நீ நடந்தால் நடை அழகு!

தந்தன தனந்தனந் தனவெனச்

செஞ்சிறு சலங்கைகள் கொஞ்சிட, மணித்

தண்டைகள் கலின் கலின் கலின் எனத் திருவான

சங்கரி மனம் குழைந்து உருக – முத்தம்

தர வரும் செழுந்தளர் நடைச்

சந்ததி சகம் தொழும் சரவணப் பெருமாளே!

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுறக்

கந்தனை அறிந்து அறிந்தி அறிவினில்

சென்று செருகும் தடம் தெளிதரத் தணியாத

சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து

என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய்ச்

சிந்தை வர என்று நின் தரிசனப் படுவேனோ?

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

சூழல்: திருச்செந்தூரில் முருகன் அருணகிரிக்கு நடையழகு காண்பித்த பாடல்

முருகா, இந்த உலகம்முழுவதும் வணங்கும் சரவணப் பெருமாளே,

கொழுகொழு குழந்தையாகத் தளர்ந்த நடை போட்டு நீ வருகிறாய், ’தந்தன தனந்தந்தன’ என்ற ஒலியுடன் உன் சிவந்த சிறிய சதங்கைகள் கொஞ்சுகின்றன, மணித் தண்டைகள் ’கலின் கலின் கலின்’ என்று ஒலிக்கின்றன, இதையெல்லாம் பார்த்து உன் அன்னை, அழகிய சங்கரி மனம் குழைந்து உருகுகிறாள், உனக்கு முத்தம் தர வருகிறாள்!

நான் இந்தத் திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தேன், பல பேருண்மைகளை உணர்ந்து ஞானம் பெற்றேன், கந்தனாகிய உன்னை அறிந்துகொண்டேன், இனி நான் செல்லும் வழியெல்லாம் இந்த அறிவுதான் எனக்கு விளக்காக இருக்கவேண்டும், என் பாதையைக் காண்பிக்கவேண்டும். யாருக்கும் அடங்காத என் மனம் உன்னை நினைத்து நினைத்து நெகிழவேண்டும், அதனால் என்னுடைய வீண் பேச்சுகள், பயனற்ற செயல்களெல்லாம் மறைந்து, உண்மையான புத்தி கிடைக்கவேண்டும், நான் எப்போதும் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்குமா?

துக்கடா

 • முருகன் நடந்து வருவதும், அதைப் பார்த்துப் பெரிதுவந்து சங்கரி அணைத்து முத்தமிடுவதும், மிக அழகான காட்சி, சந்த நயத்துடன் பாடலாக்கியிருக்கிறார் அருணகிரிநாதர்
 • இந்தப் பாடலைத் தேர்வு செய்தவர் @kryes. இதனை ஓர் அறிமுகக் குறிப்புடன் அவரே பாடித் தந்துள்ளார். அதனை இங்கே கேட்கலாம் : http://soundcloud.com/kryes/raviragmurugavan/s-gluPK

326/365

This entry was posted in அருணகிரிநாதர், திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன். Bookmark the permalink.

11 Responses to நீ நடந்தால் நடை அழகு!

 1. anonymous says:

  இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா!
  ——————-

  இதை வாரியார் குரலில் கேட்பது இன்னும் அருமை! அதன் ஒலிக்கோப்பு கிடைக்கவில்லை!
  ஒரே ஒரு ஆலயத்தில், குன்றக்குடியில்….இதை ஓதுவார்கள் கூட்டமாப் பாடுவாங்க….
  முருகன் வீதியுலா எழுந்தருளும் போது! இசையும் பிச்சிக்கிட்டுப் போகும்!

  அப்படியே அவன் ஓடி வரும் காட்சி!
  தந் தன தனந் தன – தன எனச்
  செஞ்சிறு சதங்கை கொஞ்சிட மணித்
  தண்டைகள் கலின் கலின் கலின் என

  எனது முன் ஓடி வரவேணும்! முருகா
  எனது முன் ஓடி வரவேணும்!

  • A very beautiful gesture KRS, my good wishes to you. நன்றாகவும் பாடியுள்ளீர்கள்!

   amas32

  • ஆனந்தன் says:

   பாடலைப் பாடி வலையேற்றியமைக்கு நன்றி! சில பாடல்களை எப்படி பாடவேண்டுமென்று தெரிந்தால் அவற்றின் அழகை இன்னும் அதிகம் ரசிக்க முடியும். திருப்புகழில் இதற்காகவே எந்த்ச் சந்தத்தில் பாடவேண்டும் என்று முதல் வரிகளில் தெரியப்படுத்தி இருப்பார். இருந்தாலும் அதைச் சரியான் பண்ணுடனும் சந்தத்துடனும் பாடுவதைக் கேட்டு அறிந்து கொள்வது முழுமையைத் தருகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி!

 2. 4sn says:

  Happy bday Raghavan. Good one @kryes. I don’t hv knowledge of what keeps you two apart. I will never ask as well. But many of the mutual friends of both of you, want to see you together discussing here & in twitter.

  நன்றி,
  செந்தில்

  • GiRa ஜிரா says:

   வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே. 🙂

   அவரைப் பற்றி பேச வேண்டாமே. எனக்கு மனக்கசப்பை உண்டாக்குவதில் சிலருக்கு மகிழ்ச்சி. உங்களைப் போன்ற நண்பர்களாவது இதைப் பற்றிப் பேசாமல் இருந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

 3. GiRa ஜிரா says:

  நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்

  நாள் சில கழித்து மீண்டும் இந்தத் தமிழ் மன்றத்தில் இணைந்திருக்கிறேன். அது மகிழ்ச்சியை மட்டுமே பெருக்க இறைவனை வணங்குகிறேன்.

  தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும் செம்மொழியே நம்மொழியாம்.

  அம்மொழியிலே புகழ் பாடும் நூல்கள் பல உண்டு. அப்புகழ்களுக்கு எல்லாம் முற்புகழாய் நற்புகழாய் எழுந்தது திருப்புகழ்.

  எல்லாருக்கும் ஒரு அச்சம் உண்டு. அந்த அச்சம் பிறப்போடு வருவது.

  வெளிச்சம் என்ற நிலை இருக்குமானால் வெளிச்சமில்லத நிலையும் இருக்கும் என்பது எவ்வளவு எளிய உண்மை. அப்படித்தான் பிறப்போடு உண்டாவது இறப்பு.

  சாவா மருந்தும் மூவா மருந்தும் தேடித்தேடி மக்கள் மருத்துவத்தை பலவிதத்தில் ஆய்ந்தாலும் இரண்டும் இன்னும் கிட்டியபாடில்லை.

  இந்த பிறப்புக்கும் இறப்புக்கு இடையில் மனிதர்கள் தானும் துன்பப்பட்டு அடுத்தவர்களையும் துன்பப்படுத்தி வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார்கள்.

  வாழ்வும் நரகமாய் சாவும் நரகமாய்ப் போவது நன்றா? இல்லவே இல்லை.

  இதிலிருந்து மீள்வது எப்படி?

  இந்தக் கேள்விதான் அருணகிரிக்கும் தோன்றியிருக்க வேண்டும்.

  ஏனென்றால் அவர் வாழ்ந்த வாழ்வு அப்படி? காமக் கலவிக் கள்ளை அள்ளி அள்ளி மொண்டு மொண்டு குடித்த வாழ்வு. சொத்திழந்து சுகமிழந்து உடல்நலமிழந்து தொழுநோய் பற்றிப் பதைபதைத்த நிலையில்தான் கோயில் கோபுரத்திலிருந்து குதித்தார்.

  தற்கொலை எல்லாத் துன்பங்களையும் தீர்க்கும் என்ற மூடநம்பிக்கை அவருக்கு.

  துணியில் அழுக்கிருந்தால் துவைக்க வேண்டும். பாத்திரத்தில் அழுக்கிருந்தால் கழுவ வேண்டும். உடம்பில் அழுக்கிருந்தால் குளிக்க வேண்டும்.

  மனதில் தவறான ஆசைகள் என்னும் அழுக்குகள் மண்டிப் போன அருணகிரி என்ன செய்திருக்க வேண்டும்?

  அதைச் சொல்லிக் கொடுத்தார் முருகன்.

  ஓயாமல் இரைச்சலிடும் மனத்திற்கு ”சும்மா இரு” என்று உபதேசம் செய்தார்.

  அருணகிரி என்னும் பசுமரத்தில் “சும்மா இரு” என்னும் உபதேசமாகிய வேல் ஆழமாகப் பதிந்தது.

  அதன் பலனாக முதலில் உள்ளத்தில் அமைதி கொண்டார். பின்னர் உடலில் நலம் கண்டார்.

  உடலும் உள்ளமும் ஒன்றாய் விரும்பும் அருளும் சேர்ந்தது. ஆ என்றழைத்தே ஆண்டவனைக் காணும் நற்பலனும் கிடைத்தது.

  அந்த நல்லனுபவத்தை திருப்புகழ் பாடல்களாக மக்கள் உய்யப் பாடினார். அப்படித் திருச்செந்தூரில் பாடிய திருப்புகழில் ஒன்றுதான் “அந்தகன் வருந்தினம்” என்று தொடங்கும் இன்றைய பாடல்.

  • என். சொக்கன் says:

   நீங்கள் மீண்டும் இங்கே எழுதுவது மிகுந்த மகிழ்ச்சி ராகவன், வருக வருக!

   அந்த ராகவனை அனுமன் வரவேற்றதுபோல், ‘கவ்வை இன்று ஆக நுங்கள் வரவு’

   • GiRa ஜிரா says:

    நன்றி நாகா. பற்று வரவும் வைக்கிறது. 🙂 பற்று வரவும் ஏற்கிறது 🙂

 4. GiRa ஜிரா says:

  திருச்செந்தூர். இந்த ஊருக்குப் பழைய பெயர் செந்தில். செந்து+இல்.

  செந்து என்றால் உயிர். உயிர்கள் சென்று தங்கும் இல்லத்திற்கு செந்தில் என்று பெயர்.

  உயிர்கள் ஆண்டவனை அடைய வேண்டும். அப்படி உயிர்கள் சென்று தங்கும் இல்லமாகத் தமிழர்கள் கருதியது செந்தில் எனப்படும் திருச்செந்தூர் முருகனிடத்தில்.

  திருச்செந்தூரில் அருணகிரிக்கு ஒரு அரிய கண்காட்சி கிடைத்தது.

  ஆம். அழகன் முருகன் செந்திலாண்டவனை பல்லக்கில் தூக்கிச் செல்லக் கண்டார். கண்களையும் கருத்தையும் கவரும் முருகனின் ஆட்டம் காணவும் நாட்டம் கொண்டார்.

  வேண்டினார் வேண்டியது காட்டும் கந்தன் அருணகிரிக்கு ஆட்டமும் காட்டினான்.

  ஊரெல்லாம் பல்லக்கின் முன் பார்க்க அருணகிரியைப் பல்லக்கின் பின் வரச் சொன்னான் செந்தில்.

  பல்லக்கின் பின்னே தில்லையம்பலத்தானைப் போலே காலைத் தூக்கி ஆடினான் ஆறுமுகன்.

  அப்போது அருணகிரி பாடிய பாடல்தான் “தண்டையணி வெண்டயம்” என்ற திருப்புகழ்.

  இந்த உலகமே ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

  நெருப்பு நின்ற இடத்திலேயே ஆடுகிறது. அது சூரியன்.

  நிலம் ஒரு அச்சிலேயே சுற்றிச் சுற்றி ஆடுகிறது. அது பூமி.

  இப்படி விண்ணில் ஒவ்வொரு கோளும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அம்பலத்தில் ஆண்டவனும் ஆடிக்கொண்டிருக்கிறான். ஆடலரசன் என்ற பெயரையும் வைத்துக் கொண்டிருக்கிறான்.

  அந்த ஆடலரசனின் மகனின் ஆட்டத்தையும் பார்த்த பின்னர் உலகத்தில் மக்களின் வாழ்க்கை நிலையும் ஆட்டத்தில் இருப்பதை அருணகிரி நினைத்திருக்கலாம்.

  ஆடி ஆடி அடங்கும் மனிதனின் வாழ்க்கையின் இறுதி எப்படியிருக்கிறது?

  உடல் நலிந்து
  உணவு குறைந்து
  உள்ளம் உறங்கிப் போய்
  கண்கள் இருளடைந்து
  மூச்சும் பேச்சும் மெலிந்து
  முன்பு செய்த பிழைகளும் குற்றங்களும் நெஞ்சை அழுத்தும் நேரத்தில்
  ஆண்டவனை நினைக்காமல்
  பாசத்திற்கும் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் இடையில் தத்தளிக்கும் பொழுது
  விழிகள் நெருப்பாய் பற்றி எரிய
  கைகளில் சூலமும் பாசமும் ஏந்தி
  கரிய பெரிய எருமையின் மீதேறி
  கடமையைச் செய்ய காலன் வரும் பொழுதில்
  தவிப்பும் அச்சமுமாய் எதிர்க்கத் திறனின்றி
  கையாலாகமல் இருக்கும் நிலை!

  மக்களின் இந்தத் துன்பநிலை மாற வேண்டும் என்று அருணகிரி விரும்புகிறார்.

  அப்படிக் காலன் வரும் வேளையில், தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சலங்கைகள் கொஞ்சிட, மணித்தண்டைகள் கலின் கலின் கலின் எனத் திருவான சங்கரி மனம் குழைந்து உருக, முத்தம் தர வரும் செழுந்தளர் நடைச் தொழும் சரவணப் பெருமாளே நேரில் வந்தால் எப்படியிருக்கும்!

  இப்படியொரு காட்சியை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே பல திருப்புகழ்களை அருணகிரி பாடியிருக்கிறார்.

  அப்பா அருணகிரி உம்மை வணங்குகிறேன். உம்மைப் போலவே எப்போதும் முருகனை நினைக்கும் உள்ளத்தை நானும் வேண்டுகிறேன். நெஞ்சில் அமைதி கூட அந்த முருகனின் திருநடை எல்லோர் உள்ளத்திலும் “நடை”பெறட்டும்.

  அன்புடன்,
  ஜிரா

 5. எப்பொழுதுமே குழந்தைகள் காலில் சலங்கையுடன் ஓடும் பொழுது அதன் நாதம் மனதை மயக்கும். கோபத்துடன் காலை தட்டும்போது வேறு ஒரு அழகிய ஒலி வரும். முருகன் என்றாலே அழகன் தான். அவனுடைய அழகிய கால்களில் சதங்கை கொஞ்ச நடந்து வரும் அழகைக் காண தாயும் மகிழ்வாள் நாமும் மகிழ்வோம். இந்தப் பாடலைப் படிக்கும் பொழுதே கண் முன் காட்சி விரிகிறது. தண்டையும் அணிந்து சதங்கையும் அணிந்த முருகனின் கொழு கொழு கால்களால் தளர நடை போட்டு நடந்து வரும் அழகை அருணகிரியார் பாடியது நம் பாக்கியமே 🙂

  முருகன் ஞானத்திற்கே அதிபதி. அவரே அருணகிரியாருக்கு வேண்டிய ஞானத்தை அருளுகிறார். அந்த ஞான விளக்கே அவருக்கு வழிக்காட்டியாகிறது. அலைபாயும் மனதில் நிம்மதியையும் கண்களில் முருகனின் திருக்காட்சியையும் வேண்டி நிற்பது அவர் மட்டுமன்று அனைத்து நல் உள்ளங்களும் தான்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s