஆபரணங்களும்,கமகமக்கும் வாசனைத் திரவியங்களும் பூசி வாழலாம் என்று கூறவில்லை..

  சொல்லப்போனால் பொருள் தேடுவது இவை எவற்றின் அடிப்படையோடும் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்களா என்ன??சரி.. வேறு எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்..பொருளீட்டுவதே அறச்செயல்கள் புரிவதற்காகவே இருக்க வேண்டும்… கற்கும் கல்வியும்,பசிக்குதவுதலும்,அதன் மூலம் கிடைக்கும் புகழையுமே பொருளீட்டுவதன் மூலம் கிடைகும் ஆதாயமாகக் கருத வேண்டும்..

  நம்மவர்களில் பலபேருக்குப் பணம் சேர்ந்ததுண்ணா, என்ன பேசுறோம்,என்ன பண்றோம்னே புரியாது..

  என் நண்பன் சம்பளம் வாங்குன அன்னிக்கு ஒரு மாதிரியாவும்,மாசக் கடைசி அன்னிக்கு வேற மாதிரியாவும் இருப்பான்..காசு கனமா இருக்கும்போது ஒரு மாதிரியாவும்,காலியா இருக்கும் போது வேற மாதிரியாவும் மனுசனோட மனமே மாறிருது.. அவன் மட்டும் விதிவிலக்கா என்ன??

  ஒரு நாள் அவன் அம்மாவுடன் அலைபேசியில் பேசும் போது,”உனக்கு எப்பப்பாரு இதே வேலை..உனக்கு மாசாமாசம் அழுகறதே வேலையாப் போச்சு..நான் என்ன உனக்குக் கொடுக்குறதுக்கு மட்டும்தான் சம்பாதிக்கிறனா?” இப்பிடி சரியான ஏச்சு.. நான் கேட்டபோது,”இந்த மாசம் ஏதோ அவசரச் செலவாம்.ஒரு ஐநூறு ரூபாய் கேக்குது சனியன்”..எனக்குக் கடும் கோபம் வந்துவிட்டது..அவன் வாங்குற சம்பளத்துக்கு ஐநூறு ரூபாய் பெரிய விஷயமே இல்லை…

  இப்படி, பெற்ற தாய்க்கே கொடுப்பதற்கு மனமில்லாத மனிதர்களிடம், அறச்செயல்கள் புரிவதற்கு சம்பாதிடா என்று சொன்னால் நம்மை அரைக்கிறுக்கனாகத்தான் பார்ப்பார்கள்…

  ஆனால், அறச்சிந்தனை அற்றவனிடத்தில் இருக்கும் பணம் வெறும் தாள்களே தவிர வேறொன்றுமில்லை..சம்பாதிக்கும் பொருளோ,பணமோ ஒரு மனிதனுக்குத் தன்னிறைவு தருவதற்குத்தானே தவிர,தறிகெட்டு அலைவதற்கு அல்ல…

  உண்மையிலேயே பணக்காரன் யார் என்று கேட்டால்,எவன் தனக்கான தன்னிறைவு எல்லைகளை வகுத்துக் கொள்கிறானோ அவன்தான்..

  பணம் இருந்தால் என்று ஆரம்பித்தவுடனே,”நாம் கல்வி கற்கலாம்,மற்றவர்களுக்கு அறச்செயல் புரியலாம்” என்று கூறுவதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்??

  பணம் சேர்க்க வேண்டுமென்றால் எப்படி? எப்படி வேண்டுமென்றாலும் சேர்க்கலாமா? அங்குதான் வருகிறது “புலம்புஇல் பொருள்”… ஒருவனைப் புலம்ப வைத்து,அவன் கண்ணீரிலிருந்து எடுக்கும் செல்வம் என்றென்றும் நிலைக்காது…அதில் திருமகள் குடியிருக்க மாட்டாள்… அந்தக் கண்ணீரும்,புலம்பலும் இல்லாத பொருளைத் தேடுவதற்கு எங்கெங்கும் திரைகடல் ஓடியும் தேடலாம் என்றே இங்கு குறிக்கப்படுகிறது…

  இன்னொருவனை,எளியனை வருத்தத்தில் ஆழ்த்தி, அநியாயமாக அபகரித்து, அவனைப் புலம்ப வைத்துச் சேர்க்கும் பொருள் அவனின் கண்ணீரால் தோய்ந்த பணத்தை விட ஒரு மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருள் எதுவும் இல்லை…

  அதை வைத்து அறச்செயல்கள் செய்வது, அழுக்குக் கைகளால் தரையைத் துடைத்து அலங்கோலத்தை ஏற்படுத்துவது போலத்தான்…

  இளையராஜா-வைரமுத்து பிரிவுக்குக் கூட இவ்வளவு சங்கடப்பட்டிருக்க மாட்டேன்… ஏங்க இப்பிடி இருக்கீங்க>??(யாருக்கு யாரோ??)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s