ஊட்டினாள், உணர்த்தினான்

போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்

தாதையார் முனிவுறத்தான், எனை ஆண்டவன்,

காதை ஆர் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

உரை

(பாடலில் இல்லாத சில கதைக் குறிப்புகளும் கலந்துள்ளன)

பசி என்று அழுதேன். மலரைப் போன்ற தங்கக் கிண்ணத்தில் ஞானப்பாலை எடுத்துவந்து எனக்கு ஊட்டினாள் உமா தேவி. நான் குடித்து முடித்ததும் அவளைக் காணவில்லை.

அப்போது, என் வாயில் பால் வடிவதைப் பார்த்த என் தந்தைக்குக் கோபம். ’யாரோ கொடுத்த பாலைக் குடிக்கலாமா?’ என்று திட்டினார்.

உடனே, காதில் குழை அணிந்த சிவபெருமான் உமா தேவியுடன் காட்சி தந்தான், நடந்ததைச் சொல்லி எங்களுக்கு அருள் செய்தான்.

இன்றைக்கும் கழுமல வளநகர் சீர்காழியில் அந்தப் பெரும் தலைவனையும் அவன் மனைவியையும் காணலாம், வணங்கலாம்.

துக்கடா

 • திருஞானசம்பந்தருக்கு உமா தேவி ஞானப்பால் வழங்கிய கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும், அவருடைய வரலாறை இங்கே முழுமையாகப் படிக்கலாம் : http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=1
 • ’போதை ஆர்’? ஞானப்பால் குடித்தால் போதை வந்து தள்ளாடுவோமா என்ன? 😉
 • போது = மலர், போதை ஆர் = மலரை ஒத்த, பூமாதிரி வடிவமைப்பைக் கொண்ட தங்கக் கிண்ணத்தில் பால் வந்ததாம் :>
 • பால் சரி, இந்தப் பாடலில் ‘அடிசில்’ என்று வருகிறதே, அதற்கு அர்த்தம் ‘சாப்பாடு’ அல்லவா? உமா தேவி கொடுத்தது பாலா? அல்லது, பால் சோறா?
 • வெறும் பால் அல்ல, அதில் ஞானத்தையும் சேர்த்துக் குழைத்ததால், அது அடிசில் ஆகிவிட்டது, பாதாம் பால், மசாலா பால்மாதிரி, இதுவும் flavored milkதான் : ஞானம் கலந்த பால் 🙂
 • தாதையார் = தந்தையார்
 • தமிழில் ‘முனிதல்’ என்றால் கோபப்படுதல், ஆக, ‘முனிவுற’ = கோபப்பட!
 • அப்ப முனிவர்ன்னா? எப்பப்பார் கோபப்படுறவரா?

323/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

20 Responses to ஊட்டினாள், உணர்த்தினான்

 1. /அப்ப முனிவர்ன்னா? எப்பப்பார் கோபப்படுறவரா?/

  இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டு பதில் சொல்லாமப் போறது அநியாயம்!

 2. //வெறும் பால் அல்ல, அதில் ஞானத்தையும் சேர்த்துக் குழைத்ததால், அது அடிசில் ஆகிவிட்டது, பாதாம் பால், மசாலா பால்மாதிரி, இதுவும் flavored milkதான் 🙂 ஞானம் கலந்த பால் //
  So beautiful! Mr.Chokkan, you out do yourself every day 🙂

  amas32

 3. ஞானசம்பந்தர் “திராவிட சிசு”… அப்படித்தான் ஞானசம்பந்தரை ஆதி சங்கரர் குறிக்கிறார்… உலகத்தையே உய்வுற நடத்தும் அந்த ஆதி சக்தியின் ஞானப்பாலை வாங்குவதற்கு நின்ற அந்த சிசு,சீர்காழியில் (கழுமல வளநகர்…Surprising..!!!!! யாராவது பெயர்க்காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் Anonymous-ஏ கதி…) தவழ்ந்து கொண்டிருந்தது என்பதுதான் நமக்குப் பெருமை…

  வயதுக்கு மீறிய அறிவும்,அனுபவமும்,ஞானமும்,சீலமும்,பண்பும்,பணிவும்,நாவன்மையும்,இறைவன் மீது பற்றும் ஞானசம்பந்தருக்கு வாய்த்தது என்றால் அதுதான் பராசக்தியின் மகிமை…

  //// போதை ஆர் பொன் கிண்ணத்து //

  அந்த வயதிற்கு உமையவளின் திருவமுதால் வாய்த்த அனைத்தும் போதும்,போதும் என்று கிடைத்த ஞானமும்,அருளாற்றலும்,சிவத்தொண்டும்,அதன் மூலம் கிடைத்த மரியாதையையும், அப்பப்பா.. அவ்வளவு புகழும் இந்த சிறுவயதில் அடியேனுக்கு வாய்த்ததே ஒரு போதைதானே என்று மனமுருகி, அருளின் மூலம் கிடைத்த புகழைப் போதை என்றெண்ணி விலகி இருக்க விரும்புகிறார் ஞானசம்பந்தர்… புகழும்,பாராட்டுமே ‘நான்” என்ற பிரச்சினையை உருவாக்கும் போதைகள்…

  அது என்ன ஞானசம்பந்தருக்கு மட்டும் தான் அம்மா ஞானப்பால் கொடுப்பாளா?? உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அவள் தாய் தானே? அதென்ன ஒருத்தருக்கு மட்டும் கொடுத்துட்டு ?மத்தவங்களுக்கெல்லாம் கொடுக்காம விடுறது??

  அத்தனை உயிர்களுக்கும் அனைத்து உயிர்களின் ஆக்கத்திற்கும்,அவைதம் வாழ்விற்கும்,பிரபஞ்சங்களின் உருவாக்கத்திற்கும் ஆதியாய் நின்ற பராசக்தி நம் அனைவருக்குமே அமுது ஊட்டியிருக்கிறாள்..

  அந்தப் பாலின் மூலம் ஏற்படும் தீதான் பசி…. பசியுள்ளவன் தான் உணவருந்த முடியும்… பசியுள்ளவன்தான் இந்த உலகில் வாழ முடியும்…பசியுள்ளவனுக்குதான் தேடல் அமையும்..பசி உள்ளவனுக்குத்தான் கோபம் வரும்..பசி உள்ளவனுக்குத்தான் அதை ஆற்ற வேண்டுமே என்று உழைக்கத் தோன்றும்…பசி இல்லாவிடில்,இந்த உலகில் மனித ஜென்மங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவே முடியாது….

  பசியும் அவளே..அதை ஆற்றுபவளும் அவளே..

  பட்டினத்தார் கூறியது,”அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே”..

  எல்லாத்துக்கும் அவதான் பசியை மூட்டுறா..அந்தத் தீ தாங்காமத்தான் எல்லோரும் அழுகிறோம்… அப்புறம் அந்த அழுகை தாங்காமலே அவளே பாலும் ஊட்டுகிறாள்…

  பெண்கள் எல்லோரும் பராசக்தியின் பிரதிபிம்பங்கள் என்று சொன்னதன் சூட்சுமமும் இதுவே… அவளே அத்தனை உயிர்களுக்கும் ஆதி,முதல் அந்தம் வரை ஜீவகாருண்ய ஊற்றாகவும் இருக்கிறாள்..

  சரி எல்லாத்துக்கும் பசிக்கு உணவு..ரைட்டு? அதுல என்ன ஞானசம்பந்தருக்கு மட்டும் ஸ்பெஷல்??

  அதுதான் ஸ்பெஷல் “அடிசில்”..ஞானமும் அதில் கலந்து ஊட்டப்பட்டது.. கொடுத்து வெச்ச குழந்தை… “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்று சொல்வதைப் போல எப்படி அழணும்ங்கறதுலயும் விஷயம் இருக்கும்.. சில குழந்தைக அழுது,அழுது தூங்கிப் போகும்.. சில குழந்தைக விடாம அழுகும்… அதுதான்…. ஞானசம்பந்தர் விடாமல் அழுது ஞானத்தை விடாப்பிடியாக குமரனின் தாயவளிடத்திலிருந்து பெற்ற குழந்தை…

  // தாதையார் முனிவுறத்தான்//

  முனிவு=கோபம் என்பது சரியே..இன்னும் மதுரைப்பக்கம் “என்னத்துக்கு உனக்கு இம்புட்டு முனைப்பு” என்று கேட்பதுண்டு.. அது முனிவு என்பதிலிருந்தே மருவியிருக்கலாம்…

  //கழுமல வளநகர்ப் பேதையாள்//

  என்னாது?? எங்க ஆத்தா பேதையா?? அவளின் வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ஈடு இணை இருக்குமா?? இதுதான் கொஞ்சம் புரியலை…வெற்றிவேலா..இதைக் கொஞ்சம் வெளக்குப்பா..

 4. anonymous says:

  அம்மையும் அப்பனுமாய்….
  என்னை இப்படி வாழ்வில் நடுத்தெருவில் நிறுத்திவிட்ட தம்பதிகள், என் முருகனின் அம்மா-அப்பாவுக்கு வணக்கம்!
  ———————

  //ஊட்டினாள், உணர்த்தினான்// ங்கிறது தலைப்பு!

  * எது ஒன்னும்….மொதல்ல ஊட்டணும்
  * அப்பறமாத் தான் உணர்த்தணும்!

  பொறந்த குழந்தைக்கு, மொதல்ல என்ன செய்வாங்க?
  * நான் தான் உன் அம்மா -அப்பா ன்னு ’உணர்த்துவாங்களா”?
  * இல்லை…அதுக்கு ஒன்னுமே தெரியலன்னாக் கூடப் பரவாயில்லை ன்னு….தன் முலையை “ஊட்டுவாங்களா”?

  ஊட்டினாள் -ன்னு = பெண்ணைச் சொல்லுறாரு
  உணர்த்தினான்-ன்னு = ஆணைச் சொல்லுறாரு

  இப்படி ஊட்டியும் உணர்த்தியுமாய் நிக்குற அம்மா-அப்பா! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

 5. anonymous says:

  தமிழில், முனிதல் = கோபப்படுதல்
  முனி என்பது வேர்ச்சொல்!
  முன்னுதல் = சினத்தல்!
  ——————-

  ஆனா, வடமொழியில் முனி என்பது வேற;
  மெளனி, மெளனம் என்பது வேர்ச்சொல்! = வாயால் மட்டுமல்லாமல்….அகத்திலே மெளனமாய் இருப்பவர் = மெளனியர் = முனியர் = முனிவர்!

  நர சிம்ம தயாபாத்ரம், பர வாதி கஜாங்குசம்
  சர்வ தந்திர ஸ்வதந்திரம், சடகோப “முனிம்” பஜே!!

  முனி-வர் என்பது வடசொல்லில் இருந்து கிளைத்த திசைச்சொல்!
  சங்கத் தமிழில் = முனிவர் இல்லை!
  ஆசான், சான்றோர், “பகவர்” என்பதே தமிழ் வழக்கு!
  ஆதி-“பகவன்” முதற்றே உலகு!

  • anonymous says:

   சில சமயங்களில், இந்தக் குழப்பம் வரும்!
   முனி = வடசொல்லும், தமிழ்ச் சொல்லும் ஒன்னு போலவே இருக்கும் நிலைமை! ஆனா பொருள் வேற!!

   இதே போலத் தான் சங்கம்! = சங்கத் தமிழ்!
   * தமிழில் = சங்கம் வேற!
   * வடமொழியில் = ஸங்கம் வேற!

   ஸங்கம் = கூடுதல்
   திரிவேணி ஸங்கமம்-ன்னு சொல்றாங்க-ல்ல! அந்த ஸங்கம்!

   ஆனா, சங்கம்.= செந்தமிழ்ச் சொல்!
   சங்கு என்பதன் வேர்ச்சொல்!
   விளக்கு= விளக்கம்! சங்கு = சங்கம்!
   ———————

   எப்படி விளக்கு = இருளைப் போக்குதோ, விளக்கம் = அறியாமை இருளைப் போக்குது! அதனால் விளக்கம்-ன்னே பேரு அமைந்தது!
   அதே போல, சங்கு = இயங்காமையைப் போக்குது! இயக்கத்தைத் தொடக்கி வைக்குது! அதனால் சங்கம்!

   தமிழ் அவைகளில், துவங்கும் முன்பு, சங்கின் ஒலி எழுப்புவது மரபு!
   அது வரை இருந்த இயங்காமை நீங்கி, தமிழ்ச் சான்றோர் அறவழி காட்ட, இலக்கியம், அரசியல், அமைச்சு ன்னு இயக்கம் துவங்கும்…

   இந்தச் சங்கொலியில் தான் தமிழ் அவைகள் துவக்கம்!
   ஒவ்வொரு அவைக்கும் தனி ஒலியே உண்டு! = மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
   சங்கு + அம் = சங்கம்!

   சங்கத் தமிழில் உள்ள “சங்கம்” வடமொழியே அல்ல! கவலையே படாதீங்க! அது என்றென்றும் தமிழே!

  • anonymous says:

   இதே போல் தான் ஸ்கந்தன் – கந்தன்!
   ரெண்டும் வேறு வேறு!

   ஸ்கந்தம் = ஒன்றாக்குவது!
   ஆறு மகவுகளை, ஒன்னாக்கியதால் = ஸ்கந்தன்! இதெல்லாம் “புராண”க் கதைகள்!!

   சங்கத் தமிழில், இது போல புருடாணங்கள் எல்லாம் கிடையாது!
   (யாரும் கோச்சிக்காதீங்க; உண்மையைத் தான் சொல்லுறேன்! காய்தல் – உவத்தல் இன்றி நீங்களே ஆய்ந்து கொள்ளலாம்:))

   நம் பிடித்தங்கள் வேற, ஆனா தொன்மம் வேற!
   இன்று இன்றாக இருக்கட்டும்! தொன்மம் தொன்மம் தொன்மமாகவே இருக்கட்டுமே!
   இன்றைய நம் பிடித்தங்களுக்காக, அதைத் தொன்மத்தில் ஏற்றிட வேண்டாமே!
   ——————–

   கந்தன் = கந்து + அன்!

   கந்து என்பது நடுகல்லைப் போல மரக்கொம்பு, மரத்தூண்!
   யானையைக் கட்ட உதவும்!
   யானையே இதைச் சுமந்து செல்லும்! பின்பு அதிலேயே யானையையும் கட்டுவாய்ங்க!

   பழந்தமிழ் மக்கள், இந்த நடுகல் வழிபாட்டில் தான் குறிஞ்சித் தலைவன் முருகனைக் குறியீடாகக் கொண்டு, வேல் வழிபாடும் கிளைத்தது!
   http://murugan.org/tamil/kannabiran.vel.htm

   * எப்படித் தன்னைக் கட்டும் கந்தையும் யானையே சுமக்குதோ….
   * அதே போல். நம் விருப்பங்களையும், முருகனையே சுமக்க வைக்கிறோம்! அவனும் சுமந்து, நமக்கு அன்பு ஒன்றாலேயே கட்டுப்படுகிறான்!
   கந்து சுமப்பதால் = கந்தன்

   யானை நினைத்தால், கந்தை ஒரு இழு இழுத்து விடும்! ஆனால் இழுப்பதில்லை!
   அதே போல் தான் முருகன்! அன்புக்குத் தன்னை கட்டுவித்துக் கொள்கிறான்!
   அவனே என் கந்தன் = கந்து + அன்!

   கந்தன் – ஸ்கந்தன் ரெண்டும் வெவ்வேற! என்பதை உணர்வோம்!
   தமிழில்….பொருளின் ஆழம்….இன்னும் அதிகம்!!

  • ஆனந்தன் says:

   “ஊட்டினாள், உணர்த்தினான்”- அட, இதைக் கவனிக்கவேயில்லையே!
   அருமையான தலைப்புத்தான்!

   //ஆதி-”பகவன்” முதற்றே உலகு!//
   பகவான் என்பது வடமொழியிலும் உண்டல்லவா?

   சங்கு=>சங்கம்: உதாரணம்: “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத”

   சங்கை ஊதித் துவங்குவதாலும், இயங்காமை நீங்கி இயக்கம் அவையில் துவங்குவதாலும் சான்றோர்கள் அவையைச் சங்கம் என்று அழைத்தார்களா? சற்று வலிந்து பொருள்கொள்வது போலத் தோன்றுகிறதே?

   //”கந்து சுமப்பதால் = கந்தன்”// இங்கே ஒரு சிக்கல் இருக்கிறதே…
   தன்னைக் கட்டப் பயன் படுத்திய தடியை வேறொருத்தரும் சுமந்தாரே…

   • anonymous says:

    பகவான் வேறு! பகவன் வேறு!

    தமிழில் பகவன் = முக்கோல் பகவர் = மூன்று கோல்களைக் கட்டிய தண்டு சுமக்கும் முனிவர்கள்!
    —————

    சங்கத் தமிழ் = சங்கு
    “வலிந்து” கொள்ளப்படுவது அன்று! – மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

    காலங்காலமாக ஸங்கம்=சங்கம் ஆனதால் வந்த மனப்பிராந்தி:)
    வடமொழி, தான், தனித்து வாழ முடியா விட்டாலும், இன்னொரு மொழியில் ஏறி. அம்மொழிக்குச் செய்த கொடுமை….
    ————–

    கந்து + அன் = கந்தன் என்பதும் “வலிந்து” அன்று
    கொடிநிலை,”கந்தழி” வள்ளி, என்ற கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம்

   • ஆனந்தன் says:

    இங்கே ஒரு கூட்டத்தை மணி அடித்து ஆரம்பிப்பார்கள். அதனால் அக்கூட்டத்தை ‘மணியம்’ என்று அழைக்கலாமா?
    சத்தியமாக வீம்புக்குக் கேட்கவில்லை; புரியாமல் தான் கேட்கிறேன்!!

   • anonymous says:

    மணியடித்து ஒரு கூட்டத்தை ஆரம்பித்தால்
    = மணியம் ன்னு தாராளமாச் சொல்லலாம்,……அப்படியான பயன்பாடு மரபில் இருக்கும் போது:)
    = ஆனா, மணியம் = மணியக்காரர் என்பதன் வேர்ச்சொல்லைத் தேடிப் பாருங்க:) என்ன சொல்லுது?:))

    இதுக்குப் பேரு தான் “சொல்லதிகார – விளி மரபு”!

 6. anonymous says:

  //(கழுமல வளநகர்…Surprising..!!!!! யாராவது பெயர்க்காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் Anonymous-ஏ கதி…) //

  :))
  மலங்களைக் கழுவும் நகரம் = கழு-மல-வள-நகர்
  ரோமச முனிவரின் மலம் (குற்றம்) நீக்கியதால் = தோஷஹரம் = கழுமலம் என்று புராணம் சொல்லும்!
  Moses கதை போல, தோணியில் (படகில்) மிதந்தால் = தோணிபுரம் ன்னும் புராணம்!

  ஆனால், தொல்தமிழ்ப் பெயர் = சீர்காழி
  காழகம் = உறுதிப்பாடு!
  சீர் மிக்க, உறுதியான (நிலையான) ஊர் = சீர்-காழி!

 7. anonymous says:

  //எங்க ஆத்தா பேதையா??
  அவளின் வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ஈடு இணை இருக்குமா?? இதுதான் கொஞ்சம் புரியலை…வெற்றிவேலா..இதைக் கொஞ்சம் வெளக்குப்பா..//

  :)))

  இறைவனை = “பித்தா” ன்னு பாடினார் சுந்தரர்
  இறைவியை = “பேதை” ன்னு பாடினார் சம்பந்தர்

  ஒரு அம்மா….
  கல்யாணமான பையன்…புதுசா வந்தவ பேச்சைக் கேட்டுக்கிட்டு….
  கட்டில் சுகத்தில் தொட்டில் சுகத்தை மறந்தவன்
  காதலுக்குக் கண் உண்டு! காமத்துக்குக் கண் இல்லை!

  அந்த அம்மாள ஏதோ பல பேர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டான்! அம்மா பண்ணது பிழையே ஆனாலும், தனிமையில் செய்த ஒன்றுக்கு, பொதுவில் தலை குனிய வைப்போமா? சொல்லுக்கு “அளவு” இருக்குல்ல?
  ஒரு மூலையில் “சிவனே”-ன்னு இருக்கத் தெரியாது??? யார் யாருக்கோ வருது, ஒனக்கு வரமாட்டேங்குதே (சாவு) ன்னே பேசீட்டான்:(

  இந்த அம்மா, வழக்கம் போல, சாயங்காலம், கோயிலுக்குப் போகும் போது…
  சாமீ…என் புள்ள ஏதோ அள்ளி வீசிட்டான்; இந்தச் சொல்லுக்கெல்லாம் அவனைத் தண்டிச்சிறாத-ன்னு வேண்டுறா!
  இது என்ன கூத்து? இவளுக்கு வெட்கம்-மானம் இல்லீயா?

  என்ன சொல்லுறோம்? = பெத்த மனம் “பித்து”!
  இந்தப் பித்து = மனநோய்/ பைத்தியம் ன்னா எடுத்துக்கறோம்? இல்லை!
  பித்து
  = அன்பால் விளைந்த பித்து!
  = அன்பால் விளைந்த பேதைமை!
  ———————-

  அதான் இறைவி = பேதை!
  பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே = அவ “பேதை”யா இருக்குறதாலத் தான், அவ கூட இருக்கிறவர் “பெருந்தகை” பட்டம் பெறுகிறார்!

  • ஆனந்தன் says:

   /பெத்த மனம் “பித்து”!
   இந்தப் பித்து = மனநோய்/ பைத்தியம் ன்னா எடுத்துக்கறோம்?//
   Excellent explanation!

  • anonymous says:

   இன்னோன்னு சொல்ல விட்டுப் போச்சி…

   பேதை = பருவம் அடையாத சின்ன வயசுப் பெண் குழந்தை-ன்னும் பொருள் உண்டு! ஆனால் இங்கே அது பொருந்தாது!

   பெண்களின் ஏழு பருவ நிலைகள்
   1. பேதை
   2. பெதும்பை
   3. மங்கை
   4. மடந்தை
   5. அரிவை
   6. தெரிவை
   7. பேரிளம்பெண்

 8. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாத சொக்கன் ஒளிக!

  முனி – கோபி என்ற ஒரு பொருள் இருக்கு. சொக்கனும் அதைச் சொல்லி இருக்காரு. கூடவே அனானியும் தமிழில் முனின்னா கோபப்படு. அதனால முனிவர் வடமொழின்னு வேற சொல்லிட்டுப் போயிட்டார்.

  முனி என்ற சொல்லுக்கு கோபப்படு மட்டுமில்லாமல் வெறு என்ற பொருளும் உண்டு. முனிதல் – வெறுத்தல். முனிவர் – வெறுத்தவர். என்னத்த வெறுத்தார்? உலகில் இருக்கும் சுக துக்கங்களை எல்லாம் வெறுத்த நிலையில் உள்ளவர் முனிவர். அதனால முனிவர் தமிழ் இல்லை வடமொழின்னு தீர்ப்பு சொல்லறது எல்லாம் அநியாயம்.

  தமிழில் முனிவர் என்பதற்கு வேறு ஒரு சொல் துறவி. முற்றும் துறந்தவர் துறவி. முற்றும் துறந்த முனிவர்ன்னு மோனையா சொல்லறோம் பாருங்க. அதுதான் உண்மையான பொருள்.

  என்ன விஸ்வாமித்ரர் மாதிரி சில முனிவர்களுக்கு கோபத்தை மட்டும் வெறுத்து விட முடியலை!

  அடியேனுக்கு தெரிஞ்சது. தப்பா இருந்தா சரி பண்ணுங்க சொக்கன் சார், அனானி சார்!

  • anonymous says:

   //அனானி சார்!//

   இலவசக் கொத்தனார் சார்:))
   வணக்கம் சார்:)

   ஒரு சொல்லுக்கு எப்ப்ப்ப்ப்ப்படி வேணும்-ன்னாலும் இழுத்து இழுத்துப் பொருள் எடுத்துக்கலாம் சார்!:)
   “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!”

   * முனி=வெறு; முனிவர் = சுக-துக்காதிகளை வெறுத்தவர்
   * சுகம்= சு+அகம்; அகம் சுத்தமா இருந்தாச் சுகம் வரும்
   :)))
   இப்பிடி அவரவர்களுக்குப் பிடித்தமானபடியெல்லாம் எடுத்துக்கலாம்!
   ஆனா, மொழியியல் அப்படியல்ல!
   ————–

   சுகாதாரம் தமிழல்ல – அது திசைச் சொல்!
   அதே போல முனி-வர்!
   சம்ஸ்கிருதத்தில் முனிவரர்-முனிவர் ன்னே இருக்கு! ஆனா தமிழில் அல்ல!

   உங்க வழிக்கே வருகிறேன்….
   நள் என்பது Null என்று கொள்வது, அவரவர் Stretch, Inference ன்னு சொன்னீங்க அல்லவா?
   எப்படிச் சொன்னீங்க? = அப்படியான பயன்பாடு மொழியியலில் இல்லை!

   அதே போல், சங்கத் தமிழில் “முனிவர்” என்ற பதப்பயன்பாடு, “சுக-துக்காதிகளை வெறுத்தவர்” என்ற பொருளில் பயில்வதில்லை!
   அப்படிப் பயில்கிறது-ன்னு சொன்னீங்கன்னா, தரவு தாருங்கள்:))

  • anonymous says:

   //அதனால முனிவர் தமிழ் இல்லை வடமொழின்னு தீர்ப்பு சொல்லறது எல்லாம் அநியாயம்//

   :)))
   “தீர்ப்பு” சொல்ல நாம் யார்?

   செவ்வியல் மொழிக்கான = இலக்கணம், இலக்கியம், அகச்சான்றுகள் பல உள!
   அதை ஒட்டியே = மொழியியல்!
   நம் சுய விருப்பங்களை ஒட்டி அல்ல!
   ————

   முனிவர் என்ற பதம், பின்னாளில் எழுந்த “திசைச்சொல்”
   விஸ்வாமித்ர மஹா முனிஹி

   இப்படி வந்த திசைச் சொற்களை…
   முனிவன், பு(bhu)ங்கவன், உபாத்தியாயன்….என்று தமிழ்மொழி, வழக்கில் ஏற்றுக் கொண்டுள்ளது!
   ஆனால். “திசைச் சொற்கள்” என்ற பெயர் குடுத்து!

   அதனால், திசைச்சொற்களைத், திசைச்சொற்கள் என்று சொல்ல விடுங்கள்!:)

   ஜ-ஷ-ஸ-ஹ தமிழில், இன்று வழக்கில் உள்ளது! மறுப்பே இல்லை!
   ஆனால் அவை ‘கிரந்த’ எழுத்துக்கள்!
   ‘தமிழ்’ எழுத்துக்கள் அல்ல!
   – இப்படிச் சொல்வதால் பிரிவினை பேசவில்லை; இது “மொழியியல்” மட்டுமே!
   ————

   தங்களிடம் – “கருத்தால்” மாறுபட்டமைக்கு மன்னிக்கவும்:))
   இது அவரவர் “மனச் சிந்தனைக்கான” பின்னூட்டம் மட்டுமே! “தீர்ப்பு” அன்று!:)

   யாமோதிய கல்வியும்….தாமேபெற வேலவர் தந்ததினால்….
   நான் பெற்றதே =”யாசகம்”;
   இதில் “தீர்ப்பு” சொல்ல முடியுமா?:)))) முருகா!!

  • anonymous says:

   //கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாத சொக்கன் ஒளிக!//

   சொக்கரே – Bureau பின்னாடி போயி ஒளிஞ்சிக்காதீக!:))
   What our koths meant was:
   ஒளிக = உங்களை ஒளி சூழட்டும் :))
   வாழ்-க, போல ஒளி-க:)))

 9. என். சொக்கன் says:

  முனிதல் = வெறுத்தல், முனிவர் = சுக துக்கங்களை வெறுத்தவர்

  இந்த அர்த்தம் நல்லா இருக்கு சார் :>

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s