இற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்,

இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

நூல்: புறநானூறு (#112)

பாடியவர்: பாரி மகளிர்

சூழல்: பொதுவியல் திணை, கையறு நிலை, பாரி மன்னனை மூவேந்தர்கள் முற்றுகையிட்டு வென்று அவனது பறம்பு மலையைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், அப்போது அவனுடைய மகள்கள் இருவரும் பாடிய பாடல் இது

அன்று வந்ததும் இதே நிலாதான், ஆனால் அப்போது எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார், எங்கள் குன்றிலும் பிறர் ஆக்கிரமிக்கவில்லை.

இன்று வந்திருப்பதும் அதே நிலாதான். இப்போது, வெற்றி ஒலி செய்யும் முரசைக் கொண்ட மூவேந்தர்கள் எங்கள் குன்றைக் கைப்பற்றிக்கொண்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம்.

துக்கடா

 • மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமான பாடல்தான். ஆனால் ’அற்றைத் திங்கள்’, ‘இற்றைத் திங்கள்’ என்று இரண்டு ராப்பொழுதுகளுக்கு நடுவே தங்கள் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுவிட்ட நிலைமையை ஐந்தே வரிகளில் எத்தனை அழகாகப் பதிவுசெய்துவிடுகிறார்கள்!
 • ‘பாரி மகளிர்’ இருவர், அவர்களுடைய பெயர்கள் அங்கவை, சங்கவை என்று பிற்கால நூல்கள் சொல்லும், இன்னும் பிற்காலத்தில் சினிமாக் காட்சிகளும் வசனங்களும் அவர்கள் முகத்தில் கருப்பைப் பூசிக் காமெடியாக்கிவிட்டன 😦
 • இந்தப் பாடலைத் தேர்வு செய்து தந்த நண்பர், திரு. அனந்தன்

318/365

Advertisements
This entry was posted in நண்பர் விருப்பம், புறநானூறு, புறம். Bookmark the permalink.

21 Responses to இற்றைத் திங்கள்

 1. வாழ்வின் நிலையற்ற நிலை அப்படி. பௌதிகமும், மெய்ஞானமும் இதை விளக்க எவ்வளவு கடினபட்டிருகின்றன.

  திருவள்ளுவர், குறளில்:
  நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
  பெருமை உடைத்துஇவ் வுலகு

  நேற்று இருந்தவன், இன்று இல்லை, உலகு அப்படி பட்டது என்று போட்டு உடைத்து விடுகிறது. அறிவியல் choas, random events என்று எதையதையோ சொல்லி தேற்றுகிறது.

 2. சிவ ஆனந்தன் – நன்றி

  May-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

  ஈழத்து மக்களை = பாரி மகளிர் என்று நினைத்துக் கொண்டால்…இந்தப் பாட்டின் “வலி” தெரியும்!

  அற்றைத் திங்கள்
  இற்றைத் திங்கள்
  இடைப்பட்ட காலத்திலே…..ஒன்றுமே இல்லாமல் போன பாரி மகளிர்….முருகா!

  • தமிழ் இலக்கியத்தில் பெண்கள்-ன்னா எனக்கு…….

   * ஆண்டாள் = அவ துணிவு….எப்படிப் பிடிக்குமோ (அவ கண்ணன் உறுதி போல், எனக்கு முருக உறுதி)
   * அதே போல் இன்னும் ரெண்டு பேர்…. = அவங்க பேதை உள்ளம் நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கும்…என்னமோ செய்யும்…

   1. புனிதா (காரைக்கால் அம்மையார்)
   – சுடுகாட்டு வாய்க்கரிசியைப் பொறுக்கிச் சாப்பிட்ட பொண்ணு :((
   – அம்போ ன்னு விடப்பட்ட பொண்ணு
   – சிவ சம்போ ன்னு ஆகி விட்ட பொண்ணு:(((

   2. பாரி மகளிர்

 3. //ஈழத்து மக்களை = பாரி மகளிர் என்று நினைத்துக் கொண்டால்//- ன்னு சொன்னேன்!
  நீங்களும் கற்பனை செஞ்சிப் பாருங்க!

  பாரி மகளிர்!
  * இந்தப் பொண்ணுங்க பண்ண பாவம் என்ன? = பாரிக்குப் பிறந்தது!!!
  * பாரி என்ன பாவம் பண்ணான்? = எங்களுக்குப் புடிக்காததைப் பண்ணான்;
  ———————–

  • ஆதி நாளில் இருந்து = நாங்க, நாங்க மட்டுமே புகழ் வாய்ந்தவர்கள்! கொடை குடுப்பவர்கள்!
   பாரி? = ராஸ்கல்! அவனுக்கு என்ன இம்புட்டு புகழ்! அவன் யாருடா கொடை குடுக்கறத்துக்கு? அவன் என்ன பெரிய வள்ளலா?

   நாங்களே மூவேந்தர் = சங்க காலத்திலும் இருந்தவர்கள்!
   அப்போ பாரி?
   அவன் குலமும் சங்க காலக் குலம் தான் = வேளிர் குலம்!
   ஆனா நாங்க ஒத்துக்க மாட்டோம்!!

   அவனுங்க இன்னிக்கி மைனாரிட்டி!
   நாங்களே இன்னிக்கி மெஜாரிட்டி!
   அதுனால, சங்க காலம் = எங்களுக்கு “மட்டும்” தான் சொந்தம்!
   = நாங்க”ளே”!!!
   = நாங்க மட்டு”மே” மரபு!!
   ————————

   ஆனா….
   இந்த ராஸ்கல் பாரி….நடுவுல வந்து….அவனுக்கு எதுக்கு மரபில் மதிப்பு?
   எதுக்கு இத்தனை தமிழ்க் கவிஞர்கள் அவனைக் கட்டிக்கிட்டு அழுவுறானுங்க??

   முல்லைக்குத் தேர் குடுத்துட்டானாம்! த்த்த்த்தூ…
   இது ஒரு பெரிய விசயமா?
   நாங்க எத்தனி எத்தினி பேருக்குக் குடுத்துருக்கோம்!

   (நாம்): அதில்லீங்க, அந்த மனசு…..வாயில்லா அறிவில்லாச் சீவனைக் கூட கண்டு இரங்கணும் ன்னு தோனிச்சே! மனசு…அதுக்குத் தான் தமிழறிஞர்கள்..

   மூடு வாயை!
   கண்ட தரவுகளையும் குடுப்பீர்கள்! உம்மிடம் பேசிப் பயனில!
   மரபுச் சிறப்பில் நாங்க மட்டுமே இருக்கணும்!
   வள்ளண்மையில் நாங்க மட்டுமே இருக்கணும்!

  • (நாம்): தாராளமா இருங்க! வேணாங்கலையே! பாரி, நேரடியா ஒங்கள ஒன்னும் பண்ணலீயே! உங்க நிலத்தை அபகரிக்கலையே!
   அவனும் அவன் நிலத்துல சிறப்பா இருக்கான்! அவ்ளோ தானே!!

   கூடாது!!
   = நாங்க”ளே”!!!
   = நாங்க மட்டு”மே” மரபு!!
   = அவன் மைனாரிட்டி!

  • இப்போ….

   “பாரி” ன்னு வரும் இடத்திலெல்லாம் தமிழ் மக்கள் ன்னு மாத்திப் படிங்க!
   ஈழ மக்கள் பிரச்சனை என்ன? ன்னு ஓரளவு “உணர்ந்து” இருப்பீர்கள்!

   “உணர்ந்து” ன்னு சொல்லுறேன்!
   புரிஞ்சி-ன்னோ, அறிஞ்சி-ன்னோ சொல்லல!

   புரிஞ்சவனும், அறிஞ்சவனும் நிறையவே இருக்கானுங்க!
   ஆனா “உணர்ந்தவர்கள்”??
   = முள்ளிவாய்க்காலுக்கு மெளனசாட்சிகளாய்! :((

 4. பாரி மகளிரைப் பொண்ணு குடுக்கச் சொல்லிக் கேட்டோம்!
  கொடுக்க மாட்டேன்-ன்னான்!
  கொன்னுட்டோம்!

  பாரி மகளிர் மேல் எங்களுக்கு மாறாக் காதலா?
  ச்சீ…காமம் ன்னு வேணும்ன்னாச் சொல்லுங்க!
  காதலா இருந்தா….அவளை அம்போ ன்னு ஊரு ஊரா அலைய விடுவோமா? பலர் முன்னிலையில், அவையில், இழித்துப் பேசுவோமா?:(

  நாங்க மூனு பேர்
  பொண்ணுங்களோ ரெண்டு தான்!
  அப்பறம் எப்படிப் பொண்ணு கேட்டோம்?

  ச்ச்சும்மா….இதைச் சாக்காய் வச்சி, பாரியை மடக்கலாம்-ல்ல?
  அவனுக்கு என்ன அவ்ளோ மன உறுதி (அ) திமிரு?
  எங்களுக்கு அவளுங்க மூனாவதா, நாலாவதா வாழ்க்கைப்படக் குடுத்து வச்சிருக்கணும்! எங்க மரபு என்ன!! நாங்களே மரபு!!
  ———————

  இப்படி துவங்கிய உள்ளக் காய்ச்சல்….

  • போரில்…பறம்பு மலையைச் சூழ்ந்து…
   தங்கள் வீரத்தால், பாரியின் மலைக்கீழ் நிலத்தையெல்லாம் வென்று விட….அதை ஒத்துக்கணும்! வீரம் தான்! வென்று விட்டார்கள்!

   ஆனால், முற்றுகையில் கோட்டையை மட்டும் நெருங்க முடியலை….

   டேய், ஆம்பிளையா இருந்தா நேரில் வந்து சண்டை போடுறா! எதுக்கு கோட்டைக்குள்ளயே இருக்க, முகம் காட்டாம?
   நாங்க வீண் சண்டைக்கு போக மாட்டோம்! வந்த சண்டைய விடமாட்டோம்!

   எப்படி இருக்கு கதை?:)
   வீண் சண்டைக்கு வந்தவர்கள் யார்?:) ஆனா பேசுறது என்ன??:))
   என்ன பண்ணுறது! மனுசனுக்கு நாக்கு-ன்னு ஒன்னு இருக்கே!!
   ————————-

   அந்தோ….பாரியின் ஆருயிர் நண்பர் கபிலர்…
   எட்டுத் தொகையுள், ஏழு தொகையிலும் இருக்கும் ஒரே கவிஞர்…

   அவர் கையாலயே அவன் சாகணும் ன்னா விதி? முருகா!!!

  • போரை முடிச்சி வைக்கலாமே என்கிற நல்லெண்ணத்தில் மூவேந்தரிடம் சென்ற கபிலர்….தெரியாத்தனமா வாயை விட

   பாரியின் மலைக்கு இன்னும் புலவர்கள், கவிஞர்கள் வந்துக்கிட்டு தானே இருக்காங்க! முற்றுகை இருந்த போதும்….

   அதே போல், நீங்களும் தமிழ்க் கவி பாடினால், பாரியே உங்களுக்கு எல்லாம் தூக்கிக் குடுத்து விட மாட்டானா? ன்னு கேட்டு வைக்க….
   —————

   அந்த ஒற்றை வரி Idea வைப் பிடிச்சிக்கிட்டு….
   கவிஞர்/ புலவர் போல் வேடமிட்டுச் சென்று….சூழ்ந்துச் சூழ்ந்து பாரியைக் கொன்றனரே!

   ஐயா…முருகா,,,,இதுவா உன் நீதி?

 5. கபிலர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
  மனசால் பாதி, அப்பவே செத்துட்டாரு!

  ஆனா, பாரி மகளிருக்காக, கோட்டையை விட்டு வெளியேறினாரு!
  ——————————

  இதுக்கப்பறம், பாரி மகளிர் – மூவேந்தர்கள்??
  காதலோ காதல் :)))))
  தூய அன்பு, தன்னை அழிச்சிக்குமே தவிர, இது போல் அடுத்தவங்களை அழிக்காது!

  எவனும் அவங்க கூட பேச்சுவார்த்தை வச்சிக்கக் கூடாது! Total Block!
  மற்ற சிற்றரசர்களும் பயந்துக்கிட்டு கண்ணாலம் பண்ணிக்கலை!
  போகுது, யாருக்கு வேணும் கல்யாணம்?
  ஆனா, பாரியின் so called நண்பர்கள்?? = இன்னும் சூப்பர்!

  தங்க இடம் கூடக் குடுக்காது ஒதுக்கினாங்க! வீடேறி வந்தவர்களைப் “போ போ”!!
  பொது சபையில் அத்தனை பேர் முன்னும் மறுதலிப்பு:(

  ஐயனே கபிலரே!
  ஒரு சங்கத் தமிழ்க் கவிஞன், வீடு வீடாப் போய், பாரி மகளிருக்காக, கையேந்தினானே?:((((
  எட்டுத் தொகையுள் ஏழு தொகை பாடிய உன் தமிழுக்கு இதுவா மதிப்பு??
  ——————————

  • அப்பவும் கபிலர்….நண்பனைக் கைவுட்டறல!

   சரி, நம்மால முடிஞ்சத பண்ணோம்! இனி நம்ம பொழைப்பு, நம்ம காமம் நமக்கு முக்கியம் ன்னு அப்பீட் ஆயிட்டாரா?

   அவரு படிச்ச தமிழ் அப்படீங்க!
   அந்தத் தமிழ் நாக்குல இல்ல! மனசுல இருக்கு!
   என் மாரை அடிச்சிச் சொல்லுறேன்…..ஐயா முருகா! அந்தத் தமிழ் மனுசுல இருக்கு! அது அந்த நட்பைக் கைவிடவே விடாது!

  • What is between kabilar & paari ?
   = affection? friendship? call it whatever..

   A tamizh lover, A nature lover – whose songs are the maximum in sanga tamizh!
   He was driven away like a beggar, in the courts of his previous friends!
   Not driven by hands, but by words…more powerful to hurt!

   Still, He carries on life with thoughts of “end”!
   Thatz kabilar for paari!! – failure of unfailing love!

 6. கடேசியில் திருக்கோயிலூர் மலையமான், காரி….துணிஞ்சி முன் வந்து அங்கவையை மணம் புரிந்தான்!
  ஆனா அவனைச் சூழ்ந்து கொன்னாங்க! அங்கவை தீக்குளிச்சா!

  சங்கவையைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைச்சிட்டு, அதே திருக்கோயிலூரில், கபிலர் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார்!
  இன்னிக்கும் தென்பெண்ணை ஆற்றில், கபிலர் குன்றைக் காணலாம்!

 7. அங்கவை-சங்கவை வெறும் “கருப்பிகள்” அல்ல!

  அறிவுள்ள பெண்கள்! புலவர்கள்!
  சொக்கர் இன்னிக்கி போட்ட சங்கப் பாட்டும் எழுதி இருக்காங்க!

  குழந்தையா இருக்கும் போது, சாப்பாடு முடிஞ்சிப் போன ஒரு இரவு நேரத்தில் பாணர்கள் வர….பாரி செய்வதறியாது திகைக்க…..
  இந்த “லூசுக் குழந்தைகள்”, தங்கச் சொப்பு/ பொம்மைகளை வச்சி சாப்பாடு போட்டா என்ன? ன்னு கேட்ட குழந்தைகள்….

  இதுக்குப் பழமொழி நானூறு பாட்டே இருக்குது! அதுங்க வளர்ந்து பெரியவளாகி……
  —————–

  சிவாஜி படத்தில் வருவது போல்….
  கருப்பிகள்….
  மாப்பிள்ளைக்கு அலையும் கேசுகள்….அல்ல இந்தப் பெண்கள்:(
  இந்தப் பெண்களின் பின்னால், ஒரு தமிழ்க் காப்பியமே இருக்கு!

  சிலப்பதிகாரம் போல், எழுதவல்ல இன்னோரு காவியம் = பாரியின் கதை!
  ஆனா யாரும் இதுவரை எழுதல:((((

  காப்பியமா எழுதுவதற்கு உண்டான = அறம், பொருள், இன்பம், மழலை வாழ்வு, கொடை, குணம், போர், சூழ்ச்சி, நட்பு ன்னு சகலமும் இருக்கு பாரி கதையில்!
  ——————-

  யாரும், இதுவரை எழுதலை-ங்கிறத்துக்காக….
  இந்தப் பொண்ணுங்க “மாப்பிள்ளைக்கு அலையும் கேசுகள்” ஆகி விட மாட்டார்கள்!

  – வாழ்வைத் தொலைத்த அங்கவை சங்கவையே….
  முருகா….எத்தனை அசிங்கம் சுமப்பது ஒருவர் வாழ்வில்!!!!!!

  • anonymous says:

   எனக்கு எழுத்தாளர் சுஜாதா-வை மிகவும் பிடிக்கும்!
   அவர் யதார்த்தத்தின் தாக்கம் அப்பிடி!
   வீடு முழுக்க – சுஜாதா, பழைய பாலகுமாரன் – ஜெமோ நாவல்கள் தான்!

   ஆனா…எவ்ளோ பெரிய மனுசனா இருந்தாலும்….
   மனுசன் தானே!
   அந்தப் ***.குசும்பு மட்டும் போகலை-ல்ல? :((

   இதுக்குத் துணை போக, ஒரு இயக்குநரும், பட்டிமண்டபத் “தமிழறிஞராம்” அவரும்….
   ———————–

   உணர்ச்சி வசப்படாதீக-ன்னு சொல்லலாம்!
   ஆனா சுஜாதாவுக்குப் பிடித்தமான பெரியாழ்வாரை, இப்படிச் சித்தரிச்சா, குறைஞ்சபட்ச உணர்ச்சிவசமாச்சும் படாம இருப்பாரா??

   அதென்ன, பிடித்தமானங்களுக்கு ஒரு நீதி, அடுத்தவர்க்கு வேறொரு நீதி?
   = தற்கால இலக்கியவாதிகள் “மனிதத்தில்” இன்னும் திருந்த வேணும்!
   ———————-

   அமரராகி விட்ட அவரை, நேரில் மட்டும் பாத்தா….இந்த ஆழ்வார் பாசுரத்தைச் சொல்லி நீதி கேட்பேன்…அவ்ளோ கோபம்!

   அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி
   தமர்களில் தலைவர் ஆய, சாதி அந்தணர்கள் ஏலும்…
   நுமர்களைப் பழிப்பார் ஆகில், நொடிப்பதோர் அளவில் ஆங்கே
   அவர்கள் தான் புலையர் போலும், அரங்க மா நகருளானே!

 8. ஆனந்தன் says:

  நேற்று முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகளின் நினைவு தினம் என்பதை KRS நினைவூட்டியிருந்தார். இந்தப் பாடல் ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பரப்பில் சிலகாலங்களாவது பிறரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டுத் தனியரசு அமைத்து ஆண்ட தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குப் பெரிதும் பொருந்துகிறது.

  முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி. காடும் காடுசார்ந்த இடமுமான முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் வன்னித் தமிழ் மக்கள். போரும் வாழ்க்கையும் அவர்களுக்குச் சர்வ சாதாரணம். போருக்குச் சென்ற கணவன் அல்லது மகனைப் பிரிந்திருப்பதும் அவர் வரும்வரை காத்திருப்பதும் அவர்கள் நிதமும் அனுபவிக்கும் உணர்வு.

  பாரியை மூன்று தமிழ் வேந்தரும் சதி செய்து கொன்றனர். வன்னி இராச்சியத்தை, தமிழ் வேந்தர் வேடிக்கை பார்க்க, உலகமே சதி செய்து அழித்தது. பாரி மகளிரைக் காப்பாற்ற ஒரு கபிலர் இருந்தார். வன்னி மகளிரைக் காக்க ஒரு கவியும் துணியவில்லை.

  சங்கத்தமிழ்ப் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலும் வீரமும்தான் என்பர் கற்றோர். ஈழத்தமிழர் வாழ்வில் கலந்து நிற்பது காதலும் வீரமும் மட்டுமல்ல; கூடவே சோகமும், துரோகமும்தான்.
  இந்த பாடல் அங்கே வன்னியில் மிஞ்சி இருக்கும் தமிழர் பாடுவதாகவே எனக்குப் படுகிறது. அன்று பாரிமகளிர் ஏதிலிகள். இன்று இவர்கள் சொந்த நாட்டிலேயே ஏதிலிகள். அந்நிய நாட்டிலே அகதிகள்.

  புறநானூற்றுப் பாடல்களை நாம் படித்து ரசிக்கின்றோம். ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் அதை வாழ்ந்தே காட்டினர். அங்கே ஒவ்வொரு வீரனின்/வீராங்கனையின் கதையையும் எழுதினால் ஓராயிரம் புறநானூற்றுப் பாடல்கள் உருவாகும். அவர்களைப் பிரிந்து வாழ்ந்த காதலிகளின் கதைகளை எழுதினால் ஓராயிரம் அகநானூற்றுப் பாடல்கள் உருவாகும். தாய்மார்களின், சகோதரிகளின், குழந்தைகளின் கதைகளை எழுதினால் காவியங்களே உருவாகும். ஆனால், எழுதத் துணிந்தவர்கள்தான் இங்கேயில்லை.
  ஏனென்றால் வீரத் தமிழர்கள் எல்லாம் உயிர் கொடுத்து வித்தானார்கள். மிஞ்சியிருப்பதெல்லாம் கோழைத் தமிழர்கள் தான்.

  இந்த பாடலை இன்று இட்ட சொக்கருக்கு சிரம் தாழ்த்திய நன்றி.

  • anonymous says:

   சிவா…
   “உணர்ந்து” இட்டுள்ளீர்கள்!

   //பாரி மகளிரைக் காப்பாற்ற ஒரு கபிலர் இருந்தார். வன்னி மகளிரைக் காக்க ஒரு கவியும் துணியவில்லை//

   கபிலருக்கு = தமிழ் நெஞ்சில் இருந்தது
   இவர்களுக்கு = தமிழ் நாவில் இருக்குது
   அவ்ளோ தான் வேறுபாடு!

   இந்தப் பாடலை பாரிமகளிர் = ஈழமக்கள் என்றே காண்கிறேன்!
   —————-

   //சங்கத்தமிழ்ப் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலும் வீரமும்தான் என்பர் கற்றோர். ஈழத்தமிழர் வாழ்வில் கலந்து நிற்பது சோகமும், துரோகமும்தான்//

   நம் இலக்கியங்கள், நமது மனத்தாளுமையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய கற்றுக் குடுக்கின்றன!
   நாம் தான் அவற்றைச் சீண்டுவது கூட இல்லை! வெறும் எதுகை மோனை அலங்காரங்கள் மினுமினுக்க மட்டும் நின்னுட்டோம்!:(((

   இதே கபிலர்…
   * பேகன், தன் மனைவியை விட்டு, வேறொருத்தியுடன் காமத்தில் சேர்ந்து, இவளை வருத்தியெடுத்த போது = நேரே சென்று அறிவுறுத்தினார்
   * பாரி மகளிருக்காக, தன் மானத்தையெல்லாம் விட்டு, உலக (ஊர்) அவைகளில் நியாயம் கேட்டார்!

   இப்படிக் கேட்க நம்மிடையே கவியரசுகள் இல்லை!
   முனைந்து எழுவார் இல்லை!
   எவரேனும் முனைந்து எழுந்தால், அவருக்கு ஆதரவு ன்னு “பேச” மட்டுமே இருந்தனர்….முன்னெடுத்து ’ஸ்’தம்பிக்கச் செய்ய இயலாததால்….பாரி மகளிரைப் போலவே….ஒன்றுமில்லாமல் போன நிலை!! கையறு நிலை!:(

   கபிலர் = உயிரை விட்டார்
   நாம் = விடவில்லை!
   அவ்வளவு தான்!….

 9. நன்றி திரு.சொக்கரே, திரு.ஆனந்தன், கேஆர்எஸ்.

  வாழ்ந்து கெட்டவர்கள் நிலை மிகவும் கொடுமை. அதுவும் இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது மனதை வாட்டுகிறது துக்கம். எப்படிப்பட்ட அரசிளங்குமரிகள், தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள், கால சுழற்சியால் நாடு இழந்து தந்தையை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை துல்லியமாகப் பிரதிபலிக்கிறது இந்த அருமையான சங்கப் பாடல்!

  அன்று வந்ததும் அதே நிலா. இன்று வந்ததும் அதே நிலா. அன்று மகிழ்ச்சியோடு அனுபவித்ததை இன்று நினைத்துப் பார்க்கும்போதே மனதை அழுத்தும் சோகம் உண்டாகிறது அவர்களுக்கு. அனாலும் இந்தப் பாடலில் ஒரு தன்னம்பிக்கை உணர்வு தொனிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  amas32

 10. suresh says:

  நன்றி சொக்கரே .
  கேஆர்எஸ் – பாரியின் கதையை நினைவூட்டியதற்கு நன்றி.
  நீங்கள் சொல்வது போல் , பாரியின் கதையும் ஈழ மக்களின் கதையும் ஒன்று தான் ..
  நம்மிடையே இன்னும் “மனிதம் ” வளரவேண்டும் .

  • anonymous says:

   //நம்மிடையே இன்னும் “மனிதம் ” வளரவேண்டும்//

   அதற்குத் தான் இத்தனை வாசிப்புகளும், புரிதல்களும்…#365paa வழியாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s