காய்தலும் உவத்தலும் வேண்டாம்

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்கண்

ஆய்தல் அறிவு உடையார் கண்ணதே, காய்வதன்கண்

உற்ற குணம் தோன்றாதது ஆகும், உவப்பதன்கண்

குற்றமும் தோன்றாக் கெடும்!

நூல்: அறநெறிச் சாரம்

பாடியவர்: முனைப்பாடியார்

அறிவுள்ளவர்கள் ஒரு பொருளை ஆராய்ந்து எடை போடும்போது, மிகையாகச் சந்தோஷப்படவும் மாட்டார்கள், ரொம்பக் கோபப்படவும் மாட்டார்கள். ஏன் தெரியுமா?

ஒரு படைப்பைக் கோபத்துடன் அணுகினால், அதில் இருக்கும் நல்ல விஷயங்களும்கூட நம் கண்ணில் படாது. கெட்டது மட்டும்தான் தெரியும். அதைச் சொல்லி அந்தப் படைப்பாளியைக் காயப்படுத்திவிடுவோம்.

அதே படைப்பை நாம் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியுடன் அணுகினால், அதில் இருக்கும் குறைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டோம். ’எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று நினைத்துவிடுவோம். அது அந்தப் படைப்பாளியை உடனடியாகக் குஷிப்படுத்தினாலும், அவரை வளரவிடாமல் தடுத்துவிடும்.

ஆகவே, எந்தப் பக்கச் சார்பும் எடுக்காமல், காய்தலும் உவத்தலும் இல்லாத மனநிலையோடு எதையும் அணுகினால்தான் நியாயமானமுறையில் அதனை விமர்சிக்கமுடியும்.

துக்கடா

 • ஒரு விமர்சகன் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கான மிக அழகான அளவுகோல் இது. முனைப்பாடியார் சொல்லும் இந்த இரண்டு தவறுகளையும் நாம் இப்போதும் அடிக்கடி பார்க்கிறோம், சிலர் தங்களுடைய நண்பர்கள் எழுதியது என்பதற்காக ஒரு படைப்பைக் கொண்டாடுவதும், பிடிக்காதவர்கள் எழுதியது என்பதற்காகக் கீழே போட்டு மிதிப்பதும், இலக்கியத்தில்மட்டுமல்ல, ஆஃபீஸிலும் சகஜம்!
 • ஆனால் ஒன்று, இந்த இரண்டும் இல்லாத மனோநிலையை அடைவது ரொம்ப ரொம்பக் கஷ்டம் 🙂 என்னால் இதுவரை முடியவில்லை 🙂
 • இந்தப் பாடலில் நான் கவனித்த ஒரு சுவையான அம்சம், நாலு வரியில் நாலு ‘கண்’கள் வருகின்றன, ஒரு படைப்பைக் கூர்ந்து கவனித்துச் சரியான விமர்சனத்தைச் செய்வதற்கு ஒருவர்மட்டும் (அதாவது, ரெண்டு கண்கள்மட்டும்) போதாது, இன்னொருவர் (அதாவது, நான்கு கண்கள்) தேவை, Peer Review / An additional pair of eyes for fresh perspective என்றெல்லாம் சொல்வார்களே!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருள்கண்
 • ஆய்தல் அறிவுடையார் கண்ணதே, காய்வதன்கண்
 • உற்றகுணம் தோன்றா ததாகும் உவப்பதன்கண்
 • குற்றமும் தோன்றாக் கெடும்

322/365

Advertisements
This entry was posted in அறிவுரை, வெண்பா. Bookmark the permalink.

49 Responses to காய்தலும் உவத்தலும் வேண்டாம்

 1. anonymous says:

  //சிலர் தங்களுடைய நண்பர்கள் எழுதியது என்பதற்காக ஒரு படைப்பைக் கொண்டாடுவதும்,
  பிடிக்காதவர்கள் எழுதியது என்பதற்காகக் கீழே போட்டு மிதிப்பதும், இலக்கியத்தில் மட்டுமல்ல, ஆஃபீஸிலும் சகஜம்!//

  துக்கடா தான்யா சூடான பக்கோடா:)

 2. anonymous says:

  //காய்தல் உவத்தல் அகற்ற ஆய்தல்//

  முனைப்பாடியார் முதலடியை…ஒரு poster ஆக்கி, கண்ணுல படுறாப் போல வச்சிக்கலாம் – ஆபிசில், வீட்டில், ட்விட்டரில், பதிவில்… எங்கும்:)

  //இந்த இரண்டும் இல்லாத மனோநிலையை அடைவது ரொம்ப ரொம்பக் கஷ்டம்; என்னால் இதுவரை முடியவில்லை//

  Are u sure?:))
  But there is a easy way for this!
  Itz a small trick – wanna know?:)

 3. anonymous says:

  காய்
  உவ
  – இந்த ரெண்டு சொல்லுல தான் மொத்த பாட்டின் சூட்சுமமே இருக்கு!
  – இது புரிஞ்சிருச்சின்னா, இதைக் கடைபிடிக்கிறது…ரொம்பவே எளிது!

  கோபம் – மகிழ்ச்சி என்ற பொருளைத் தற்சமயம் விட்டுருங்க! பொதுவாவே…
  * காய்-ன்னா என்ன?
  * உவ-ன்னா என்ன?

  • வினைச்சொல்லாக; காய் – பொறாமைப்படு, சுடு, எரி

   உவ -‘நம்மாளு இவன்’ எனச் சார்புடன் நோக்கு (‘மகிழ்ச்சியாயிரு’ப்பதை விட்டுவிட்டேன், கல்யாணம் ஆனதிலிருந்தா, காதல் தோல்வியிலிருந்தான்னெல்லாம் கேக்காதீங்க).

   பெயர்ச்சொல்லாக காய் பெரும்பாலும் இனிக்காதது (கனிபோலன்றி)

   இவ்ளோதான் தெரியுது. மத்தபடி வேற பொருள் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டெல்லாம் வஞ்சகம் பண்ணல, முருகா? 🙂

   முருகா, நீயே இங்கு நாளும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்’ என்பதால், உனக்கென்ன விதம் இக்கனியை (இப்பொருட்கனியை) நாமீவது என்று நாணித்தான் இப்பனித்தலையர் (வெள்ளைமண்டையனா, வெறுமண்டையனா) இவைகளின் பொருளைத் தரமுடியவில்லை.

   எனினும் நீயே ‘தினம் ஒரு பா’ ‘சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப்(!) பொருள் கூறும் பழம் நீயப்பா!’ என்பதால் பொருட்கனியை வழங்கிவினால், நாங்கள் ரசித்துண்டு உவப்போம்,

   முருகக்கடவுள் என்பதால் நீ என ஒருமை. இதற்கெல்லாம் கோபித்து
   அவர் மேற்கே திரும்பி உட்கார்ந்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்.

   • ஆனந்தன் says:

    //முருகா, நீயே இங்கு நாளும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்’ என்பதால், உனக்கென்ன விதம் இக்கனியை (இப்பொருட்கனியை) நாமீவது என்று நாணித்தான் இப்பனித்தலையர் (வெள்ளைமண்டையனா, வெறுமண்டையனா) இவைகளின் பொருளைத் தரமுடியவில்லை//
    Loved it ! :-))))

   • ஆகா!
    நீங்களே ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீக கந்தசாமி ஐயா! இனிய வணக்கம் + வாழ்த்துக்கள்:)

    //முருகக்கடவுள் என்பதால் நீ என ஒருமை//
    :)) தாராளமா, நீ ன்னே கூப்பிடுங்க! அதான் பிடிச்சிருக்கு!

    //எனினும் நீயே ‘தினம் ஒரு பா’ ‘சபை தன்னில் உருவாகி புலவோர்க்குப்(!) பொருள் கூறும் பழம் நீயப்பா!’
    என்பதால் பொருட்கனியை வழங்கிவினால், நாங்கள் ரசித்துண்டு உவப்போம்//

    haiyo! me one koocha subhavam:)
    யாமோதிய கல்வியும் தமிழும், தாமே மாலவர்-வேலவர் தந்ததினால்…

 4. ஆனந்தன் says:

  இதைத்தானே “காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்று வண்டிடம் செண்பகப் பாண்டியன் கேட்கிறான், “கொங்கு தேர் வாழ்க்கை” என்னும் இறையனார் பாடலில்?

  //இந்தப் பாடலில் நான் கவனித்த ஒரு சுவையான அம்சம், நாலு வரியில் நாலு ‘கண்’கள் வருகின்றன,..An additional pair of eyes for fresh perspective //
  Brilliantly observed. நன்றி!

  • anonymous says:

   Yep! Brilliant! Thatz chokkan for #365paa:)
   நாலு ‘கண்’களை = Two Sets of Eyes ஆக்கிய டேமேஜர் (மேனேஜர்) சொக்கர் வாழ்க!:))

   • நான்கு ‘கண்’கள் பற்றிய குறிப்பு மிக நயம்.

    சொக்கரே சொக்கரே
    சொக்கவைக்குதம் சொக்கரே! 😉

  • ஆமாம்,
   காமம் செப்பாது, கண்டது மொழிமோ = நீ விரும்பியதை (அ) நான் விரும்பியதைச் செப்பாது, என்ன கண்டாயோ, அதை மொழிமோ!:)

   • ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று முதலில் சொல்வது. அப்புறம், மனதில் பட்டதைச் சொன்னால், ‘நக்கீரா, நன்றாக என்னைப் பார்’ என நெற்றிக்கண்ணைத் திறப்பது. கடவளே கூட நடுநிலையில் இருப்பதில்லையோ?

   • anonymous says:

    காமம் செப்பாது மொழிமோ ன்னு சொல்லுறது முத்துராமன்:))
    …..(அ) அவர் சார்பா, பாட்டுடைத் தலைவன் (அ) காதலன்
    நன்றாக என்னைப் பார் ன்னு சொல்லுறது சிவாஜி

    சிவாஜி வாயிலே இருக்கும் ஜிலேபியை, முத்துராமன் தலை மேல வைக்குறீங்கீளே, நியாயமா?;)))))

   • காமம் செப்பாது மொழிமோன்னு படைப்பின் மூலம் சொல்வதும் பின்பு நேர்மாறாய் கண்ணை திறப்பதுவும் சிவாஜி தானே – படைப்பு போல வாழ்க்கையில் நடக்க வேண்டுமென கடவுளிடம் கூட எதிர்பார்க்க கூடாது 😛

   • என். சொக்கன் says:

    அப்ப ராஜேஷ் குமார் உலகின் மிகப் பெரிய கொலைகாரர் என்கிறீர்களா? :>

   • ‘நான் அன்றாடம் வணங்கும் ஈசனுக்கு இடப்பக்கம் அமர்ந்திருக்கிறாளே அன்னை மலரவள் உமையவள் அவளுக்கும் அப்படித்தான்’ (கூந்தலில் மணம் இருக்கமுடியாது) என்று நக்கீரன் சிவன் மனைவியின் கூந்தலென்றாலும் அதற்கும் இயற்கை மணம் இருக்கமுடியாது என்கிறார்.

    சிவபெருமானுக்குச் ‘சுர்’ எனக் கோபம் வருகிறது. (தன் மனைவியின் கூந்தலைப் பற்றிச் சொன்னதாலா?) ‘நக்கீரா, நன்றாக என்னைப் பார், நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?’ என நக்கீரரை ‘நான் கடவுள்’ (I am God) தோரணையில் மிரட்டுகிறார். நக்கீரர் பாடலாசிரியரான சிவனின் காமத்தைச் (விருப்பத்தைச்) செப்பாது தான் கண்டதை மொழிகிறார். சிவனின் காமம் (விருப்பம், partiality) அவர் இருகண்களையும் மறைக்க மூன்றாவதான ‘எரிச்சல்’ நெற்றிக்கண்ணைத் திறக்கிறார். நக்கீரனை எரிக்கிறார்.

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனத் தன் நிலைல் நக்கீர விமர்சகர் உறுதியாய் நிற்கிறார்.

    மேலே உள்ளவர்களை விமர்சித்தார் வேட்டுதான் 🙂

 5. //இந்த இரண்டும் இல்லாத மனோநிலையை அடைவது ரொம்ப ரொம்பக் கஷ்டம்; என்னால் இதுவரை முடியவில்லை//

  Are u sure?:))
  இதைச் சொக்கர் ஏதோ தன்னடக்கத்தில் சொல்லிட்டாரு-ன்னு நினைக்கிறேன்!

  But, from whatever I have seen, or moved with him…
  * he may differ with us on a subject!
  * but he never demeans a person, for that subject!

  எழுத்துப் பிழை இல்லாம எழுதணும் ன்னு சொல்லுவாரு!
  ஆனா, மொதல்ல தமிழைப் பிழை இல்லாம எழுதுங்கடா, அப்பறமா #TamilEezham கோஷம் போடப் போவலாம் ன்னுல்லாம் பேசவே மாட்டாரு!

  I have commented in #365paa, sometimes, contrary to his views incl “வாழ்த்துக்கள்”
  But he has never told me or hurt me, “Do not bring in such comments”!
  …and, never demands that being friends, I shd have the same view as his!

  குணம்நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்!

  • என். சொக்கன் says:

   தன்னடக்கமெல்லாம் இல்லைங்க, இது எதார்த்தம்!

   என்னதான் வெளியே சொல்லாம control செஞ்சுகிட்டாலும், உள்ளுக்குள் பிடிக்காதவர்கள் செய்வதன்மேல் (அது நன்றாகவே இருப்பினும்) வெறுப்பு மண்டுவது எனக்குதானே தெரியும்? 🙂

   கொஞ்சம் புரியும்படி சொல்றதுன்னா, ’நான் income tax ஒழுங்காக் கட்டறேன்’னு நீங்க சொல்றீங்க, ’அதைக் கொஞ்சம் சிரிச்சுகிட்டே கட்டலாமே, ஏண்டா உள்ளுக்குள்ளே புலம்பறே?’ன்னு என்னை நானே திட்டிக்கறேன் 🙂

   • balaraman says:

    எனக்குத் தெரிஞ்சு நீங்க கொஞ்சம் சேத்தனுக்கும், சாருக்கும் காய்வீங்க! யாருக்கும் உவந்து பாத்ததில்ல…. 🙂
    உங்க ரெண்டு பேரால(சொக்கன்&முருகன் :)) தினமும் ஆபிஸ்ல என்னோட productivity 1 மணி நேரம் குறையுது!!! 😉

   • என். சொக்கன் says:

    :> இதையாய்யா ஒரு மணி நேரமாப் படிக்கறே? சொந்த ஊர் நாமக்கல்லா? ;)))))

 6. சரி….
  காய் – உவ க்கு வரேன்!

  //இந்த இரண்டும் இல்லாத மனோநிலையை அடைவது ரொம்ப ரொம்பக் கஷ்டம்//

  காய்தல் – உவத்தல் இன்றி அணுகுவது அவ்ளோ ஒன்னும் கடினம் இல்ல!
  ஆனா, Majority, அப்படி அணுகாததால், நமக்கு அப்பிடித் தெரியுது!

  —————

  ஒரு கதையாப் பார்ப்போமா?

  வாழைப்பந்தல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதுசுல, சென்னையில் தண்ணிப் பஞ்சம்!
  வாடகை வீடு! ஆறு குடித்தனம்! விடிகாலையிலேயே எழுந்து Pumpல தண்ணி அடிக்கணும்! இல்லீன்னா Pressure போயிடும்…தண்ணி மாடிக்கு ஏறாது! கீழே இருந்து குடத்தைத் தோள்-ல தூக்கியாரணும்

  எனக்குக் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கப் பிடிக்காது!
  என் தங்கச்சிக்கோ பிடிக்கவே பிடிக்காது!

  சரியோ தப்போ…எனக்கு, என் விருப்பம்;
  சரியோ தப்போ…அவளுக்கு அவ விருப்பம்
  —————-

  இந்த ரெண்டுத்துக்கு நடுவுல ஒரே பேச்சு….
  ஏன்டீ, புருசன் வீட்டுக்குப் போனா, ஒன்னை எத்தி எழுப்புவாங்க ன்னு நான் சொல்லுவேன்:)
  அச்சோ நம்ம பாசமுள்ள தங்கச்சி திருந்தணும்-ன்னா அதைச் சொல்லுறேன்? இல்ல! எனக்கு எழச் சோம்பேறித்தனம்! என் விருப்பத்துக்காக, அவளை உசுப்பறேன்:)))

  நான் வீட்டுக்கு லேட்டா வந்தா, உள்ளே நுழையும் போதே…குரல் குடுப்பா!
  “வரும் போது ஒரு bubblegum போட்டுக்கிட்டு வந்தா என்னவாம்?” ன்னு வீட்டுக்கே கேக்குறா மாதிரி…நிர்மலா பெரியசாமி மாதிரி வணக்க்க்க்க்கம் வைப்பா:))
  அம்மா, மெல்ல வந்து, என்ன பீர் குடிச்சியா ன்னு கேப்பாங்க! இல்லம்மா ன்னு பேசினப்பறம் தான்…வாடை வரலை ன்னு நம்புவாங்க!:)

  எதுக்கு bubblegum சொல்லுறா? நான் வாய் மணக்க இருக்கணும் ங்கிற பாசத்திலா? இல்லை! காலையில் அவளை எழ வச்சதுக்குப் பழிக்குப் பழி:))

  இப்படி, அவரவர் விருப்பங்களினால்….தெரிந்தோ/ தெரியாமலோ….ஒருவர் மேல் ஒருவர் ஏற்றிக் கொண்டு இருக்கோம்!

  • அன்னிக்கு, எங்க ரெண்டு பேருக்குள்ள யாரு எழுந்துருக்குறது? ன்னு போட்டி! தூக்கக் கலக்கம்!
   திடீர்-ன்னு அம்மா கத்துறாங்க! சங்கரா……….

  • அந்தக் குரலில் இருந்த அலறல்….வலி…

   சுருட்டி அடிச்சிக்கிட்டு எழுந்துக்கிட்டேன்!
   இவளும், திடுதிப்பு ன்னு எழுந்துக்கிட்டா…
   ஒடுறோம் பாத்ரூமுக்கு…..

   பாத்தா….அம்மா, மூச்சு வாங்க, நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு உக்காந்து கிடந்தாங்க…

  • மாடி Pumpல தண்ணி ஏற, கொஞ்ச நேரம் ஆகும்! அது வரை சும்மா அடிச்சிக்கிட்டு இருக்கணும்! காத்து தான் வரும்!
   அன்னிக்கு ரொம்ப நேரம் ஆகவே….அம்மாக்கு மேல்மூச்சு வாங்கிடிச்சி போல….எப்பமே என் பேரு சொல்லித் தான் கத்துவாங்க….

   அவங்கள கூடத்துக்கு கூட்டிக்கிட்டு போயி, அவ விசிறி விட்டு, நான் காப்பி தட்டுத் தடுமாறிப் போட…அதான் என் முதல் காபி:)

   அன்னிக்கி ஆரம்பிச்சுது!
   தினமும் காலையில்….அலாரம் வச்சிக்கிட்டு நான் எழ, போட்டியா அவளும் எழுவா….

   ஏய்…கும்பகர்ணா…நல்லப்பேரு வாங்க இப்பிடியெல்லாம் நடிக்காத ன்னு அவ பேசிக்கிட்டே போய் அடிப்பா, நான் மொண்டு ஊத்துவேன்!
   அண்டா நிறைஞ்சதும்….கை மாறும்…நான் அடிப்பேன்! அவ மொண்டு ஊத்துவா!
   யாரு நிறைய அடிச்சது-ன்னு கணக்குல சண்டை ஆரம்பிக்கும்:))
   ——————–

   எங்கே போச்சி, தூக்கம்?
   எங்கே போச்சி, எங்க தனிப்பட்ட விருப்பங்கள்?
   எங்கே போச்சி, காய்தல் – உவத்தல்?

   • என். சொக்கன் says:

    நல்லவேளை, நெஞ்சுல பாலை, ச்சே, காபியை வார்த்தீங்க 🙂 நலம் வாழ்க!

    பை த வே, 365paa பதிவுல (தொடரும்) போட்டு சஸ்பென்ஸ் வெச்சு க்ரைம் நாவலெல்லாம் எழுதப்படாது :> ஒரே ட்வீட்ல முடிக்கோணும் :>>

 7. என். சொக்கன் says:

  பழ. கந்தசாமி,

  ’காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று கேட்பது பாட்டில் வரும் காதலன், சிவன் அல்ல 🙂

  என்னடா இந்தச் சொக்கன் அந்தச் சொக்கனுக்கு வக்காலத்து வாங்குகிறானே என்று பார்க்கவேண்டாம், ஹிஹி 😉

  • anonymous says:

   ஓ…வக்காலத்தை நீங்க ஏற்கனவே வாங்கிட்டீங்களா? நான் வேற extraவா வாங்கிட்டேன்! he he, sorry:)

  • நன்றி.

   நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று கேட்பது. பின் கருத்தைச் சொன்னதும் எரிச்சலடைவது நடக்கிறது என்பதைத்தான் சொன்னேன். ஹிஹி.. மீசையில் மண் ஒட்டவில்லை.

 8. தப்போ, சரியோ….எங்க தனிப்பட்ட சொகுசே, விருப்பமே சரி-ன்னு கிடந்தோம்!
  ஆனா….அம்மாவுக்கு ஒன்னு ன்னு பாத்த பிறகு….All Changed!

  அதே போல், நமக்குத் தனித்தனி பிடித்தங்கள்/ வெறுப்புகள்
  * முருகன் புடிக்கும், பெருமாள் புடிக்காது!
  * சைவம் புடிக்கும், சமணம் புடிக்காது!

  * இளங்கோ புடிக்கும், கம்பன் ன்னா உள்ள வெறுப்பு (ஆரிய அடிவருடி), வெளீல கம்பன் கவியை மெச்சித் தான் ஆகணும்:)
  * வாழ்த்துகள் புடிக்கும், ஏன்-ன்னா நான் பயன்படுத்தறேன்! வாழ்த்துக்கள் புடிக்காது, ஏன்-ன்னா என் எதிரி பயன்படுத்தறான் :)))

  ஆனா….
  ஆனா…
  ஆனா…
  தமிழ் அம்மா….தமிழன்னை ன்னு பாக்க ஆரம்பிச்சிட்டா..?

  எங்க தனிப்பட்ட விருப்பமே சரி-ன்னு கிடந்த தங்கச்சியும் நானும்!
  ஆனா….அம்மாவுக்கு ஒன்னு ன்னு பாத்த பிறகு….All Changed!:)))
  Thatz the secret of காய்தல்-உவத்தல்!

  • காய்தல் – உவத்தல் இல்லாத மனுசனே இருக்க முடியாது!
   நம்ம விருப்பங்கள் தான் நமக்கு முக்கியம்!
   ஆனா….We prioritize!

   அம்மாவை முதலில் வைத்து
   அப்பறம் நம் விருப்பங்களையும் வைத்துக் கொள்வது போல்…

   தமிழை – தமிழின் நன்மையை முதலில் வைத்து
   அப்பறம் நம் விருப்பங்களையும் வச்சிக்கிட்டா….
   இந்தக் காய்தல் – உவத்தல் வராது!
   ——————-

   * இளங்கோ செந்தமிழ்க் கவிக்கோ
   * கம்பன்….வடமொழி இராமயணத்தை எழுதிட்டாலும், அது தமிழன்னைக்கு முத்தாரம், மணியாரம்!
   அம்மா கழுத்தில் இருந்து, அதைப் புடிச்சி இழுக்க மனசு வருமா?

   இப்படி ஒவ்வொன்றிலும்
   * மேலான நன்மையை முதலில் வைத்து
   * நம் தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை, ஒதுக்க வேணாம், ஆனா பின்னுக்கு வச்சிக்கிட்டா….
   No காய்தல் – உவத்தல்!!! Gotcha??:))

  • Pump கதை மட்டுமே என்னுது!
   உபதேசம் = இராமானுசருடையது!:))
   ————————-

   ஆசையை ஒழி ன்னு ஞானிகள் சொல்லுறாங்க!
   ஆனா நான் சொல்லுறேன்….ஆசையை ஒழிக்காதீக! அது குடும்ப வாழ்வில் இருப்பங்களுக்கு மெத்த கடினம்!

   ஆசையை ஒழிக்க வேணாம்!
   ஆனா, மேலான ஆசையை அரங்கன் திருமேனியில் வையுங்கள்!
   அதற்குப் பிறகு, உங்கள் ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்!

   அப்படி வச்சிக்கிட்டா, எந்த செயலைச் செய்யும் போதும்….
   * இதனால் அவன் உள்ளம் உவக்குமா?
   * இல்லை வாடுமா?
   ன்னு உங்களை நீங்களே கேட்டுக் கொள்வீர்கள்!
   ————————

   நான் தமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத ஏற்பாடு செய்தேன் ன்னு என்னைச் சாஸ்திரக்காராள் நீங்கள் வெறுக்கிறீர்கள்!
   ஆனால், ஆழ்வார் பாசுரங்களில், ஒவ்வொரு வரியிலும் அவன் பேரே இருக்கிறது!
   அதை வெளியே துரத்தினால், அவன் பேரையும் துரத்தியது ஆகாதா?

   * இதனால் அவன் உள்ளம் உவக்குமா?
   * இல்லை வாடுமா?
   -ன்னு இப்படிக் கேட்டுத் தான் காய்தல் – உவத்தலைப் போக்கினார் என்பது வரலாறு! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பே!

   அதைத் தான் கொஞ்சம் மாத்தி, இங்கே சொன்னேன், எங்கூரு மகாத்மியம் கலந்து!:))
   So, now you know காய்தல் – உவத்தல் isn’t that hard to remove, when it comes to a noble cause!

   சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
   எங்கும் திருவருள் பெற்று, “இன்புறுவர்” எம்பாவாய்! dank u!

  • anonymous says:

   shucks….everytime i forget this google / wordpress logout thingie
   it preserves my id
   ஒரு Flowல வேகமாப் போட்டு முடிச்சிட்டு, அப்பறம் படிக்கும் போது தான் தெரியுது…this logout goofup!

   முருகா….என் நிலமை சீராகும் வரை…Pl remind me of this, everytime! Plz!

   • அனானி அருவத்தை உருவமாக்கும் google/wordpress-க்கு நன்றி.

    யார் யார் யார் அவர் யாரோ?
    ஊர் பேர் தான் தெரி யாதோ?

    கண்ணா, முருகா, கண்ணபிரா! முருகதாசா! 😉

 9. ஆஹா..என்ன ஒரு அற்புதமான பாடல்… மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகள் பல வகைப்பட்டவை…

  மனிதனின் பல்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கவே மனிதனுக்கு ஆறு ஆதாரங்கள் என்று குறிக்கிறார்கள்…ஒவ்வொரு ஆதாரமும் பல்வேறு உணர்ச்சி நிலைகளைக் கொண்டது…

  1.மூலாதாரம்
  2.சுவாதிஷ்டானம்
  3.மணிப்பூரகம்
  4.அநாதம்
  5.விசுத்தி
  6.ஆக்ஞை

  இதில் கடைசி உள்ள ஆக்ஞை என்ற கூறை மட்டும் எடுத்துப் பார்ப்போம்… அது இரண்டே இரண்டு இதழ்களை உடையது.. விருப்பு,வெறுப்பு…(காய்தல்,உவத்தல்)..

  காய்தலையும்,உவத்தலையும் ஒருவனால் ஒதுக்கி ஒரு விஷயத்தைப் பார்க்க முடியாது.. இந்த உலகில் எந்த ஒரு பொருளோ,உயிரோ, உயர்திணையோ,அஃறிணையோ இருந்தாலும் அதனிடத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் விருப்போ,வெறுப்போ உண்டாகியே தீரும்.. இது இந்த மானுட சட்டையின் இறுதியாக உள்ள ஆக்ஞை ஆதாரத்தின் விதி…

  There is no possibility of adapting sensual neutrality against anything in this word. Though one says he is sliding towards nothing, his mind is thinking to get place in either of the side which gives better feeling to himself…

  இது உணர்வு நிலையின் இறுதி விதி….

  விருப்பமும்,வெறுப்பும்,காய்தலும்,உவத்தலும் கடந்த இடம்தான் ஈசனின்,திரிசடையோனின்,நீலகண்டனின் திருவடி… அவனிடத்தில் இயங்குவதுதான் விருப்பு,வெறுப்புமற்ற நிலை…

  மகா,மகா யோகிகளுக்கும்,முனிவர்களுக்குமே காய்தலும்,உவத்தலும் அற்ற நிலை வாய்த்திருக்கிறது…. அதை சித்தர் பாடல்களிலும் காணலாம்..

  உதாரணத்திற்கு திருக்குறள்,

  “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல”

  வேண்டுதல்(உவத்தல்), வேண்டாமை(காய்தல்), இவை எதுவுமற்ற நிலை மகா,மகா முனிவர்களின் நிலையேயாகும்… அதுதான் புலனடக்கத்தின் இறுதி மற்றும் கடினமான நிலையாகும்..

  மற்ற ஐந்து ஆதாரங்களும், ஒவ்வொரு வகையான உணர்ச்சிப் படிநிலைகளைக் கொண்டிருக்கின்றன..அவற்றையெல்லாம் ஒரு மனிதன் அடக்கி ஆளலாம்..

  ஆனால்,எல்லா ஜீவன்களும் இறுதிப்படி நிலையான ஆக்ஞையான உவத்தலிலும்,காய்தலிலும் மாட்டிக்கொள்ளும்.. “வந்தது கோபம்..பிடி சாபம்” என்று உரைக்கும் முனிவர் பெருமக்களெல்லாம் ஆறாவது படிநிலையின் வாயிலைக் கடக்கும் வழி தெரியாது திண்டாடி மாய்பவர்கள்…

  அதைத்தான் குதம்பைச் சித்தர்,”ஆறாதாரமும் தொலையடி;அப்பாலே வேறொன்றுமில்லையடி” என்று கூறினார்…

  “சித்தம் போக்கு;சிவம் போக்கு” என சிந்திக்கும்,செயல்படும் பொருள்களனைத்திலும் சிவத்தைத் துதிப்பவர்களுக்கு விருப்போ,வெறுப்போ ஏற்படப்போவதில்லை… கருணையோடு மலர்களைத் தூவும்போதும்,கல்லடி செய்து துரத்தும் போதும் ஒரே மனநிலையோடு அணுக மிகப் பெரிய தவவலிமையும் புலனடக்கமும் வேண்டும்…

  அதைக் கடக்கும் ஜீவன் சிவத்தோடு ஒன்றுபடுகிறது… நற்றுணையாவது நமச்சிவாயமே…..

 10. உவப்ப என்ற சொல்லைப் படித்ததும் திருமுருகாற்றுப்படையின் முதல் வரி தான் எனக்கு நினைவிற்கு வந்தது. // உலக முவப்ப வலனேர்பு திரிதரு //

  பகவத் கீதையிலும் இந்த சம நோக்குப் பார்வை பற்றி கிருஷ்ண பரமாத்மாவும் நிறைய சொல்லியுள்ளார். ஆனால் அதை திரு.சொக்கர் சொல்லியிருப்பது போல கடைப் பிடிப்பது தான் பிரம்ம பிரயத்தனம்!

  அது ஒரு யோக நிலை. KRSம் பாலாவும், இறைவன் பால் பற்று வைத்தால் இந்த நிலையை அடையலாம் என்கிறார்கள். கேஆர்எஸ் கூறிய உதாரணத்தில் கூட அம்மாவின் மேல் உள்ள அதீத அன்பினால் தான் அண்ணனும் தங்கையும் தங்கள் விருப்பத்தை துறந்து செயலாற்றினார்களே ஒழிய விருப்பு வெறுப்பற்ற நிலையை அடைந்தார்களா என்று தெரியவில்லை 🙂 ஆனால் பைய பைய முயற்சித்தால் இந்த நிலையை எந்தப் பிறவியிலாவது அடைந்துவிடலாம் என்று நம்புகிறேன் 🙂

  amas32

  • anonymous says:

   //KRSம் பாலாவும், இறைவன் பால் பற்று வைத்தால் இந்த நிலையை அடையலாம் என்கிறார்கள்//

   ஐயயோ…நான் ஒன்னும் சொல்லலை!:)
   பாலா தான் ஏதோ ஜீவன், சிவன், சமாதி -ன்னு பயமுறுத்தறாரு:)))

   //கேஆர்எஸ் கூறிய உதாரணத்தில் கூட அம்மாவின் மேல் உள்ள அதீத அன்பினால் தான் அண்ணனும் தங்கையும் தங்கள் விருப்பத்தை துறந்து செயலாற்றினார்களே ஒழிய விருப்பு வெறுப்பற்ற நிலையை அடைந்தார்களா என்று தெரியவில்லை//

   :))
   விருப்பு வெறுப்பற்ற நிலை என்பதே கிடையாது!
   ஆசையை ஒழிக்கணும் ன்னு புத்தர் ஆசைப்பட்டாரு:))

   • நான் என்ன சொல்றேன்னா, உவத்தல்,காய்தலும் இல்லாத மனுசனே கிடையாது..அப்படி இருக்கிறவன் ஒண்ணு இறைவனா இருப்பான்..இல்லை இறைவனுக்கு அருகே இருப்பான்னு சொல்றேன்…

    அல்லவை காணுமிடத்தில் காய்தலும்,நல்லவை காணுமிடத்தில் கனிதலும் மனிதருக்கே உண்டான குணம்… நீதிமானாகவே இருந்தாலும் நீதி சொல்லும்போது மேலே சொன்ன அந்தக் கடமையைக் கடைபிடித்தால்தான் நீதிமான்….

    இதைச் சொல்லலாம்னு இருந்தேன்..ஏற்கெனவே ரொம்பப் பெருசாப் போய்ட்டிருக்கு..இது வேறயான்னு விட்டுட்டேன்…

    ஏங்க கேஆர்எஸ் இப்பிடி ஒண்ணு மண்ணாப் பழகிட்டு,விட்டா எனக்கு நீங்களே ருத்திராட்சைக் கொட்டை மாலையையும்,காவி வேட்டி,சட்டை ரெண்டு செட்டையும் டெல்லிக்குப் பார்சல் பண்ணிருவீங்க போல… மீ எஸ்கேப்பு…

   • anonymous says:

    //ஏங்க கேஆர்எஸ் இப்பிடி ஒண்ணு மண்ணாப் பழகிட்டு//

    ஏய் பாலா, இன்னோரு ஆதீனம் post காலியா இருக்காம்!:)
    Wanna Join?
    எதையும் துறக்க வேணாம்! No சட்டை & கொட்டை! Only பட்டை! (that pattai:))
    செம இன்பமான வேலை; என்ன சொல்லுற?:)))

  • anonymous says:

   I think we stretched this…a bit too far:)
   ஏய் பால சுந்தரா…ஒன்னை எவன்யா மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் ன்னு உடம்பு சக்கரம் பத்தியெல்லாம் சொல்லச் சொன்னது?:)))
   ——————-

   //விருப்பு வெறுப்பற்ற நிலையை அடைந்தார்களா என்று தெரியவில்லை//

   :))
   போங்கம்மா! அதெல்லாம் நான் அடைய மாட்டேன்!
   விருப்பு – வெறுப்பையெல்லாம் அம்புட்டுச் சீக்கிரம் துறக்க முடியாது!
   என்னைக் கேட்டா, துறக்கவும் வேணாம்:)))
   Murugan, Malibu Rum, Panamkizhangu, Nungu – இதெல்லாம் துறக்கவே மாட்டேன்:)

   விருப்பு-வெறுப்பு வேற!
   காய்தல்-உவத்தல் வேற!!

   * விருப்பு-வெறுப்பு = நம் எண்ணங்கள்
   * காய்தல்-உவத்தல் = நம் விருப்பு/வெறுப்புக்களால், அடுத்தவரிடம் நடந்து கொள்வது!

   முன்னதைத் துறக்கவே வேணாம்!
   பின்னதைத் தான் நிர்வாகம் பண்ணிக்கணும்:)
   Hope I made it clear!

 11. ஆனந்தன் says:

  எந்தப் பொருளிலும் உள்ள ஆசை, அதைவிட உயர்ந்த பொருளொன்றில் ஆசை வைக்கும்போது அகன்று விடும்.

  ஐந்து வயதில் விளையாடிய பொருளின் மேல் பத்து வயதில் ஆசை இருக்காது.அதே பொருளில் 15 வயதில் ஆசை போய்விடும். ஆனால், இன்னொன்றில் ஆசை வந்து விடுகிறது.

  இன்பத்தில் மனம் மயங்கியும் துன்பத்தில் மனமுடைந்தும் போகாமல் எப்பொழுதும் சமநிலையில் இருக்கவேண்டுமானால் எதாவது உயர்ந்த பொருள் ஒன்றில் பற்று வைக்க வேண்டும்.

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு.

  இறைவனில் பற்று வைத்ததாற்றான் அப்பருக்குக் கல்லும் பொன்னும் ஒன்றாகத் தெரிந்தது.

  ஆனால், இந்தப் பாடல் இதைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்லவில்லையே? ஒரு விடயத்தை ஆராயும்போது நடுநிலைமை தேவை என்பதை மட்டுமே சொல்கிறது.

  அது கைவருவதற்கு, எந்த விடயத்தைப் பற்றி ஆராய்கிறோமோ அதைவிட உயர்ந்த நோக்கமொன்றை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்போது அந்த நடுநிலைமை எளிதாகக் கைகூடும்.

  • anonymous says:

   //எந்த விடயத்தைப் பற்றி ஆராய்கிறோமோ அதைவிட உயர்ந்த நோக்கமொன்றை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்போது அந்த நடுநிலைமை எளிதாகக் கைகூடும்//

   Bingo!
   U got the pump story:)
   Cha..U got what raamanusar told!

 12. ஆனந்தன் says:

  ஒரு ஆராய்ச்சியாளனுக்கு ‘உண்மை எது?’ என்று அறிவதில் உள்ள பற்று, ‘தனக்குப் பிடித்தமானது’ என்பதில் உள்ள பற்றை விட அதிகமாயிருக்க வேண்டும்.

  ஒரு அரசியல்வாதிக்குத் தனது கட்சியில் இருக்கும் பற்றைவிட, நாட்டுப் பற்று அதிகமாக இருக்க வேண்டும்.

  ஒரு ஆன்மிகவாதிக்குத் தனது சமயத்தில் இருகும் பற்றைவிட இறைவனில் இருக்கும் பற்று அதிகமாக இருக்கவேண்டும்.

  இவ்வாறிருப்பின், காய்தல் உவத்தல் இல்லாது ஆயும் தன்மை கைகூட வாய்ப்புண்டு.

  • anonymous says:

   சிவ-ஆனந்தா
   கையைக் குடும்….இதை வரிக்கு வரி RT செய்கிறேன்:)

  • anonymous says:

   ‘உண்மை எது?’
   vs
   ‘தனக்குப் பிடித்தமானது’

   This says it all!
   ——————–

  • anonymous says:

   ‘உண்மை எது?’
   vs
   ‘தனக்குப் பிடித்தமானது’

   ஒரு உதாரணமாப் பார்ப்போம்….
   ———–

   காதல் முருகனை எனக்கு ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்! = அவன் தமிழ்க் கடவுள்!
   ஆனா, ஆய்வு ன்னு வரும் போது….
   தனக்குப் பிடித்தமானதைப் பின்னுக்குத் தள்ளி, தமிழையே முன்னுக்குத் தள்ளணும்!

   அப்படி ஆய்வு செய்யும் போது = திருமாலும் பண்டைத் தமிழ்க் கடவுளே ன்னு தெரிய/தெளிய வரும்!
   ———–

   * முருகன் = அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
   * திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

   * இப்படி வேந்தனையோ, வருணனையோ சங்க இலக்கியத்தில் எவரும் பாடார்; ஏன்னா, வெறும் திணை அடையாளம்! மக்கள் தெய்வம் அல்லர்!

   இப்படிச் சொல்வது அதே நூல் தான்!
   * ஆனா, ஒரு வரியை மட்டும் காட்டி, இன்னோரு வரியை மறைத்தால்? = காய்தல்-உவத்தல்!:)))
   * ஆய்வை = தன் விருப்பமாய்ச் செய்யாது, உண்மை அறியும் விழைவுக்காகச் செய்தால் = ஆய்வு!
   ———–

   இப்படிச் செய்யும் பழக்கம் உள்ளவர் சமணத் துறவியான = இளங்கோ!
   அவருக்குக் காய்தல்-உவத்தல் கிடையாது!

   தான் சமணமாக இருப்பினும், மக்கள் இலக்கியத்தில், மக்கள் வாழ்வியலையே பிரதிபலிப்பார்!

   ஒரு சமணர்
   * கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? ன்னும்
   * ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே-ன்னும்
   பாட…..எத்தனை உள்ளம் வேணும் ன்னு யோசிச்சிப் பாருங்க!

   ஏன்-ன்னா….இளங்கோ, தமிழ் இலக்கியத்தில்
   * தமிழை முன்னுக்குத் தள்ளினார்! = Pushing amma’s welfare to front
   * சமயத்தைப் பின்னுக்குத் தள்ளினார்! = Pushing our sleep to back
   அதான் இளங்கோவுக்கு, காய்தல் – உவத்தல் இல்லாமல் போனது!
   Let’s learn from iLango! Salute!

  • Thank you Anandan 🙂
   amas32

 13. ஆனந்தன் says:

  ஆக, ஆசையை யாரும் விடவேண்டாம்; அதை உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டால் சரியான நோக்கு (PERSPECTIVE) கிடைக்கும். கீழான ஆசைகள் தானாகக் கழன்று விடும்…முற்றிப் பழுத்த வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து அக்ல்வது போல…

 14. //அல்லவை காணுமிடத்தில் காய்தலும்,நல்லவை காணுமிடத்தில் கனிதலும் மனிதருக்கே உண்டான குணம்… நீதிமானாகவே இருந்தாலும் நீதி சொல்லும்போது மேலே சொன்ன அந்தக் கடமையைக் கடைபிடித்தால்தான் நீதிமான்….//
  Bala I agree with this view point fully 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s